"காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப்

 பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து."
மேற்கண்ட வரிகளை மீண்டும் ஒருமுறை நிதானமாக வாசித்துப் பாருங்களேன். இது பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், புதிய ஜனநாயகத்துக்கு எதிராக கட்டியெழுப்பியுள்ள மணற்கோபுரம்!
“பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்து மதவெறியர்களுக்கு அனுசரனையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்” என்கிற குற்றச்சாட்டை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கும் விமர்சனம், எப்படி பார்ப்பனியத்தைக் குளிர்விக்கும்? பார்ப்பன-இந்துவெறியர்களை ஆதரித்தவன் என்று ஒருவனைக் குற்றம் சாட்டினால், பார்ப்பனியவாதிகளுக்கு நம்மீது ஆத்திரம் வருமா, வராதா; என்பதை நீங்களே (வேறாருமல்ல இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள்தான்) சொல்லுங்கள். ஆனால், இப்போது ஆத்திரம் விடுதலை ராசேந்திரனுக்கு வருகிறதே, அது ஏன்? இதனை அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன-இந்துவெறியர்களை எதிர்த்து எழுதப்பட்டிருப்பதை அவதூறு செய்வதனால், விடுதலை ராசேந்திரனுக்கு பார்ப்பன ஆதரவு கண்ணோட்டம் இருப்பதாக நாமும் சொல்லலாமா? இல்லையா? ஆனால், அப்படியெல்லாம் நாம் சொல்லவில்லை. அது சரியான மதிப்பீடும் அல்ல என்பது விடுதலை ராசேந்திரனுக்குத் தெரியாது; நமக்குத்தான் தெரியும்.
பிறகு ஏன், பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் ‘புடம்போடப்பட்ட(!)’ விடுதலை ராசேந்திரன் இவ்வாறு எழுத வேண்டும், என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
’சமூக நீதி’க் காவலராக திராவிடக் கட்சிகளாலும் போலி கம்யூனிஸ்டுகளாலும் ’தலித்’ அரசியல் பேசுபவர்களாலும் போற்றப்படும் வி.பி.சிங்கின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் “காக்கை குயிலாகாது...” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. அக்கட்டுரை வி.பி.சிங்கிற்கு எதிராக வைத்திருக்கும் கேள்விகளில் சிலவற்றை இங்கே (தேவை கருதி) பட்டியலிடுகிறேன்.
1. சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த வி.பி.சிங்கை இடஒதுக்கீட்டுக்காக மட்டும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா, பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியைத் துணிவோடு கைது செய்ததை வைத்து அவரைப் "பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி' என்று கொண்டாட முடியுமா?
2. காங்கிரசில் இருந்தபோது அவசரநிலை பாசிச ஆட்சியை அவர் தீவிரமாக ஆதரித்ததையோ, அவருடைய குருநாதர் சஞ்சய்காந்தி காட்டுமிராண்டித்தனமாக முசுலிம்கள் மீது பாய்ந்து குதறியபோது அதனை அவர் கண்டும் காணாமல் இருந்ததையோ, மனித உரிமை பேச காஷ்மீர் வரை போகும் அ.மார்க்ஸ் ஏன் கண்டுகொள்வதில்லை?
3. அவசரநிலைப் பாசிச ஆட்சிக் காலத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்ட போதிலும், வி.பி.சிங்கின் அவசரநிலை ஆதரவை தி.மு.க. ஏன் விமர்சிப்பதில்லை?
4. 1980இல் இவர் உ.பி. முதல்வராக இருந்தபோதுதான், உ.பி. அரசின் ஆயுதப்படை போலீசு மொராதாபாத் முசுலிம்களை இனப்படுகொலை செய்து, இந்தியாவின் மதக்கலவர வரலாற்றில் புதுப்பரிணாமத்தை உருவாக்கியது. இவரின் ஆட்சியில்தான் ஆதிக்க சாதிப் பண்ணையார்களின் சட்டவிரோத ஆயுதப்படைகள் தாழ்த்தப்பட்டோர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தன. ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் "நிலைமை விரைவில் சரிசெய்யப்படும்' என்ற வெற்று அறிக்கையைத் தவிர, இவர் செய்தது எதுவுமில்லை. கான்பூருக்கு அருகேயுள்ள தஸ்தம்பூர் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, 1982இல் இவர் பதவி விலகவேண்டி வந்தது. 1984 சீக்கியப் படுகொலைக்காக 1989இல் மன்னிப்புக் கேட்ட வி.பி.சிங், தனது ஆட்சியில் கொலையுண்ட முஸ்லிம்களுக்காகவோ, தாழ்த்தப்பட்டோருக்காகவோ மன்னிப்பு எதையும் கேட்டதில்லை என்பது தொல்.திருமாவுக்கோ, தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகத்திற்கோ தெரியாதா?
