ஒருவன் தினமும் கடவுளிடம் தனக்கு லாட்டரியில் பரிசு விழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வான்.
சில ஆண்டுகள் இப்படியே வேண்டிக் கொண்டிருந்த அவன், ஆசை நிறைவேறாததால் ஒரு நாள் கோபமாக கடவுளை திட்டினான்.
அதற்கு கடவுளும் கோபமாக சொ‌ன்னா‌ர்... டேய் முட்டாளே முதல்ல போய் லாட்டரி டிக்கெட் வாங்குடா!
***
இந்த துணுக்கை வாசிக்கும் பொழுது, நமக்கு சிரிப்பு வருகிறது. ஆனால், உண்மையில் லாட்டரி பறித்த உயிர்கள் நிறைய.
***
நேற்று அண்ணனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.
“5% வட்டிக்கு வாங்கியிருந்த 1.5 லட்சம் கடனை அடைச்சுட்டேன்” என சந்தோசமாய் சொன்னார்.
“எப்படி?” என்றேன்.
“கடவுள் இருக்கான்டா!” என்றார்.
“கடவுள் ஒன்னும் இல்லை. காரணத்தைச் சொல்லுங்க” என்றேன்.
“2 லட்சம் ரூபாய் லாட்டரியில் விழுந்தது. வரியெல்லாம் போக 1.5 லட்சம் கொடுத்தார்கள்.” என்றார்
“தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டிருக்கிறதே!” என உடனடியாக கேட்டேன்.
***
என்னைப் போல என நீங்களும் கேட்டால், நாம் அப்பாவிகள்.
ஆளுங்கட்சி ஆசியுடன், காவல்துறையின் ஆதரவுடன் தமிழகமெங்கும், தங்கு தடையின்றி வெளி மாநில லாட்டரிகள் தினசரி 75 லட்சம் அளவில் விற்கப்படுகிறது.
லாட்டரிக்கு வாடிக்கையாளர்கள் தொழிலாளர்களும், உதிரி தொழிலாளர்களும், சிறு வியாபாரிகளும் தான்.
தங்களுடைய வருமானத்தில், ஒவ்வொருநாள் வாழ்க்கையையும் பல போராட்டங்களுடன் நகர்த்தி
கொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராமல் வரும் மருத்துவ, குடும்ப விசேசம் சம்பந்தமாக எழும் செலவுகளுக்கு, தவிர்க்க இயலாமல் கடனில் சிக்கிக்கொள்வார்கள். அதுவும் 100க்கு 2 வட்டியோ 3 வட்டியோ அல்ல! 10 வட்டி! அல்லது அதற்கும் மேல்! ஏன் இவ்வளவு வட்டி என்றால், அவர்களிடம் அடமானம் வைக்க, அல்லது நம்ப எந்த உடைமையோ இல்லாததால் அநியாய வட்டி. (அமெரிக்காவில் சப்-பிரைம் கடனுக்கு அதிக வட்டி வாங்குகிறார்கள். அதற்கும் இதே தான் காரணம். உலகம் முழுவதும் இது தான் நிலை)

இப்படி கடனில், வட்டியில் மாட்டிக்கொள்கிற இவர்கள், இதிலிருந்து விடுபட அவர்களில் வாழ்வில் எந்த வழியும் இல்லாததால், நொந்து நொந்து வட்டி கட்டும் இவர்களுக்கு ஒரே நம்பிக்கை “லாட்டரி”. தொடக்கத்தில் 5ரூ. 10 ரூ.க்கு வாங்கும் இவர்கள் வாழ்க்கை நெருக்கடி நெருக்க நெருக்க், ரூ. 50, ரூ. 100 என வாங்க தொடங்குவார்கள். ஏதோ ஒரு நாளில், அந்த குடும்பம் தற்கொலை செய்து கொள்வார்கள் அல்லது யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் தனது சொந்த மண்ணை விட்டு காலி செய்துவிடுவார்கள். நானே பல குடும்பங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன்.
