தோழர்களே!  நண்பர்களே!  சமூக அக்கறையுள்ளோரே!


எம்மினம், எம்நாட்டு மக்கள், உலக மக்கள் சந்திக்கின்ற பல்வேறு ஒடுக்குமுறைகளும், அடிமைத்தனங்களுமே மனித வாழ்வாகி வருகின்றது. இதன் பாலான அக்கறையற்ற சமுதாய கண்ணோட்டங்கள், பொய்யான போலியான பிரச்சாரங்கள் எம்முன் எங்கும் மலிந்து கிடக்கின்றது. இதை எதிர்கொண்டு, சழுதாயத்தை வழிநடாத்த வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு.

 

இந்த வகையில் நாம் இந்த இணையம் வாயிலாகவே உங்களை சந்திக்கின்றோம். 2008 மே 1 திகதி முதலாக இந்த புதிய இணைய வடிவமைப்பின் ஊடாகவே, உங்களை நாள் தோறும் சந்திக்கின்றோம். இதன் பின் எம்மை நோக்கி வந்தவர்கள், 10 லட்சம் பேர் தலையங்கத்தில் உள்ளவற்றை பார்வையிடல் செய்துள்ளனர். இப்படி கடந்த பத்து மாதத்தில், மாதம் ஒரு லட்சம் வீதம், நாள் தோறும் 3300 பார்வையிடல்கள் நிகழ்ந்துள்ளது. அண்ணளவாக 5400 தலையங்கத்தில் விடையதானங்களைக் கொண்டு, தற்போது இத்தளம் இயங்குகின்றது. இதுவோர் செய்தித்தளமல்ல. மாறாக கற்றுக் கொள்வதற்கானதும், கற்றுக்கொடு;ப்பதற்கானதுமான இணையமாக உள்ளது. இலங்கை, இந்திய தமிழர்களின், பொது சமூக இயக்கம் மீதான பல உள்ளடக்கங்களை கொண்டு, இந்த இணையத்தை ஒழுங்கமைத்துள்ளோம்.

 

எதையும் ஓரே பார்வையில் பார்க்கவும், படிக்கவும், இலகுவாக தேடவும், பழையதை தேடவும்  கூடிய வகையில், குறிப்பாக விரைவாக தேடிப் படிக்கும் வகையில் உங்கள் இந்த இணையத்தளம் உள்ளது.

 

இது உங்கள் அரசியல் தளம் என்பதை, அரசியல் ரீதியாக புரிந்துகொள்வது அவசியமானது. குறிப்பாக இலங்கைச் சூழலில் புலியும் புலிப்; பினாமியும், அரசும் அரச ஆதரவு புலியெதிர்ப்பும் 100 சதவீதமாக எம் கருத்தை, கருத்துத்தளத்தை மூடிமறைக்கின்றது. ஒன்றில் புலி அல்லது அரசு, இவ்விரண்டுக்குள்ளும் தான் கருத்துகள், சிந்தனைகள் உண்டு என்று காட்டமுனைகின்றது. இவ் இரண்டினதும் இருப்பு இதில் அடங்கியுள்ளது. அவை தம் அரசியல், அதற்கு எதிரான அரசியல் என்ற எல்லைக்குள், மக்களை வைத்திருக்க முனைகின்றது. இந்த வகையில் நாம், எம் கருத்துகளோடு மிக தனிமைப்பட்ட நிலையில் இருக்கின்றோம் என்பதை தெரிந்து கொண்டும், புரிந்து கொண்டும், அதற்கு எதிராக செயலாற்ற வருமாறு வேண்டுகின்றோம்.

 

எம் கருத்துகளை, எம் சிந்தனைகளை இன்றைய சூழலில் மக்களிடம் கொண்டு செல்லும் வகைகளில், இன்று இணையமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இணைய வசதியுள்ள பலரும், இன்று அன்றாடம் இணையம் பார்க்கின்றனர். ஆனால் பொதுவாக செய்திக் கொசிப்புகளைத் தான் தேடிப் பார்க்கின்றனர். அதை அறிவாக சிந்தனையாக எடுத்துக்கொண்டு, கற்பனை புனைவுகளில் இன்பம் காண்கின்றனர் அல்லது சோகத்தில் மூழ்குகின்றனர்.

 

நாம் இதில் இருந்து மாறுபட மனிதனின் சிந்தனையை அறிவை விருத்தி செய்ய வைப்பதன்  மூலம், தன்னைச் சுற்றிய நிகழ்வுகளை விருப்பு வெறுப்பற்ற வகையில் பகுத்தாயும் பகுத்தறிவை உருவாக்க முனைகி;ன்றோம்.

