07272021செ
Last updateசெ, 20 ஜூலை 2021 1pm

"அகம் சும்மாஸ்மி’ - நான் கடவுள் - - குருசாமி மயில்வாகனன் திரைப்படம் குறித்த ஒரு பார்வை

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் குரங்கினத்திலிருந்து வளர்ச்சியடைந்து மனித இனமாய்ப் பரிணமித்த பிறகு உற்பத்தியில் ஈடுபடாதவரையில் மனிதன் நாகரீகமடையவில்லை. சமூகத்திற்கான உற்பத்தியில் அறிந்தோ, அறியாமலோ
ஈடுபட்ட பிறகுதான் மனிதஇனம் நாகரீகமடையத் துவங்கியது. உற்பத்தியில் ஈடுபடாத மனிதர்கள் இயற்கையோடு இணைந்த விலங்கின வாழ்வுநிலையிலேயே நீண்ட வருடங்களாகத் தேங்கி நின்றனர்.

 

உலகம், இயற்கை, மரணம் குறித்தான கேள்விகள் மனிதர்களுக்குள் எழுந்தபோது அவர்கள் பயந்து போனார்கள். குறிப்பாகஇ காடுகளில் இயற்கையின் வேடிக்கைகளைக் கண்ட மனிதன் மேலும் பயந்து போனான். இடி, மழை, புயல் மற்றும் பிறஉயிரினங்களின் ஒலிகள் அவனுக்குகள் பீதியை ஊட்டின. இவைகளையெல்லாம் அவன் தீயவைகளாகக் கருதினான். இவைகள் இல்லாதபோது அவற்றை நல்லவைகளாகக் கருதினான். இளங்காற்றானது பெரும்புயலாவதையும், சிறுதூறல் பெருமழையாவதையும், பயந்தோடும் மிருகங்களே பிறகு பாய்ந்து குதறுவதையும் கண்ட அவனால் நன்மை, தீமை இரண்டிற்குமான வேறுபாடுகளைத் துல்லியமாக வரையறுக்க முடியவில்லை. நன்மை, தீமை இரண்டையும் தனித்தனியான ஒன்றாகவும் இவைகள் தனித்தனியாக இயக்கப்படுகின்றன என்றும் எண்ணிக் கொண்டான். இவைகளை இயக்குபவர்கள் யார்? என அறியமுடியாமல் அவர்களை இவனே உருவகப்படுத்தி வழிபட ஆரம்பித்தான். அவர்களைச் சாந்தப்படுத்த பலி கொடுப்பதுதான் இவர்களது துவக்ககால வழிபாடாக இருந்தது.

 

நற்தேவதைகள், துர்தேவதைகள், வழிபாடு வந்தது. துர்தேவதைகளை அணுகி வரம் வாங்கும் பிரிவு ஒன்று ஒருபுறம் வளர்ந்தது. நாகரீகம் அடைவதற்காக மனித இனம் போராடிக்கொண்டிருந்த அதே வேளையில் நாகரீகத்தை விரும்பாத சமூகவாழ்வைப் புறக்கணிக்கிற இந்த துர்தேவதைக் கூட்டமும் வழிபாடுகளை நடத்திக் கொண்டு காடுகளுக்குள்ளேயே இருந்து கொண்டனர்.

 

அமைதியையும், நன்மையையும் வேண்டியவர்கள் நற்தேவதை வழிபாட்டுக்குள் நுழைந்தனர். அதிகாரத்தையும், அட்;டகாசத்தையும் விரும்பியவர்கள் துர்தேவதைகள் வழிபாட்டுக்குள் புகுந்தனர். காளி இவர்களின் தெய்வமானாள். தெய்வம்  என்றால்

உனக்கு நான் வரம் தருகிறேன். நீ எனக்குப் பலி தா! ஏனப் பேரம் பேசும் தெய்வம்.

 

பழைய தமிழ், தெலுங்கு கருப்பு, வெள்ளை மாயாஜாலத் திரைப்படங்களில் வரும் வில்லன்களெல்லாம் இத்தகையினரே. இவர்கள் பல பிரிவுகளாக இருந்தனர். உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் ஆனால் ஓரே அடிப்படை அம்சத்தோடு, மிகச் சிறிய அளவில் இவர்கள் இயங்கி வந்தனர். சாத்தான்வழிபாடு என்று இதை கிறித்தவத்திலும் காணலாம். மேற்கே கருப்பு இனப் பழங்குடியின மக்களிலிருந்து தெற்கே கேரளாவில் மலையாள நம்பூதிரிகள் வரை இவர்களை பல்வேறு வகையினராகவும், வளர்ச்சியில் மாறுபாடுள்ளவர்களாகவும் பார்க்க முடியும். 

