ஈழத்தில் போர் தொடருகின்றது. முல்லைத்தீவு பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கமும் இறுதியாய் வெளியேறிவிட்டது. இனி செத்து விழும் மக்களைக் கணக்கு காட்டுவதற்குக் கூட அங்கு நாதியில்லை. கேள்வி கேட்பாரின்றி ராஜபக்க்ஷே அரசு புலிகளை ஒடுக்குவது என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் மீது ஒரு இனப்படுகொலையையே கட்டவிழ்த்து விட்டிருக்கிறது

 

jaya

 

தமிழ்நாட்டின் மக்களெல்லாம் இந்தக் கொடுமைகளைக் கண்டும் கையறு நிலையில் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. எல்லா ஓட்டுக்கட்சிகளும் இந்தப் பிரச்சினையை அரசியலற்ற மனிதாபிமானப் பிரச்சினையாக மாற்றி யார் கிழித்தார்கள் என்பதில் போட்டி போடுகிறார்கள். தனது வாரிசுகளுக்கு கட்சியையும் ஆட்சியையும் எழுதிவைத்து விட்டு பாகப்பிரிவினை வேலைகளை மட்டும் முக்கியமாக செய்து வரும் கருணாநிதி இடைக்கிடையே ஈழம் என்று உருகுகிறார். இந்த உருகுதலில் ஈழப்பிரச்சினையை அப்படியே நீர்த்துப் போகவைக்கும் தந்திரத்தை கடைபிடிக்கிறார். இனி என்ன செய்ய முடியும், மத்திய அரசு சொல்லியும் நடக்கவில்லையே, தமிழர்கள் ஒற்றுமையாக இல்லை என்றெல்லாம் அவர் நடத்தும் நாடகம் ஒருபுறம்.

மறுபுறத்தில் ஜெயலலிதா “கொள்கை” ரீதியாகவே சிங்கள இனவெறி அரசின் போரை ஆதரிக்கிறார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டுமென கட்டளையிடுகிறார். போர் என்றால் பொதுமக்கள் சாகத்தானே செய்வார்கள் என ராஜபக்க்ஷேவுக்கு வக்காலத்து வாங்குகிறார். மற்றபடி ஈழத்து மக்கள் அதிகம் சாகும் செய்திகள் வந்த வண்ணம் இருப்பதால் எதுவும் பேசாமல் தந்திரமாக மவுனம் காட்டுகிறார். தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாமென நாடகம் நடத்துகிறார். அம்மாவின் கூட்டணிக்காக க்யூ வரிசையில் நிற்கும் பக்தர்களும் கருணாநிதியைக் துரோகியென கிழிக்கிறார்களேயன்றி மறந்தும் அம்மாவைப் பற்றி பேசுவதில்லை. தனது மகனின் இரண்டு மாத மத்திய மந்திரிப் பதவியைக் கூட துறக்கத் தயாரில்லாத ராமதாஸூ, ஈழத்திற்கு சாகசப்பயணம் மேற்கொள்வேனென உதார் காட்டும் வைகோ, சிங்கள அரசின் போரை கொள்கைரீதியாகவே ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கட்சி, தீடிரென தூக்கத்திலிருந்து விழிப்புற்று ஈழத்திற்காக குரல் கொடுக்கும் வலது கம்யூனிஸ்ட் கட்சி இவர்களெல்லாம் கருணாநிதியை மட்டும் விமரிசனம் செய்துவிட்டு ஜெயலலிலதாவைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. ராஜபக்க்ஷேவை பிளந்து கட்டும் இந்தத் தலைவர்கள் அந்த ஆளின் தோஸ்த்தான ஜெயலலிதாவை மட்டும் உரசிக்கூடப் பார்ப்பதில்லை. போருக்கு கருவிகளும், ஆளும் கொடுத்து உதவும் இந்திய அரசிடம் மாங்கு மாங்கென ஈழம் பற்றி விளக்கம் அளிப்பவர்கள் போயஸ் தோட்டம் சென்று அம்மாவுக்கும் மட்டும் வகுப்பு எடுப்பதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக அம்மா கட்சியிடம் அணி சேரப்போகிறவர்கள் மட்டும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள். அம்மாவும் கூட்டணிக்கு வந்துவிட்ட வரப்போகின்ற இந்த பக்தர்களைப் பற்றி எதுவும் பேசாமல் கருணாநிதி புலி ஆதரவாளர் என பூச்சாண்டி காட்டுகிறார். ஈழத் தமிழர்களை கருணாநிதி காப்பாற்ற முடியாது என பிலாக்கணம் வைக்கிறார். ஜெயலலிதாவின் மனம் நோகாமல் இலங்கைத் தமிழரைக் காப்பாற்ற நினைக்கும் ‘மாவீரன்’ நெடுமாறனை என்னவென்று சொல்ல? இத்தகைய பிதாமகர்களின் கையில்தான் ஈழத் தமிழரின் பாதுகாப்பு உள்ளதாக எவரும் கருதினால் அதை விட ஏமாளித்தனம் எதுவுமில்லை.

கருணாநிதியின் துரோகம் இப்போது மக்கள் அனைவரும் அறிந்து விட்ட யதார்த்தம். ஆனால் ஈழத்தமிழருக்கு ஜெயலலிதா எதிரி என்பதை அவரது பக்தர்கள் மறைக்கிறார்கள். இந்த மாயத்தடுப்பைக் கிழித்தெறிவதும் ஈழத்திற்காக குரல் கொடுப்பதும் வேறுவேறல்ல. ஜெயலலிதா ஈழத்திற்காக விட்ட அறிக்கையைத்தான் செராக்ஸ் காப்பி எடுத்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நாடாளுமன்ற உரையில் பேசியிருக்கிறார். புலிகள் ஆயுதத்தைத் துறந்து சரணைடையவேண்டுமெனவும் அதன் பிறகு இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் ராஜபக்க்ஷேவின் கொள்கையை மறு ஒளிபரப்பு செய்திருக்கிறார். இலங்கை அரசின் உற்ற பங்களாயாய் இந்தியா செயல்படுகிறது என்பதற்கு இதைத் தவிர சான்று தேவையில்லை. பிரதிபா பாட்டீலீன் உரை தங்களுக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாக கருணாநிதியும், ராமதாஸூம் போட்டி போட்டுக் கொண்டு அறிக்கை விடுகின்றனர். மத்திய அமைச்சர்கள் எனும் எலும்புத்துண்டை கவ்விப் பிடித்திருப்பதற்கு விசுவாசமாக வேறு என்ன பேச முடியும்?

புரட்சித் தலைவி அம்மாவும் சரி குடியரசுத் தலைவர் அம்மாவும் சரி ராஜபக்க்ஷேவின் குரலாய் கூவிக் கொண்டிருக்கும் போது ஈழத்தின் முல்லைத்தீவுகளில் மக்கள் உயிரை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஈழத்தின் துயரை விட தமிழ்நாட்டில் அட்டைக் கத்திகளாய் சுழன்று கொண்டிருக்கும் ஓட்டுக்கட்சி பிரமுகர்களை அடையாளம் கண்டு புறக்கணிப்பது முக்கியமானது. அப்போதுதான் ஈழத்தின் துயரை அதற்குரிய பொருளில் மக்களிடம் பேச முடியும். அதுதான் பயன்தரத்தக்க விளைவுகளையும் தரமுடியும்.