ஒரு சமூகத்தின் அவலம், எதையும் சுயமாக சீர்தூக்கி பார்க்க முடியாது இருத்தல் தான். பகுத்தறியும் மனித உணர்வை இழந்து, மலடாகி வாழ்தல் தான். மற்றவர்களின் சுய தேவைக்கு ஏற்ப, என்னை நான் அறியாது இழத்தல் தான். என் உழைப்பு மற்றவனால் சுரண்டப்படுவது தெரியாது நாம் எப்படி இருக்கின்றோமோ, அப்படித்தான் இதுவும்.

 

இதற்கு அமைய நாம் மனிதத்தன்மை இழந்து விடுகின்றோம். உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் இடையில் எந்த இடைவெளியும் இன்றி போகின்ற சமூகம், சமூகத்தில் நிலைத்து நீடித்து நிற்க முடியாது. மற்றவர்களின் தேவைக்குள் சிதைந்து போகின்றது.

 

இதைத்தான் புலிகளும் அரசும் செய்கின்றது. ஒருபக்கத்தில் மக்கள் அல்லலுற்று அவலப்படும் எத்தனையோ விதமான வாழ்க்கை. மறுபக்கத்தில் இதன் மேல், அரசும் புலிகளும் நடத்துகின்ற பிரச்சாரப் போர். இதில் எதை கேட்கின்றனரோ, அதை நம்புகின்ற நிலையில் பகுத்தறிவை கறக்கப்பட்ட மக்கள். மக்களுக்காக போராடாதவர்கள், மக்களை ஓடுக்கி வாழ்ந்தவர்கள், மக்கள் பகுத்தறியும் தன்மையையே இல்லாததாக்கினர்.

 

இந்த நிலையில் எந்தப் பிரச்சாரம் எப்படி மக்களை எட்டுகின்றதோ, அந்த எல்லைக்குள் சிந்திக்கின்ற அறிவிலித்தனத்துடன,; அவை உணர்ச்சிக்குள்ளாகி வெடிக்கின்றது. இலக்கற்று, மனதை அழிக்கின்றது. இதுவே நவீன வியாபாரமாகிவிடுகின்றது. மக்களின் உணர்வை மட்டுமல்ல, பணத்தையும் கறந்து விடுகின்ற அவலக் கலை.

 

மனித அவலத்தைக்காட்டி, அதுவோ வியாபாரமாக மாறுகின்றது. உதாரணமாக புலம்பெயர் சமூகத்தில், ஜி.ரி.ஓ மக்களி;ன் அவலத்தை காட்டி அதற்குப்பின் சந்தா சேர்க்கும் வியாபாரத்தை அதற்குள் புகுத்திவிட்டனர். மனித அவலம், இப்படி ஜி.ரி.ஓ சந்தாவுக்கு உதவுகின்றது. 

 

நுணுகிப் பார்த்தால் எல்லாம் வியாபாரம். மக்களின் விடுதலைக்கான, அவர்களின் வாழ்விற்கான எந்த அடித்தளத்தையும் இது கொண்டிருப்பதில்லை. அதை முன்வைப்பதுமில்லை. மாறாக உணர்ச்சியூட்டி கறப்பது, இதன் பின்னணியில் உள்ளது. மாட்டுக்கு கன்றைக் காட்டி பாலை சுரக்க வைத்து கறந்த சமூகத்தை, அதே பாணியில் உணர்ச்சிய+ட்டி கறக்கின்றனர். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

 

மனிதஅவலத்தை உருவாக்கி அதன் மூலம் புலிகள் தம்மை பாதுகாத்துக் கொள்ளவும், மறுபக்கத்தில் இங்கு இதை வைத்து தமிழனுக்கு வியாபாரம் செய்யவும் முனைகின்றது. இதனால் தமிழனுக்கு என்ன கிடைக்கும் என்பது பகுத்தறிவுடன் கேட்டக் கூடாத கேள்வி;. இப்படி பகுத்தறிவுடன் கேட்பது துரோகம். 

   

இந்த வகையில் அரசும் புலிகளும் இயங்குகின்றது. ஒன்றை ஒன்று பார்க்கவும் கேட்கவும் கூடாது என்கின்றது. இதை மீறினால், அது இது என்று பகுத்தறிவாக சிந்திக்க வைத்துவிடும் என்ற அச்சம். இதனால் தடைவிதிப்பதன் ஊடாக தத்தம் சுயநலத்தை மக்கள் மேல் திணிக்கின்றனர்.

 

இப்படி மனிதன் பகுத்தறிவை மலடாக்கிய பின், பொய்கள், நடிப்புக்கள், கற்பனை கதைகள் என்று வேஷம் போட்டு குலைக்கின்ற நாய்கள், எல்லாம் கூடி ஊளையிடுகின்றது.

 

உண்மை ஒன்றாக இருக்க, பொய்கள் சமூகக் கருத்தாக மாறுகின்றது. மனித அவலம் பலவாக இருக்க, குறித்த அவலம் மாபெரும் செய்தியாகின்றது.

இப்படி மனிதத்தன்மையற்ற காட்டுமிராண்டிகளின் நடத்தையை, மனிதத்தன்மை கொண்டதாக காட்டுகின்ற பிரச்சாரங்கள். மனிதனின் பகுத்தறிவை மறுத்து, கிளிப்பிள்ளை போல் சொல்ல வைக்கின்றனர்.

 

விளைவு சொந்த சமூகத்தின் அழிவை, அந்த சமூகத்தின் பிரிந்த மற்றொரு சமூகம் செய்வதாக மாறுகின்றது. கண்மூடித்தனமான உணர்ச்சிக்கு உள்ளாகி சமூகத்தை  அழிக்க துணை போவதாக மாறிவிடுகின்றது. தமிழனுக்கு எதிராக தமிழன் என்ற நிலைக்குள், சமூகத்தை அழித்தலே இன்றைய பிரச்சாரத்தின் எல்லைகள் உள்ளது. 

 

பி.இரயாகரன்
16.02.2009