Language Selection

இன்று சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களை கொத்துகொத்தாக கொல்லுகின்றது. தமிழ் மக்களை பாதுகாக்கவே தாம் போராடுவதாக கூறிய புலிகள், தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு பதில், அவர்களைப் பலியிட வைக்கின்றது. பின் அதை தம் சொந்த சுயநலத்துக்காக பிரச்சாரம் செய்கின்றனர்.

 

தமிழ்மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை புலிகள் இன்று மறுத்து நிற்கின்றனர். இந்த வகையில் இன்று தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, தமிழ் மக்களுக்கும் பொது அமைப்புகளுக்குமே உண்டு. ஆனால் பொது அமைப்புகள் புலிகளின் வால்களாக மாறி, தமிழ்மக்களை கொல்வதை ஊக்குவித்து அதை வைத்து பிரச்சாரம் செய்கின்றது.

 

இதை மறுத்தால் புலியின் சர்வாதிகார வழியில் அணுகுகின்றது. இதுபோல் தான் 1985 களில் பின்னால் எம் மண்ணில் இருந்து சகல மாற்றுக் கருத்துக்களையும், மிக திட்டமிட்ட முறையில் புலிகள் அழித்தொழித்தனர். அத்துடன் எம் மண்ணில் இருந்த சகல பொது அமைப்புகளையும் செயலற்றதாக்கியதுடன், எந்த சுயத்துடன் இயங்க அனுமதிக்கவில்லை. மாறாக அவைகளை பினாமி அமைப்புகளாக, வெறும் கைநாட்டு அமைப்புக்களாக, கொத்தடிமைகளாக, பெயர் பலகை  அமைப்புகளாக புலிக்கு கீழ் மாற்றப்பட்டது. அனைத்தையும் புலியாக்கியதன் மூலம், அதை புலி முத்திரை குத்தி அரசு அதை ஓழிக்கவும் உதவினர். இதையே இன்று, புலம்பெயர் நாட்டிலும் செய்கின்றனர். 

 

அன்று இப்படி தமிழ் சமூகத்தை பகுத்தறிவும், சுயஅறிவுமற்ற நிலைக்குள், சமூகத்தை மந்தைகளாக்கினர். இப்படி புலிகளின் சர்வாதிகாரத்தின் கீழ் லும்பன்கள், சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் சமூகத்தை உறிஞ்சி வாழும் அட்டைகளின் கொட்டத்தின் கீழ், தமிழ் இனம் ஏறி மிதிக்கப்பட்டது.

 

இதைப் பயன்படுத்தியே சிங்கள பேரினவாதம் தமிழினத்தை இன்று அழிக்கின்றது. தமிழினத்துக்கு எதிரான ஒவ்வொரு தவறும், எம்மினத்தின் மேலான சிங்கள மேலாதிக்கமாகவே மாறுகின்றது. தமிழினத்தின் இன்றைய அவலநிலைக்கு இவை தான் அடிப்படையான காரணமாகும்.

 

புலிகளின் கடந்தகால தவறுகள் அதன் மேலான அழித்தொழிப்பாக மாறி, அதன் பின்னணியில்  தமிழினம் அழிக்கப்படுகின்றது. புலம்பெயர் சமூகம் இதை தடுத்து நிறுத்தமுடியாத வண்ணம், புலிகளின் அதே தவறுகள். இதன் பின்னணியில் புலம்;பெயர் நாடுகளின் இயங்கும் பொது அமைப்புகளை கூட, புலிகள் தமது பினாமி அமைப்புகளாக, ரப்பர் ஸ்ராம் அமைப்புகளாக, கைநாட்டு அமைப்புகளாக மாறி வருகின்றது. அனைத்தும் தமக்கு தாமே புலி முத்திரை குத்துகின்றது.

 

மக்களின் நியாயமான கோரிக்கைக்கு பதில், புலிகளின் விருப்பத்தை நிறைவு செய்யும் அமைப்புகளாக, அதில் வெறும் கொத்தடிமைகளாக அதன் உறுப்பினர்கள் மாற்றப்படுகின்றனர்.

