அமெரிக்கக் கண்டத்தைக் 'கண்டுபிடித்த' கிறிஸ்டோபர் கொலம்பஸின் நினைவாக அந்த நாட்டிற்குக் கொலம்பியா எனப் பெயர் சூட்டப்பட்டது. அதன் தலைநகர் போகோட்டாவில் இன்றைய ஜனாதிபதி தனது பதவியேற்பு வைபவத்தை

 கொண்டாடிக் கொண்டிருந்தார். நாட்டின் தீராத பிரச்சினையான தீவிரவாத இயக்கங்களை ஒழிப்பேன் என புதிய ஜனாதிபதி விழாமேடையில் சூளுரைத்துக் கொண்டிருந்த சமயம் , எங்கிருந்தோ வந்த செல்கள் விழா நடந்த இடத்திற்கு அருகாமையில் விழுந்து வெடித்தன. ஜனாதிபதி தீவிரவாதிகளை ஒழிக்க காடுகளுக்குப் போக முன்னர் அவர்களாகவே தலைநகருக்கு வந்துவிட்டனர்.



 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இது நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை. தலைநகரின் மத்தியில் பணக்காரக் குடும்பங்கள் தமது ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களை நடத்தும் மண்டபம் குண்டுவெடிப்பில் சேதமாகியது. இன்னொரு நகரில் ஒரு வீட்டில் தீவிரவாதிகளின் ரகசியக் கூட்டம் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்துப்போன பொலிஸ் அதிகாரிகள், அது தமக்கு வைத்த பொறி என்றுணர்வதற்குள் குண்டுவெடித்துக் கொல்லப்பட்டனர். நிலைமையை இன்னும் மோசமாக்குவதாக கொலம்பியப் படைகளுக்கு அலோசனை வழங்கும் அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகள் இருவர் சென்ற விமானம் இயந்திரக் கோளாறினால் அடர்ந்த காட்டிற்குள் விழுந்து விபத்தில் உயிர் தப்பிய அமெரிக்கர்களை கெரில்லாக்கள் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். தனது பிரஜைகளை மீட்பதற்காக கொலம்பியாமீது படையெடுக்கப்போவதாக அமெரிக்க அரசு மிரட்டி வந்தது.

 

கொலம்பியா ஒழுங்காக தேர்தல்கள் நடாத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படும் ஜனநாயக நாடுதான். இருப்பினும் நகரங்களில் மட்டுமே ஜனநாயகத்தைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. நாட்டுப்புறங்களில் ஒன்றில் இராணுவத்தின் அல்லது துணைப்படைகளின் ஆட்சி நடக்கும் பிரதேசமாகவிருக்கும் அல்லது கெரில்லா இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இவற்றைவிட மூன்றாவது சக்தியாக போதைவஸ்துக் கடத்தும் மாபியாக் குழுக்கள் தமக்கென தனிப்படைகளுடன் சிறிது காலம் சில தசாப்தங்களாக அட்டகாசம் புரிந்து வந்தன. அரசபடைகளுடனான மோதலில் இறுதியில் பலம் குறைந்து போன மாபியாக் குழுக்கள் இராணுவத்துடன் உடன்பட்டு துணைப்படையை உருவாக்கினார்கள். இதனால் தற்போது இரண்டு சக்திகள் மட்டுமே களத்தில் உள்ளன.

 

இரண்டாவது சக்தியான மார்க்ஸீய கொரில்லாக் குழுக்களின் போராட்டம் நீண்ட வரலாற்றைக் கண்டுள்ளது. தென் அமெரிக்கக் கண்டத்தில் கடந்த 30 ஆண்டு காலமாகத் தோல்வியடையாமல் சளைக்காமல் போரிட்டு வரும் கெரில்லாக்களை கொலம்பியாவில் காணலாம். அவர்களின் வெற்றிக்கு பல காரணங்களிருந்தபோதும் நாட்டில் நிலவும் ஆழமான சமூக ஏற்றத்தாழ்வான ஏழை-பணக்கார வர்க்க வித்தியாசம் மிக முக்கியமான காரணி.

