தமிழ் மக்களின் எதிரியை முறியடிக்க முடியாத புலிகளின் நடைமுறைகளுடன், நாம் எப்படி ஒன்றுபட்ட நிற்கமுடியும். பேச்சுவார்த்தையாக இருக்கலாம் அல்லது இராணுவ வடிவங்களாக இருக்கலாம், எதிலும் அரசியல் ரீதியாக புலிகள் தோற்கின்றனர். கிணற்றுத் தவளைகளாக மாறி கத்துவதால், உலகம் மாறிவிடாது. 

எமது எதிரியான இலங்கை, இந்தியா, ஏகாதிபத்தியம் அனைத்தும், எம் மக்களுக்கு எதிராக இயங்குகின்றது. அவன் எப்படி, எந்த வழியில் எம் மக்களின் மேல் யுத்தம் செய்கின்றானோ, அதற்கு நாம் பதிலளிக்க வேண்டும். எதிரியின் நுட்பமான ஓவ்வொரு செயலையும் நாம் முறியடிக்க வேண்டும். எதிரி எவற்றை தன் ஆயுதமாக தம் கையில் எடுக்கின்றானோ, அதை தவிடுபொடியாக்க வேண்டும். அதை புலிகள் செய்ய முடிவதில்லை. நாம் அதை செய்யக்கோருகின்றோம். 

 

ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை புலியிடம் என்ன சொல்கின்றது? ஆயுதத்தை கீழே வை என்கின்றது. மக்களை விடுவி என்கின்றது. இதையே சிங்கள பேரினவாதம் கொக்கரித்தபடி கூறுகின்றது. இதற்கு வெளியில் அவன் பிரச்சாரம் செய்யவில்லை. 

 

இப்படி எதிரி தமிழ் மக்களின் நண்பனாக, மனிதவுரிமைவாதிகளாக தன்னை காட்ட முனைகின்றது. புலிகளை இதன் எதிரியாக காட்டுகின்றது. இதுதானே உண்மை.

 

இந்த பிரச்சாரம், கோரிக்கைகளை முறியடிக்கும் வண்ணம் புலிகள் என்ன செய்தனர்? எதையும் செய்யவில்லை. அதற்கு மேலும் உதவுகின்றனர்.

 

தமிழ் மக்கள் எதிரியினால் கொல்லப்படுகின்றனர். இதைக் காட்டி பிரச்சாரம் செய்யும் புலிக்கு, எதிரி தன் பாணியில் பதிலளிக்கின்றான். அவன் இந்த அவலத்தை காட்டி, ஆயுதத்தை கீழே போடு, மக்களை விடுவி என்கின்றான். புலிகள் மனித அவலத்தை ஆயுதமாக்க, அந்த ஆயுதத்தை புலிக்கு எதிராக மாற்றி அழிக்கின்ற நிகழ்வு அரங்கேறுகின்றது.

 

புலிகள் இதை முறியடிக்க என்ன செய்கின்றனர்? ஓன்றுமில்லை. தமிழ் மக்களின் பாதுகாப்புக்காக, அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தனர்? எதுவுமில்லை. கொல்லக் கொடுக்கும் அரசியல் வழியில், இதற்கு அவர்களிடம் மாற்றில்லை. 

 

தமிழ் மக்களை கொல்லும் எதிரியிடம், கொல்லாதே என்று கோருவதன் மூலம் தீர்வை எதிர்பார்ப்பதா தமிழ் மக்களின் கோசம். இது எப்படி சாத்தியம். தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை, எதிரிகளிடம் கோருவதே முரண். எதிரி இலகுவாக அதற்கு பதிலளிக்கின்றான். ஆயுதத்தை கீழே வை என்கின்றான்.

 

தமிழ் மக்களை பாதுகாக்க, நாங்கள் என்ன செய்தோம்? எதுவுமில்லை.

எதிரி எதை தன் ஆயுதமாக கையில் எடுக்கின்றானோ, அதை முறியடிக்கும் வண்ணம் யுத்த தந்திரத்தை மாற்றி வரவேண்டும். கண்ணை மூடிக்கொண்டு மறுப்பதும், ஓரே மாதிரி வீதியில் இறங்கி ஒற்றைக் கோசத்தை சொல்வதால், எதிரி மேலும் பலமடைகின்றான்.

 

தமிழ் மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக மாற்றி, துப்பாக்கி முனையில் சொல்வதை நம்ப வைக்கின்ற வடிவில், உலகத்தை அணுகியதால் உலகம் புலியை தோற்கடிக்கின்றது. இதனுடன் நாம் எப்படி ஓத்துப் போக முடியும்;. எதிரி புலிகளை தோற்கடிக்கும் புலிகளின் யுத்த தந்திரத்துடன் நாம் சேர்ந்து நின்றால், அதற்கு நாமும் உடந்தையாகிவிடுவோம் என்பதுதான் உண்மையாகிவிடும்.

 

நாங்கள் இதை எதிர்மறையில் அணுகுகின்றோம். தவறை திருத்தக் கோருகின்றோம். இதை அவர்கள் செய்யத்தவறும் பட்சத்தில் புதியதொரு தலைமுறை எம் மக்களின் எதிரிக்கு எதிராக போராடுவதற்குரிய தெளிவை இதன் மூலம் உருவாக்குகின்றோம்.

 

இப்படி செய்வதை சிலர் துரோகம் என்கின்றனர். எப்படி? எதிரி அழிப்பதற்கு ஏற்ற அரசியலை, அதன் நடைமுறையை ஆதரிக்க மறுப்பது துரோகமா? அது உங்கள் சொந்த அறிவீனத்தின், கண்மூடித்தமான வழிபாட்டின் குருட்டு பக்தி.

 

எதிரி ஆயுதங்களை மட்டும் கொண்டு புலியை அழிக்கவில்லை. புலியின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கொண்டு, அதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தித்தான் அழிக்கின்றான். உலகளவில் இதை தான் அவன் செய்கின்றான். இதை முறியடித்தா இன்றைய  போராட்டங்கள் நடக்கின்றது? எதிரியை முறியடிக்கும் வண்ணம்! புலிகள் தம் தவறுகளை திருத்தவா கோருகின்றீர்கள். இதை நீங்கள் செய்தால், நாங்களும் உங்களுடன் நிற்கமுடியும். இல்லாதவரை எதிரிகளை தனித்து நின்றுதான், எம் சக்திக்குட்பட்ட எல்லைக்குள் எம்மால் அணுக முடிகின்றது.   

 

பி.;இரயாகரன்
19.02.2009