 

பொதுவாக கற்றல், கற்றுக்கொடுத்தல் என்று கூறிக்கொண்டு, பகுத்தறிவற்ற சமூகத்தையும்  மலட்டுத்தனத்தையும் திணிக்கின்றனர். புலிகள் கூறுவதை அப்படியே செய்யக் கோருகின்ற நிபந்தனைகள்,  அதை நடைமுறைப்படுத்தும் சர்வாதிகாரங்கள்.


 
ஐ.நா தன் ஊழியரைக் கூட புலி தடுத்து வைத்திருப்பதையும், கட்டாயப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றதை கூறுகின்ற நிலையில், அங்கு வாழும் மக்களுக்காக குரல் கொடுக்க முடியாதவர்களாக நாம் உள்ளோம். அனைத்தையும் புலிக்கு சார்பாக, மக்களை சிங்கள பேரினவாதம் கொன்று குவிக்க உதவுவதை, மக்கள் பெயரில் திணிக்கமுனைகின்றனர்.

 

இந்த நிலையில் தமிழ் சமூகத்தை சிங்கள பேரினவாதம் கொன்று குவிக்க உதவும் ஈனத்தனத்தை, மனித அவலமாக காட்டி நிற்கின்றவர்களுடன் விவாதிப்பது, சேர்ந்து வேலை செய்வது அர்த்தமற்றதாகின்றது. பொதுவான தளத்தில் நாம் இதை தொடர்ந்து அம்பலப்படுத்துவது அல்லது சுயவிமர்சனத்தை செய்யக் கோருவதில் எந்தப் பிரயோசனமுமில்லை. புலி தன் அழிவு வரை சிங்கள பேரினவாதத்தைக் கொண்டு மக்களை பலியெடுத்துத்துதான் அழியும் என்பது, அதன் சொந்த அழிவுதான் தமிழ் மக்களை பலியெடுப்பத்தில் இருந்து நிறுத்தும் என்பதை தவிர, வேறு எந்த மார்க்கமும் எம் சமூகத்திடம் சுயமாக கிடையாது. அப்படி இருக்கவும் புலி அனுமதியாது. இதை நாம் மிக வருத்தத்துடன் சொல்ல வேண்டியுள்ளது.


பி.இரயாகரன்
17.02.2009

***********************************************************************************************************

எம் ராஜினாமாக் கடிதம்

Mr, Mrs. Rayakaran

32 rue Trouillet Dreal

92600 Asniers - France

 

Collège Mahajana 3,

Square Jodulet

93420 Villepi France

மகாஜன பழையமாணவர் சங்கம் - பிரஞ்சுக் கிளை

 

வணக்கம்,

 

உங்களை நாம் இந்த கடிதம் மூலம் தொடர்புகொள்ள வேண்டியநிலை. நாங்கள் இருவரும் மகாஜன பிரஞ்சுக் கிளையில் இருந்து இராஜினமா செய்கின்றோம். இந்தவகையில் மகாஜன சங்க கணக்கு பரிசோதகர் பொறுப்பில் இருந்து பி.இரயாகரனும், மாகாஜன கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து இ.ரதிதேவியும் ராஜினாமா செய்கின்றோம்.

 

இதற்கான காரணங்கள்

 

1.கமிட்டியானது ஜனநாயக நடைமுறைக்கு புறம்பாக சில செயற்பாடுகளை, நாமும் வேறு பல உறுப்பினர்களும் அறியாத வண்ணம் செய்துள்ளது. அத்துடன் அவை மறைக்கப்பட்டதுடன், தற்செயலாக அதை நாம் பார்க்கவும் நேர்ந்தது. பல கமிட்டி உறுப்பினர்கள் இதை அறிந்திருக்கவுமில்லை, பார்த்திருக்கவுமில்லை. தலைவர் கூட இதை பார்க்கவில்லை என்று கூறினார். மொத்தத்தில் இது கமிட்டி மீதான நம்பிக்கையீனத்தை எமக்கு உருவாக்கியுள்ளது. இதன்; பின்னணியில் திட்டமிட்டு சில இரகசிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவே, நாம் ஐயுறுகின்றோம். இதில் எமக்கு எந்த உடன்பாடும் கிடையாது.
 
