Language Selection

கலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆகா நாம் என்ன புண்ணியம் செய்தோம்

இது வரைக்கும் உலக வரலாற்றிலேயே
அதுவும் முதல் முறையா  எப்படி
சொல்லுறது
பத்திரிக்கைகள் திண்டாடுகின்றன
டிவிக்களோ கொண்டாடுகின்றன…..

 

இப்போது மட்டுமல்ல
எப்போதும் இப்படித்தான்
கொழும்பில் நடந்த டெஸ்ட் தொடரை
இந்தியா கைப்பற்றியது
பங்கு சந்தை கொஞ்சம்
ஏறிவிட்டது
நாட்டின் வளர்ச்சி விகிதம்
உயர்ந்து விட்டது
கொண்டாட்டங்களும் திண்டாட்டங்களும்
கூடி கும்மியடிக்கின்றன எங்களின்
இழவு வீட்டில்…..

 

தின்ன சோறில்லை
ரெண்டுபக்கமும் குண்டுமழை
தத்தி தத்தி
கள்ளத்தோணி ஏறும் போது
போய்விட்டது உயிர்…..

 

முகத்தின் சுருக்கங்கள்
சொல்லும் முதுமையை
நிலத்தின் சுருக்கங்களோ
அறிவித்தது மண்ணின்
மரணித்தலை
ஆனாலும் வழியில்லை
தோண்டுகிறோம்……..

 

arrah-copy

அழுகிறது குழந்தை
தூக்கம் கெட்டுப்போகவில்லை
பலநாளாய் போகவில்லை
தொண்டைக்குழிக்குள் எதுவும்-
ஆத்தாளோ பறிக்க
போயிருக்கிறாள் ஒடுவந்தலையை….

 

வேலையில்லை
இருந்த கம்பெனிகள்
முடிக்கொள்ள

பூட்டுகள் மீண்டும்
சொல்கின்றன வேலையில்லை

வேலையில்லை…..

 

தண்ணீர்,சோறு எல்லாம்
கானல் நீராய்ப்போக
சாக்கடை தண்ணீர் மட்டும் தான்
மிச்சமிருக்கிறது…..

 

என்ன இருந்தாலும் எல்லா
விரலும் ஒரே மாதிரியா
இருப்பதில்லை  உண்மைதான் யாரும்
சுண்டு விரலாய் இருக்கவிரும்புவதில்லை

 

நாங்கள் கூட  சோத்துக்கு
லாட்டரி அடிக்க விரும்பியதில்லை
ஆனால் இன்று வரை
அடித்துக்கொண்டே இருக்கிறோம்
விழாத பரிசுச்சீட்டை சுரண்டிக்கொண்டே இருக்கிறோம்……..

 

எப்படி இருந்தாலும் பெருமைப்பட்டே
ஆகவேண்டுமாம்
ஒன்பது ஆஸ்கர் விருது
கிடைத்ததற்காக
ஒவொவொரு நாளும் ஒவ்வொரு
பெருமைகள் எங்களை
கர்வமாயிருக்கச்சொல்கின்றன…..

 

போட்டியிடாமலே விருதுகள்
எங்களுக்கு குவிகின்றன
பதவிகள் கனக்கின்றன
பாதையோ கருமையாய் இருக்கின்றது….

 

எல்லோரும் பெருமைப்படுங்கள்
நாங்களும் பெருமையோடு
செத்துப்போகிறோம்
கண்டிப்பாய் எங்களுக்கு சொர்க்கம் கிடைக்காது
உழைக்காத ஊதாரிகள் எங்களுக்கு தந்த
கடைசி ஆஸ்கர் விருதுதான் நரகம்.