"கரும்புலித் தாக்குதலைக் கொழும்புக்கு விஸ்த்தரிக்கும் தோல்வியின் விளிம்பில் நிற்கும் புலிகள்,இன்னும் தமது தலைவருக்காக உயிர்ப்பலிகொடுக்கத் தயாராகும் கரும்புலிகள்!"-ஸ்பீகல்(Spiegel) சஞ்சிகை: 20.02.09.

 

ஜேர்மனிய முன்னணிச் சஞ்சிககையான ஸ்பீகலில், எங்கள் தேசத்துப் பிரச்சனைகளைக் குறித்துப் புலம் பெயர் படைப்பாளிகள் கட்டுரை எழுதி,அவர்கள் பிரசுரித்தால் 1000 டி.எம். பணம் சன்மானமாக வழங்கப்படுமென முன்னொரு காலத்தில்(சுமார் பத்தாண்டுகளுக்குமுன்) புலிகள் தமது பிரசுரங்கள் மூலமாகக்கேட்டுக் கொண்டார்கள்.அத்தகையவொரு மிக முக்கியமான சஞ்சிகை ஸ்பீகல்.


ஜேர்மனியில் பல கோடிப் பிரதிகள் விற்கப்படும் இச் சஞ்சிகை,ஜேர்மனிய அரசியல் வட்டாரத்திலும்,பல்கலைக் கழகமட்டத்திலும் பெரும் தாக்கஞ் செய்யும் சஞ்சிகை.அது,ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தினதும் நடுத்தரவர்க்கப் புத்திஜீவிகளினதும் குரலாகவே ஒலிப்பது.எனினும்,அதன் நீண்டகால வாசகர்களில் நானும் ஒருவன்.பெரும்பாலும் அதன் கட்டுரைகளும்,ஆய்வுகளும் மிகவும் தர்க்கம் வாய்ந்தது.இத்தகைய சஞ்சிகையில் இன்றைய நமது போராட்டச் சூழல்கள் குறித்து எழுதுகிறார்களாவென நான் தினமும் தேடிப் பார்ப்பேன்.எப்போதாவது, ஸ்பீகல் சிறிய பெட்டிச் செய்தி போடுவதோடு அதன் பணி முடிந்துவிடும்.




புலிகள் தலைவர் திரு.பிரபாகரனால் வன்னியில் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் பாலசிங்கம் அவர்களே ஸ்பீகல் சஞ்சிகைக்குப் பிரத்தியேகமாக நேரம்கொடுத்துக் கருத்துத் தெரிவித்ததென்பதை அன்றைய சந்திப்பைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

 

மிகவும் பிரபலமான இச் சஞ்சிகை நேற்று அதிகாலை ஆறறரை மணிக்கு எமது போராட்ட வாழ்வு குறித்தொரு ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தது.அக்கட்டுரை வெளியிட்ட 15 மணி நேரம் கழித்துப் புலிகளது கரும்புலி வான் தாக்குதல் கொழுபில் அதிர்வுகளைச் செய்து ஓய்ந்துபோனது.இதன் சிறப்பு என்னவென நீங்கள் வினாவினால்-ஸ்பீகல் பத்திரிகை எழுதுகிறது:"Doch noch immer sind Selbstmordkader der Tamilentiger bereit, den Kampf in die Hauptstadt Colombo zu tragen."யுத்தத்தை கொழும்பு மாநகரம்வரை இழுத்துவரும் ஆளுமையோடு கரும் புலிகள் தயார் நிலையிலேயே இருக்கிறார்கள்.அவர்கள் கொழும்பை நோக்கித் தமது கரும் புலித் தாக்குதலைச் செய்யமுனைவதாக அப் பத்திரிகை விரிவாக எழுதுகிறது.


