யாரும் தனக்குத் தானே புதைகுழியை வெட்டுவார்களா! ஆம் வெட்டுவார்கள். புலிகள் அதையே இன்று செய்துள்ளனர். அதையும் பல கோணத்தில் வெட்டுகின்றனர். 'மனிதாபிமான மீட்பு" என்ற பெயரில், புலிக்கு எதிரான ஒரு சர்வதேச தலையீடு. இதைக் கோரியே எமது போராட்டங்கள் நடந்தது என்பதுதான், எமது மக்களின் சொந்த அவலம். புலியைக் கொல்ல, புலிகள் போராடியுள்ளனர். இலங்கை அரசு மட்டுமல்ல, அமெரிக்கா தலைமையில் இணைத்தலைமை நாடுகளும் சேர்ந்து புலியை கொல்லக் கோரும் போராட்டமாக நடத்தியிருக்கின்றனர் புலிகள்.

தவறான போராட்டங்கள், தவறான அணுகுமுறைகள், அனைத்தும் அவர்களுக்கு எதிராக மாறிவிடுகின்றது. புலிகள் மக்களைப் பணயம் வைத்து நடத்திய காய்நகர்த்தல்கள் தான், தம் மரணப் புதைகுழியை தாமே வெட்டிவிடுகின்ற செயலாக மாறியது. அமெரிக்கா தலைமையிலான இந்த 'மனிதாபிமான மீட்பு" தலையீடு ஒன்று நடக்க இருப்பதாக, இலங்கை அரசும் அதை உறுதிசெய்துள்ளது. கடந்த வாரம் இந்திய வெளிவிவகார அமைச்சரும் தற்காலிக பிரதமருமான பிரணாய் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், இதன் சாரம் மறைமுகமாக வெளிப்பட்டது. இலங்கை அரசும் அதை நிராகரிக்காமல், அதை ஆதரித்தது.

 

இப்படி சர்வதேச தலையீடு இலங்கை அரசின் தலைமையில், பல்வேறு நாடுகளின் துணையுடன் நடப்பது உறுதியாகியுள்ளது. இது புலிகள் பணயமாக வைத்துள்ள மக்களை மீட்டல் என்ற அடிப்படையில், புலியை முற்றாக ஒழித்துக்கட்டல் என்ற எல்லைக்கு உட்பட்டது. இந்த நிலைமையை வலிந்து உருவாக்கியர்களே புலிகள். இந்த வகையில்

 

1. புலிகள் மக்களை பணயம் வைத்ததுடன், அதை மனிதஅவலமாக உருவாக்கியதன் மூலம், அதைக் காட்சிப்படுத்தி நடத்திய போராட்டங்கள் மூலம் இது இன்று நிகழவுள்ளது.

 

2. புலிகளின் சர்வதேச அளவிலான போராட்டங்கள் இந்த தலையீட்டை நியாயப்படுத்தும் வண்ணம், மனித அவலத்தை காட்டிய எல்லைக்குள் நடக்கவுள்ளது. இதைக் காட்டியே, புலியை புலிகளின் வழியில் அழிக்கவுள்ளனர். உண்மையில் நாம் முன்பே சுட்டிக்காட்டியபடி, இந்த போராட்டக் கோசங்களை ஏகாதிபத்தியங்களே, தம் தலையீட்டுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்து வந்தனர் என்பது இன்று புலனாகின்றது.

 

புலிகள் தமக்குதாமே மண்ணை அள்ளிப் போடுகின்ற இந்த நிகழ்ச்சி, அவர்களின் சொந்த அவலமாக மாறுகின்றது. தம் பாசிச முகத்துடன், போராட்டங்களை ஏகாதிபத்தியத்துக்கு சார்பாக நடத்தினர். இப்படி அது 'மனிதாபிமான மீட்பு" என்ற பெயரில், ஒரு தலையீடாக மாறிவருகின்றது.

 

இதைத் தடுத்து நிறுத்துவது என்பது, தம் முந்தைய நிலையை புலியே மறுத்தலாகும். புலிகள் தாம் பணயமாக வைத்துள்ள மக்களை உடனடியாக விடுவித்து, தம் மீதான முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறுவதுதான். இதை நாம் முன்பே தெளிவாகக் கூறியுள்ளோம்.

 

இதன் மூலம் இலங்கை அரசின் தலைமையில் நடக்கும் இணைத் தலைமை நாடுகளின் 'மனிதாபிமான மீட்பு" பெயரிலான கூட்டுச்சதி முயற்சியை முறியடிக்க முடியும். ஒரு தலையீட்டையும், அதற்கு அவர்கள் வைக்கும் நியாயப்பாட்டையும் தடுத்து நிறுத்தமுடியும்.

 

இன்று இலங்கை பேரினவாத அரசு புலிகளின் கழுத்;தில் கையை வைத்து நெரிக்கின்றது. இணைத்தலைமை நாடுகள் செய்ய இருப்பது, புலிகளின் காலையும் கையையும் காட்டிப் போட்டு, இலங்கை அரசு அவர்களைக் கொல்ல உதவுவதுதான். தம் பங்குக்கு, புலியை முடித்து வைத்தல் தான்.

 

புலிகளின் மக்கள் விரோதம், அதன் பாசிசம், அதன் இருப்பு மீது எமது விமர்சனம் கடுமையானது தான்;. ஆனால் அது எம் மக்களின் சொந்தப் பிரச்சனை. அன்னியர்கள், இலங்கை அரசுக்கு துணையாக வந்து, புலிகளை 'மனிதாபிமான மீட்பு" என்ற பெயரில் அழித்தொழிப்பதை நாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

 

தமக்கு எதிராகவே போராட்டங்களை புலிகள் மேற்கில் நடத்திய போது, அதை எதிர்த்து விமர்சித்;தோம். இந்த போராட்டத்தின் பின்னணியில், ஏகாதிபத்திய தன்மையும் அவர்களின் வழிகாட்டலும் இருந்ததை சுட்டிக்காட்டினோம். இன்று அதுவே, தலையீடாக மாறிவருகின்றது. புலி அழித்தொழிப்பாக அது அரங்கேறவுள்ளது. 

 

இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எம் மக்களின் உரிமைகளை மறுத்தும், அதில் எழுந்த போராட்டம் சொந்த மக்களுக்கு எதிரான பாசிசமயமாகிய போதும்;, மற்றொரு பாசிசம் ஏகாதிபத்திய துணையுடன் அதை அழிப்பதை நாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.  இதன் மூலம் எம்மக்கள் எந்த விதமான விடுதலையையும் பெறப்போவதில்லை. மாறாக மற்றொரு அடிமைத்தனத்தின் கீழ், மீண்டும் மக்களை கொண்டு செல்வதில் தான் போய் முடியம். புலிப் பாசிசத்துக்கு பதில் மற்றொரு பாசிசம் 'மனிதாபிமான மீட்பு" என்ற பெயரில் அரங்கேறுவதை நாம் அங்கீகரிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது. அது எம்மக்கள் மேலான 'மனிதாபிமான மீட்பு" என்ற பெயரிலான கூட்டு ஆக்கிரமிப்புத்தான்.

 

பி.இரயாகரன்
23.02.2009