விபச்சாரம் ஆண்பால் பெண்பால்: இதற்கு சமூகம் கொடுக்கும் அர்த்தம் என்பது பலவகைப்படுகின்றது. ஆண்பெண் உடல்வியாபாரம் என்பதற்கு அப்பால் பயன்படுத்தப்படுகின்றது. இதனை அறியாதவர்களாக நீங்கள் இருக்கமாட்டீர்கள்

 என்பது என் கருத்து. இருப்பினும் உங்களது சிந்தனை மிக ஆழ்ந்ததாக காட்டுவதற்காக இந்த வாதம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது என நம்;புகின்றேன்.

 

எடுப்பது துடக்கென்று விலக்கிவிட்டு இரயாகரனின் கூற்றின் படி இந்தியாவின் கைகூலிகளாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திடம் ஆயுதப்பயிற்சி எடுத்திருந்த வரலாற்றை மறந்துதான் போனாரா?… (இவ்வாறு பயிற்சி எடுத்தார்களா எனத் தெரியவில்லை இருப்பினும்) ஒரு விடுதலைப் அமைப்பில் பலவிதமான சக்திகள் இருந்திருக்கின்றது. அவ்வாறே அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் புரட்சிகர சக்திகள் இருந்திருக்கின்றனர். இவர்களின் ஒன்றிணைப்பு என்பது அவசியமானதாகும். இவ்வாறான சக்திகள் மத்தியில் தொடர்புகள் உதவிகள் பெறுவதில் என்ன தவறிருக்கின்றது. நீங்கள் பயிற்சியைப் பற்றி கதைக்கப் போய் தோழமை பற்றி கதைப்பதாக நீங்கள் எண்ணத் தேவையில்லை. அன்றைய காலத்தில் பல திசைப் பிரிவுகள் இயக்கத்தினுள் இருந்தன. இவர்களிடையேயான ஒற்றுமை என்பது தலைமைகளின் சுயநலப் போக்கிற்கு அப்பாற்பட்டு இருந்தது. சுயநலமற்றவர்களின் கூடாரமாகவும் இருந்தது. இதனைத் தவிர வரதர், டக்கிளஸ், சுரேஸ் போன்றவர்களின் பதவிவெறி குழிபறிப்;பு இவைகளும் இருந்தன. இந்த முரண்பாடுகளுக்கு நடுவே இருந்து நட்புறவு செயற்பாடுகள் உங்களுக்கு துடக்காக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

 

'சமூக ஏகாதிபத்தியம் என்றும், முதலாளித்துவத்தை நோக்கிய சீனா என்றும் அன்று ஒருவருக்கொருவர் முரண்பட்டு கொண்ட பாரம்பரிய இடதுசாரிகள் பலரும் இன்று தம்மை சுயவிமர்சனங்களுக்கு உட்படுத்தி வருகிறார்கள்.” இவ்வாறான முரண்பாடுகள் வரலாற்றில் இருந்தது. இதனை அறியாது நீங்கள் இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. இவ்வாறான முரண்பாடுகளிடையேதான் புலிகளுக்கு ஏகாதிபத்தியம் எம்.ஜி.ஆர் மூலமாக நிதிவழங்க, இந்திய ஆட்சியாளர்கள் மற்றைய இயக்கங்களுக்கு உதவி புரிந்தனர். சமூக ஏகாதிபத்திய வரையறையானது 1990 பிற்பட்ட காலத்தில் உலகப் பிரிப்பதற்கு அந்த வரைவிலக்கணம் அவசியமற்றதாகி விட்டன.

 

நுனிப்புல் மேயவில்லை: ரயாகரன் நுனிப்புல் மேயவில்லை. அவருக்கு ஆழந்த மார்க்சீய படிப்பு பரீட்சயம் இருக்கின்றது. முடிந்தால் மார்க்சீயம் பிழையானது என்பதை நிரூபியுங்கள்.

 

ரயாகரன் கதைப்பது மார்க்சீயம் தான். அது ஏன் மற்றவர்களிடம் இருந்து மாறுபடுகின்றது என்றால் மார்க்சீய புரிதல்களை தனிநபர் அபிலாசைகளின் பொருட்டான புரிதலில் அடிப்படையில் இருந்து வந்தவையல்ல. மாறாக மார்க்சீய வரலாற்று பொருள் முதல்வாத, இயங்கியலில் இருந்து புரிந்து கொள்ளப்பட்டதாகும்.