இன்னும் ஏராளமான, உறுதியான தருக்கங்களுடன் புதிய ஜனநாயகத்தின் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. (நேரமிருப்பவர்கள் மேற்கண்ட சுட்டியை அழுத்தி படித்துக் கொள்ளலாம்) இக்கட்டுரைக்கு மறுப்பு என்கிற பெயரில் ”வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்” என்கிற தலைப்பில் ‘பார்ப்பனவாதி’ என்று எமது தோழர்களை வசைபாடியிருக்கிறார், விடுதலை ராசேந்திரன். ஆனால், அவருடைய அந்த நீண்ட பதிவினூடாக மேற்கண்ட கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
மேற்கண்ட பு.ஜ. கேள்விகளுக்கு [வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.] என்கிற வரிகளைத்தான் தனது அதிகபட்ச பதிலாகத் தந்திருக்கிறார். 
இடஒதுக்கீட்டையும், அதனைச் சாதித்தார் என்று வி.பி.சிங்கையும், ‘காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் அதனால் அவர்தான் தேசத் தந்தை’ என்று சொல்வதைப் போல உருவகப்படுத்தி முட்டுக்கொடுத்து நிறுத்தப் படாதபாடுபட்டிருக்கிறார். அதன் பொருட்டு தான் பு.ஜ.வுக்கு பார்ப்பன பட்டம் சூட்டி, அகமகிழ்ச்சி கொள்ள முயன்றிருக்கிறார் பாவம்!
பார்ப்பன-வருணாசிரம படிநிலைகளில், பார்ப்பனன், சத்திரியன், வைசியன் ஆகிய வருணத்தாருக்கு சேவை செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்தனர் சூத்திர, பஞ்சம, சண்டாள வருணங்களைச் சார்ந்த உழைக்கும் மக்கள். அந்த உழைக்கும் மக்களை சட்ட நிருவாகத்தின் மூலம் மிரட்டிப் பணியவைத்து, உழைப்பையும் உடமைகளையும் சுரண்டிக் கொடுத்து பார்ப்பன சேவையாற்றியதைத் தவிர வேறொன்றும் செய்யாத பிறவருணத்தவர்களை இடஒதுக்கீட்டின் மூலம் சூத்திரர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தந்ததுதான் இவர்கள் வழிபடும் நீதிகட்சி முதல் வி.பி.சிங் வரையிலான ‘சமூக நீதி’ அரசுகளின் சாதனையாக இருக்கிறது. அதேநேரத்தில் வெகுசில பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் இதன்மூலமாக சலுகைகளைப்(உரிமைகளை) பெற்றிருந்தாலும், இதனைச் சாதனையாக ஏற்கமுடியாது, இவை வெறும் சீர்திருத்தம் மட்டுமே. இந்த சீர்திருத்தத்தால் சமூகத்தில் ஒடுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு எந்த விடிவும் ஏற்படவில்லை. இதனாலேயே இவர்கள் முன்னிறுத்தும் இடஒதுக்கீட்டுக் கொள்கை ஏற்கத்தக்கதாக இல்லை என்பது பு.ஜ.வின் அழுத்தமான நிலைப்பாடு. இதனை,இடஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை என்கிற சிறு வெளியீட்டின் மூலம் ஏற்கெனவே நேரடியாகப் பதிவு செய்திருக்கிறது புதிய ஜனநாயகம்.