எனது அநுபவத்துக்கு ஒப்ப அச் சஞ்சிகை ஒருபோதுமே எமது பிரச்சனையில் நேர்மையாக எழுதியது இல்லை என்பேன்.இப்போது, இச் சஞ்சிகை மிக நேர்த்தியாகக் கட்டுரை எழுதியிருக்கிறது.முதன்முறையாக இலங்கையில் தமிழர்கள்மீது திட்டமிட்டு இனவழிப்பு நிகழ்வதாக ஒத்துக்கொண்டிருக்கிறது."Denn der blutige Konflikt, der nach jahrzehntelangen Repressionen der buddhistisch-singhalesischen Mehrheit gegenüber der hinduistisch-tamilischen Minderheit und antitamilischen Pogromen mit tausenden von Toten 1983 zum offenen Krieg geführt hatte, hatte nie einen klaren Sieger hervorgebracht"குருதிதோய்ந்து இனமுரண்பாடானது,பலதசாப்தமாகப் பெரும்பான்மைச் சிங்கள பௌத்தர்களது அடக்குமுறைக்குச் சிறுபான்மை தமிழ் இந்துக்களை உட்படுத்தி, இனவாத ஒடுக்குமுறையின் மூலமாக 1983இல் பல்லாயிரம்பேர்களைக் கொன்று குவித்ததன் விளைவால் யுத்தம் ஆரம்பிக்கும்வாய்ப்பு உண்டாகியது.இதில் எவருமே தீர்மானகரமான வெற்றியை அடையவில்லை.என்கிறது.கூடவே,அச் சஞ்சிகையில் புலிகளது அனைத்து முகத்தையும் விரிவாகவே அக்கட்டுரையாளர்-செய்தியாளர் இனம் காண்கிறார்.




அவர்கூறுகிறார்:"Und auch heute noch, kurz vor dem militärischen Untergang der LTTE, sind immer noch Selbstmordkader dazu bereit, ihr Leben für ihren autoritären Führer Prabhakaran zu opfern. Vergangene Woche sprengt sich inmitten von Flüchtlingen aus dem Kriegsgebiet eine Frau zwischen Regierungssoldaten in die Luft. Sie tötete 20 Soldaten und acht Zivilisten."அத்தோடு,இன்றுவரை,அதாவது புலிகள் தமது முடிவு நெருங்குவதற்குக் குறுகியகாலம் இருக்கும்போதுகூட,தற்கொலைத்தாக்குதலுக்கு அவர்களிடம் தற்கொலைப் படைகள் தயாராக இருக்கின்றன. தமது தலைவர் பிரபாகரனுக்காகத் தம்மைப் பலியாக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.கடந்தவாரத்தில் அகதிகள் தங்கியருந்த இடத்தில் பெண்ணொருத்தி வெடிபொருளை வெடிக்கவைத்துக் காற்றில் வெடித்துச் சிதறியபோது,அவள் 20 இராணுவத்தினரையும் 8 அகதிகளையும் கொன்றாள்."என்கிறார்.

 

மேற்குலகத்தின் இந்தப் புரிதலிலுள்ள உண்மைகளை விளங்காது,புலிகளைச் சொல்லி உலகத்தில் "தமீழீழத்தை அங்கீகரி,தமிழர்களுக்குத் தமிழீழமே வேண்டும்" எனும் கோரிக்கைகளோடும் ஜெனீவாவிலுஞ்சரி அல்லது புலம் பெயர் நாடுகளிலுங்சரி ஆர்ப்பாட்டத்தைச் செய்பவர்கள், ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்!


அதாவது,புலிகளுக்கும் இலங்கை அரசுக்கிடையிலும் நடக்கும் இவ் யுத்தத்தை நிறுத்தி, வன்னியில் சிக்குப்பட்ட மக்களைக் காக்கும் கோசங்களும்,தமிழ்பேசும் மக்களது பிரச்சனைக்கு அரசியல்ரீதியாகப் பேசித் தீர் எனும் கோசமுமே இன்றைய கொடிய யுத்தச் சூழலில் அவசியம் என்பதாகும்!

 


இதைவிட்டுப் புலிகளால் முன்தள்ளப்படும் இன்றைய இளஞ்சிறார்கள்,புலிகளது கொடிகளையும் அவர்களது அரசியல் கோரிக்கையான"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"என்பதைத் தலையில் தூக்கிவைத்தாடுவதால் தம்மைத்தாமே மேற்குலகப் புலனாய்வுத்துறைக்குக் காட்டிக்கொடுத்து, எதிர்காலத்தைப் பறிகொடுப்பதில் முடியும்.புலிகள் இயக்கத்தைக் குறித்து, அனைத்து ஐரோப்பிய நாடுகளுஞ் செய்திருக்கும் ஆய்வுகள் மிக நேர்த்தியாகப் புலிகளைப் கண்காணிப்பதை உறுதிப்படுத்துகிறது.


