Mon02172020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் இஸ்லாமியத் தாயகக் கனவுகள் :

இஸ்லாமியத் தாயகக் கனவுகள் : [அல்கைதாதொடர் - 4]

  • PDF

"முஸ்லீம்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்கென்றொரு நாடில்லை. யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஏதாவதொரு பிரச்சனையென்றால் ஒன்று சேர்ந்து நிற்பார்கள். எமது இன மக்களிடையே ஒற்றுமையில்லை. முஸ்லீம்கள் தமக்கிடையே சண்டையிடாமல்

 ஒன்றுபடவேண்டும். முஸ்லீம்கள் தாம் வாழும் நாடுகளில் அடக்கப்படுகின்றனர். பாலஸ்தீனத்தில் எம்மின மக்களை யூதர்கள் அழித்துக் கொண்டிருப்பதை உலக நாடுகள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தான், ஈராக் , பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் எமதின மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை ஆதரிப்பது ஒரு முஸ்லீமின் கடமை."

 

எகிப்தில் தோன்றி பின்னர் பிற அரபு நாடுகளிலும் பரவிய "முஸ்லீம் சகோதரத்துவம் " என்ற கட்சியின் அடிக்கடி கூறப்படும் கொள்கை விளக்க உரை அது. அந்தக்கட்சியின் உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் மேற்படி கருத்துகளைப் பிரச்சாரம் செய்கின்றனர். "முஸ்லீம் நாடுகள்" என்று பொதுவாகக் கூறப்படுவதை இவர்கள் ஏற்றுக்கொளவதில்லை. முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி இதை "முஸ்லீம் சமுகம்" , "இஸ்லாமிய சமுகம்" என இரண்டாக வரையறுக்கிறது. முதலாவதில் பெயரளவில் முஸ்லீம்கள் வாழ்கின்றனர். ஆனால் அரசாங்கம் மதசார்பற்றது. இரண்டாவது பிரிவில் அரசாங்கம் இஸ்லாமியச் சட்டப்படி ஆட்சி செய்யும், பிரஜைகள் மதத்தை நெறிதவறாது கடைப்பிடிக்க கடமைப்பட்வர்கள்.

 

எகிப்து: முதன்முதல் ஐரோப்பிய (பிரெஞ்சு) காலனி ஆதிக்கத்திற்குட்பட்ட அரபு நாடு. அதனால் அங்கு ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய மாதிரி நிர்வாக அலகுகளால் உருவான படித்த மத்திய தர வர்க்கம் மேற்கத்தைய அரசியல் சிந்தனைகளையும் வரித்துக் கொண்டது. அவர்களிடையே பல்வேறு தேசிய வாத அமைப்புகள் தோன்றின. முஸ்லீம் சகோதரத்துவமும் அப்போதுதான் (1928 ம் ஆண்டு) தோன்றியது. பிற அரசியல் சக்திகளிலிருந்து முஸ்லீம் சகோதரத்துவம் வேறுபட்ட கருத்துகளை முன்மொழிந்தது. அவர்கள் காண விரும்பியது சாதாரண எகிப்திய தேசிய அரசையல்ல. மேற்கே மொறோக்கோவிலிருந்து கிழக்கே ஈராக் வரை விரிந்த "அகன்ற இஸ்லாமியத் தேசிய அரசு" அமைப்பதே இவர்களின் நோக்கமாக இருந்தது. இந்த எதிர்காலக் கனவை அவர்கள் "ஆண்ட பரம்பரைக் கதைகளால்" நியாயப்படுத்தினர். ஐரோப்பியரின் காலனியத் தலையீடு ஏற்படும் வரை மத்திய கிழக்கு முழுவதும் ஒரே இஸ்லாமியப் பேரரசாக முஸ்லீம்களின் தாயகமாக இருந்ததை நினைவு படுத்தினர். தமது இழந்த பெருமையை மீளப்பெற இதனை ஒரு தேசிய இனப்பிரச்சனையாக முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

 