ஆயிரமாண்டுகளாக நமது சமூகத்தை, உழைக்கும் மக்களை இழிவுபடுத்திய பார்பன கும்பலுக்கும், அவர்களின் எடுபிடிகளாக, அடியாளாக இருந்து கொண்டு நம்மக்களை அடிமை படுத்திவந்த ஆதிக்கசாதிக் கூட்டத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் இந்த ‘இட ஒதுக்கீடு’ குறித்த குழாயடி சண்டையில் புரட்சிகர அமைப்புகளுக்கு என்ன வேலை இருக்க முடியும்? ஆளூம் வர்க்கச் சேவையாற்றுவதற்கு நடக்கின்ற போட்டா போட்டியில், இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை துடைத்தெறிவதற்கு போராடும் புரட்சிகர அரசியல் இவ்விருகூட்டத்தையும் முற்றாக அழிப்பதைத்தான் முன்னிறுத்த முடியும். முன்னிறுத்துவோம்; இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை.
இடஒதுக்கீட்டையும் அதனூடாக வி.பி.சிங்கையும் மேன்மை படுத்தி எழுதியிருக்கும் விடுதலை ராசேந்திரன், புரட்சிகர அமைப்புகளின், இடஒதுக்கீடு குறித்த மேற்கண்ட நிலைப்பாடுகளை குறைந்த பட்ச அறிவு நாணயத்தோடு பரிசீலித்திருக்கிறாரா என்கிற ஐயத்தையே அவரது பதிவு ஏற்படுத்துகிறது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பது நமது நோக்கமல்ல என்று தெளிவாக, அழுத்தமாக புதிய ஜனநாயகம் தெரிவித்திருக்கிறது. அதனை ஆதரிப்பதில் உள்ள பிரச்சினைகளையும் தொகுத்தளித்திருக்கிறது. அதன் மீதான விடுதலை ராசேந்திரனின் கருத்துக்கள் எதையும் நான் படித்ததில்லை. அவ்வாறு எதேனும் அவர் இதற்கு முன்னதாக எழுதியிருப்பாரேயானல் எனக்கு யாராவது அறியத்தாருங்கள்.
இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை சுக்கு நூறாகப் பிளப்பதன் பொருட்டு வேலை செய்துவரும் புரட்சியாளர்கள், அதே ஆளும் வர்க்கத்தின் ஆகப்பெரும்பான்மையான கேடுகளுக்கும் துணை நின்ற, ஆளுவர்க்கப் பிரதிநிதியாகவே வாழ்ந்து மறைந்த வி.பி.சிங்கை மண்டல் பரிந்துரை என்கிற ஒன்றைக் கொண்டு ஒருபோதும் புனிதப்படுத்த முடியாது. போபர்ஸ் பீரங்கி ஊழல் என்றும் மண்டல் கமிசனென்றும் வி.பி.சிங் கூச்சலிட்டது ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டும்தான். இதனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு சிறு துரும்பளவேனும் பலனில்லை என்பது தெளிவாகத் தெரியும் போது அதற்காதரவாக குரல் கொடுப்பது முற்றிலும் பலனற்றது.
////////ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா? //////////
இங்கே நான் குறிப்பிட்டுள்ள புதியஜனநாயகத்தின் இடஒதுக்கீடு மீதான மதிப்பீடுகளை அறவே புறக்கனித்து, திருவாளர் ராசேந்திரன் ‘’ஏற்கெனவே இருந்த சமூக நிலையைக் குலைத்துவிட்டாரே...” என்று புதிய ஜனநாயகம் புலம்புவதாக எழுதியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த, இப்போது இருக்கின்ற சமூக நிலைமைகளை அடியோடு புரட்டிப் போடுவதுதான் புதிய ஜனநாயகத்தின் அரசியல் என்பது விடுதலையாருக்குத் தெரியாது போலும்! சொல்வது அவதூறாக இருந்தாலும் கொஞ்சமாவது பொருந்தச் சொல்ல வேண்டாமா? 
அடுத்து, ம.க.இ.க.வின் திட்டத்தில் பார்ப்பன எதிர்ப்பு கைவிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதுதான் இது அவதூறுப் பதிவு என்பதற்கான ஒரு சோற்றுப் பதம். ”இந்து எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு போன்ற பல்வேறு சூழல்களில் களப்பணிகளில் இணைந்திருக்கிறோம்....” என்பதாக இக்கட்டுரையினைத் தொடங்கியுள்ள விடுதலையார்தான், ம.க.இ.க. பார்ப்பன எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டதாகவும் திரிக்கிறார். இதில் எது உண்மை அய்யா?!