புலிகளுக்காகக் குரல்கொடுப்பதென்பதைக் காட்டிலும்,தமிழ்பேசும் மக்களின் இன்றைய அவலத்துக்காகக் குரல் கொடுப்பதென்பது முதலாது நிரலில் இருக்கவேண்டும்.


நமது மக்களைக் குறித்த அரசியலை மேற்குலகத்தில் முன்தள்ள முடியாதுபோனால்-நமது அனைத்துக் கோரிக்கைகளும் தோல்வியில் முடிவதோடு,மக்களின் தன்னெழிச்சியைப் புலிச்சாயம்பூசி மேற்குலகம் நிராகரிக்கும் அபாயம் நிலவுகிறது.இதை தவிர்த்துக் காரியமாற்றவேண்டும்.


இன்றைய மக்களின் அவலத்தில் அரசியல் நடாத்த முனையும் புலிகளது வண்டவாளங்களை ஸ்பீகல் மேற்குலக மக்களுக்கும்,ஜேர்மனியர்களுக்கும் மிக நன்றாகவே படம் போட்டு-ஆய்வு செய்து கப்பலேற்றுகிறது.இந்த நிலையில் புலிகளது சாயலில் முன்னெடுக்கப்படும் அனைத்துக் காரியங்களும் தோல்வியிலேயே முடியும்.


புலம்பெயர் தமிழ்மக்கள் இலங்கை அரசையும்,புலிகளையும் மிக நன்றாகவே தோலுரித்தபடி தமது மக்களது கண்ணீர்கதைகளை மேற்குலக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்.இதைத் தவிர்த்துப் புலிகளது வழிகாட்டலோடு முன்தள்ளப்படும் இளையதலைமுறைகளை இங்குள்ள காவற்றுறை மிக நேர்த்தியாக இனம்காணத்தக்கபடி தகவல்களைச் சேகரித்துக்கொள்கிறது.ஒவ்வொரு ஆர்ப்பாட்டவூர்வலத்திலும் அதிகமான புலினாய்வுத்துறையினர்ரின் கமராக்கள் நமது இளைய முகங்களைத் தமது கருவிக்குள் அடக்ககின்றன.இவற்றை முடிச்சிட்டுப் புலிகளது அடுத்தகட்ட நகர்வுக்கான ஆய்வுகள் இத்தேசப் புலனாய்வுத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது.


இதற்கு ஸ்பீகலின் இக்கட்டுரையிலுள்ள உள்ளடகம் மிகக் காட்டமான பதிலை இளைவர்களுக்குத் தரும்.புலிகளது அரசியல் மேற்குலகத்திடம் எத்தகைய நிலையில் இருக்கின்றதென்பதைக் கவனிக்கவும்.


இல்லைத் தேசத்துக்காக எதையும் இழப்போமென வீராப்புப் பேசுபவர்கள்,அடுத்த பின் விளைவுகளைச் சந்திக்கத் தயாரானர்வர்கள்.அவர்கள் குறித்துக் கவலையில்லை!ஆனால்,அவர்களால் நமது மக்களின் போருக்கெதிரான அணித்திரட்சியை-தார்மீக எதிர்ப்பை மேற்குலகம் புலிச்சாயம் பூச இடம்கொடுத்து நமது மக்களது அவலத்தை நியாயப்படுத்தும் நிலைக்குப் போவதே மிகக் கவலையான விடயம்.இன்றைய ஜெனிவாவூர்வலத்திலும் புலிச்சாயம் மேலோங்கி இருக்கிறது.எனவே,புலிக்கொடியினது அசைவில் போருக்குள் சிக்குண்ட மக்களது கண்ணீர் மறைக்கப்படும்-மறுக்கப்படும் காரியத்தைப் புலிகள் திட்டமிட்டே மேற்குலகில் செய்துவிடுகிறார்கள்.


ப.வி.ஸ்ரீரங்கன்
21.02.2009