´வரலாற்று ஆய்வு´ (A Study of History) என்ற நூலை 65- வருடங்களுக்கு முன்பு வரலாற்றுப் பேராசிரியர் ´டாயின்பீ´ (Arnold Toynbee) எழுதியிருந்தார். 10-பாகங்களாகவும், ஒவ்வொரு பாகமும் குறைந்தது 1000-பக்கங்களுக்கும்  அதிகமாக உடையதாக இருந்தது.

6000-ஆண்டுகளாக உலகத்தில் நடந்த சம்பவங்களை வரலாற்றுச் செய்திகளாக சொல்லவில்லை டாயின்பீ. மற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் போல், சில சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட வரலாற்று ஆய்வுகள் இல்லை அவை. ரஷ்யா முதல் டாஸ்மோனியா வரையில் மனித நாகரிகங்களைப் பற்றி சொல்ல முற்பட்டிருக்கிறார் டாயின்பீ.

சுருக்கமாகச் சொல்வதென்றால் மனித குல நாகரிகங்களின் வாழ்க்கைச்  சூழல்கள், சோதனை, சமாளிப்பு, முயற்சி, மீண்டும் சோதனை, மீண்டும் சமாளிப்பு, கடைசியில் அழிவு என்ற கட்டத்திற்கே இயற்கை கொண்டு செல்கிறது என்கிறார்.  

எதிரிகளின் படையெடுப்பால் சிலசமயம் வெற்றி சில சமயம் தோல்வி (Time of Troubles) என எல்லாவற்றையும் தாக்குப்பிடித்து Universal state ஆக நிறுவப்பட்டு சிறிது காலம் சமாளித்த பின் முற்றிலுமாக அழிந்து போய்விடுகிறது மனித நாகரிகம். ஒவ்வொரு நாகரிகமும் உருவாகி சில நூறு ஆண்டுகள் அல்லது சில ஆயிரம் ஆண்டுகள் வரையில் இளமையாக, முதியவையாக, கடைசியில் நோய்வாய்ப்பட்டு புதிய இயற்கையின் மாறுபட்ட சூழல்களுக்கு புதிய நாகரிகத்திற்கு சரிக்கு சமமாக நிற்க முடியாமல் தோற்றுப் போய்விடுகிறது. அழிந்த நாகரிகம் ஒன்றிலிருந்து வேறொரு மனித நாகரிகம் உருவாக்கப்படுகிறது.

அடுத்து பண்பாடு குறைந்த மூர்க்கத்தனம் மிகுந்த வெளிநாட்டு சக்திகள் எல்லைப்புறங்களை மீறிவந்து தாக்குதல் நடத்துகின்றன. சிறுக சிறுக நடக்கும் தொல்லைகள் இராணுவப்படையெடுப்புகளாக வளர்ந்துவிடுகிறது. அதைச் செய்பவர்களே வெளிநாட்டுப் பாமர உழைப்பாளி வர்க்கம் (External Proletariat) என குறிப்பிட்டிருக்கிறார் டாயின்பீ.

ஒரு நாகரிகத்தின் நடுமத்திய காலங்காலங்களில் உள்நாட்டில் எதிர்ப்பு ´Internal Proletariat´ என்னும் சமூதாயத்தின் உழைப்பாளிப் பாமர வர்க்கத்தினடமிருந்தே உருவாகிறது. ஒரு நாகரிகம் அழியும் சூழல்களுக்கு முக்கிய காரணங்கள் நாட்டின் உட்பகையாகும். உள்நாட்டு மக்களில் பெரும்பான்மையினரான எளிய பாட்டாளி வர்க்கத்தின் நம்பிக்கையை இழக்கும் போது நாகரிகம் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடுகிறது என்பது டாயின்பீயின் வரலாற்று கண்டுப்பிடிப்பு.

மனிதன் பூமியில் தோன்றி 3- லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் 6000- ஆண்டுகளாகத்தான் மனித நாகரிகம் தோன்றியிருக்கிறது. இதுவரையில் 21- நாகரிகங்கள் உருவாகி இருக்கின்றன. இவற்றில் 8- நாகரிகங்கள் மட்டும் இன்றும் இருக்கிறதாக டாயின்பீ சொல்கிறார்.

