Language Selection

புதிய ஜனநாயகம் 2009

பாலஸ்தீன மக்களின் மீது நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போரையும், முற்றுகையையும் கிறிஸ்துமஸுக்குப் பிறகு இசுரேல் மீண்டும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இசுரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையே கையெழுத்தான "ஆஸ்லோ'' சமாதான ஒப்பந்தத்தின்படி பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காசா முனையைத்தான் இப்பொழுது இசுரேல் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

 காசா முனை மூன்றுபுறம் இசுரேலையும், மற்றொருபுறம் எகிப்தையும், மத்தியத்தரைக் கடலையும் எல்லையாகக் கொண்ட, 270 சதுர கிலோமீட்டரே பரப்புடைய சிறிய நிலப்பரப்பாகும். காசா முனையில் இருந்து ஒரு பொருள் வெளியேற வேண்டும் என்றாலோ அல்லது அத்தியாவசியப் பொருட்கள் காசா முனைக்கு உள்ளே வர வேண்டும் என்றாலோ, அதற்கு இசுரேலின் அனுமதி கிடைக்க வேண்டும். இவ்வளவு ஏன், காசா முனையைச் சேர்ந்த ஒரு பாலஸ்தீனர், பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசமான மேற்குக் கரையில் வாழும் மற்றொரு பாலஸ்தீனரையோ, தனது உறவினரையோ சந்திக்க வேண்டும் என்றால்கூட, இசுரேலின் அனுமதியைப் பெற வேண்டும். அந்தளவிற்கு காசா முனை இசு ரேலின் முற்றுகையின் கீழ் இருந்து வருகிறது. அதனால்தான் காசா முனை உலகின் மிகப் பெரிய திறந்தவெளி சிறைச்சாலை என்றே அழைக்கப்படுகிறது. இசுரேலின் இக்காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஊடாகத்தான் 15 இலட்சம் பாலஸ்தீனர்கள் காசா முனையில் வாழ்ந்து வருகின்றனர்.

 

போர் என்றால்கூட இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மட்டும்தான் தாக்க வேண்டும் என்கிறது, சர்வதேசச் சட்டம். ஆனால், வீடுகள், குடியிருப்புப் பகுதிகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகக் கட்டிடங்கள், மின் நிலையங்கள், குடிநீர் இறைக்கும் நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையங்கள், பாலங்கள், ஐ.நா.வின் மேற்பார்வையில் இயங்கும் அகதி முகாம்கள் என அனைத்து இடங்கள் மீதும் இசுரேலின் முப்படைகளும் இணைந்து சரம்சரமாகக் குண்டுகளை வீசி, காசா முனையை மக்கள் வசிக்கத்தகாத இடமாக, குப்பை மேடாக மாற்றிவிட்டன.

 

போரின் முதல்நாள் (டிசம்பர் 27 அன்று) இசுரேலின் விமானப் படை நடத்திய தாக்குதலில் மட்டும் 190 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். போரின் 20ஆம் நாளில், கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,066 ஆக உயர்ந்தது; இதில் 311 குழந்தைகளும், 97 பெண்களும் அடங்குவர்; படுகாயமடைந்து உயிருக்குப் போராடுபவர்களின் எண்ணிக்கை 3,000ஐத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

காசா முனையில் "ஆட்சி' நடத்தி வரும் ஹமாஸ் இயக்கம், "இசுரேல் இந்தப் போரில் பல புதுவிதமான ஆயுதங்களை, குண்டுகளைப் பரிசோதித்துப் பார்க்கும் களமாக காசா முனையைப் பயன்படுத்தி வருவதாக''க் குற்றஞ்சுமத்தியுள்ளது.

 

காசா முனையில் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த மேட்ஸ் கில்பர்ட் என்ற மருத்துவர், "உடம்பில் இருந்து உறுப்புகளைப் பிய்த்து எறியக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த உலோகக் குண்டுகளை இந்தப் போரில் இசுரேல் பயன்படுத்தியதற்குத் தக்க ஆதாரங்கள் இருப்பதாக''ச் சாட்சியம் அளித்துள்ளார்.

