நம் தமிழ் நாட்டிற்கும்,
தமிழ் மக்களுக்கும்
மாபெருங்கேடாய் இருந்துவரும்
மற்றொரு காரியம் சினிமா, நாடகம்
முதலிய நடிப்புக் காட்சிகளாகும்.

 

இவை இசையைவிட
கேடானவையாகும் என்பது என் கருத்து.
நம் தமிழ்நாடு மானமுள்ள நாடாக,
மானத்தில் கவலையுள்ள
மக்களைக் கொண்ட நாடாக
இருந்திருக்குமானால்

 

இந்த நாடகம், சினிமா முதலியவை
ஒழிந்து கல்லறைகளுக்குப் போயிருக்கும்.
இதை நான் வெகு காலமாகச்
சொல்லி வருகிறேன்.
இசையினால் காது மூலம்
உடலுக்கு விஷம் பாய்கிறது.

 

நடிப்பினால் காது, கண் ஆகிய
இரு கருவிகள் மூலம்
உடலுக்குள் விஷம் பரவி
இரத்தத்தில் கலந்து போகிறது.
இவ்வளவு பெரிய குறைபாடும்,
இழிவும் உள்ள
நாட்டுக்கும், மக்களுக்கும்
இன்று கடவுள் பஜனையும்,
கடவுள் திருவிளையாடல்
நடிப்பும்தானா விமோசனத்துக்கு
வழியாய் இருக்க வேண்டும்?

 

நாடகம் எதற்கு?
அது படிப்பிக்கும் படிப்பினை என்ன?
அதற்காக ஏற்படும் செலவுகள் எவ்வளவு?
புராணக் கதைகளை நடிப்பதினால்
அனுபவிப்பதால் மூட நம்பிக்கை,
ஒழுக்க ஈனம்,
கட்டுத்திட்டமற்ற காம உணர்ச்சி,
கண்ட மாத்திரத்தில் காம நீர்
சுரக்கும்படியாகப் பெண் மக்கள்
தங்களை அலங்கரித்துக் கொள்ளுதல்
முதலியன பிடிபடுவதல்லாமல்
வேறு என்ன ஏற்படுகிறது.


தந்தை பெரியார்.
(தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு என்ற புத்தகத்தில் இருந்து. பக்கம் : 66)