 

தம் இருப்பை பேணிக் கொள்ள புலிஆதரவு என்றும், புலியெதிர்ப்பென்றும் மார்க்சீயம் பேசியவர்கள் குடிகொள்ள ரயாகரன் போன்றவர்கள் தனித்தனி தீவுகளாக இருந்து ஈழத்தில் மார்க்சீயத்தை திரித்துக் கூறுபவர்களுக்கு எதிராக கடந்த 20 வருடங்களாக எழுதிவருகின்றார்.

 

“மாக்சிச சித்தாந்தம் என்பதும் ஒரு இயங்கியல் நோக்குடையது. அந்த வகையில் காலம் சூழல். இவைகள்தான் எவ்வாறு மாக்சிச சித்தாந்தத்தை பிரயோகிப்பது என்பதை கற்றுத்தர வேண்டும்” … இவற்றை புரிந்து வைத்திருக்கும் நீங்கள் ஈழப் போராட்டவரலாற்றில் நடைபெற்ற எதிர்ப்புரட்சிகரமான நடவடிக்கைகளை சீர்தூக்கிப் பாருங்கள். வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஈ.பி.ஆர்.எல்.எவ் நடைபெற்ற உட்கட்சிப் போராட்டங்களை எடுத்துப் பாருங்கள். இந்தியாவில் இருக்கின்ற போது நக்சல்பாரி அமைப்புக்களின் வெளியீடுகளை நீங்கள் மறைத்துப் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். தடைசெய்யும் நிலைக்கு இருந்த போது இந்தியாவின் பக்கம் சார்ந்தீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா?

 

நீங்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் வழிவந்தவர்கள். உங்களால் என்ன புரட்சியை சாதிக்க முடிந்தது? ஆனாலும் நீங்கள் கூறும் உலகப்புரட்சி என்ற கருத்தியலுக்கு இங்கு யாரும் எதிரனாவர்கள் என்பது அர்த்தமல்ல.

 

நம்பிக்கை கொண்ட நீங்கள் புலிகளிடம் சென்று நாமும் சேர்ந்து போராடுவோம் என்று தூது அனுப்பியிருக்கமாட்டீர்கள். பின்னர் பிக்குணி சுட்டுக் கொல்லப்பட்டதும், பிரேமதாசாவின் அன்பு கிடைத்தது. வரலாறு. நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். மக்களை நம்பி அல்லவா போராட்டத்தை தொடர்ந்திருக்க வேண்டும். எந்தப் போராட்டமும் எதிரிகளின் தயிவில் நடைபெற முடியாது. எமது பலத்தில் தங்கிநின்றே போராட்டத்தை கொண்டு செல்ல முடியும்.

 

இதை “அதில் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பிரதான பாத்திரம் வகித்திருந்தவர் என்பதும் உண்மை.” தனிநபர் வழிபாடை அன்று எந்த இயக்கத்தவரையும் விட ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் எதிர்த்து வந்தனர். இவற்றிற்கு நேர் எதிராகத் தான் இன்று டக்கிளஸ் வழிபாடு இருக்கின்றது.

 

இன்று புலிகள் தலைவனுக்கு நிகரான ஆயுதப்போராட்டத்தின் ஆரம்ப போராளிகளின் தானும் ஒருவர் என்பதால் இன்று மக்கள் அனுபவித்து வரும் அவலங்களுக்கு தானும் தார்மீகப்பொறுப்பை எடுப்பதாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பகிரங்கமாகவே கூறி வருகின்றார்.”

 

சரி இது உண்மையாயின், வையுங்கள் பிரச்சனைக்கான தீர்வை யுத்தத்தை நிறுத்தக் கோருங்கள்.

 

சில பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அதிகார வர்க்கத்திற்காக ஒரு மக்கள் கூட்டம் அழிய வேண்டுமா? இவைகள் நீங்கள் படித்த மார்க்சீயப் புத்தகத்தில் இல்லையா? டக்கிளஸ் வசதிக்காக மறைத்துவிட்டாரா?