எகிப்தைத் தனது பிடியில் வைத்திருந்த பிரிட்டிஷ் காலனிய அரசு மத அடிப்படைவாத முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியை அங்கு ஆட்சியைக் கைப்பற்றத் தயாராகவிருந்த தேசியவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் ஆதரவுச் சக்தியாகப் பார்த்தது. . எதிர்பாராத விதமாக பிரிட்டிஷார் போன கையோடு அரபுத் தேசியவாத இராணுவ ஜெனரல்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். மேற்கத்தைய நாடுகளில் இராணுவச் சதிப்புரட்சி என்றழைக்கப்படும் இந்த நிகழ்வு எகிப்தில் புரட்சி என்றழைக்கப்படுகிறது. புதிதாகப் பதவியேற்ற நாஸரின் தலைமையில் அங்கே பல புரட்சிகர மாற்றங்கள் இடம்பெற்றன. சுயஸ்கால்வாய் தேசிய மயமாக்கப்பட்டமை அவற்றில் ஒன்று.

 

இரண்டாவது உலகப்போர் முடிந்திருந்த காலகட்டம் அது. காலனிய ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவருவது என்ற பேரில் ஆமெரிக்கா நாஸரின் ஆட்சியை ஆதரித்தது.அமெரிக்க நிர்ப்பந்தத்தால் தான் பிரிட்டன் எகிப்திலிருந்து பின்வாங்கியது. இருப்பினும் சுயஸ் கால்வாய் பிரச்சினை உலக வரலாற்றில் ஒரு திருப்பு முனையானது. சுயஸ்கால்வாயை அதிலே முதலிட்ட பிரிட்டிஷ்-பிரஞ்சுக் கம்பனிகள்தான் நிர்வகித்து வந்தன. எகிப்து அதனைத் தேசியமயமாக்கிய உடனேயே பிரிட்டனும் பிரான்சும் போர்ப்பிரகடனம் செய்தன. இஸ்ரேல் நேரடி யுத்தத்தில் இறங்கி கால்வாய் பகுதியை ஆக்கிரமித்தது. இந்தப்போரில் இஸ்ரேலிய விமானங்கள் அமெரிக்கக் கப்பலொன்றையும் குண்டு வீசி அழித்திருந்தன. தவறுதலாக நடந்ததாகச் சொல்லப்பட்டாலும், அன்றைய யுத்தம் இஸ்ரேல் தன்னை மத்திய கிழக்கின் பலம் மிக்க சக்தியாகக் காட்டவும், அமெரிக்காவின் ஆதரவை என்றென்றும் தன் பக்கம் வைத்துக்கொள்ளவும் இது உதவியது.

 

1967 ல் நடந்த 6 நாள் யுத்தத்தில் எகிப்து இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை மீளக்கைப்பற்ற எண்ணியது. ஆனால், போரின் முடிவு எகிப்திற்கு பலத்த அடி கொடுத்தது. நிச்சயமாக இது பல எகிப்தியர்களுக்குச் சகிக்கமுடியாத தோல்விதான். முஸ்லீம் சகோதரத்துவக்கட்சி இத்தருணம் பார்த்து களமிறங்கியது. 1950 ல் அந்தக் கட்சி நாஸரினால் தடை செய்யப்பட்டிருந்தது. போரில் தொண்டர்களாகச் சேர்வதற்குக் கூட அதன் உறுப்பினர்களை அனுமதிக்கவில்லை. இருப்பினும் போரின் தோல்வி முஸ்லீம் சகோதரத்துவ மீள் வருகையை தவிர்க்கவியலாததாக்கியது.