2. மிகப் பெரிய பாடசாலை என்று பெருமைப்படும் ஓரு கல்லூரி மாணவ உறுப்பினர்களை, வெறும் கைநாட்டுகளாக, அரசியலுக்காக பயன்படுத்;தியுள்ளதை நாம் அந்த பழைய மாணவர் என்ற வகையில் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

3. தமிழ் மக்களின் அவலம் மற்றும் அதற்கு காரணம் தொடர்பாக, நீங்கள் எமக்கு அறியாத வண்ணம் நீங்களாக வெளியிட்ட அந்த இரகசிய கருத்துடன் எமக்கு எந்த உடன்பாடும் கிடையாது. தமிழ் மக்களைக் கொல்லவும், அழிவுக்கு இட்டுச்செல்லவும், அறிந்தோ அறியாமலோ நாம் என்றும் உடந்தையாக இருந்ததில்லை என்பதை இந்த ராஜினாமா மூலம் தெளிவாக அறியத்தருகின்றோம்.

 

4. பாடசாலை மாணவர்கள் என்ற அடிப்படையில், அதன் நலன், செயல் சார்ந்து நாம் இணைந்தவர்கள்;. இங்கு ஜனநாயகம் என்பதே மிக முக்கியமானது, மையமானது. அதை சங்கம் கடைப்பிடிக்க தவறியுள்ளது. இன்று வரை இந்தச் செயலை தொலைபேசி மூலமோ, ஈமெயில் மூலமோ கமிட்டிக்கு அனுப்பியதுமில்லை, கேட்டதுமில்லை. இப்படி ஜனநாயகத்தை இச் சங்கம் மீறியுள்ளது.

 

அடுத்து பாடசாலை செயற்பாட்டில் இணக்கமும், பெரும்பான்மை சிறுபான்மை உட்பட்டு எதையும் செய்யமுடியும். ஆனால் ஜனநாயகம் அடிப்படையானது. ஆனால் பாடசாலை அல்லாத விடையத்தில், பெரும்பான்மை சிறுபான்மைக்கு உட்பட்டவையல்ல. அதில் முழு இணக்கப்பாடு அவசியமானது. 

 

5. கமிட்டி மீது அரசியல் மூலமான அழுத்தம், நிர்ப்பந்தம் ஊடாக, ஒரு பாடசாலையில் இருக்கக் கூடிய மாறுபட்ட அபிப்பிராயங்களை மறுப்பது, சங்கத்தின் நோக்கத்தை தவிடு பொடியாக்குகின்றது.

 

இந்த வகையில் எமது நிலையை தெளிவுபடுத்துவது அவசியம். நாம் மாறுபட்ட அரசியல் முரண்பாடுகளை, அடிப்படையாக ஏற்றுக்கொள்பவர்கள். இதை ஏற்றுக் கொள்ளாதவர்களுடன் நாம் அடிப்படையில் முரண்படுகின்றோம். இந்த சங்கத்தில் அப்படி பலர் உள்ளனர். சங்கம் எந்த ஒரு அரசியலுக்கு பின்னால் செல்வதையும், அதற்காக வேலை செய்வதையும் நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது. அப்படித்தான் செய்ய வேண்டும் என்றால், அதை பகிரங்கமாக அறிவித்துவிட்டு செய்வதே ஆரோக்கியமானது. தனிப்பட்ட ரீதியில் நாம் அதற்கு தடையாக இருக்கமாட்டோம். இதற்கு அப்பால் எம்மை மறைமுகமாக நாமறியாமல் பயன்படுத்துவதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை.

 

இந்த நிலையில் மற்றவர்கள் அறியாத வண்ணம், இரகசியமக ஒரு அரசியல் இயக்கத்தின் பினாமி அமைப்பாக, கைநாட்டுகளாக, ஒரு பாடசாலை மாணவர் அமைப்பினை இயக்குவதை நாம் ஒரு நாளும் அங்கீகரிக்க முடியாது.

