10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

இசை சந்தைக்கு இசையும் ஏ ஆர் ரகுமான்.

 90களின் தொடக்கத்தில் தமிழ் திரை இசை உலகிற்கு அறிமுகமான இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், ஸ்லம்டாக் மில்லியனர் என்ற பிரிட்டீஸ் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் கோல்டன் குளோப் என்ற விருதை

 பெற்றுள்ளார். இதை தமிழன் என்ற முறையிலும், இந்தியன் என்ற முறையிலும் பெருமிதம் கொள்ளும் ஒன்றாக ஊடகங்கள் பெருமைப்படச்சொல்கின்றன. இலங்கையில் கொத்துக்குண்டுகள் மூலம் தமிழர்களின் உயிரும் உடமையும் குதறப்பட்டுக்கொண்டிருக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியும், ரகுமானின் குளோப் விருதும் பெருமிதம் கொள்ளும் உணர்வாக முன்னிருத்தப்படுகின்றன. இது ஒரு புறமெனில் மறுபுறம் இப்படம் இந்தியாவை கேவலப்படுத்துவதாக சில அறிஞர்கள்(!) கொதிக்கிறார்கள். சிலர் வழக்குத்தொடுத்திருக்கிறார்கள். தான் ஆராதிக்கும் ஒரு நடிகனின் கையெழுத்தைப்பெற மலத்தில் புறண்டெழுவதும், சேரிகளின் அவலத்தைக்காட்டுவதும் இந்தியாவை கேவலப்படுத்துவதாகும் என்றால், சேரிகளை இன்னும் சேரிகளாகவே வைத்திருப்பதும், ஒரு பிரிவு மக்கள் தாங்கள் வாழ்வதற்காக மலத்தோடு உழன்றுகொண்டிருப்பதும் இந்தியாவிற்கு அவமானமாக தெரியவில்லையா? என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் சொல்லவும் மாட்டார்கள். ஒரே இரவில் ஏழை கோடீஸ்வரனாகும் கோடம்பாக்கத்துக்குப்பையை ஆங்கிலத்துடைப்பத்தால் வாரியதால் ஆஸ்காரை வெல்லும் என்று இப்போதிருந்தே ரசிகர்கள் கொண்டாடக் காத்திருக்கிறார்கள்.

 

         

பொதுவாக இசை என்பது எல்லாத்தட்டு மக்களாலும் ரசிக்கப்படக்கூடியதாகவும், விரும்பக்கூடியதாகவும் இருக்கிறது. இசை என்றால் பரவலாக அது திரைஇசையையே குறிக்கும். அவ்வாறல்லாமல் திரைப்படமல்லாத இசைப்பாடல்களும் அவ்வப்போது வந்ததுண்டு. இசையை ரசிப்பதாக குறிப்பிட்டாலும் அது பாடலை உள்ளடக்கியதாகவே இருக்கும். இப்படி திரைப்பட இசையானாலும், அதற்கு வெளியிலிருந்து வந்த இசையானாலும் அவை இரண்டு நோக்கங்களை கொண்டிருக்கும். மக்களுக்கு இசையின் மேலுள்ள மோகத்தை பயன்படுத்தி அவர்கலை அந்த மயக்கத்திலேயே தக்கவைப்பதற்கும், அதன் மூலம் இசைத்தட்டு விற்பனையை கூட்டி லாபம் பார்ப்பதற்கும். தங்களின் வாழ்வில் நேரடியாக கண்ட அனுபவங்களை அறிவாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான கருவியாக இசையும் ராகங்களும் தோன்றின. பின்னர் உழைப்பின் பயன் உழைப்பவர்களுக்கு கிடைக்காமல் போனபோது உழைப்பின் மீது ஏற்ப்பட்ட சலிப்பைப்போக்கும் போதையாக பொழுதுபோக்காக உழைப்பை அபகரித்தவர்களால் முன்வைக்கப்பட்டது. இன்றுவரை அதுவே பல்வித வடிவமாற்றங்களுக்கு உள்ளாகி ஆனால் உள்ளடக்கம் மாறாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமன்றி பலகோடிகளை ஈட்டித்தரும் இசைச்சந்தையாகவும் இன்று உருவெடுத்து நிற்கிறது. அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சோனி நிருவனம் தயாரித்து ஏஆர் ரகுமான் இசையமைத்து பாடி வெளியிட்ட வந்தேஏஏ மாட்ரம் எனும் (இந்து வெறி) தேசபக்தி இசை பத்து லட்சம் குறுந்தகடுகள் விற்கப்பட்டன. இசை என்னும் மயக்கம் அந்த பார்பனிய பாடலை பொழுது போக்கு என்னும் வடிவில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு மட்டுமன்றி பலகோடி லாபத்தையும் குவித்தது. இந்தவகையில் இளையராஜாவின் திருவாசகமும் அடக்கம். மக்களை கருக்கும் நச்சுச்சிந்தனைகளை கலையின் வடிவங்களாகவும், பொழுது போக்காகவும் கொள்பவர்களும், கொண்டாடுபவர்களும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும், போராடத்தூண்டும் பாடல்களை பிரச்சாரப்பாடல் என ஒதுக்குவது வேடிக்கையானது.