 

1946 ல் நாட்டில் எழுந்த குழப்ப நிலையே இன்றைய கெரில்லாக்குழுக்களின் ஆரம்பம். விவசாயிகள் நில உரிமைக்காகப் போராடினர். தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்தனர். ஆட்சியிலிருந்த கென்சர்வேட்டிவ் கட்சி நிலவுடைமையாளரின் பக்கம் நின்று போராட்டத்தை நசுக்கியது. தொழிற்சங்கத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியான லிபரல் கட்சியில் இருந்த இடதுசாரிகள் ஆயுதம் ஏந்தினர்.

 

லிபரல் கட்சி ஆரம்பத்தில் போராட்டத்திற்கு அதரவளித்தது. இருப்பினும் சந்தர்ப்பவாதப் போக்குடைய அந்தக்கட்சி ஆயுதப் போராட்டத்தை அரசுடன் பேரம் பேசப் பயன்படுத்தியது. இதன் விளைவாக 1970 ல் இருகட்சிகளிடையே உடன்பாடு ஏட்பட்டு தேசிய முன்னணி அமைத்தனர். இடதுசாரிகள் இதனைத் தமக்கிழைத்த துரோகமாகப் பார்த்தனர். தேசிய முன்னணி அரசு தெரிவு செய்யப்பட்ட தேர்தல் தினத்தின் பெயரில் எம்-19 என்ற இயக்கம் உருவாகியது. இந்த இயக்க உறுப்பினர்களில் பலர் நகர்ப்புறப் படித்த இளைஞர்கள். இதைத்தவிர நாட்டுப்புறத்தில் உதிரிகளாக இருந்த கொரில்லாக் குழுக்களை இணைத்து இன்னொரு பலம் வாய்ந்த இயக்கம் உருவானது. "கொலம்பிய புரட்சிகர இராணுவம்" (FARC) மிகவும் கட்டுக்கோப்பான மிகப்பெரிய கெரில்லா இயக்கம். இதற்கும் சட்டபூர்வ கொம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது. லிபரல் கட்சியுடன் அதிருப்தியுற்று வெளியேறிய இடதுசாரி லிபரல்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தனர்.

 

கம்யூனிஸ்ட் கட்சி அந்தக்காலத்தில் சோவியத் சார்புடையதாக இருந்ததால், சீனச்சார்பு மாவோயிஸக் கம்யூனிஸ்ட்டுகள் தமக்கென "மக்கள் விடுதலைப் படை" (EPL) என்ற கெரில்லா இயக்கத்தை அமைத்தனர். கொலம்பியாவின் ஆயுதப் போராட்டத்திற்கு கியூபப்புரட்சியும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. கியூபப்புரட்சியரல் கவரப்பட்ட சில கொலம்பியர்கள் ஒன்றிணைந்து 'தேசிய விடுதலை இராணுவம்' (ELN) என்ற கெரில்லா இயக்கத்தை ஸ்தாபித்தனர். இந்த இயக்கத்திற்கு கியூபா பல வழிகளிலும் உதவி வந்தது. ELN ன் தனிச்சிறப்பு, அது மாக்ஸீயத்துடன் 'விடுதலை இறையியலையும்' தனது சித்தாந்தமாக வரித்துக் கொண்டுள்ளது. தேவாலயங்களில் மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த கத்தோலிக்க மதகுருமார் ஆயுதம் ஏந்தி கெரில்லா இயக்கக் கொமாண்டர்களாக மாறிய அதிசயம் கொலம்பியாவில் நடந்தது. சமுக அநீதிகளுக்கெதிராக ஏழைமக்கள் ஆயுதமேந்திப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை எனக்கூறிய பாதிரியார் கமிலோ தொரஸ் அதனைச் செயலிலும் காட்டி ELN இயக்கத்துடன் இணைத்துக்கொண்டார். ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுற்ற பல மதகுருக்கள் அவரின் வழியைப் பின்பற்றினர். புரட்சி, சமூக நீதி பற்றிப்பேசுபவர்கள் நாஸ்திகர்களாக இருக்கத்தேவையில்லை என்பதை முதன்முதலாக கடவுள் நம்பிக்கையுள்ள மக்கள் புரிந்து கொண்டார்கள்.