 

தமிழகத்தில் கேரளத்தை தலைமையாக வைத்து சிலர் இருந்தனர். சமூகத்தில் அதிகரித்த மனித இனப் பெருக்கம், பெருகி வந்த அறிவியல்வளர்;ச்சி, நவீனஆயுதங்கள் மற்றும் மின்சாரம் ஆகியவை இவர்களை மாயமந்திரம், செய்வினை செய்தல், தகடு வைத்தல், பில்லி சூனியம் வைத்தல், மோடி வித்தை, போய் ஓட்டுதல்  போன்ற வேலைகளைச் செய்பவர்களாக மட்டுமே மாற்றியது. பின்னர் இந்த வேலைகள் பகுதி நேர வேலையாக மாறிப் போனது. பின்பு பலர் முழுவமாக இந்த அடையாளங்களை மனம் ஒப்பிக் கைவிட்டனர். 

 

இருப்பினும் இந்தியாவின் வடமாநிலங்களில் வாழ்ந்த இப்பிரிவினரின் துவக்க நிலையிலிருந்தவர்களை காசி எனும் மாநகரம் வேறுமாதிரியாக வளர்த்தெடுத்தது. தண்ணீரைப் புனிதமான சக்தியாக அறிவித்த பார்ப்பனர்கள் தங்களின் எல்லா மோசடிகளையும் கங்கை நதியை இணைத்துப் புனைந்து கொண்டனர். பாவம், புண்ணிய கருத்தாக்கங்களைப் பரப்பினர். மரணம் மற்றும் நோய் குறித்த குழப்பங்களிலும், உழைப்பைப் பறித்தெடுத்த சுரண்டலினால் விளைந்த கொடுமைகளிலும் சிக்கிய மக்கள் புண்ணிய நீர் தெளிக்கப் பட்டதால் தங்கள் நிலைமாறும் என தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொண்டனர். ஒரு புறம் சுரண்டலினால் பெருக்கெடுத்து ஓடும் துன்பப் பேராறுகள், இன்னொருபுறம்; பக்தி, தலைவதி, மூடநம்பிக்கைச் சமுத்திரங்கள். மனிதன் மூழ்க ஆரம்பித்தான். பார்ப்பனர்கள் தங்களை அதிகாரம் மிக்கதாக ஆக்கிக் கொண்டதன் அடையாளத் தலைநகரம்தான் காசி. 

 

காடுகளிலேயே புகுந்த பல்வேறு பிரிவுகளிலான அந்த நாகரீகமடைய விரும்பாத அநாகரீக மனித கூட்டத்தினர்க்கு சாதுக்கள் எனப்; பார்ப்பனர்கள் பெயரிட்டனர். சகமனிதனுக்கு அல்லது சகஉயிரினங்களுக்கு மயிரளவும் பயனில்லாத இவர்கள் உடல் முழுதும் மயிர் வளர்த்தார்கள். மானம் காக்கும் ஆடையும், ஆடை சார்ந்த கலாச்சாரக் கருத்துக்களும் உருவாகி, ஆடையின் வடிவமைப்புகள் விதவிதமாகப் பெருகி ஒரு அழகுணர்ச்சி ததும்பும் கலையாய் வளர்ந்து எழுந்து போதும், இந்த சாதுக்கள் ஆடையின்றி அம்மணமாய்த் திரிந்தனர். நரக வாழ்க்கையை மட்டுமே விளைவித்த பூலோக சுரண்டல் அமைப்பின் இரகசியத்தைப் புரிந்து கொள்ள விரும்பாத இந்த சாதுக்கள் மேலோக வாழ்வின் சொர்க்கத்திற்காக மனிதர்களை ஆசீர்வதித்தனர். மனிதர்கள் இறந்தபிறகுதான் சொர்க்கம் போக முடியும் என்பதால் மனிதர்கள் இறந்து பிணமாய் எரியும் போது இவர்கள் தங்களின் ஆசீர்வாதங்களை வழங்கினார்கள். நாகரீகம் அடைந்த மனிதனின் மொழியானது பல்வேறு முன்னேற்ற நிலைகளைக் கண்டடைந்து கொண்டிருந்த போது அதிகபட்சம், ஐம்பது சொற்களே உள்ள மொழிக்குள் இவர்கள் கத்திக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். தானும் செத்துப் போவோம்; என்கிற பயத்தை மறைக்கவே மனிதச் சாம்பலை இவர்கள் தங்களின் உடல் முழுதும் பூசிக்கொண்டனர்.

