Language Selection

தற்கொலைத் தாக்குதல், தன்னைத்தான் கொல்லும் தற்கொலை என்ற எல்லைக்குள்ளுமாய் வாழ்தலை மறுத்தலே, போராட்டமாக மாறிவிட்டது. மறுபக்கத்தில் துரோகம் தியாகம் என்று மனிதரை கொல்லுதல் நியாயப்படுத்தப்படுகின்றது.

எப்படி போராடுவது என்று தெரியாது, போராட முனைபவனை வழிகாட்டத் தெரியாது, உணர்ச்சிக்குள்ளும், தற்கொலைகளாகவும், குடிகாரராகவும், சதா புலம்புபவராகவும்  சமூகத்தை எட்டி உதைக்கின்றனர்.

 

இதன் விளைவுதான் முருகதாசன். அவன் தன் சொந்த முரண்பாட்டையே, தொடர்ந்து போராடுங்கள் என்று கூறிவிட்டு, தான் செத்துப் போகும் அவலம். இதுதான் அவனின் வழிகாட்டல். அவனை வழிகாட்டிய புலியின் அரசியல். தற்கொலைக்கே சமூகத்தை இட்டுச் சென்றவர்கள் தானே புலிகள். இவர்கள் எதை எப்படி உற்பத்தி செய்கின்றனர்? 

 

என் வீட்டில் நடந்த உதாரணம். 11 வயதே நிரம்பிய எனது மகனை, முன்பின் தெரியாத அதே வயதே ஓத்த தமிழ் சிறுவன் அணுகி, 'நீ சிங்களவனா என்று கேட்டு, நீ சிங்களவன் எனின் உன்னைக் கொல்வேன் என்றான்". மகனின் பதிலுக்கு முன்னமே, இதை கூறிவிட்டு செல்லுகின்றான். இதை நாம் முறையிட்டால், இந்த நாட்டின் சட்டபடி கிரிமினல் குற்றம். எம்மை புலிநாட்டு சட்டமோ துரோகி என்று கூறும். ஓரு குழந்தையின் அறியாமை மீது, திணிக்கப்படும் வன்முறையுடன் கூடிய மனிதவிரோத விகாரம் தான் இவை. எம்மினத்தில் இது நஞ்சாக விதைக்கப்படுகின்றது. வன்னியில் அப்பாவி குழந்தைகள், இதன் மூலம் யுத்த முனையில் பலியிடப்படுகின்றனர்.

 

நான் ஏன் போராடுகின்றேன், எதற்கு போராடுகின்றேன் என்ற எந்த அறிவுமற்ற வகையில் சமூகத்தை மலட்டுக் கூட்டமாக்கி, அவர்களை மந்தைகளாக மாற்றி பலியிடுவது பாசிசத்தின் இன்றைய அரசியல் இருப்பாகும்.

 

எந்த ஒரு செயலையும் ஏன், எதற்கு நாம் செய்கின்றோம், இதனால் எம் மக்களுக்கு என்ன நன்மை என்ற தெரிந்துகொள்ளக் கூட முடியாத, அதைக் கேள்வியாக கூட கேட்க முடியாதவர்களாக்கி, எம்மை நாம் பலியிடுகின்றோம். நாமே எம்மை கோமாளிகளாக்குகின்றோம்.

 

தான் போராட முடியாத கோழைத்தனமான தற்கொலையை வீரமாக காட்டி, உணர்ச்சியூட்டி அதை தமிழினத்தின் பெயரால் செய்யத் தூண்டுகின்றனர். மக்கள் போராட்டத்தை வழிகாட்ட முடியாத அரசியலும்;. இதைத் நக்கி தின்னும் கூட்டம் இதைத் தியாகமாக போற்றுகின்றது. ஊடகவியலோ இதை ஊதிப்பெருக்கி வயிறு வளர்க்கின்றது. இப்படி கொலைகாரர்கள், ஊடகவியலாளர்களாக உள்ளனர். இப்படி தற்கொலைக்குள் அழைத்துச் சென்றுவிடுகின்ற  அனைத்து விபச்சாரக் கும்பலும், தனிமனித தற்கொலைகளைத் தூண்டி அதில் குளிர்காய்கின்றது. இதற்குள் விசுவாசமான, நாய் பிழைப்புகள்.

 

வன்னியில் மக்களைக் கொன்று குவிக்கும் வண்ணம், மக்களை சிங்கள பேரினவாதத்தின் குண்டுக்குள் நனையவிட்டு, அதையே அரசியலாக்கி பிழைக்கின்ற கூட்டம் தானே இது. அதை வக்கிரமான குறுகிய உணர்ச்சியாக்கி, அவர்களை தற்கொலை செய்யத் தூண்டும் நயவஞ்சகர்கள், இந்த சமூகத்தின் மாபெரும் கிரிமினல்கள்.

