நீதிமன்றத்தின் மாட்சிமையும், புனிதமும் சில நாட்களாக வீதியில் விவாதப்பொருளாகியிருக்கிறது. அனைவரும் விவாதிக்கிறார்கள் இதுவரை இப்படி நடந்ததில்லை என்று. ஊடகங்கள் அப்படித்தன் சொல்லித்தருகின்றன மக்களுக்கு., ஒரு குண்டுவெடிப்பு என்றால் பயங்கரம், இத்தனை பேர் சாவு, இதற்கு முன் இப்படி

 நடந்ததேயில்லை என்கின்றன. யார் வருகையையும் முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்தினால் வரலாறு காணாத பாதுகாப்பு என்கின்றன. நடந்த நிகழ்வை அதிர்ச்சியாகவோ, ஆச்சரியமாகவோ பேசிவிட்டு கலைந்து செல், ஆழ நோக்காதே என்பது தான் ஊடகங்கள் மக்களுக்கு நடத்தவிரும்பும் பாடம். கடந்த வாரம் நடந்த சு. சாமியின் மீதான முட்டையடித்தாக்குதலும் அதனைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் வழக்குறைஞர்கள், நீதிபதிகள் மீது காவல்துறையால் நடத்தப்பட்ட மிருகவெறிதாக்குதலும் இப்படித்தான் ஊடகங்களால் முன்வைக்கப்பட்டு, இன்னும் ஓரிரு நாட்களில் வேறொரு நிகழ்வின் துணையுடன் மறக்கடிக்கப்பட்டுவிடும். ஆனால் ஆட்சிமுறையும், மக்களால் நடத்தப்படும் ஆட்சி எனும் மாயையும் வெளிப்படையாக அம்மணமாகி நிற்பது மறப்பதற்கில்லை.

 

         

 தமிழ்நாட்டில் நடப்பது திமுக ஆட்சி, அதாவது பார்பனீயஎதிர்ப்பு இயக்கத்தில் வேர்கொண்ட இயக்கத்திலிருந்து கிளைத்துவந்த ஆட்சி. அதன் மூத்த அமைச்சர் ஒருவர் சட்டமன்றத்திலேயே அறிவிக்கிறார், ஒரு ஆசாமியின் மீது முட்டைவீசப்பட்ட சம்பவம் என்று. முட்டை வீசப்பட்ட ஆசாமியோ ஆட்சியிலிருப்பவர்களுக்கு எதிரானவர். ஆனாலும் அவர்களின் பொருப்பிலிருக்கும் அதிகாரம் தான் சில முட்டைகள் உடைந்ததற்காக பல மண்டைகளை உடைத்திருக்கிறது. இந்த முரண்பாடு ஆட்சியிலிருப்பவர்களால் ஏற்பட்டதா? காவல்துறையால் நடத்தப்பட்ட இக்கலவரத்தை விசாரிக்க பென்ச் அமைத்திருக்கும் நீதிமன்றம் தான் சு சாமி ராமாயணம் எனும் புராணக்குப்பையை காட்டியதும் மக்களின் வரிப்பணம் இரைக்கப்பட்டு கிட்டத்தட்ட முடியும் தருவாயிலிருந்த திட்டத்தை முடக்கச்சொல்லியது. ஈழத்தமிழர்களுக்காக மழையில் நனைந்தும், நனையாமலும் மனிதச்சங்கிலி, ராஜினாமா, இயக்கம், விளக்கக்கூட்டம் என்று தொடர்ச்சியாக எதையாவது நடத்தி ஈழத்தமிழர்களுக்காக போராடிக்கொண்டிருப்பதாக போக்குக்காட்டிக்கொண்டிருக்கும் திமுக அரசுதான், ஈழத்திற்காக உணர்வு பூர்வமாக போராடிக்கொண்டிருக்கும் வழக்குறைஞர்களை அடித்து நொருக்கியிருக்கிறது. இவைகளெல்லம் நேர்ந்துவிட்ட முரண்பாடுகளோ, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி சம்பவங்களோ அல்ல.

 

ஆட்சியிலிருப்பவர்கள் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களது கொள்கைகளுக்கு ஏற்ப, த‌ங்கள் தீர்மானத்திற்கு ஏற்ப செயல்பட்டுவிட முடியாது என்பதைத்தான் இந்த முரண்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதோடு மட்டுமல்லாமல், அதிகாரவர்க்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியிலிருப்பவர்களின் கொள்கைகள் விருப்பங்களை துளியும் சட்டைசெய்யாமல் செயல்பட முடியும் என்பதையும் வெளிப்படுத்திக்காட்டுகின்றன. இயக்குனர் சீமானை கைது செய்ததை வேண்டுமானால் காங்கிரஸின் தயவில்லாமல் ஆட்சியில் நீடித்திருக்கமுடியாது என்ற நிர்ப்பந்தம் காரணமாக இருக்கலாம். நீதிமன்ற கலவரத்திற்கு நிர்ப்பந்தம் ஒன்றுமில்லையே. திட்டமிட்டு வெறியுடன் நடத்தப்பட்ட நீதிமன்ற தாக்குதலுக்கு காரணம், ஈழத்தமிழர்களுக்காக தொடர்ச்சியாக உணர்வுபூர்வமாக வழக்குறைஞர்கள் போராடியதுதான். இயல்பாக உள்ள நீதித்துறையா, காவல்துறையா என்ற போட்டியும் சேர்ந்துகொள்ள , ஒரு கூமுட்டையின் மீது வீசப்பட்ட சில கூமுட்டைகள் உரசிவிட வெந்து தணிந்திருக்கிறது நீதிமன்றம்.

 

 பெரியாரின் சுயமரியாதை வேட்டியை பிடித்துக்கொண்டு வளர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்தாலும் பார்பனீயத்திற்கு எதிராக ஒன்றும் செய்துவிட முடியாது, அது அதிகாரவர்க்கமாய் இருக்கும் வரை. கோடிக்கணக்கான மக்களின் வறுமையையும் பசியையும் புறந்தள்ளிவிட்டு ‘காட்’ போன்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஓரிரு அதிகாரிகள் போதும். விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் எதிர்த்தாலும், மக்கள் கேள்வி கேட்டாலும், போலிகள் எகிரிக்குதித்தாலும் அணு ஒப்பந்தம் ஏற்படுவதை தடுக்கமுடியாது. தமிழர்கள் நாளுக்கொரு போராட்டம் நடத்தினாலும், தமிழர்களைக்கொல்ல தமிழ்நாட்டு வழியே கவச வாகனங்கள் அனுப்பப்படுவதை வேடிக்கை பார்க்கமட்டுமே முடியும். ஏனென்றால் இவைகளெல்லாம் அதிகாரவர்க்கத்தின், பார்ப்பனியத்தின் விருப்பமாக இருக்கிறது. ஓட்டுப்போட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களெல்லாம் பொம்மைகள் தான். அதைத்தான் முகத்தில் தெரித்து நமக்குச்சொல்கிறது வழக்குறைஞர்கள் மண்டை உடைந்து சிந்திய‌ ரத்தம். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் எனும் பழமொழியைப்போல் சு சாமியின் மேல் வீசப்பட்ட முட்டை உடைந்து சட்டம் ஒழுங்கில் நாறுகிறது.

          

இன்னும் எத்தனை நிகழ்வுகள் வேண்டும் இந்த உண்மைகளை உணர்ந்து கொள்வதற்கு? இது தான் இன்று மக்கள் முன் எழுந்து நிற்கும் கேள்வி.