இப்படி பல குடும்பங்களை லாட்டரி சிதைத்ததில் தான், எதிர்ப்புகள் கிளம்பி, பல 
போராட்டங்களுக்கு பிறகு, ஜனவர் 8, 2003-ல் அன்றைக்கு முதலவராய் இருந்த ஜெயலலிதா தடை செய்தார். அன்றைக்கும் ஆங்காங்கே திருட்டுத்தனமாய் விற்றுக்கொண்டிருந்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அமோகமாய் விற்க தொடங்கிவிட்டார்கள்.
மே 8, 2007ல் தமிழகம் முழுவதும் சோதனை செய்ததில், 112 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
கரூரைச் சுற்றியும், கரூரில் காவல்நிலையம் அருகேயே லாட்டரி விற்று, மக்களிடத்தில் எதிர்ப்பு கிளம்பியதும் கைது செய்தார்கள் (25.03.2008)
கடந்த ஜூலை 2008ல் விருகம்பாக்கம் பகுதியில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள லாட்டரிகள் கைப்பற்றப்பட்டன.
கடந்த செப்டம்பரில் சென்னை திருவேற்காடு பகுதியில், கமிஷனர் ஜாங்கிட் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில லாட்டரிகளை கைப்பற்றினார்.
தடையில்லாமல் இருந்த பொழுது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாய் லாட்டரி விற்பனை நடந்ததாம். உண்மையான லாட்டரி மூலமும், சிவகாசியில் அடித்த போலி லாட்டரிகள் மூலம், தமிழ்நாட்டில் பல புள்ளிகள் திடீர் பணக்காரர்களாக மாறினார்கள். 
அடித்த கொள்ளையின் ருசி அவர்களுக்கு விட்டுப்போகுமா! காவல்துறை ஆதரவுடன் கொள்ளையை தொடர்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 1968ல் அன்றைக்கு முதல்வராய் இருந்த அண்ணாதுரை “விழுந்தால் 
வீட்டுக்கு! விழாவிட்டால் நாட்டுக்கு! என்ற முழக்கத்துடன் முதன்முதலில் லாட்டரியை துவங்கி வைத்தார்.
அண்ணா தொடங்கி வைத்ததாலும், முதலீடே இல்லாமல் கொட்டும் பணத்தாலும், கருணாநிதிக்கு 
லாட்டரி மேல் எப்பொழுதுமே பாசம். விசாரித்ததில், தென்மாவட்டங்களில் ரவுடிகளின் அன்பு அண்ணன் அழகிரி ஆதரவோடு தான் விற்பனை ஜோராக நடக்கிறதாம். 
லாட்டரி முடிவுகள் அறிய அதிர்ஷ்டம்தினசரி இதழாக வந்துகொண்டிருந்தது. தடை செய்யப்பட்டதும் நிறுத்தப்பட்டது. பிறகு, இப்பொழுது ரகசியமாக வந்துகொண்டிருக்கிறதாம். இந்த இதழை அதிமுக கொள்கைகளை பரப்பும் தினபூமி நாளிதழின் சார்பு நிறுவனம் தான் நடத்திவருகிறது. 
இந்த அநியாய லாட்டரி திட்டத்தை இந்தியாவில் முதன் முதலில் துவங்கி வைத்து, பல தொழிலாளர்களின் வாழ்வில் கேடுகளை விளைவித்தவர்கள் வேறு யாருமில்லை கேரளா சி.பி.எம் கட்சிகாரர்கள் தான்.
அந்த பாசத்தில் தான், லாட்டரிக்கு ஆதரவாக, மதுரையில் 4.4.2005-ல்“லாட்டரிக்கு தடையை நீக்க கோரி”நடந்த சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மோகன் ஆதரித்து பேசினார்.
இதை அம்பலப்படுத்தி, 
“மகா நடிகர் எம்.பி. மோகனே,
கம்யூனிஸ்ட் என்று சொல்லாதே!” 
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டது.
யார் தாலி அறுந்தால் என்ன? சிபிஎம் உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் மக்கள் விரோதப் போக்குடையதாக செயல்படுகின்றன. மக்கள் தான் துன்ப துயரங்களில் மீள மாற்று வழிகளை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
தகவல்களுக்கு நன்றி
புதிய ஜனநாயகம் இதழ், வெப்துனியா, விபரம்.காம், திருமலை கொளுந்து, மாலைச்சுடர்