 

இந்தக் கெரில்லாக்குழுக்களின் தோற்றத்தில் மட்டுமல்ல, அவற்றின் செயற்பாடுகளிலும் வேறுபாடுகள் தெரிகின்றன. தற்போது ஓய்ந்திருக்கும் எம்-19 பல அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றது. ஒருமுறை டொமினிக்கா நாட்டுத் தூதுவராலயத்தைக் கைப்பற்றிப் பல நாட்டுத் தூதுவர்களை இரண்டுமாதகாலமாக பயணக்கைதிகளாக வைத்திருந்தனர்.இன்னொருமுறை பால் லொறியைக் கடத்திச் சென்று சேரிவாழ் ஏழைமக்களுக்கு இலவசப் பால் விநியோகம் செய்தனர். ELN பொருளாதார இலக்குகளைக் குறிவைக்கிறது. எண்ணைவிநியோகப் பாதையில் குண்டுவைத்து நாசம் செய்தல், மின்மாற்றிகளை நகர்த்தல் போன்றவற்றின் விளைவாகப் பெற்ரோலிய கூட்டுத்தாபனம் இறுதியில் இயக்கத்திற்கு நிதியுதவி செய்து தன்னைக் காத்துக்கொண்டது. இதுதவிர முக்கிய புள்ளிகளைக் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்திருந்து பணம் கறப்பதையும் ELN தனது நிதி சேகரிப்பு நடவடிக்கையாகக் கருதுகிறது. பணக்காரரிடமிருந்து பணம் கறப்பதற்கு அது(கடத்தல்) சிறந்த வழி என்று நியாயப்படுத்தப்படுகின்றது.

 

FARC சிறு கெரில்லாக்குழுவாக ஆரம்பித்த இயக்கம். இன்று பெரிய இராணுவமாக வளர்ந்துள்ளது. இதனால் சிறு இராணுவ முகாம்கள் காவல் நிலையங்கள் ஆகியவற்றைத் தாக்கியழித்து, குறிப்பிடட்ட பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். 1995 க்கும் 1999 க்கும் இடைப்பட்ட காலத்தில் பெரிய இராணுவ முகாம்களும் அடுத்தடுத்து வீழ்ந்தன. அரசபடைகள் பின்வாங்கி ஓடின. இறுதியில் சுவிட்சர்லாந்து அளவிலான பிரதேசத்தை FARC இடம் விட்டுக்கொடுத்துவிட்டு, அரசாங்கம் பேச்சுவார்தை நடாத்தியது. கொலம்பியாவின் மத்திய, தென்பகுதிகளில் பல FARC ன் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக அறியப்பட்டுள்ளன. அங்கே பகலில் இராணுவத்தினர் ஆட்சியும் இரவில் FARC ன் ஆட்சியும் நடக்கிறது. கொலம்பியாவின் வடக்குப்பகுதியில் ELN ஆதிக்கம் செலுத்துகிறது. ELN க்கும் FARC க்கும் இடையில் நட்புரீதியான புரிந்துணர்வு இருந்து வருகிறது. இதுவரை இரண்டுக்குமிடையில் எந்த வகையான பகைமுரண்பாடுகளும் வெடிக்கவில்லை.