1. மேற்கத்திய நாகரிகம்
2. ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவ நாகரிகம் (ரஷ்யா)
3. ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவ நாகரிகம் (மற்ற இடங்களில்)
4. ஈரானிய நாகரிகம் (மேற்கு ஆசியா)
5. அரபு நாகரிகம் (அரேபியா மேற்கு ஆசிரியா வடக்கு ஆப்பிரிக்கா)
6. ஹிந்து நாகரிகம் (இந்தியா தென்கிழக்கு ஆசியா)
7. கிழக்கு நாகரிகம் (ஜப்பான் கொரியா)
8. கிழக்கு நாகரிகம் (மற்ற இடங்கள் சீனா உள்பட)

மேற்குறிப்பிட்ட 8- நாகரிகங்களும் தோன்றுவதற்கு முன் 4- புராதன நாகரிகங்கள் உலகில் இருந்தன.

1. கிரேக்க நாகரிகம் (Hellenic)
2. சிரியாக் நாகரிகம் (Syriac)
3. இந்திக் நாகரிகம் (Indic) (ஹிந்து நாகரிகத்தின் தாய் இந்திக் நாகரிகம்)
4. சீன நாகரிகம் (Sinic)

இந்த 4- நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன் உலகில் 2- நாகரிகங்கள் மட்டும் இருந்தன.

1. கிரீட் தீவிலும், ஈஜியன் கடற் பகுதிகளிலும் வாழ்ந்த ´மினோவன்´ சமூதாயம். (Minoan) (ஹெலீனிக், சிரியாக் சமூதாயங்களின் மூதாயர்களாக மினோவன் சமூதாயம் இருக்கிறது)

2. சுமேனிக் சமூதாயம் (Sumeric) ´இந்திக்´ சமூதாயத்தின் முன்னோடி.

அதேபோல், மேற்கு பக்கத்தில் அதாவது வட, தென் அமெரிக்கா பக்கத்தில் தோன்றிய நாகரிகங்கள்...

1. ஆண்டீஸ் மலைப் பிராந்தியத்தில் "இங்க்கா" சமூதாயம் (Inca)
2,3,4- மத்திய அமெரிக்கப் பகுதியில் வாழ்ந்திருந்த மெக்ஸிக், யூக்கடெக் சமூதாயங்கள் (Mexic, Yucatec) இவற்றுக்கு முன்னோடி ´மாயா´ (Maya) சமூதாயம்.

இவை தவிர, நைல்நதிப் பள்ளத்தாக்கில் தோன்றி வளர்ந்து, மறைந்த ஈஜிப்டியாக் (Egyptiac) சமூதாயம். இதன் தாய், தந்தை யார் என்று கண்டுப்பிடிக்க முடியாமல் இருப்பதோடு, ´ஈஜிப்டியாக்´ சந்ததியும் இல்லாமல் போய்விட்டது. எகிப்திய பிரமிடுகள், ஸ்பிங்ஸையும் (Sphinx) தந்த அதிசய சமூதாயம் ஈஜிப்டியாக்.

இப்படி டாயீன்பீ பிரமாண்டமான மனித நாகரிகத்தின் ஆராய்ச்சிகளை மிகப் பெரிய நூலாக எழுதி முடித்தார். பிற்காலத்தில் டாக்டர் ´சாமர்வெல்´ என்பவர் வரலாற்றுக்களை சுருக்கி இரண்டு பாகங்களாக எழுதினார். இருப்பினும் இரண்டு பாகங்களும் கூட ஆயிரம் பக்கங்களுக்கு மேல் வருகிறது. அந்தளவுக்கு டாயீன்பீ கடும் ஆராய்ச்சிகளுடன் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை மனித நாகரிகத்தின் ஆராய்ச்சிக்காகவே உலகம் முழுவதும் சுற்றி திரிந்து விரிவாக விளக்கி எழுதியவை ´வரலாற்று ஆய்வு´ (A Study of History)


தமிழச்சி
16/02/2009