"எமது நாடு ஒரு மதசார்பற்ற அரசாங்கத்தால் ஆளப்படுகிறது. மக்களிடையே மதப்பற்றுக் குறைந்து விட்டது." இதுவே போரில் முஸ்லீம் சகோதரர்கள் கூறிய காரணம்.சில வருடங்களுக்குப் பின்பு எகிப்து சிரியாவுடன் சேர்ந்துகொண்டு இஸ்ரேலுடன் போர் தொடுத்தது. இம்முறை இஸ்ரேலினால் வெல்லமுடியவில்லை. எகிப்திய சிரிய வீரர்கள் திறமையாகச் சண்டையிட்டு இஸ்ரேலியப் படைகளைத் தடுத்து நிறுத்தினர். சில ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீட்கப்பட்டன. இந்தப்போரில் குறிப்பிடத்தக்க அம்சம் முஸ்லீம் சகோதரர்களின் பங்களிப்புத்தான். போர்க்களத்தில் முதன்முறையாக "அல்லாஹ் அக்பர்" கோஷம் கேட்டது. போரின் முடிவு முஸ்லீம் சகோதரத்துவக் கட்சிக்கு அனுகூலமாக அமைந்தது. அவர்களின் புகழ் எகிப்து முழுவதும் பரவியது.

 

1973 ல் நடந்த இந்தப்போர் முடிந்து சில வருடங்களில் நாஸர் மரணமடைய , சதாத் ஆட்சிக்கு வந்தார். நாஸர் தனது காலத்தில் சோஷலிசப் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தியதுடன், சோவியத் யூனியனுடனும் நெருங்கிய உறவு வைத்திருந்தார். சதாத் ஆட்சிக்கு வந்ததும் எகிப்தின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகள் மாற்றங் கண்டன. அமெரிக்காவுடன் நல்லுறவு ஏற்படுத்தப்பட்டது. முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு வழி திறந்துவிடப்பட்டது. மிக முக்கியமாக நாஸரால் சிறை வைக்கப்பட்டிருந்த முஸ்லீம் சகோதரத்துவ உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டு, ஆதரவளிக்கப்பட்டனர். சதாத் தனது எதிரிகளாகப் பார்த்த சோஷலிட்டுகளுக்கும், கம்யூனிஸ்டுக்களுக்கும் எதிராக அவர்களைத் தூண்டி விட்டார். இது கடைசியில் பாம்புக்கு பால் வார்த்த கதையாக முடிந்தது. 1977 ல் சதாத் இஸ்ரேலுடன் கேம்ப் டேவிட் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதை தேசத் துரோகமாய்ப் பார்த்த முஸ்லீம் சகோதரர்கள், சதாத்தை பாராளுமன்றத்தினுள் வைத்துத் தீர்த்துக் கட்டினர்.

 

தற்போது ஆட்சி புரியும் முபாரக்கின் காலத்தில் சர்வதேச இஸ்லாமிய வாதிகளின் அமெரிக்க எதிர்ப்பு ஜிகாத், எகிப்தில் நிலைமையை தலைகீழாக மாற்றிவிட்டது. அமெரிக்கா மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு அடுத்ததாக எகிப்தையும் பொருளாதார, இராணுவ உதவிகள் கொடுப்பதன் மூலம் நன்றாகக் கவனித்துக் கொள்கிறது. இவ்வளவிற்கும், முபாரக் ஒரு ஜனநாயகவாதியல்ல. அவரது ஆயுட்கால ஜனாதிபதிப் பதவியும், ஆட்சியை ஏகபோக உரிமையாக்கிக்கொண்ட சொந்தக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியும் சதாம் ஹோசைனின் ஈராக்கை நினைவுபடுத்தும். மேலும் அரசியல் கைதிகளால் எகிப்தியச் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. இது எவ்வகையிலும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. பெரும்பாலான முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி உறுப்பினர்கள் சிறைகளில் விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். எகிப்து சிறைக்கைதிகளை நடத்தும் முறைபற்றி பல மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி ஆரம்ப காலங்களில் பலரால் அறியப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹசன் அலி-பன்னாவினால் தலைமை தாங்கப்பட்டது. அவரின் மரணத்திற்குப்பிறகு கட்சி இரண்டாக, மூன்றாக உடைந்துவிட்டது. அவற்றில் சில குழுக்கள் தீவிரவாதப்போக்கைக் கொண்டிருந்தன. ஒரு குழு லுக்சொர் என்ற இடத்தில் ஜேர்மனிய உல்லாசப் பிரயாணிகளை சுட்டுக்கொன்றதன் மூலம் உலக அளவில் அதிர்ச்சியைத் தோற்றுவித்தது. (எகிப்து வருடாவருடம் உல்லாசப் பயணிகள் வருகையினால் பெருமளவு அந்நியச் செலவாணியை ஈட்டி வருகின்றது.). இன்னொரு குழு ஆப்கானிஸ்தான் சென்று பின் லாடனின் அல-கைதாவுடன் இணைந்து கொண்டது. இனி முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் அரசியற் கொள்கைகள், எதிர்காலம் என்பன பற்றிச் சிறிது ஆராய்வோம்.

