Language Selection

தவறை புரிந்துள்ளதாக தம்மைக் காட்டிக்கொண்டு நியாயவாதம் செய்பவர்கள், ஓரு நாணயத்தின் இரண்டு பக்கமாகவும் இருக்க முனைகின்றனர். ஓரு பக்கம் தவறு உண்டு என்பதும், மறுபக்கம் தவறை தொடர்வதுமாக உள்ளனர். இவர்கள்தான் ஆபத்தான நயவஞ்சகப் பேர்வழிகள். தமிழினம் அழிக்கப்படும் இன்றைய நிலையிலும், அதில் குளிர்காய்கின்ற குள்ளநரிக் கூட்டங்கள்.

எம் போராட்டத்துக்கு ஏன் இந்தக் கதி எற்பட்டது? அதை திருத்த மறுக்கின்ற, அந்த தவறை சொல்ல மறுக்கின்ற, அதற்கு எதிராக போராட மறுக்கின்றவர்கள் தான், தமிழினத்தின் அழிவில் பிழைக்கின்றவர்கள்.

 

புலிகளின் பின் நின்ற பலர், புலிக்கு வெளியில் நிற்பதாக பாசாங்கு செய்தபின் இன்று புலியுடன் ஓட்டிக்கொண்ட ஓட்டுண்ணிகள், போராட்டத்தின் தவறே இன்றைய எம் நிலைமைக்கு காரணம் என்று வெளிப்படையாக கூறுகின்றனர். அதேநேரம் புதிய தவறை நியாயப்படுத்திக்கொண்டு மூச்சுவாங்க அடியும் வாங்குகின்றனர்.

 

இவர்கள் தவறாக கருதுவதோ புலிப்பாசிசம் தன்னைத்தான் அம்பலப்படுத்தும் வகையில் செய்தவையைத்தான். அம்பலப்படமல் செய்வதையே, இவர்கள், தவறற்ற போராட்டமாக கருதுகின்றனர். இப்படி தமிழினத்துக்கு எதிராக புலிகள் இருப்பதை, தவறாக கருதுவது கிடையாது. அவை அம்பலப்படாமல் இருத்தலையே தவறற்ற போராட்டம் என்கின்றனர்.  

 

போராட்டத்தில் தவறு என்பவர்கள், தவறு எது என்பதை சொல்லாது இருக்கவும், அதை திருத்தவும் முனையாது, தவறுகளையே தேசிய போராட்டமாக காட்டுகின்றனர். இதை மூடிமறைக்க, புலியைவிட்டால் வேறு என்னவென்று கூறி அதை ஆதரிக்கின்றனர். இப்படி தவறான போராட்டத்தின் பின்னால் ஓடுகின்றனர். இப்படி தவறுகள் மூலம் தமிழ் மக்களை அழிக்க, மொத்தத்தில் துணை போகின்றனர்.

 

தமிழ் சமூகம் இவை எதையும் சுயமாக உரசிப் பார்க்கத் தயாராகவில்லை. அந்தளவுக்கு மந்தைக் கூட்டமாக, அனைத்தும் அலை மோதவைக்கப்படுகின்றது.

 

எதைப் போராட்டமாக காட்டி சித்தரிக்கப்பட்டதோ, அது இன்று தோற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் இருந்து மீளவே, மக்களை பணயம் வைத்து அரசியல் செய்கின்றனர். அவர்களின் பிணங்களைக் காட்டி, உலகை இரஞ்சுகின்றனர். உலகத்தலைவர்கள், தொலைக்காட்சிகள் எல்லாம் இதை பார்த்து, இதற்காக தலையிட்டு, தமக்கு ஓரு மீட்சி தராதா என்று ஏங்குகின்றனர். இப்படி தவறான போராட்டம் முட்டுச்சந்தியில் நிலைதடுமாறுகின்றது.

 

வேறு சிலரோ குறிப்பிட்ட சில கடந்தகாலத் தவறுகள் பற்றி புலம்புகின்றனர். ஆனால் நிகழ் கால தவறுகளை செய்தபடி, அதை நியாயப்படுத்துகின்றனர். உண்மையில் தவறுகளே மீண்டும் மீண்டும் போராட்டமாக காட்டுகின்றனர். கடந்கால தவறு என்னவென்று ஆராயமறுக்கும் அதேதளத்தில், புதிய தவறுகளை சமூகம் மீது திணிக்கின்றனர்.

 

புலிகளோ என்றும் தவறுகளை சுயவிமர்சனம் செய்ததில்லை

 

பேரினவாதத்தின் கொடூரங்களை எல்லாம் காட்டிக்கொண்டு உருவான புலிகளோ, மிக மோசமான பாசிட்டுகள். தம் மாபியாதனத்தின் மேல் கட்டிய கோட்டையை
சுற்றி உருவான அகழியில், மக்களின் பிணத்தைக்கொண்டு நிரப்பியவர்கள். இப்படி மொத்த போராட்டமும், தவறுகளின் மொத்த வடிவமாகியது.