 

இலங்கை தமிழர் மத்தியில் இந்த போராட்டத்தை நாம் தனித்து தொடங்கிய போது, சில நண்பர்கள் எம்மைச் சுற்றி இருந்தனர். அதை பல்வேறுபட்ட வழிகளில் தொடர்ந்த நாம், இன்று இணையம் ஊடாக அதைச் செய்கின்றோம். இன்று சிலர் இந்த பணியில் எம்முடன் புதிதாக இணைந்துள்ளனர். அறிமுகமற்ற வேறு சிலர் புதிதாக எழுதத் தொடங்கியுள்ளனர். எம்மை ஒத்த சிந்தனையில் பலர், எமக்கு வெளியில் ஒதுங்கியிருந்தவர்கள், மௌனம் காத்தவர்கள் இன்று எம் இணையம் மூலம் தம் கருத்துகளை வெளிக்கொண்டு வர தாமாகவே முன்வருகின்றனர்.

 

நாம் அவர்களை தோழமையுடன் அணுகுகின்றோம், வரவேற்கின்றோம். எம் இணையத்தில் உள்ளவை எல்லாம், ஒத்த ஒரு கருத்துப்போக்கல்ல. மாறாக ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக, வெளிவரும் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளடங்கியது. சமூகம் கற்றுக்கொள்ள, அவர்களிடம் கற்பதும், அவர்களின் முரண்பாடான வாழ்வியல் கருத்துக்கள் உள்ளடங்கிய வகையில் ஓருங்கிணைக்க முனைகின்றது இந்த இணையம்.

 

ஓடுக்கப்பட்ட மக்கள் சார்பான, எந்த ஒடுக்குமுறைக்கும் துணை போகாத உங்கள் கருத்துகளுக்கு, இந்த இணையத்தளம் வாய்ப்பை வழங்கும்.

 

நாம் சந்தித்த வாழ்வின் அனுபவங்கள், தொடர்ந்து மக்களுடன் நிற்க முடியாது போன சூழல், அதை ஒட்டிய விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள் மிக முக்கியமானவை. மக்களின் பெயரில் இயங்கும் எதிரிகள் மீது கடும் விமர்சனத்தை, சுயவிமர்சனத்தை கோரி எழுதும் நாம், எம்மை நாம் சுயவிமர்சனம் செய்வதும் எம்மை விமர்சித்துக் கொள்வதும் அவசியமானது. இது பலருக்கு கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் உதவும். சமகால அரசியல் போக்கில், புலி புலியெதிர்ப்பு போக்குக்கு வெளியில் இதற்கு எதிராக இயங்காமை அல்லது அங்குமிங்குமான உதிரித்தனமான போக்கு இருந்துள்ளது. மொத்தத்தில் நாம் எம்மை திரும்;பிப்பார்த்தல் அவசியம்.

 

விமர்சனத்தில் நாம் புலியை மையமாக வைத்தே விமர்சனங்கள் அதிகளவு செய்துள்ளோம். காரணம் தமிழ் மக்களின் பெரும்பான்மை, புலிகளின் பாசிச மயமாக்கலுக்குள் கட்டிவைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சிகள் அவர்களை சுற்றியே நிகழ்ந்த வண்ணம் இருந்தது. தமிழ் மக்களை தோற்கடிக்கும் எதிர்நிலை அம்சம், புலிகள் ஊடாக அரங்கில் முன்னிலைக்கு வந்த வண்ணம் இருந்தது. மொத்தத்தில் தமிழ்மக்களை இதில் இருந்து விடுவிக்கவும், சிந்திக்க வைக்கவும் புலி மேலான விமர்சனம் கூர்மையாக மையப்பட்டிருந்தது.

 

எம் முதல் எதிரி அரசு என்பதையும், அதை எதிர்த்த எம் அரசியல் வழி, புலிகளின் இராணுவ தாக்குதலால் மழுங்கடிக்கப்பட்டது. அவை வெற்றிகரமானதாக நம்பப்பட்டது. அரசுக்கு எதிரான எமது விமர்சனம் சிறுமைப்படுத்தப்பட்டது. இப்படி புலியிசம் மேலான விமர்சனத்தை முன்னிலைப்படுத்தியது.