 

இதற்கு "லிவா அல்-இஸ்லாம்", "அல் டாவா" போன்ற கட்சியின் வாராந்தப் பத்திரிகைகளிலிருந்து பல தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றில் அவர்களது பிரச்சார அல்லது கொள்கை விளக்கங்கள் சார்ந்த கட்டுரைகள் தவிர சில விளம்பரங்களும் காணப்படுகின்றன. இந்த விளம்பரங்களைக் கொடுப்பவர்கள் "இஸ்லாமிய" வங்கிகள், மருத்துவ மனைகள், புத்தகசாலைகள் என்பனவாகும். இந்த நிறுவனங்கள் ஒன்றில் கட்சியின் முதலீட்டில் அல்லது அவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படுவன. இஸ்லாமிய வங்கிகள் பொதுமக்களுக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி அறவிடுவதில்லை. மருத்துவ மனைகள் ஏழைகளுக்கு இலவசச் சிகிச்சை வழங்குகின்றன. கட்சிக்கு வரும் வெளிநாட்டு உதவிகள் இந்த நிறுவனங்களை இயங்க வைக்கின்றன. சவூதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் வேலை செய்கின்றனர். இந்தப் புலம்பெயர்ந்த எகிப்தியரில் பலர் முஸ்லீம் சகோதரத்துவ ஆதரவாளர்கள். அவர்களிடம் இருந்து பெருமளவு நிதி வசூலிக்கப்படுகின்றது. இதைவிட அண்மைக்காலம் வரை சவூதி அரேபிய அரசு உதவி வந்தது.

 

முஸ்லீம் சகோதரர்களின் முக்கிய எதிரிகள் யார் ? முதலாவது எதிரிகள் யூதர்கள். இவர்கள் யூதரைத் தனி இனமாகப் பார்க்கின்றனர். மத்திய கிழக்கில் நிறுவப்பட்டுள்ள யூத இயக்கம் (இஸ்ரேல்) முஸ்லீம் இனத்தை மெல்ல மெல்ல அழித்து வருகின்றது. யூதர்கள் சர்வதேச ரீதியாக இஸ்லாமிற்கு எதிராகச் சதி செய்கிறார்கள் போன்ற வாதங்கள் அடிக்கடி இவர்களின் பத்திரிகைகளில் வருவது வழமை. அமெரிக்காவும் யூதர்களின் பிரச்சாரத்தை ஏற்றுத்தான் முஸ்லீம்களைப் பகைக்கிறது என்ற கருத்து பல சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்படுகிறது. 11 செப் 2001 நியூ யோர்க் தாக்குதல் யூதர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்ற கதை அரபு நாடுகளில் பிரபலமாக அடிபட்டது.

 

ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் கிறிஸ்தவ நாடுகள் என்ற நோக்கில் பார்க்கப்படுகின்றன. சிலுவைப்போரை முஸ்லீம்கள் இன்னமும் மறக்கவில்லை. மேற்குலக நாடுகள் முஸ்லீம்களை அழிக்கும் நோக்கில் மீண்டும் ஒரு போருக்குத் தயாராகின்றன என்ற கருத்து உலகில் தற்போது நடக்கும் ஆப்கானிஸ்தான், ஈராக் பிரச்சனைகளுக்குக் காரணமாக முன்வைக்கப்படுகிறது. அமெரிக்கா குறித்து வேறுபட்ட பார்வையும் உள்ளது. அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய வல்லரசு. அது குறிப்பாக உலகில் இரண்டாவது பெரிய மதத்தைச் சேர்ந்த முஸ்லீம்களை அடிமைகளாகப் பார்க்கிறது. இன்னொரு விதமாகச் சொன்னால், உலகில் முஸ்லீம்கள் மட்டும்தான் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுக்கின்றனர்.