 

          தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று பல படங்களுக்கு இசையமைத்திருந்தும் (ஸ்லம் டாக் மில்லியனரை விட சிறப்பாக சில படங்களுக்கு இசையமைத்திருப்பதாக அவரது இசை ரசிகர்கள் கூறுகிறார்கள்) ஸ்லம் டாக்கின் இயக்குனர் டானி பெய்லேவின் முக்கியத்துவம்விருதுக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தேவைப்பட்டதாக கூறப்பட்டாலும், அமெரிக்க நாளிதழ்கள் இந்தப்படத்தையும் இசையையும் கொண்டாட்டம் என வர்ணித்து கட்டுரைகள் வெளியிடுவதற்கு பின்ன‌ணியிலுள்ள எண்ணம் வேறானது. இந்தியாவில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் வடமாநிலங்களிலும் சேர்த்து ஆண்டொன்றுக்கு தோராயமாக 600 படங்களுக்கும் அதிகமாக வெளியாகின்றன. இவற்றின் பாடல்களுக்கும். திரைப்படமல்லாத பாடல்களுக்கும் இந்தியாவில் மிகப்பெரிய சந்தை இருக்கிறது. இவற்றை சில உள்நாட்டு நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் ஓரளவு அறிமுகமான ஏஆர் ரகுமானின் இசைக்கு விருது வழ்ங்குவதன் மூலமும், அதைப்புகழ்ந்து கட்டுரைகள் வெளியிடுவதன் மூலமும் அந்த இசைச்சந்தையை கைப்பற்ற களத்தில் குதித்திருக்கின்றன. ஏஆர் ரகுமானின் மேற்கத்திய பாணி இசையமைப்பு இந்திய ரசிகர்களை ஏற்கனவே அதற்கு தயார்படுத்தி வைத்திருக்கிறது. தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு அழகிப்பட்டம் வழ‌ங்கியதன் மூலம் அழகு சாதனப்பொருட்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்ததையும், திரையரங்குகளை பெரும் நிறுவனங்கள் கைப்பற்றிவருவதையும் இந்த இடத்தில் நினைவு கூர்ந்து பாருங்கள். மேற்கத்திய இசைக்குப்பைகளையும், உணர்வற்ற கூச்சல்களையும், இந்தியச்சந்தையில் கொட்டி மக்களின் உழைப்பை மேலும் சுரண்ட கூரிய நகங்களுடன் காத்திருக்கின்றன அவைகள்.

 

          ”திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா” போன்ற பாடல்களை (தாஜ்மஹால் ஏஆர் ரகுமான்) இசையாகவும் கலை வடிவமாகவும் ரசிக்கும் மக்கள் “மக்கள் ஆயுதம் ஏந்துவது சொல்லம்மா வன்முறையா?” (மகஇக வெளியீடு) போன்ற பாடல்களை வன்முறை என்றும் பிரச்சாரப்பாடல்கள் என்றும் ஒதுக்குவது அவர்களை அவர்களே அழித்துக்கொள்வதற்குத்தான் துணைபோகிறது என்பதை உணரவேண்டும். அப்படி உணர்ந்து கொள்ளும் போது எது இசை என்பதை புறிந்து கொள்வதோடு, தினம் தினம் நம்மைச்சுற்றி மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கையில் இசை ஒரு  பொருட்டல்ல எனும் இங்கிதத்தையும் தெரிந்து கொள்ளமுடியும். 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்