 

FARC ன் 30 வீதமான போராளிகள் பெண்கள். போர்முனைகளில் ஆண்களுக்கு நிகராகச் சண்டையிடுகின்றனர். இராணுவப்பயிற்சியும் சமமாகவே வழங்கப்படுகின்றது. பல பெண்கள் கொமாண்டர் தரத்திற்கு உயர்ந்துள்ளனர். ஆண்-பெண் போராளிகளுக்கிடையிலான திருமண பந்தம் தொடர்பான விதிகள் சிக்கலானவை. இயக்கத்திற்குள் காதலிப்பதற்கும், ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதற்கும் அனுமதிக்கப்படுகின்றது. சம்பந்தப்பட்டவர் தனது காதலை பகிரங்கப்படுத்தவேண்டும். தொடர்ந்து அவர்களின் விருப்பப்படி சேர்ந்துவாழ விடப்படுவர். ஆனால் அது நிலையானதல்ல. கடமை அழைக்கும்போது தமது உறவை முறித்துக்கொண்டு களத்திற்குச் செல்ல வேண்டும். இதன் காரணமாக குழந்தை பெற்று வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தனது துணைவி மீது வன்முறை பிரயோகிக்கும், அல்லது வல்லுறவு செய்யும் ஆண்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றனர்.

 

கொலம்பியாவின் அரசியல் அமைப்பை "இரு கட்சி ஜனநாயக முறை" என்று அழைக்கின்றனர். இதுவரை ஒன்றில் கென்சர்வேட்டிவ் கட்சி அல்லது லிபரல் கட்சி என்று மாறிமாறி ஆட்சி செய்து வருகின்றன. நாட்டின் உள்நாட்டுப்போர் அடிக்கடி தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்ப்படுகின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சியினர் தாம் ஆட்சிக்கு வந்தால் சமாதானம் கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுப்பார்கள். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் சிறிதுகால யுத்த நிறுத்தம் ஏற்பட்டுப் பேச்சுவார்த்தை நடக்கும். பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பேச்சுவார்த்தை குழம்பி பழையபடி யுத்தம் நடக்கும். கடந்த முப்பது வருடங்களாக சண்டையும் சமாதானமும் இதே பாணியில் தொடர்கிறது. அரச படைகளின் ஜெனரல்கள் பொதுவாகவே கெரில்லா இயக்கங்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பதை எதிர்த்து வருகின்றனர். இந்தக் கடும் போக்காளரின் பின்னால்தான் அமெரிக்க அரசும் நிற்கிறது. கடந்த ஆண்டு "Plan Colombia" என்ற பெயரில் அமெரிக்கக் காங்கிரஸ் அனுமதியுடன் பெருமளவு பணம் கொலம்பிய இராணுவத்தை பலப்படுத்தச் செலவிடப்பட்டது. அதிநவீன black Hawk ஹெலிகப்டர்கள், இரவில் பார்க்கும் உளவுவிமானங்கள் என்பன இந்த உதவியில் அடக்கம். மேலும், அமெரிக்கா கொலம்பியப் போரை "பயங்கரவாத்திற்கெதிரான போர்" என்றே சொல்லி வருகின்றது.

 

பெருமளவு எதிர்பார்ப்புகளுடன் முன்னெடுக்கப்பட்ட கடைசிச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் (FARC தலைவர் மருலண்டாவும், அன்றைய ஜனாதிபதி பஸ்த்ரானாவும் காட்டுக்குள் சந்தித்துக் கதைத்தனர்) குழம்பிய பின்னர் கெரில்லாக்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டுவிட்டு காடுகளுக்குள் பின்வாங்கினர். போகும்போது எந்தவொரு அரசாங்க நிர்வாகத்தையும் விட்டுவைக்காமல் அழித்துவிட்டுச்சென்றனர். படைப்பிரிவுகளின் கொமாண்டர்கள் வௌ;வேறு இடங்களில் இருந்தாலும் தமக்கிடையிலான ரேடியோத் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டனர். புதிய யுக்தியாக கொலம்பியாவில் மட்டுமல்லாது எல்லை கடந்து பிறேசிலிலும் வெனிசுலாவிலும் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். உள்நாட்டில் யுத்த தந்திரத்தை மாற்றிக் கொண்டனர். வழக்கமான இராணுவ முகாம் தாக்குதல்களைவிட்டு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் குண்டு வைத்து தகர்க்கும் வேலைகளைச் செய்கின்றனர். குறுகிய காலத்திற்குள் குறைந்தது 50 பாலங்களாவது தகர்க்கப்பட்டள்ளன.