 

இப்படி இந்த தற்கொலையைக் காட்டி, இனி இதற்குள் அரசியல். அதை செய்யத் தூண்டும் மலிவான போற்றுதல்கள். இதற்குள் இலங்கையில் ஊடகவியலளார்கள் என்ற போர்வையில் இயங்கிய புலிக் கும்பல், இங்கு அதை பகிரங்கமாக செய்கின்றனர். ஊடகவியலாளர் என்ற அடைமொழி எதற்கு. கொலைகாரர்கள் என்ற அடைமொழி உங்களுக்கு பொருந்தும். கொலை செய்யவே, மக்களை கொலைகாரன் முன் நிறுத்துகின்றனர். அதை வைத்து கடை விரிகின்றனர். வர்த்தக விளம்பரங்கள் ஊடாக, அது ஊக்குவிக்கப்படுகின்றது. வியாபாரம், விளம்பரம் ஊடாக அதை உள்வாங்கியவன், தற்கொலை செய்கின்றான். வன்முறையில் ஈடுபடுகின்றான். அளவுக்கு மீறி குடிக்கின்றான். இப்படி ஒரு சமூகத்தின் தற்கொலைக்கும், அழிவுக்கும் ஊடகவியலாளர் என்ற போர்வையில் உள்ள புலிகள் வழிகாட்டுகின்றனர்.

 

எதிரிக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடமுடியாத பிழைப்புவாத சந்தர்ப்பவாத அரசியல், அனைத்தையும் தற்கொலை நோக்கி வழிகாட்டுகின்றது. ஆளும்வர்க்கம் முதல் ஏகாதிபத்தியம் வரை நக்கும் அரசியல் எல்லையில் வழிகாட்டும் பிழைப்புவாதிகள், மக்களை உணர்ச்சி ஊட்டி தற்கொலைக்குத்தான் தள்ளமுடிகின்றது. மக்களுக்காக மக்கள் போராடவும், அதை வழிகாட்டவும் விரும்பாத கும்பல், கொலையையும் தற்கொலையையும் தன் பாதையாக தேர்ந்தெடுக்கின்றது. அதை மற்றவர்கள் மேல் திணிக்கின்றது.

 

புலம்பெயர் சமூகத்தில் மக்களை உணர்ச்சி ஊட்டி தக்கவைக்கும் (தற்)கொலைகார அரசியல், அந்த உணர்ச்சி மங்கி மடிய முன்னம் பணத்தை வறுகுவதன் அடிப்படையில் சுறுசுறுப்பாக இயங்குகின்றது. வன்னியில் மக்கள் தம் குழந்தைகள் அல்லது புலிகள் மேல் இருக்க கூடிய அனுதாப உணர்வைக் கூட மழுங்கடிக்கும் வண்ணம், புலியின் நடவடிக்கை அமைந்துள்ளது.

 

கொத்துகொத்தாக அங்கு மக்கள் சாகடிக்கப்பட, இங்கு ஆயிரமாயிரமாக ஈரோக்களாக டொலராக மாறுகின்றது. இப்படி குரூரமான தலைமையின் கீழ், இந்த தற்கொலைகள் உருவாக்கப்படுகின்றது. கொத்துக்கொத்தாக பேரினவாத குண்டுக்குள் மடிய மறுக்கும் மக்கள், இதற்கு உட்பட்டு அங்கு வாழமறுக்கும் மக்கள், புலியின் அசிங்கமான கேவலமான பல்வேறுவிதமான அடக்குமுறைக்கு உள்ளாகின்றனர். இதில் இருந்து தப்பி வந்;துகொண்டிருக்கும் மக்கள், தம் கண்ணீர் கதைகளை கதைகதையாக சொல்லத் தொடங்கிவிட்டனர். மனிதஅவலம் பற்றி புலி ஊடகங்கள் சொன்னது ஒருபக்கம் தான், மறுபக்கத்தை மக்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர்.

 

அங்கிருந்து தப்பி வரும் மக்கள், தம் சொந்த அனுபவத்தில் இருந்து ஓப்பிட்டு, புலியை விட இராணுவம் மேலானது என்று இன்று உணருகின்ற அறியாமை. அதையே அவர்கள் வாய்விட்டுச் சொல்லுகின்றனர். தம் மீது குண்டு போட்ட இராணுவத்தை அவர்கள் எதிர்ப்பதற்கு பதில், தம் மத்தியில் இருந்த குண்டை அடித்து தம்மை இந்த நிலைக்காளாக்கிய புலிக் கதை சொல்லுகின்றனர். இதனால் தான் அவன் எம்மீது குண்டு போட்டான், அடித்தான் என்று கூறுகின்றனர். அப்பழுக்கற்ற மதிப்பீடுகள். இப்படி மக்கள் தப்பி வரும் வழியில் இராணுவம் நடந்துகொள்ளும் முறையை, புலிகள் தமக்கு சொன்னதுக்கு எதிர்மாறாக இராணுவம் நடப்பதைக் கண்டு அதிர்ந்து போய், புலியை காறித் தூற்றுகின்றனர்.

