08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

இருந்ததையும் இழந்துவிட்ட அவலநிலை தமிழன் நிலை….

தமிழ்மக்களின் தமிழீழவிடுதலைப் போராட்டம் எப்படி எதற்காக ஆரம்பிக்கப்பட்டது..., தமிழ் மக்களோடு இருந்த பிரச்சனை என்ன….., தரப்படுத்தலா? தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமா? சிங்களக்காடையர்களால் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதாலா?

 

தமிழனை அடக்கி ஒடுக்கி அதிகாரம் சொலுத்தியது சிங்களவனா? அல்லது தமிழனைத் தமிழனா? பாலியல் ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தமிழர்கள் தமிழர்களாலேயே அடக்கி ஒடுக்கப்படவில்லையா?


தமிழர்களின் உண்மையான பிரச்சனைகள் மறைக்கப்பட்டு, தங்கள்தங்கள் குறுகிய நலன்களுக்காக இனப் பிரச்சனையை கையிலெடுத்து தமிழன் என்று சொல்லடா…தலை நிமிர்ந்து நில்லடா...! என்று மேடைக்குமேடை கட்சிக் கொடிகளோடு வெள்ளை வேட்டிக் கள்ளர்கள் கூச்சலிட்ட குரல்தான் அன்றைய தலைமுறையினை மந்தைகளாக்கிய ஆரம்பக் குரல்.


இனவெறி பிடித்த சிங்கள அரசு தமிழனை அடக்கி ஒடுக்குகிறது..., நாங்கள் போராட வேண்டும்…தனித்தமிழீழம் அமைத்தே தீரவேண்டும்…இல்லை என்றால் ஒரு தமிழனும் நிம்மதியாக வாழமுடியாது…என்ற கோஷங்கள் அப்பாவி மக்கள் மத்தியில் கற்பிதம் செயப்பட்டு திணிக்கப்பட்டதன் மூலமாக அவர்களோடு இருந்த முக்கிய அடிப்படைப் பிரச்சனைகள் மறைக்கப்பட்டது.


பௌத்த இனவெறி அரசு அப்பாவி இலங்கை மக்களுக்கு கோட்டு சூட்டோடு செய்ததைத் தான் இந்த இந்துவேளாள வெறியர்கள் வெள்ளை வேட்டியில் செய்யத்துடித்தார்களே ஒழிய மக்கள் விடுதலைக்காக போடப்பட்ட கோஷமல்ல தமிழீழம்.


மலையகமக்கள் அனுபவிக்காத பிரச்சனைகளையா, முஸ்லீம் மக்களோடு இல்லாத பிரச்சனைகளையா, கிராமங்களிலும் நகரங்களிலும் சிங்கள அப்பாவி மக்கள் அனுபவிக்காத துன்பங்களையா தமிழன் அனுபவித்தான். தமிழனுக்குப் பிரச்சனையா இருந்தது... இருப்பது… தமிழன் தான்.


எந்தத் தமிழனும் சிங்கள மக்கள் வீட்டு விராந்தையில் உட்கார்ந்து மூக்குப்போணியிலும், சிரட்டையிலும் தண்ணி குடிக்கவில்லை. தோட்டங்களிலே தமிழ்ப் பெண்களை குறுக்குக்கட்டோடு அலையவிட்டு கால் நீட்;டிக் கொண்டிருந்து பெண்களின் அங்கஅசைவுகளை ரசித்துக் கொண்டிருந்தது எங்கள் வெள்ளை வேட்டிக்கள்ளர்களே ஒழிய சிங்களவர்கள் அல்ல…


இவர்கள் தான் தமிழ் மக்களுக்காக போராட முன்வந்தவர்கள். இவர்கள் ஆரம்பித்து வைத்த போராட்டம் இளைஞர்களால் ஆயுதவடிவமெடுத்து மக்களின் இன்றைய அழிவுநிலைக்கு காரணமாகி விஸ்வரூபமெடுத்து நிற்கின்றது.


தமிழ்மண்ணில் போராட்டச் சூழலால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட இடம்பெயர்விலும்;, வெளிநாட்டுப் புலம்பெயர் வாழ்விலும் சாதிப்பிரச்சனையின் வடிவம் மட்டுமே மாற்றம் பெற்றுள்ளது. ஆனால் இன்றும் பிரச்சனை பிரச்சனையாகத் தான் இருக்கின்றது.


இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் புலிகளால் சாதிப்பிரச்சனை சமூகப்பிரச்சனை தீர்ந்துவிட்டது, இனி சிங்கள அரசிடமிருந்து தமிழீழத்தைப் பிரித்தெடுத்துவிட்டால் தமிழனின் பிரச்சனை எல்லாமே தீர்ந்துவிடும் என்று கதை அளந்து கொண்டு திரிகின்றார்கள்.


இத்தனை பொருளாதாரவர்க்க சமூகப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அன்று தமிழ்மக்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடிசையாவது இருந்தது, ஏதாவது கைத்தொழில் இருந்தது, சிறு வியாபாரமாவது இருந்தது, சொந்த கிராமங்களிலோ வன்னிமண்ணிலே விவசாயமிருந்தது, கூழோகஞ்சியோ குடித்துக் கொண்டு கஷ்ட்டப்பட்டாவது பிள்ளைகளின் கல்வியை முன்னெடுக்கக் கூடிய நிலையிருந்தது.


ஆயுதப் போராட்டம் தொடங்கி 30வருடங்காலத்தில் மாற்றப்பட்டதென்ன...? இந்த 30வருடத்தில் தமிழ் மக்கள் அடைந்த நன்மை என்ன...? ...???... கேள்விக் குறிகள்தான் இன்று மக்களோடு எஞ்சியுள்ளது.


தொழிலை இழந்தோம்… உணவு வீடுவாசலை இழந்தோம்… கல்வியை இழந்தோம்… பெற்றோரை இழந்து பிள்ளைகளும், பிள்ளைகளை இழந்து பெற்றோர்களும் அனாதைகள் ஆக்கப்பட்டோம்… இப்படியே தமிழனின் இழப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.


பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டதால் கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டுவிட்டது...! என்ற நிலைதான் இன்றைய தமிழனின்; நிலை.


புலிகளின் போராட்டத்தவறு தமிழ்மக்களோடு இருந்ததையும் இழக்கச் செய்தது மட்டுமல்லாது தமிழ்மக்களின் எதிர்காலத்தை இன்று மக்கள் விரோதிகளின் கைகளில் ஒப்படைத்ததுதான் இன்னொரு கவலைக்குரிய விடயம். இன்று புலிகளின் பின்னடைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ள பலமக்கள் விரோதக் கும்பல்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


புலிகள் எங்களை ஓரம்கட்டிவிட்டார்கள்….…, புலிகளோடு தங்களுமொரு பாசிஸ்ட்டுகளாக இருந்து கொண்டு புலிகள் அனுபவித்ததை நாங்களும் அனுபவிக்க முடியவில்லையே என்ற ஆத்திரமும் ஆதங்கமும் கொண்டிருந்த புலியெதிர்ப்பாளர்கள் புலிகளின் இன்றைய தோல்வி கண்டு தலைகால் தெரியாத சந்தோஷத்தில் கூத்தடிக்கின்றார்கள்.


புலிகளோடு குறுகியகாலம் சுயநலத்திற்காக நட்புரீதியில் தங்களை இணைத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பவாதிகளும், இன்று புலிகளைத் திட்டித் தீர்த்து கொண்டு தங்களை மக்கள்விடுதலை விரும்பிகளாக காட்டி தங்கள் கடந்த காலத் தவறுகளை நியாப்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் இறங்கியுள்ளார்கள். ஆனால் இப்போதும் வெளிப்படையான புலிகள் பற்றிய கருத்துக்களையோ விமர்சனங்களையோ புலிகள் முன்;வைக்க திராணி அற்றவர்களாகத் தான் இருக்கின்றார்கள்.


இவர்கள் தான் ஆபத்தானவர்கள்.


மக்களின் வாழ்க்கையினை ஏலம் போட்டுச் சந்தைப்படுத்தக் கூடியவர்கள்.


இவர்களை இனம் கண்டு செயற்பட வேண்டிய தேவையும் கடமையும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு.


தொடர்ந்தும் நாங்கள் ஆட்டுமந்தைகளாக தலையாட்டிகளாக இருப்பதை விட்டு எங்களை மாற்றி கொண்டு மனிதத்தை நேசித்து மக்கள் நலனுக்காக வாழவேண்டும்.


இல்லையேல் கோவணம் மட்டுமில்லை அப்பாவித் தமிழ்மக்களே களவாடப்படுவது தவிர்க்க முடியாது.

 

தேவன்.
01.03.2009.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்