 

புரட்சி பேசிய ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர்கள் தமது உயிருக்காக தப்ப வேண்டிய நிலை இருக்கவில்லையா? டேவிட்சன், ரமேஸ் போன்றவர்கள் கடத்தப்படவில்லையா?

 

ஈழப்போராட்டத்தின் சிந்தரவதைகளின் பக்கத்தை வெளிக் கொண்டுவந்த கேசவன் புளொட்டின் கொலை வெறிக்கு உள்ளாகவில்லையா? நெப்போலியன் கொல்லப்படவில்லையா?

 

புலிகளால் செல்வி, மணியண்ணன், கேசவன், ரமணி, விசு, போன்றவர்கள் கொல்லப்படவில்லையா? இவ்வாறு இருந்திருந்தால் ரயாவும் மண்ணில் தான் புதைந்திருப்பார். மேலும் தனிமனித பாத்திரம் என்பது ஒரு எல்லைக்குள் தான் மட்டுப்படுத்தப் படுகின்றது.

 

இவைகள் ஒரு மக்கள் சக்திகள் தமது அடக்குமுறையை உணர்கின்ற போது வெளியில் இருந்து கொடுக்கப்படுகின்ற சிந்தனை வடிவமும் முழுநிறைவடைகின்றது. ஆகவே ரயா வெளிநாட்டில் இருப்பதால் உங்கள் துப்பாக்கிகளின் குண்டு மிகுதியாகியிருக்கின்றது.

 

“தானும் வெளிநாடொன்றிற்கு வந்து புத்தகங்களை புரட்டிப்பார்த்து விட்டு நிறம் நிறமாக கட்டுரைகள் வரைந்திருக்கலாம்." இவற்றைப் பார்க்கின்ற போது புதுவை ரத்தினம் வெளிநாட்டவர்களைப் தூற்றியெழுதிய கவிதைதான் ஞபாகம் வருகின்றது. பரவாயில்லை அதிகாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் வெளிநாட்டில் உள்ளவர்களைப் பற்றி இழிவாக கருத்துக் கூற ஜனநாயகம் இடம்கொடுக்கின்றது.

 

'இவர்கள் கொண்டிருப்பது அரச சார்பு நிலைப்பாடு என்பதற்கு அப்பால் அரசோடு ஒரு பொது உடன்பாடு என்பதுதான் இதன் அர்த்தம்” சொந்த மக்கள் சாகக் கண்டும் காணாது இருப்பதா?

 

“குறிப்பிட்ட தமிழ் தலைவர்கள் எவரும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டாம் என்று எப்போதாவது கூறியிருக்கிறார்களா?….அல்லது தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்விற்கு குறுக்காக இவர்கள் யாரும் விழுந்து படுத்த வரலாறு உண்டா?… இல்லை!"


அதனைத் தான் நாமும் சொல்கின்றோம். எதிரி வைக்கின்றான் இல்லை, ஏமாற்றுகின்றான் என்று நாம் கருதுகின்றோம். புலியெதிர்ப்பாளர்களாகிய நீங்கள் தீர்வுத் திட்டத்தை வையுங்கள். தீர்வுத் திட்டத்தில் முன்வைத்து உங்களை நிரூபியுங்கள். இன்றைய நிலையில் இதுகூட அவசியமானதுதான். வையுங்கள் தீர்வுத் திட்டத்தை…….!

 

“யாருடன் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமோ அவர்களுடன்தான் அவர்கள் பேசி வருகின்றார்கள்.” இது எவ்வாறு சாத்தியமாகின்றது.? குறிப்பாக ராஜபக்சகுடும்பத்தின் ஆதிக்க முகம் என்பது சந்திரிக்காவின் ஆதிக்க முகத்தை விட மாறுபட்டது. இவர்கள் இன்று ஜனநாயக விழுமியங்களை நசுக்குவதில் ஒப்பிட்ட ரீதியில் கடுமையாக செயற்படும் ஒரு அரசாங்கம். இந்த அரசாங்கத்திடம் இருந்து உங்கள் கிழக்கு சகா கோரிக்கை விடுகின்றார். பொலீஸ்படை வேண்டும், காணி, வரி விதிப்பு போன்ற உரிமை வேண்டும் எனக் கூறுகின்றார் என்ன நடந்தது. மறுபடியும் பிரித்தாளும் தந்திரம். கருணா எதிர் பிள்ளையான் என்ற நிலைக்கு மாற்றம் கட்டுள்ளது. (இவர்களுக்குள் இருக்கும் உட்பூசல் ஒருபுறமிருக்க) உங்களால் சாத்தியமாகின்றவைகள் ஏன் கிழக்கு விடிவெள்ளிகளால் முடியவில்லை. இது என்ன மாயாஜாலம் எனக் கூறுவீர்களா?