 

உதாரணமாக வரும் தகவல்கள் இதை உறுதி செய்கின்றது. தப்பி வந்த உறவினர் கூறிய ஒரு தகவலை, ஓருவர் எனக்கு கூறினார். இதில் இராணுவம் பெண்களை தொட்டுக் கூட பரிசோதனை செய்யவில்லை என்றார், புலிகள் அப்படியல்ல என்றும், பெண்களின் மார்பகங்களில் கூட புலிகள் தம் துப்பாகியால் இடிப்பதாக சொன்னார். குடிசைகளில் மக்களை இருக்க விடாது, மரங்களின் கீழ் இருக்கும்படி, புலிகள் எப்படி கட்டாயப்படுத்தினர் என்ற கதையை சொன்னார். ஏன் ஏதற்கு என்று தெரியாது என்று இதைக் கூறுகின்றனர். இந்தளவுக்கும் சம்ந்தப்பட்ட உறவினரின் மகள் புலியில் உள்ளார். அவரின் மகனை கடத்திசெல்ல முயன்ற ஓரு நிலையில், அவர்கள் தப்பி வந்தனர்.

 

மற்றொரு கதை. லண்டனில் நடந்த செத்தவீட்டில், இறந்தவரின் குடும்பத்தவர்கள் சொன்ன கதையை உறவினர் சொன்னார். இறந்தவரின் மகளை புலிகள் கடத்தி செல்ல முயன்ற நிலையில், தம் மகளை ஓளித்து விட்டனர். இதனால் தந்தை கடந்த ஒரு வருடமாக புலிகளின் வதைமுகாமில் வாழ்க்கையாகிவிட்டது. இடைக்கிடை அவரை விடுதலையாக்கி, மகளை கண்டு பிடிக்க முனைந்தனர். இப்படி விடுதலையாகி வந்த சமயம், இராணுவம் வீசிய செல் தாக்குதலில் கழுத்தில் பலத்த காயமடைந்தார். மருத்துவ வசதியின்றி மரணம் என்ற நிலையை அவர் உணருகின்றார். அவர் தம் குடும்பத்திடம் கூறியது, என்னைப்போல் நீங்களும் சாகாது தப்பிச்செல்லுங்கள். எனது இந்த நிலையில், உங்கள் மேல் கண்காணிப்பு இருக்காது. நான் எப்படியோ சாகப்போகின்றேன், என்னை இப்படியே விட்டுவிட்டு தப்பிச்செல்லுங்கள்;. மரணத்தில் போராடும் கணவன், தந்தை, இருந்தபோது அவர்கள் இதைப் பயன்படுத்தி தப்பி வந்துள்ளனர். வந்தபின் தந்தையின் கணவனின் மரணச் செய்தி வருகின்றது. இந்த பிணத்தைக் காட்டி, புலம்பெயர் நாட்டிலும் தமிழகத்திலும் மனிதஅவலமாக காட்டி, பிழைக்கும் அரசியல் கொண்டாட்டங்கள். உண்மைகள் மறுபக்கத்தில் அனாதரவாக, மனித மனங்களையே குடைகின்றது. இப்படி பல, பல கதைகள். இவை எதுவும் பொய்யல்ல என்று, காலம் பதில் சொல்லும்.

 

இப்படி தப்பிவரும் மக்கள் மனநிலை எப்படி மாறுகின்றது என்பதற்கு மற்றொரு உதாரணம். மக்களின் போர்வையில் புலிகளும் வருவார்கள் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டு, இராணுவக் கண்காணிப்பை ஏற்றுக்கொள்ளும் பரிதாபம். சந்தேகத்தில் கைது செய்வது, தனிமைப்படுத்துவது தவிர்க்க முடியாது என்று எண்ணும் அப்பாவி மனம். மக்கள் இதை விட வேறுவிதமாக சிந்திக்கவும் செயலாற்றவும் முடியாது. 

 

புலிகள் மக்களை மிகக் கீழ்த்;தரமாகவே நடத்திவிட்டார்கள். எப்படி எம் தேசம், தேசியம் தோற்கடிக்கப்பட்டது, தோற்கடிப்படுகின்றது என்பதை, இந்த மக்கள் தம் சொந்த அனுபவத்தின் ஊடாக செய்கின்றனர், அதை வெளிப்படையாக கூறத்தொடங்கிவிட்டனர். அங்கு மக்களின் உணர்வை தமக்கு எதிராக புலிகள் மாற்ற, இங்கு மக்கள் உணர்வை தமக்கு  ஆதரவாக மாற்றி பணத்தை திரட்டும் எதிர்மறை அம்சங்கள். உண்மையில் மக்களின் அவலத்தை வியாபாரமாக்கி, பிழைக்கும் பாசிச மாபியா புலி அரசியல் நடுத்தெருவில் கூத்தாடுகின்றது.

 

பி.;இரயாகரன்
14.02.2009