 

இத்தகைய நடவடிக்கைகளால் அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. நாற்பதாயிரம் போர்வீரர்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டுள்ளனர். கெரில்லாக்கள் பெருமளவு வெடிமருந்துப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக அமெரிக்கக் காங்கிரஸ் அறிக்கை தெரிவிக்கின்றது. இதைவிட அதிர்ச்சியைக் கொடுத்த விடயம், FARC கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பல வெளிநாட்டவர்களும் காணப்படுவதாக வரும் செய்திகள். மூன்று ஐரிஸ்காரர்கள் இராணுவத்தால் பிடிபட்டபின்புதான், ஐரிஸ் குடியரசு இராணுவ (IRA) உறுப்பினர்கள் கொலம்பியக் கெரில்லாக்களுக்குக் குண்டு வைப்பதில் பயிற்சியளிப்பது தெரியவந்துள்ளது.

 

அரசபடைகளுடன் தொடர்புடைய துணைப்படையான AUC க்கு அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ நிபுணர்கள் பயிற்சியளித்து வருகி;ன்றனர். சில வெளிநாட்டுக் கூலிப்படைகளும் தமது சேவையை வழங்கி வருகின்றனர். அரசாங்கத்திற்குக் கட்டுப்படாத துணைப்படைக்கு நிலப்பிரபுக்களும், பெருமுதலாளிகளும் தாராளமான நிதி வழங்கி வருகின்றனர். பெருமளவு மனித உரிமை மீறல்களுக்கு துணைப்படையே பொறுப்பு எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கெரில்லாக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் துணைப்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

 

"ஒன்று, இரண்டு, மூன்று... வியட்னாம்களை உருவாக்குவோம்" என்றார் ஆர்ஜென்தீனப் புரட்சியாளர் சே குவேரா. இரண்டாவது வியட்நாம் கொலம்பியாவில் நிதர்சனமாகி வருகின்றது. நிலைமை இப்படியே போனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில்கெரில்லாக்கள் நாடு முழுவதையும் பிடித்துவிடுவார்கள் என்று உண்மை நிலையைச் சொல்லியது அமெரிக்கக் காங்கிரஸ் அறிக்கை. என்ன விலை கொடுத்தாகிலும் அதைத் தடுக்க அமெரிக்க அரசு பெரும் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. பல ஆண்டுகளாகவே "போதைப் பொருளுக்கெதிரான போர்" என்ற பெயரில் அமெரிக்க உதவி கொலம்பிய அரசுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. இந்தப் போர்வையின் கீழ் நடக்கும் கதையோ வேறு. அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படைப்பிரிவு கெரில்லாக்கள் நடமாட்டத்தையும் கண்காணித்தது. அவர்களின் அக்கறை முழுக்க வேறு எங்கோ இருந்ததாக கொலம்பிய அரச அதிகாரிகளே குறைப்பட்டனர். ஹெரோயின் உற்பத்திக்கான கொக்கோச் செடிகளை அழிக்க அனுப்பப்பட்ட விமானங்கள் விசிறிய மருந்து, பிற உணவுப்பயிர்களையும் அழித்துவருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதுவரைகாலமும் பின்னால் நின்று உதவிய அமெரிக்க அரசு தற்போது நேரடியாகத் தலையிடப்போவதாகப் பயமுறுத்தி வருகின்றது. வரப்போகும் அமெரிக்க இராணுவத்தை எதிர்பார்த்துக் கொண்டு கொலம்பியப் போராளிகள் காத்திருக்கின்றனர்