 

யாழில் நடைபெற்ற கொலைகள் இருக்கின்றன. தீவுப்பகுதியில் இடம்பெறும் பல மக்கள் விரோதச் செயல் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். நாமும் தீவுப் பகுதி மாத்திரம் அல்ல இலங்கையில் பலபாகங்களில் உள்ள மக்களின் உணர்வலைகளைப் புரிந்துதான் எழுதுகின்றோம். புலியெதிர்ப்பு அணி, புலிகள், அரசபடை இவைகளுக்கிடையேன உறவு எவ்வாறு இருக்கின்றது என்ற கள நிலையை சரியாக புரிந்து கொண்டுதான் எழுதப்படுகின்றது. மக்களுடன் பேசாதவர்கள் அல்ல. மக்களுடன் அன்றாடம் அவர்களின் அவலநிலையை அறியாது எதனையும் எழுதவில்லை.

 

“தயாகத்தில் வாழும் உங்கள் உறவுகளிடம் ஒரு முறை பேசிப்பாருங்கள். அந்த மக்கள் நீங்கள் கற்பனை செய்யும் உலகப்புரட்சிக்காகவா ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்?.." மக்களின் அழிவை போக்கத்தான் யுத்த நிறுத்தத்தைக் கோருகின்றோம்.

 

“சோவியத்தில் நடந்த 5 ஆம் ஆண்டு புரட்சியில் இருந்து 17 ஆம் ஆண்டு புரட்சி வரை பாராளுமன்றத்தில் தங்கியிருந்த விளாதிமிர் இலியிச் லெனின் உங்களுக்கு சந்தர்ப்பவாதி.யப்பனை எதிர்த்து போராடுவதற்காக சீனத்து தேசிய முதலாளித்துவ சக்திகளோடு கரம் கொடுத்து நின்ற மாவோ சேதுங் அவர்களும் உங்கள் பார்வையில் சந்தர்ப்பவாதி! அதற்காக எமது தேதசத்து சூழலோடு இவைகளை ஒப்பீடு செய்து விட முடியாதது.” முன்னர் பிரேமதாசாவுடன் குடித்தனம் நடத்திய புலிகள் இதைத்தான் சொன்னார்கள். குடித்தனம் நடத்த வேண்டும் என்றால் நீங்களும் மாவோ, லெனின் என உதாரணம் காட்டலாம்.

 

மக்கள் சலுகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா? ஒரு அரசாங்கம் மக்களுக்கான பாதுகாப்பு, வேலை, உணவு வழங்குவது அவசியமானதாகும். இவற்றை கொடுக்கத் தகுதியில்லாத நிலையில் இருக்கின்ற போது பிச்சை எடு என்று கூறுவது என்ன நியாயம். அரசாங்கம் என்பதே ஒரு ஒடுக்குமுறைச் நிறுவனம். அது மக்களை அடக்கும் அதனிடம் கேட்டு வாங்குவதால் சில பணக்கட்டுகள் தனிநபர்கள் பக்கம் மாறுகின்றது. இதனை சரியாகத் தெரிந்துதான் கூறுகின்றேன்.

 

“புலிகள் உட்பட தமிழ் பேசும் தலைமைகள் ஒரு ஆராக்கியமான சூழலை நோக்கி நகர்த்த முற்பட்டிருந்தார்களா என்பதுதான் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கேள்வி.”

 

“1.இலங்கை அரசே! யுத்தத்தை நிறுத்து!
2.புலிகளே! மக்களை விடுவி!
3.சர்வதேச சமூகமே! மக்களை பொறுப்பெடு!
4.புலிகளே! மக்களை விடுவியுங்கள்! நீங்கள் உங்கள் வழியில் போராடி மீளுங்கள்!