 

இயற்கையின் படைப்புகளில் பசிஆறிய இவர்கள் தங்களின் ஆதார உணவாகக் கண்டடைந்த தாவரம்தான் கஞ்சா. கஞ்சாப்புகையின் கிறக்கத்தில் பார்வைக்கு மனித இனமாக தோன்றிய இவர்களின் செயல்பாடுகள் மிருகங்களுக்கும் கீழாய்ப் போனது. பகுத்தறிவானது, கஞ்சாவால் முழுவதும் பறித்தெடுக்கப்பட்ட நிலையில் சமூகத்தின் எந்தவொரு ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் இவர்கள் ஏற்க மறுத்ததோடு காசியைச் சுற்றிய பிரதேசங்களைத் தங்களின் வாழிடமாகக் கொண்டு அலைந்து திரிந்தனர். 

 

காசி எங்கோ வடக்கு மூலையில் இருக்கிறது. ஆனால் தென்தமிழ்நாட்டில் குக்கிராமத்தில் வாழும் கிழவிகூட காசியை அறிந்திருப்பாள். அங்கேபோக, சாக, ஆற்றாமைப்படுவாள். பார்பனியத்தின் நெட்வொர்க் திறமைகளுக்கு இதுவும் ஒரு  உதாரணம். சிரார்த்தம், திவசம், கருமாதி எனப் பல பேர்களில் வழங்கப்படுகிற செத்தவர்களுக்கு செய்யப்படும் சடங்குகள் காசியை, கங்கையை மையப்படுத்திப் பெருகின. காசியில் செத்து, கங்கையில் மிதந்தால் மோட்சம் எனும் ஆகக் கடைந்தெடுத்த மூடநம்பிக்கை வரை இது போய் நின்றது. இந்த மூடநம்பிக்கை பிடித்தாட்டிய மக்கள் கூட்டம் காசியில் பெருக ஆரம்பித்த போது அவர்களிடையே இருந்த சாதுக்களும் பெருகினர். 

 

காட்டுமிராண்டிகளாய்த் திரிந்தவர்களை பார்ப்பனியம் காவியைக் கட்டிவிட்டு சாதுக்களாக்கி அநாகரீக காட்டுமிராண்டிக் கும்பல்களாகவே தக்க வைத்தது. தங்களுக்கு எதிரானவர்களின் மீதான தாக்குதல்களுக்காகவும், பொதுமக்களை அரசை, போலீசை, இராணுவத்தை மிரட்டுவதற்கும் இந்த சாதுக்குண்டர்கள் பயன்பட்டார்கள். இன்றளவும் பயன்படுகிறார்கள். இந்த சாதுக்களின் சங்பரிவார்கும்பல் தான் இன்று உலகத்திலேயே மிகப் பெரிய அநாகரீக காட்டுமிராண்டிக் கும்பலாகும்.

 

இந்த காட்டுமிராண்டி சாதுக்களில் ஆகக் கிறுக்கர்களாக உள்ள ஒரு பிரிவினர்தான் அகோரிகள். இவர்களின் உணவு கஞ்சாப் புகையும் மனிதக் கறியும் தான். 

 

அகம் பிரம்மாஸ்மி என்பதற்கு நானேகடவுள் என்று பொருள். கடவுள் என்கிற சொல் இங்கே சிவனைக் குறிப்பிடுகிறது. சிவன் காளியின் கட்டளையை ஏற்று அழித்தல் தொழிலை செய்து கொண்டிருப்பவன். அவன் இருப்பிடம் சுடுகாடு.