 

1. தம் அமைப்பில் உட்கட்சி ஜனநாயகத்தை மறுத்தனர். சர்வாதிகார முறையில் அமைப்பை தனிமனிதன் பின் நிறுவினர். அந்த தனிமனித சொந்த வக்கிரங்களையே போராட்டமாக்கினர்.

 

2. மக்களை தம் சொந்த தனிமனித சர்வாதிகார அமைப்புக்கு கீழ் அடிமைப்படுத்தினர்.

 

3. தமக்கு கட்டுப்படாதவர்கள் மேல் ஈவிரக்கமற்ற கொலைகளை செய்து, சமூகத்தை அச்சத்தினுள் ஆழ்த்தினர்.


  
4. மாற்று இயக்கங்கள், கொள்கைகள் கொண்ட குழுக்களையும், தனிமனிதர்களையும்  கொன்று குவித்தனர்.

 

5. மாற்று சிறுபான்மை இன மக்கள் மேல் வன்முறையை ஏவிவிட்டதுடன், அவர்களின் சொத்துக்களை எல்லாம் புடுங்கிய பின் துரத்தியடித்தவர்கள்.

 

6. சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களை தம் எதிரியாக காட்டியதுடன், அவர்களின் எல்லைப்புற கிராமங்களில் புகுத்து நரைவேட்டை ஆடியவர்கள்

 

7. சமூகத்தில் நிலவிய சமூக முரண்பாடுகளை, நிலவிய அதிகார எல்லைக்குள் அச்சுறுத்தி அதற்குள் உறையவைத்தனர்.

 

8. தேசத்தின், தேசியத்தின் அடிப்படையான சுயநிர்ணய உரிமைகளை மக்களிடமிருந்தே  காயடித்தனர். அதை எதுவுமற்ற ஒன்றாக்கினர்.

 

9. கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை மொத்த  தமிழ் மக்களுக்கு மறுதலித்தனர். 

  

10.தேசிய உற்பத்திகள் முதல் தமிழ் மக்கள் நுகர்ந்த ஓவ்வொரு பொருளுக்கும் பலமுறை பலவழிகளின் வரிவிதித்தனர்.

 

11.ஆயுதங்களை வழிபட்டவர்கள், மக்களை அதற்கு கீழாக கீழ்படுத்தினர்.


.
12. சுனாமி பெயரில் திரட்டிய பல நூறு கோடி பணத்ததை, அந்த மக்களுக்கு கொடுக்காது   ஏப்பமிட்டவர்கள்.
 
13. மக்களை பேரினவாதம் கொல்வது, போராட்டத்தை வலுப்படுத்தும் என்பதே புலியின் அடிப்படையான தத்துவம். இந்த வகையில் மக்களை பலியிடும்வண்ணம், மக்களை போராட்டத்தில் பலியிடுவது பலி அரசியலாகியது. அதை வைத்து பிரச்சாரம் செய்வது, அதனுடாக  மக்களை ஏமாற்றி தன் பின் வைத்திருப்பது தான் புலியின் அரசியலாக நடைமுறையாக இருந்தது.

 

14. நிலவிய பிரதேச ரீதியான, சமூக ரீதியாக சமூக வேற்றுமைகளை ஆழமாக விதைத்தனர். இதன் மூலம் சமூகத்தை பிளந்து பிரித்தாண்டனர்.

 

15. மக்களின் உரிமைகளை, கடமைகளை மறுத்து, தமக்கு சேவை செய்தையே போராட்டமாக்கினர்.

 

இப்படி எண்ணிக்கையற்ற பல தவறுகள். தொடர்ந்த பல தவறுகள், இன்று வரை யாரும் சுயவிமர்சனம் செய்தது கிடையாது. இன்றும் அந்த தவறுகள் நியாயப்படுத்தப்படுவதுடன், இதையே இன்றும் விடுதலைப் போராட்டமாக சித்தரிக்கின்றனர். அதற்கு அமைய புதிய தவறுகளை, சமூகம் மீது திணிக்கின்றனர்.

 

கொலை, கொள்ளை, கப்பம் புலியிசமாக, சிறைகளும் சித்திரவதை கூடங்களும் மனிதர்களின் வாழ்விடமாக, மலிவான இழிவான மிகையான பிரச்சாரம் தமிழ் இனத்தை குருடாக்கியுள்ளது.    

 

இப்படி தமிழினத்தை அழித்து அதில் வாழவிரும்பும் கும்பல்களின் மனிதவிரோத செயல்கள்தான், இன்று புலிப் போராட்டமாகவுள்ளது.

 

பி.இரயாகரன்
10.02.2009