10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

குண்டுகளுக்கு ஓடிக்கொடுக்கும் வன்னி மக்களும் குண்டுச்சட்டி அரசியலும்

புலிகளின் இறுதிக் குறுகிடமாய்ப்போயுள்ள முல்லைத்தீவை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவதாக இலங்கை இராணுவம் அறிவித்து பல வாரங்களாகிவிட்டது. இடமிடமாய்ப் பெயர்ந்த மக்களும் இடம்பெயர்ந்த மக்களும் இந்த வன்னிப் போர்ப் பொறியினுள் அகப்பட்டுப்போயுள்ளனர். விரும்பியோ

 விரும்பாமலோ புலிகளின் பாதுகாப்பு அரணாக பலியாகிப்போயிருக்கிறார்கள் அவர்கள். அவர்களின் வெளியேற்றத்தை புலிகள் தடுத்துவைத்துள்ளதாக எல்லாத் தரப்பிலிருந்தும் கண்டனங்களும் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.

 

அதேநேரம் அரசு அவர்களின் வெளியேற்றத்தை ஊக்குவிக்கும் அல்லது உத்தரவாதப்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அவர்களுடன் இருந்த சர்வதேச மற்றும் உள்ளுர் உதவிநிறுவனங்களை வன்னியிலிருந்து வெளியேற்றிய கொடுமை அந்த மக்களிடம் அச்சவுணர்வையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியது. புலிகளின் பிடியிலிருந்து தப்பி பாதுகாப்பு வலயத்துள் வருபவர்களில் கொலைசெய்யப்படுபவர்கள்; போக மீதமானவர்கள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைபடுகிறார்கள். சுற்றிவர முட்கம்பிகள். உறவினர்களைப் பார்க்கமுடியாது. விசாரணைகள் வேறு. அவர்கள் தாம் விரும்பும் பகுதிக்கு சென்று தங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படை உரிமையைக்கூட வழங்க மறுக்கிறது அரசு. இத்தனையையும் தாண்டி வர மறுப்பவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்கிறது அரசு. இவ்வாறான உத்தரவாதமற்ற சூழல்களை அந்த மக்கள்மீது ஏவிக்கொண்டிருப்பது மக்களின் வெளியேற்றம் நிகழ்வதற்கான சூழலை தடுத்துவிடுவதில் இன்னொரு முக்கியமான பங்கை ஆற்றுகிறது. ஒருபுறம் புலிகளின் பொறி. மறுபுறம் அரசின் பொறி. மீட்பராக இப்போதைக்கு கடவுள்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கிறார்.

 

சமாதானப் புறா எரிக் சொல்கைம் தொடக்கம் ஐநா செயலாளர் பான்கீமூன் வரை அவர்கள் இலங்கை விவகாரத்தை இந்தியாவுடன் பேசி முடிவெடுப்பவர்களாக இருக்கிறார்கள். இந்தியா வந்த பான் கிமூன் இலங்கைப் பிரச்சினை மீதான ஐநாவின் நிலைப்பாடு என்பது இந்தியாவின் நிலைப்பாடுதான் என்றார். இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதே தெரியாத நிலை நமக்கு. ஈராக் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடுதான் தமது நிலைப்பாடு என்று ஐநா காட்டிய உலகக் கரிசனையை இது ஞாபகப்படுத்துகிறது.

 

இன்னொருபுறம் போர்நிறுத்தம் இன்று அவசியம் இல்லை என்ற விவாதம் முன்வைக்கப்படுகிறது. அடிப்படையில் மக்களின் அழிவு பற்றிய கரிசனை அற்றவர்கள் இவர்கள் என்பதையே இது காட்டுகிறது. போராட்டத்தில் இழப்புகள் தவிர்க்கமுடியாதவை என்ற வாதத்தை ஒத்தது இது. புலிகளின் வளங்கள் அழிக்கப்பட்டதைவிட மக்களின் வளங்களே அதிகம் அழிக்கப்பட்டுள்ளன. மனிதவிழுமியங்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. போர்நிறுத்தம் புலிகளைப் பலப்படுத்திவிடும் என்பதற்காக போர்நிறுத்தத்தை எதிர்ப்பது அல்லது கள்ளமௌனம் சாதிப்பது மக்களின் அழிவுகளை கணக்கிலெடுக்காத அயோக்கியத்தனம் வாய்ந்தது. அதன் அரசியல் புலியெதிர்ப்பு ஒன்றுதான்.