 

திருவிளையாடல் திரைப்படத்தில் தன் கணவன் சிவன் நடத்தும் - யாகத்திற்கு தனது தந்தை யச்சணை தாட்சாயினி அழைக்கும் போது யச்சன் பேசும் வசனங்களை நினைவு கூறுங்கள். அதுதான் சிவன் அழித்தல் தொழிலை மேற்கொண்ட சிவன் காளியின் கட்டளைப்படி அழிக்கிறான். தோற்றம், அழிவு இரண்டுமே படைப்பில் சமமானவை எனவே. தோற்றுவிப்பது மட்டுமல்ல. அழிப்பதும் பெருந்தொழிலே. அதைச் செய்யும் பெரும் தெய்வம் சிவன். அகோரிகள் காளி அருள் பெற பூசித்தனர். அருள் பெற்றதால் சிவனாகினர். சாம்பலைப் பூசிக் கொண்டனர். நரச்சக்கையை வேகவைத்து தின்றனர். தங்களையே தனியொரு உலகமாகக் கொண்டு ஒரு மனநோயாளிக் கூட்டமாகத் திரிந்த இவர்களின் உணவு மனிதக் கறிதான். எரிந்து கொண்டிருக்கும் பிணத்திற்கு சொர்க்கம் போவதற்கான ஆசீர்வாதங்களை வழங்கி விட்டு அதே பிணத்தை எடுத்து தின்னும் அகோரமானவர்களே அகோரிகள். இவர்கள் சுட்டுத்தள்ளப் படவேண்டிய அநாகரீக காட்டுமிராண்டி கூட்டம். இப்படிப்பட்ட அகோரிகளாய் வாழும் ஒருவன் தான் பாலாவின் சமீபத்திய நான் கடவுள் என்னும் படத்தின் மையக் கதாபாத்திரம்.

 

பாலாவின் முந்தைய படமான பிதாமகனை இங்கே சற்று பார்க்கலாம். 

 

சித்தர்களின் பாடல்களோடு சுடலை வேலை செய்யும் சித்தன். அசுர பலம் கொண்ட சித்தன்; ஒருபுறம். போலீஸோ, கோர்ட்டோ, அரசாங்கமோ அசைக்க முடியாத அளவுக்கு கஞ்சாவை பயிரிட்டு விற்பனை செய்யும் சட்ட விரோத முதலாளி ஒருபுறம். சின்னச் சின்ன சில்லறை மோசடிகளைச் செய்து வெகுளியாகத் திரியும் இளைஞனுக்கும் சித்தனுக்கும் நட்பு ஏற்பட்டு வலுப்படுகிறது. கஞ்சா முதலாளிக்கும் இளைஞனுக்கும் சித்தனை முன்வைத்து மோதல் நிகழ்கிறது. இதில் இளைஞன் கொல்லப்படுகிறான். வலிமையான நட்பின் காரணமாக இளைஞனின் சாவிற்கு பழி தீர்க்கிறான் சித்தன்;. கஞ்சாமுதலாளி அடித்துக் கொல்லப்படுகிறான். அவன் குரல்வளை சித்தனால்  கடித்துக் குதறப்படுகிறது.

 

இன்றைய சமூகத்தில் நிலவுகிற குரூரமான குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்க இங்குள்ள சட்டம் போலீசு மற்றும் மனிதர்களால் முடியாது, அதற்கு ஒரு அதிமனிதன் தேவை. இதுதான் பாலாவின் பிதாமகன். கோர்ட், போலீசு, அரசு இம்மூன்றுமே ஒரு சமூக விரோத முதலாளியை ஆதரித்தால் என்ன செய்வது? சித்தனைப் போல் குரல் வளையைக்  கடித்துக் குதறவேண்டியதுதான். 

 

நான் கடவுளும் அதுதான். பிதாமகனில் சித்தர்களின் பிரதிநிதியாகயிருந்த சித்தன். இங்கு அகோரிகளின் பிரதிநிதியாகிறான் ருத்ரா. அதில் கஞ்சாத்தொழில் செய்யும் சமூகவிரோதி. இதில் உடல்ஊனமுற்றோர்களை பிச்சை எடுக்க வைக்கும் சமூகவிரோதி. சித்தனை விட பலமடங்கு உடல் பலம் கொண்டவன் அகோரி. கஞ்சா தொழிலைவிடக் கொடூரமானது உடல்ஊனமுற்றோர்களை கடத்தி வந்து தொழில் செய்வது. பிதாமகனில் சமூக விரோதிக்கு எதிரான குரல் ஒரு இளைஞனின் மூலமாக வெளிவருகிறது. நான்கடவுளில் பார்வையற்ற ஒரு இளம் பெண்ணிடமிருந்து என்னைக் காப்பாற்று, எனக்கு விடுதலை கொடு என்கிற அவலக்குரலாக வெளிவருகிறது. சித்தனும் தண்டனை கொடுக்கிறான். ருத்ராவும் தண்டைனை கொடுக்கிறான்.