இவர் குறிப்பிட்டுள்ள 1998ஆம் ஆண்டிற்குப் பிறகு மட்டும் ம.க.இ.க. மேற்கொண்ட பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களை மொத்தமாக இருட்டடிப்பு செய்வதாக இருக்கிறது இவரது இந்த கருத்து. 2003 –ல் தான் ”பார்ப்பனிய, மறுகாலணிய பண்பாட்டுப் படையெடுப்பிற்கு எதிரான போராட்டமாக”, பார்ப்பனிய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
இவர் மேற்குறிப்பிட்டுள்ள காலகட்டத்திற்குப் பிறகுதான் தில்லைப் போராட்டத்தினை ஆறுமுக சாமியைக் கொண்டு தொடங்கி இன்றுவரை அதே வேகத்தோடும் வீச்சோடும் நடத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களில் ம.க.இ.க.வின் செயல்பாடுகள் குறித்து தமிழக மக்களுக்குத் தெரியும், உங்கள் கட்சியிலுள்ள கீழ்மட்ட அணிகளுக்கும் நன்றாகவே தெரியும், பாவம் உங்களுக்குத்தான் தகவல் ஏதும் வரவில்லை போலும்!
///////"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள். //////
ம.க.இ.க. குறிப்பிட்டுள்ள அந்த மூன்று மலைகள், பொருளாதார ரீதியில் தேசத்தைச் அடிமைப்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது. அந்த சுரண்டல் வாத ஆளும் வர்க்கத்துக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் சேவை செய்யும் அமைப்பாகத்தான் பார்ப்பன பயங்கரவாதம் திகழ்கிறது, என்பதையும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகவும், மறுகாலணியத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கூர்மை படுத்தப்படவேண்டும் என்ற ம.க.இ.க.வின் அறைகூவலெல்லாம் விடுதலையாரின் செவிகளை எட்டவில்லை போலும்! 
ம.க.இ.க.வின் திட்டத்தை சுருக்கி, வெட்டி ‘தேவைக்கேற்ற வகையில்’ பயன்படுத்துகின்ற விடுதலையாரின் பார்வையில் நிறைந்திருக்கும் காழ்புணர்ச்சிக்கு என்ன பெயர் சூட்டியழைக்கலாம்? இவரது பார்ப்பன எதிர்ப்பை, ம.க.இ.க., பு.ஜ., மீதான அவதூறுகளை பாராட்டுபவனைக் கொண்டு பார்த்தாலே இவரது கருத்துக்களின் தரம் எளிதாகப் புரியும். இவரது கட்டுரையினை அட்சரம் பிசகாமல் தனது தளத்தில் பதிவிட்டு, நன்றியையும் பொங்கி வழியவிட்டிருக்கிறான், சிபிஎம் கட்சியின் செல்வப்பெருமாள். 
வி.பி.சிங்கை பு.ஜ. விமர்சித்திருப்பது பார்ப்பனர்களைக் குளிர்வித்திருக்கிறது, என்று உருவகப்படுத்தும் விடுதலை ராசேந்திரனுக்கு ஒரேயொரு கேள்வி. உங்களுடைய இந்த கூற்று, பார்ப்பனியத்தில் கேவலம் பூநூலைக் கூட இழக்க மனமின்றி உழலும் சி.பி.எம். யோக்கியர்களைக் குளிர்வித்திருக்கிறதே, இதற்குப் பெயர்தான் பார்ப்பன எதிர்ப்பா? உங்களின் கட்டுரை பு.ஜ.வை சிறுமைபடுத்தவில்லை, மாறாக அதனை சி.பி.எம். ஆதரிப்பதுதான் உங்களைக் கடுமையாகச் சிறுமை படுத்தியிருக்கிறது. உங்களை நோக்கி வரும் பாராட்டுக்களே உங்களுக்கு எதிர்வினையாக மாறியிருக்கிறது. இதையாவது கொஞ்சம் பகுத்தறிவு கண் கொண்டு பாருங்களேன்!
தோழமையுடன்,
ஏகலைவன்.