 

என்பவை உள்ளடங்கியது. இதை புலிகள் இன்று ஏற்பது, காலம் பிந்திய ஒருநிலை. இதனால், யுத்தத்தை நிறுத்தாது அல்லது தற்காலிமான நிலைக்குள் இவை நிறைவேறியுள்ளது.

 

தவறான காலத்தில், சர்வதேச நெருக்கடிக்குள் இந்த நிலைக்குள் புலிகள் வந்தது என்பது, தவறான கோசத்தினதும், அதன் மூலமாக முன்னெடுத்த போராட்டத்தின் ஒரு விளைவாகும். தமக்குத்தாமே விலங்கை போட்டனர். புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தல் என்பது துரோகமே

தற்காலத்தில் ஏற்பட்டுள்ள சர்வதேச சதி பற்றிய எச்சரிக்கையை உணர்கின்றோம். இதனை மக்களிடத்தில் கூறுகின்றார். ஆனால் சர்வதேச சதியில் எமது உரிமைகள் நசுக்கப்படப் போகின்றது என்பதை நீங்கள் உணரவில்லை. இவைகள் உங்களுக்கும் ரயாகரனுக்கும் உள்ள பெரும் வித்தியாசம்.

 

இந்தக் கோரிக்கைகள் எல்லாம் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுவதற்காக அல்ல. அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்வது என்பது பற்றிய தேவையில் இருந்து வருகின்றது.

 

ஒடுக்குபவர்களிடம் இருந்து எமக்கு எதுவும் சும்மா கிடைக்கப் போவதில்லை. எமக்கு வேண்டியது சில சலுகைகள் அல்ல. உரிமை!

 

இன்று மக்கள் யாருடனாவது சார்ந்திருக்க வேண்டிய கட்டாய நிலை. இந்த பரிதாபகரமான நிலையானது ஒன்று அவர்கள் விரும்பி ஏற்றது அல்ல. நிர்ப்பந்தம் அரச அடக்குமுறையாலும், புலிகளின், ஏன் உங்களின் அடக்குமுறையாலும் ஏற்பட்டதே. உங்களை பயம் கொள்ளாது இருக்க முடியுமா? மக்கள் உங்களைப் பார்த்தும் பயப்படுகின்றார்கள். இதனை நாம் கண்ணால் கண்டோம்.

 

மேலும் ரயாகரன் மீது அரசியலுக்கு அப்பாற்பட்டு தனிமனித தாக்குதல்கள் உங்கள் எழுத்துக்களில் தெரிகின்றது. இவைகள் ஏற்றுக் கொள்ள முடியாது. ரயாகரன் நாட்டில் இருந்திருந்தால் உங்கள் துப்பாக்கிக்கு இரையாகியிருப்பார்.

 

ஒரு அமைப்பு உருவாக்கம் என்பது தனி ரயாகரன் அல்லது எக்ஸ் என்ற நபர்களை தங்கியிருப்பதில்லை. வரலாறு தனது தேவையின் நிமித்தம் உருவாக்கிக் கொள்ளும். வாரும் வந்து அமைப்புக் கட்டும் என ஏளனமாக எழுதுவதன் மூலம், உமது உளவியல் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

 

புலியெதிர்ப்பணிகளே தீர்வை முன்வையுங்கள். இதுதான் எம்முடைய தீர்வுத் திட்டம் என முன்வைக்கின்றது கூட இன்றைய நிலையில் அவசியமானது. வையுங்கள் நாமும் நியாயத்தின் பக்கம் நிற்போம்.

 

எமக்கு வேண்டியது பிச்சை அல்ல உரிமை!


வாழும் உரிமை வேண்டும் எனவே யுத்த நிறுத்தத்தை அறிவி!


உணவு வேண்டும் நிவாரணம் கொடு!


எமக்கு தெரிவு செய்யும் உரிமை வேண்டும் புலிகளே ஏகக் கொள்கையை விடு!


தீர்வு வை, பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரி!


ஆயுதங்களை காட்டி எம்மை பயமுறுத்தாதே - முடக்கு ஆயுதங்களை !


எம் உறவுகளைப் பிரிக்காதே எமது உறவுகளுடன் இணையவிடு!

நாதன்
01.03.2009