 

நீட்சேயின் அதிமனிதன் சித்தாந்தம்தான் இது. சித்தர்களை அகோரிகளாகப் பதவி உயர்வு செய்திருப்பது இயக்குநரிகளின் வளர்ச்சி. பேச்சுவராத, நாகரீகமடையாத, சித்தனின் பாடலிலிருந்து பேசாத, சடைவளர்த்த, அகோரியின் அகம் பிரம்மாஸ்மி. தமிழ்ச் சித்தனை சமஸ்கிருத அகோரியாக பதவிஉயர்வு கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

 

அகோரிகள் அகம் பிரம்மாஸ்மி என்கிறார்கள. அகம்பிரம்மாஸ்மி என்பது இவர்களின் உணர்வு. இதை அதிகப் பிரசிங்கத்தனம் என்கிறது துக்ளக். காரணம் பார்ப்பானேகடவுள் என்கிறது வேதம். பிறகு மனிதர்கள் கடவுளாக முடியுமா? இந்துச் சாமியார்கள் என்றால், கஞ்சா அடிப்பவர்கள் என்பதை மிகத்துல்லியமாக படம் அம்பலப்படுத்தியிருப்பதைப் பொறுக்க முடியாத துக்ளக் கேட்க நாதி இல்லை என வன்முறையைத் தூண்டிப் பார்க்கிறது.  

 

அகோரிகள் அகம் பிரம்மாஸ்மி என்கிறார்கள. சரி, ஆனால் துஷ்டநிக்ரகபரிபாலனம் என்பது அகோரிகளிடம் இருப்பதாக படம் சொல்வது உண்மையா? இல்லை. இருக்காது. இருக்கவும் முடியாது. காரணம், அகோரிகள் துஷ்ட தேவதையான காளியின் பிள்ளைகள.; துஷ்டனை மட்டுமல்ல எல்லோரையுமே இவர்கள் தான் அழித்து சொர்க்கத்திற்கு அனுப்புகிறார்கள். அழித்து என்றால் இவர்களே கொலை செய்து என அர்த்தம் இல்லை. விதி முடிந்து போனது. அந்த விதியை இவர்களின் தாயான காளி எழுதியிருக்கிறாள். அதைமீறி யாராவது சேட்டை செய்தால் அகோரிகளின் நீதிமன்றம் உடனடியாக மரணதண்டனை வழங்கும். இதில் துஷ்ட வேலைகளெல்லாம் கிடையாது. எல்லாமே இஷ்டநிக்ரகபரிபாலனம் தான். 

 

மனிதர்களில் நல்லவர், கெட்டவர் அகோரிகளின் கண்களுக்குத் தெரிவார்கள் என்பது ஒரு கடைந்தெடுத்த பொய். ஒருவேளை அது உண்மையானால் காசியிலிருந்து ருத்ரா மலைக்கோயில் வருவதற்குள் ஒட்டுமொத்தமாகவே நாட்டை நாசம் செய்துதான் வந்திருக்க முடியும். அப்பன் நமச்சிவாயம் துஷ்;டனில்லையா? அம்மா குப்பைத் தொட்டி துஷ்;டனில்லையா? அந்தப் போலீஸ்இன்ஸ்பெக்டர் துஷ்;டனில்லையா?. ஜட்ஜ்? (நாமம் போட்டிருக்கிறார், கும்பிடுகிறாh.; வேதாந்தியை என்ன பண்ண முடிஞ்சுச்சு என்கிறார். போலீசைத் திட்டுகிறார். அதனால் துஷ்டனில்லாமல் இருக்கிறாரோ!) நாட்டிலே துஷ்டர்களுக்கா பஞ்சம். யார் துஷ்டர்கள்? எது துஷ்டம்?.