 

இதையும் மீறி குறித்த எந்த அரசியலுக்கு வெளியிலும், தமிழ் மக்களுக்காக நாம் ஒன்றுபட்டு குரல் கொடுத்து இருக்கமுடியும். தமிழ் மக்கள் மேல் நேர்மையான அக்கறையிருந்திருந்தால், அதை நாம் செய்திருக்க முடியும். அந்த நேர்மையற்றதனம் தான், இரகசியமாக நாம் அறியாத எதையோ செய்ய வைத்துள்ளது.

 

தமிழ் மக்களை படுகொலை செய்யும் சிங்கள பேரினவாதம், 60 ஆண்டு காலமாக தமிழ் இனத்தை ஒடுக்கியது என்பதும், கடந்த 30 வருடமாக நடக்கும் யுத்தத்தின் மூலம் ஒரு இன அழிப்பை நடத்துகின்றது என்பதும் வெளிப்படையான உண்மை. இதற்கு எதிரான ஒரு போராட்டத்தை இன்று யாரும் நடத்தவில்லை என்பது எமது நிலை. உங்கள் சிலரின் நிலை இதற்கு மாறுபட்டதாக இருக்கலாம். ஆனால் இதுவல்ல பிரச்சனை.

 

பிரச்சனை இன்று தமிழ் மக்களை குண்டு போட்டு கொல்லும் பேரினவாதத்திலிருந்து பாதுகாப்பது எப்படி? என்பதுதான். சிங்கள இராணுவம் யுத்தத்தை நடத்துகின்றது, கொல்லுகின்றது. அதற்கு புலிகள் சண்டை செய்கின்றனர். அவர்கள் அதன் மூலம்தான், விடுதலையை அடையமுடியும் என்ற நம்புகின்றனர். அது அவர்களின் அரசியல் நிலை.

 

மக்களில் அக்கறை உள்ள நாங்கள் என்ன செய்யவேண்டும்? மக்களை அதிலிருந்து விடுவிப்பதும், அவர்களை பாதுகாக்க கூடிய வழிவகைகளை முன்னிறுத்தியிருக்க வேண்டும். இராணுவத்தின் பிடியில் மக்கள் சிக்காத வண்ணம், யுத்தபூமியில் இருந்து மக்களை வெளியேற்றும் வண்ணம், நாம் சர்வதேச சமூகத்தை கோரியிருக்க வேண்டும். அதைத்தான் நாம் ஒரு முழுமையான இணக்கத்தில், எதிர்பார்க்க முடியும். 

 

ஜனாதிபதிக்கான கடிதம் அதைக் கோரவில்லை. சிலரின் அரசியலை பாதுகாக்க, தமிழ்மக்கள்  கொல்லப்படுவதாக கூறியே, யுத்த பூமியில் மக்கள் பலியிடப்படுவதை ஆதரிக்கின்றது. இதற்கு மாறாக மக்களின் அவலத்துக்காக ஒரு அறிக்கையை, கடிதத்தை வெளியிடுவது சாத்தியம். அது

 

1. இலங்கை அரசே! யுத்தத்தை நிறுத்து!

2. புலிகளே! மக்களை விடுவி!

3. சர்வதேச சமூகமே! மக்களை பொறுப்பெடு!

4. புலிகளே! மக்களை விடுவியுங்கள்! நீங்கள் உங்கள் வழியில் போராடி மீளுங்கள்!

 

என்ற அடிப்படையில் தெளிவாக மக்களைச் சார்ந்து நின்று கோரியிருக்க முடியும். இதை குறித்த  அரசியல் சம்மதிக்காவிட்டால், உங்களில் சிலர் உடன்பட்டு இருக்க மாட்டீர்கள் என்றால், நாம் மட்டும் எப்படி இந்த மக்கள் விரோதத்துக்கு உடன்படமுடியும். இதன் மூலம் மறைமுகமாக மக்களைக் கொல்ல, இந்த துண்டுப்பிரசுரம் மூலம் எப்படி நாம் உடன்படமுடியும். எம் ராஜினாமா தெளிவாக இதன் அடிப்படையிலானது.  

          

பி.இரயாகரன் & ரதிதேவி இரயாகரன் (மீனா)
  

குறிப்பு : இக்கடிதத்தின் கையெழுத்து பிரதி பிரஞ்சுக் கிளையின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.