 

முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் அது மூன்றாவது எதிரியாகக் கருதப்பட்டது. கம்யூனிசம் நாஸ்திகத்தைப் பரப்புகிறது. நாஸ்திக அரசியல் இஸ்லாமியத்தை அழித்துவிடும் என்பதே அவர்களது முக்கிய கவலையாகவிருந்தது. மேலும் யூதர்கள்தான் சோவித் யூனியன் தலைமையில் சர்வதேசக் கம்யூனிசத்தைப் பரப்பி வருகின்றனர் என்பது அவர்களது கருத்து. எகிப்தியர்கள் மத்தியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளையும் மதசார்பற்றவர்களையும் முஸ்லீம் சகோதரர்கள் இன(மத) துரோகிகளாகப் பிரகடனம் செய்துள்ளனர். அவர்களது நீண்டகால அரசியற் திட்டத்தின்படி முன்னர் குறிப்பிட்ட முக்கிய எதிரிகளை வென்ற பின்னர் இந்தத் துரோகிகளுடனான கதை தீர்க்கப்படும். சோவியத் யூனியனின் வீழு;ச்சியைத் தமது கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாக இவர்கள் கருதுகின்றனர். அதாவது கடவுள்-மத நம்பிக்கையற்ற அரசு வீழ்ந்தமை பற்றி இவர்களுக்கு ஆச்சரியப்பட ஏதுமில்லை. முஸ்லீம் சகோதரர்கள் (ஜெர்மன்) நாஸிகளிடம் பாசம் காட்டுகின்றனர். இருகூட்டங்களுக்கும் யூதர்கள் பொது எதிரி என்பது மட்டுமல்ல, பல அரசியல் நடைமுறைகளும் ஒத்து வருகின்றன. யூதர்களை அழித்த ஹிட்லரை முஸ்லீம் சகோதரர்கள் தமது நாயகனாகப் பார்க்கின்றனர்.

 

எதிர்கால உலகம் எவ்வளவு தீவிரமான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் என்பதிலேயே முஸ்லீம் சகோதரர்களின் எதிர்காலமும் தங்கியுள்ளது. ஒரு பக்கம் கிறிஸ்தவ மத அடிப்படைவாதம் முஸ்லீம் எதிர்ப்புச் சிலுவைப் போரை நடத்திக் கொண்டிருந்தால் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் தமது ஜிகாத்தை நடத்துவதும் தொடரத்தான் போகிறது. "நாங்கள்", "அவர்கள்" எனப்படும் சொற்களுக்குள்ளான அர்த்தங்கள் முஸ்லீம்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் எழுகின்றன. பாலஸ்தீனத்தில் , ஆப்கானிஸ்தானில், ஈராக்கில் நடக்கும் போர்களில் மக்கள் சாகும்போது அது "முஸ்லீம்களின் " அழிவாகப் பார்க்கப்படுகின்றது. இதனால்தான் முஸ்லீம்கள் தமது இனத்தின் விடுதலைக்காக ஆயுதப்போராட்டம் நடாத்தி முஸ்லீம் தேசிய அரசு ஸ்தாபிக்க வேண்டுமென்ற அரசியல் இலக்கைக் கொண்ட இயக்கங்கள் வளர்கின்றன. முஸ்லீம் சகோதரர்கள் காணும் "அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம்" என்பது ஒரு கனவுதான். ஆனால் ஆங்காங்கே உதிரிகளாகச் செயற்படும் (தலிபான் போன்ற ) இஸ்லாமிய வாத அரசியல் அமைப்புகள் தத்தமது நாடுகளில் உருவாக்கும் தனியரசுகள் நீண்டகாலத்தில் இஸ்லாமியருக்கான தாயகத்தை நிதர்சனமாக்கும் என்று நம்புகின்றன.

 

-- முற்றும் --

 

Last Updated on Thursday, 19 February 2009 07:15