 

இயற்கையை எதிர்த்துப் போராடிப்போராடி தன்னை வளர்த்துக் கொண்;ட மனித இனத்தையே இழிபடுத்தும் வேலையை ஒரு தொழிலாகவே செய்கிற அந்தப் படுபாதகர்கள், அதற்கு உடந்தையாக இருக்கிற போலீசு. இவர்கள் முழுக்க, முழுக்க எதார்த்தமானவர்கள். இவர்கள் குறித்த சித்தரிப்பில் விடுபட்டுப் போனது இவர்களுக்குள்ள அரசியல்கட்களின் ஆதரவு. ஒரு பெண்ணோடு உறவுகொள்ளவேண்டும் என்பதற்காக அந்த குரூர முகம் கொண்டவன் பேசும் அலட்சியமான அடாவடிப் பேச்செல்லாம் அரசியல் கட்சிகள் நடத்துவோரின் பேச்சுத்தான். துஷ்டர்களின் வளையத்தில் விட்டுவிலகிப் போயிருக்கும்  அரசியல்கட்சி ஏதாவது இந்த நாட்டில் இருக்கிறதா என்ன?

 

மீண்டும் பிதாமகன் சித்தன், இப்போது பிரம்மாண்டமான நான்கடவுளின் அகோரியாய். ஒரு படைப்பாளி இந்த சமூகத்தைப் பார்க்கிறான். தனது அனுபவங்களின் மூலமாக கண்டடைந்த கருத்துக்களை அவன் படைப்பாக்குகிறான். இதில் அவனுக்கு முழுச்சுதந்திரம், உரிமை உண்டு. அகோரியின் நரமாமிசப்பட்சனக் காட்சிகள் வெட்டப்பட்டிருப்பது தணிக்கைத்துறையின் செயல்பாடு. ஒரு படைப்பாளி சமூகத்தை தவறான அணுகுமுறையின் பார்க்கிறான் என்றால் அதைச் சுட்டிக்காட்டுவது ஒரு விமர்சகனின் செயல்பாடு. 

 

நான்கடவுள் விமர்சகர்களுக்கு மிகச் சிரமமான வேலையை வைக்கவில்லை. ஊனமுற்றவர்களை தொழில்படுத்துகிற நிகழ்காலக்குரூரத்திற்கு, அகோரிகள் என்கிற காட்டுமிராண்டிகள்தான் முடிவு கட்டுவார்கள் என்பது சரியானது தானா?

 

ஒரு நாகரீகமான அரசில் உடல்ஊனமுற்றோர்களின் நிலை என்ன? ஒரு சோசலிச அரசு உடல்ஊனமுற்றோர்களைப் பற்றி என்ன மதிப்பீடுகளை வைத்திருக்கிறது? ரஷ்யாவில், சீனாவில் புரட்சிக்குப் பிறகு அவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்? இவற்றையும் தெரிந்துகொண்டு இயக்குநர் தனது இறுதி முடிவை எடுத்திருக்க வேண்டும். 

 

சமஸ்கிருதம், உடுக்கு, இளையராஜாவின் திறமை எல்லாம் கஞ்சாவின் புகழ்தான் பாடுகின்றன. சிவதாண்டவம் படத்தில் இல்லை. கற்றதுதமிழ் விமர்சனத்தில் நான் யூகித்தது சரிதான் என்பதை சிவதாண்டவம் படத்தில் இல்லை என்பதற்கு சாட்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம். 

 

தெளிவான படப்பிடிப்பு, நேர்த்தியான படத்தொகுப்பு, இயல்பான ஒப்பனை, உணர்வான நடிப்பு, பொருத்தமான வசனங்கள், சீரான திரைக்கதை, உயிர்ப்பான பின்னணியிசை, திறமையான இயக்கம் எல்லாம் சரிதான். ஆனால்  கடவுள் பற்றி ஆசான் (கவிஞர் விக்கிரமாதித்தன்) சொல்லும் அந்த அற்புதமான வாசகங்களில் வரும் கடவுள் எனப்படுவது அகோரி ருத்ராவின் அகம் பிரம்மாஸ்மியையும்  சேர்த்துத்தானே! பிறகு இந்தப் பிரம்மாண்ட பிராம்மாஸ்மி எதற்கு? மயிர்புடுங்கவா?

 

துஷ்டநிக்கிரக பரிபாலனம் செய்வதற்கு அதிமனிதன் அகோரியை காசிக்குப் போய் ஒரு சாதாரண மனிதரான நமச்சிவாயம்தான் கூட்டிக் கொண்டு வரவேண்டுமென்றால் அந்த அகம் பிராம்மாஸ்மியா? அல்லது சும்மாஸ்மியா?.  

 

குருசாமி மயில்வாகனன் - amuஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - 98654 93197 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்