 

அரச பயங்கரவாதத்தின் விளைபொருள் புலி. இன்று போரை முன்னெடுத்திருக்கும் அரச பயங்கரவாதத்தைப் பார்த்து போர் நிறுத்தம் செய் என்று கோருவது முதன்மையானது. அரச பயங்கரவாதத்தைச் சார்ந்து நின்று புலிப்பயங்கரவாதத்தை கேள்வி கேட்பதிலுள்ள அரசியலும் வெறும் புலியெதிர்ப்பு மட்டும்தான். புலிகள் போரைத் தொடங்கியபோது புலிகளைப் பார்த்து போர்நிறுத்தம் செய் என்று கேட்காதவர்கள் இன்று அரசைப் பார்த்துக் கேட்கிறார்கள் என்பதும் அரசபயங்கரவாதத்தையும் எதிர்ப் பயங்கரவாதத்தையும் அதன் செயற்பாட்டுத் தளத்தில் வைத்து வேறுபடுத்த முடியாத அரசியல் பார்வையிலிருந்து எழுவது. பொதுவில் எதிர்ப் பயங்கரவாதத்தின் தோற்றுவாயே அரச பயங்கரவாதம்தான் எனும்போது அரச பயங்கரவாதத்தைச் சார்ந்து எதிர்ப்பயங்கரவாதத்தை நாம் எதிர்கொள்ள முடியாது.

 

இந்த நிலையில் போர் முடிந்தபின்தான் தீர்வு வைப்பேன் என ராஜபக்ச சொன்ன கூற்றை கேள்விகேட்கவேண்டியிருக்கிறது. பேரினவாதம் பற்றிய புரிதலிலிருந்தே இதை நாம் செய்தாகவேண்டியிருக்கிறது. தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை நிலைமைகளுக்கு ஏற்ப ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள்கூட அவ்வப்போது ஏற்றுக்கொண்டாயிற்று. இது அரசுடன் சேர்ந்து ஜனநாயக நீரோட்டத்தில் கையளைந்து கதைவிட்டுக்கொண்டிருப்பவர்களால் விளைந்தது அல்ல. புலிகளால் விளைந்தது.

 

ஒரு தீர்வை வை என்று அரசைப் பார்த்து கேட்பதைவிடவும் போரை ஆதரிப்பவர்களாக ஜனநாயக நீரோடிகள் உள்ளார்கள். தமிழ் மக்கள் எற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வை என்று அரசைக் கேட்காத அல்லது கேட்கும் வலுவற்ற அரசியல் இருப்புக் கொண்டவர்கள் இவர்கள். இதன்மூலம் புலியின் இருப்புக்கான அடித்தளத்தை இல்லாமல் ஆக்க முயற்சிக்காத இவர்கள் ஒருவகையில் மக்கள்மீது நம்பிக்கையற்றவர்கள். அதாவது புலிகள் போன்றே மக்கள் பெயரை கேடாக உச்சரிப்பவர்கள். எதிரியின் பலவீனமான கண்ணிகளில் அடிக்கவேண்டும் என்று முன்னரெல்லாம் காடுமேடாக அரசியல் வகுப்பெடுத்துத் தள்ளிய இவர்களில் பலர் இப்போ புலிகளின் பலவீனமான கண்ணியை (அரசியலை) விட்டுவிட்டு பலமான கண்ணியில் (இராணுவ ரீதியில்) அடிக்கவேண்டும் என்று கணனி மேட்டில் நின்று விளக்கம் கொடுக்கிறார்கள். அதனால் போர்நிறுத்தம் கூடாது என்கிறார்கள் அல்லது அதுபற்றி நழுவல்போக்காக விட்டுவிடுகிறார்கள்.

 

தமிழீழம் கிடைத்தபின் சமூக ஒடுக்குமுறைகள் எல்லாம் இல்லாமல் ஆகிவிடும் என்று புலிகள் முன்னர் பினாத்தியதுபோல போர் முடிந்தபின் தமிழ்மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்று அரசு சொல்கிறது. போர்ப்பிரதேசத்துள்ளிருந்து உதவிநிறுவனங்களை அரசு வெளியேற்றி மக்களின் மீதான கரிசனையை வெளிப்படுத்தியது. இன்று வன்னிச் செய்திகளை ஒரு மூடுண்ட நிலையில் வைத்துக்கொண்டிருப்பதன் மூலம் ஒரு ஊடக யுத்தத்தையும் அது செய்துகொண்டுதான் இருக்கிறது. உள்ளுர் பத்திரிகையாளர்களை மட்டுமன்றி வெளியூர் பத்திரிகையாளர்களையும்கூட அனுமதிக்காது யுத்தம் புரிகிறது அது. இந்தத் தடைகளினூடாக அரச ஆதரவு புலிஆதரவு இணையத்தளங்கள் தொலைக்காட்சிகளுக்குள்ளிருந்து நிலைமையை ஊகிக்கும் ஒரு கடினமான பணி எம்மிடம் அல்லாடுகிறது. தொலைபேசிச் செய்திகளை வன்னியின் நிலைமையை விளக்க பொதுவான எடுகோள்களாக்கும் அவலமும்கூட நிலவுகிறது.