 

அரசும், அரச பினாமிகளான புலியெதிர்ப்பும், புலிகள் மூலம் எம்மிடமிருந்து தற்காப்பை உருவாக்கிக் கொண்டான். புலிகளின் இன்றைய தோல்வி, அரச பினாமிகளின் புலியெதிர்ப்பே தமிழ்மக்களின் தீர்வாக வைக்கின்ற அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இதற்கு எதிராக போராட்டத்தை குவியப்படுத்துமாறு தோழமையுடன் கோருகின்றோம். அரசு சார்பு புலியெதிர்ப்பு அரசியல் ஓரு இனத்தை, இன்னொரு இனத்திடம் அடிமைகொள்ள வைக்கின்ற அரசியல்.  

 

முக்கியமான பணி புதிய தலைமையை உருவாக்குவது. இருக்கின்ற தலைமைகள் எல்லாம் மக்களுக்கு எதிரானது. மக்களுக்கான தலைமையை, புதிய இளைய சமுதாயத்தில் இருந்து உருவாகும் வண்ணம், கற்றுக்கொள்ளுதல் கற்றுக்கொடுத்தல் என்ற வகையில் குறிப்பாக கவனம் எடுத்தல் அவசியமானது.

 

அத்துடன் இலங்கை 1970, 1989-1990, 2008-2009 என்ற காலகட்டத்தில் ஆயுதப்  போராட்டத்தை இலங்கை அரசு அழித்துள்ளது. இந்த இயக்கங்களில் வலதுசாரி அரசியலுக்கு அப்பால், இந்த அழிப்பை கவனத்தில் எடுத்து அரசியல் செயல்பாட்டை செய்வது அவசியமானது. இன்று சிங்கள பேரினவாதம் கொண்டுள்ள பாசிச வடிவம், குறைந்தபட்சம் 10 வருடங்களாவது படுகொலை அரசியல் வடிவில் நீடிக்கும். இக்காலத்தில் சர்வதேச நெருக்கடியும் உள்நாட்டும் நிலைமையும் சேர்ந்து பாரிய கொந்தளிப்பான காலகட்டத்தை கொண்டதாக அமையும்.   இதையெல்லாம் குறிப்பாக கவனத்தில் எடுக்கவேண்டும்.

 

அத்துடன் எம்மைச் சுற்றி இனயுத்தம், அதற்குள் சமூகம் மூழ்கிய நேரத்தில், நாடு பல்வேறு வகையில் சுரண்டப்பட்டும், அன்னிய மூலதனங்கள் சூறையாடியும் வருகின்றது. இப்படி பல்வேறு சமூக சிதைவுகள் நாட்டை அழித்து வருகின்றது. இவற்றையெல்லாம் கவனத்தில் எடுப்பதும், அதனடிப்படையில் கருத்துக்களை மையப்படுத்தி கருத்தை செறிவாக்கக் கோருகின்றோம்.

 

நாம் கருத்துக்களை எழுதுவது, வாசிப்பது மட்டும் போதாது. அதை பரந்துபட்ட தளத்தில் வாசிக்க, விவாதிக்க, சிந்திக்க தூண்டுவது அவசியம். ஈமெயில் உள்ள அனைவரையும், நீங்கள் இலகுவாக முன் அனுமதியின்றி அணுக முடியும். எங்கள் பெயரில் ஈமெயில் திறக்க முடியாது உள்ளதென்றால், அவ்வளவு ஈமெயில் உள்ள தமிழர்கள் உள்ளனர். அவர்களுக்கு இணையத்தை அறிமுகம் செய்து வையுங்கள். 10 நிமிடம் நாள் ஒன்றுக்கு ஓதுக்கினால், பத்து பேருக்கு புதிதாக இணையத்தையும் அதன் மூலம் கருத்துகளையும் அறிமுகம் செய்யமுடியும்.

 

ஈமெயில் முகவரிகளை சேகரியுங்கள். ஈமெயில் முகவரிகளை, திறக்க முனைந்து அதன் மூலம் முகவரிகளை கண்டுபிடியுங்கள். இதை ஒரு அரசியல் வேலையாக செய்யுங்கள். இணையத்தை பரந்துபட்ட வாசகரிடம் எடுத்துச் செல்லுங்கள். நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். தமிழர் கூடும் இடங்களில், விளம்பரமாக பொது இடத்தில் ஓட்டுங்கள். உண்மைகளை எடுத்துச் செல்ல, உங்களின் எல்லைக்குள் பலவழிகள் உண்டு. அதை செய்யுங்கள். உங்கள் கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றது.

 

பி.இராயகரன்
03.03.2009