 

அரசு தன்னை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை கொன்று போடுகிறது. நாட்டைவிட்டுத் துரத்துகிறது. ஊடகங்கள்மீது தாக்குதல் தொடுக்கிறது. தமக்குச் சார்பாக வளைத்துப்போடுகிறது அல்லது மௌனிக்கச் செய்கிறது. புலிகளின் பாணியிலேயே இது நடைபெறுகிறது. இதையெல்லாம் நாம் கேள்விகேட்டாக வேண்டியிருக்கிறது. இரு பக்கமும் செயற்படும் செயற்பட்ட இந்தவகை மீறல்களை கேள்விகேட்காத ஒருவழித் தாக்குதல் மாற்றுக் கருத்தாகாது. அது ஒரு உளஅரசியல் நோய்.

 

இன்று வன்னியின் மரணக் குகையிலிருந்து மீண்டு வந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது. திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நோயாளர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. இதற்கான மனிதாபிமனப் பணிகளில் அல்லாடிக்கொண்டிருக்கும்; உதவியாளர்கள்மீது மதிப்பு வருகிறது. இந்த மக்களுக்கு நீ என்ன செய்தாய் என எம்மைப்பார்த்து கேட்கவைக்கிறது அவர்களின் அர்ப்பணிப்பு. இதற்கான வெகுஜன அமைப்புகளின் தேவை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

 

புலிகளின் தற்போதைய நிலை வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதற்கான நிலைமையை உருவாக்கித் தந்திருக்கிறதா? அல்லது இன்னமும் ஒரு அச்சச் சூழல் நிலவுகிறதா? அது யாரால்? இலங்கை அரசாலா அல்லது ஜனநாயக நீரோட்டிகளாலா? நாவலனின் பாசையில் சொல்வதானால்இ புலியின் அழிவல்லஇ புலிமனப்பான்மையின் அழிவுதான் முக்கியம். இந்த புலிமனப்பான்மை நாளை மற்றைய இயக்கங்களினூடு -அதுவும் அரச ஆதரவுடன்- வெளிப்படாது என்பதற்கு யாரும் உத்தரவாதம் தரமுடியாது. பேரினவாத அரசியல் இவர்களைப் பயன்படுத்தவே முயற்சிக்கும்.

 

சமூகத்துக்குள்ளிருந்து புலிகளுக்குள்ளும் புலிகளுக்குள்ளிருந்து சமூகத்துக்குள்ளும் கடத்தப்பட்டு பரஸ்பரம் தாக்கம்செலுத்தி வந்த மனப்பான்மைதான் அது. இது வீரியமடைந்த யாழ்மேலாதிக்க மனப்பான்மை என்று சொல்லிக்:கொள்ளலாம். புலிகளை விமர்சிப்பதால் மட்டும் இதைக் களைந்துவிட முடியாது. சமூக விமர்சனம் அவசியம். அதை முன்னெடுப்பவர்களாக மாற்றுக்கருத்தாளர்கள் இருக்க வேண்டும். புலிகளின் அரசியலோடு சமரசம் செய்ய முடியாமல் இருப்பது மட்டும் மாற்றுக்கருத்தாகாது. பேரினவாதத்துடன் சமரசம் செய்துகொண்டு புலிகளின் அரசியலை கேள்விகேட்பது புலியெதிர்ப்புக்குள் முடங்கிக்கொள்வதுதான். அரசியல் சந்தர்ப்பவாதம்தான்.

 

புலிகளுக்கு மக்களின் அழிவுமீது கவலையில்லை என்று தீர்மானகரமாச் சொல்ல முடிகிறதெனில் மக்களை விடுவி என்று புலிகளைக் கோருவதைவிட மக்களைக் கொல்லாதே என்று அரசைக் கேட்க முடிகிறதா இவர்களால்;? போரை நிறுத்து என்ற குரலை இந்தப் புள்ளியிலிருந்துதான் நாம் தொடங்கியாகியாகவேண்டியுள்ளது. இதைச் சொல்வதற்கு எல்லா அடக்குமுறைகளையும் ஒழுங்காகக் கண்டித்து வரும் பாரம்பரியத்தைக் கொண்டிருந்தீர்களா நீங்கள் என்று சுட்டுவிரல் நீட்டுவதும்கூட ஒரு ஏகப்பிரதிநிதித்துவம்தான். அதுவும் தாங்கள் அப்படிச் செய்தவர்களாக செய்துகொண்டிருப்பவர்களாக தம்மை பிரதியீடுசெய்து பெற்றுக்கொள்ளும் வழிமுறையிலானது. மக்களின் அழிவை நிறுத்த போரை நிறுத்து என்று கேட்பதற்கு எந்த மனிதஜீவிக்கும் உரிமை இருக்கிறது. அது இப்போதைய உடனடித் தேவையும்கூட.

 

-ரவி (21022009)