 

"தடை செய்யப்பட்டுள்ள வெள்ளை பாஸ்பரஸ் வெடி மருந்தை இசுரேல் இந்தப் போரில் பயன்படுத்தி வருவதாக'' ஐ.நா. மன்ற அதிகாரிகளும் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

 

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருந்த இரண்டு கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதையும்; இந்தியாவின் மும்பையில் உள்ள தாஜ் விடுதி தாக்கப்பட்டதையும்; அதனால் பலர் இறந்ததையும் பயங்கரவாதம் என அழைப்பது சரியென்றால், இசுரேலின் இந்த மனிதத்தன்மையற்ற, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வருணிப்பதற்கு பயங்கரவாதம் என்ற சொல்கூடப் போதாது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

குண்டு வைத்து மக்களைக் கொல்லும் முசுலீம் பயங்கரவாதிகளைக் கண்டிப்பதில் போட்டிப்போடும் உலகத் தலைவர்களுள் பெரும்பாலோர் இந்த யூத மதவெறி பயங்கரவாதத்தைக் கண்டும் காணாது போலவே நடந்து கொண்டனர். பாலஸ்தீன விடுதலையை ஆதரிப்பதாகச் சவடால் அடித்து வரும் இந்தியாவோ, இந்தத் தருணத்தில்கூட இசுரேலுடனான இராணுவத் தளவாட வர்த்தக ஒப்பந்தங்களைக் கைகழுவ மறுக்கிறது. வெனிசுலா, ஈரான், சிரியா உள்ளிட்ட ஒருசில ஏழை நாடுகள் மட்டும்தான் இசுரேல் நடத்தி வரும் இந்த அநீதியான போரைக் கடுமையாகக் கண்டித்துள்ளன.

 

அமெரிக்க அதிபர் தொடங்கி நம்ம ஊர் மொட்டைத் தலையன் "சோ'' வரையிலான பாசிஸ்டுகள் அனைவரும், "இசுரேல் அமைதியாக இருந்ததாகவும்; ஹமாஸ் இயக்கத் தீவிரவாதிகள் இசுரேலின் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தியதால்தான், தனது நாட்டின் பாதுகாப்புக்காக இசுரேல் இந்தப் போரை ஹமாஸ் இயக்கத்தின் மீது நடத்தி வருவதாகவும்'' ஒரு நொண்டிச்சாக்கை அவிழ்த்துவிட்டு, இசுரேலின் இந்தப் போர்க் குற்றங்களை நியாயப்படுத்தி வருகின்றனர்.

 

ஹமாஸ் இயக்கம் இசுரேல் மீது நடத்தும் ராக்கெட் தாக்குதலை ஏதோ அணுகுண்டை ஏந்திவரும் ஏவுகணைத் தாக்குதலைப் போலப் பெரிதுபடுத்தி ஏகாதிபத்தியவாதிகள் பீதியூட்டி வருகின்றனர். ஆனால், போர் வல்லுநர்களோ, "இந்த ராக்கெட் தாக்கி ஒரு இசுரேலியக் குடிமகன் இறக்க வேண்டும் என்றால், அது நேராக அவர் தலையில் விழ வேண்டும்'' என அதன் திறனை மதிப்பிடுகின்றனர்.

 

இசுரேலின் ஆக்கிரமிப்புப் போர் தீவிரமடைந்த பின், ஹமாஸ் இயக்கம் இசுரேலின் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. இசுரேலின் கணக்குப்படியே, டிசம்பர் 27க்குப் பிறகு நடந்த ராக்கெட் தாக்குதல்களால் இறந்து போன இசுரேலியக் குடிமகன்களின் எண்ணிக்கை வெறும் மூன்றுதான். ஆனால், காசா முனையில்.....?

 

கடந்த எட்டு ஆண்டுகளில் ஹமாஸ் இயக்கம் காசா முனையில் இருந்து இசுரேலின் மீது நடத்திய ராக்கெட் தாக்குதல்களால் இறந்துபோன இசுரேலியக் குடிமகன்களின் எண்ணிக்கை வெறும் 17 தான். அதே சமயம், இந்த எட்டு ஆண்டுகளில் இசுரேல் நடத்திய வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களால் காசா முனையில் 5,000 பாலஸ்தீனர்களும், மேற்குக் கரையில் 45 பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்ற உண்மையில் இருந்தே, "யார் குற்றவாளி?'' என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

ஹமாஸ் இயக்கத்திற்கும், இசுரேலுக்கும் இடையே ஜூன் 2008 தொடங்கி தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் இருந்து வந்தது. டிசம்பர் 2008இல் காலாவதியாகும் நிலையில் இருந்த இவ்வொப்பந்தத்தைப் புதுப்பிக்கும் முயற்சிகளும் நடந்து வந்தன. இதனை விரும்பாத இசுரேல், ஹமாஸ் இயக்கத்தை ஆத்திரமூட்டி தாக்கச் செய்யும் நரித்தனத்தில் இறங்கியது. இதன் அடிப்படையில், இசுரேல் அரசு தனது நாட்டின் வழியாக காசா முனைக்குச் செல்ல வேண்டிய அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் கடந்த நவம்பர் மாதம் முதல் தடுத்து நிறுத்தி, பாலஸ்தீன மக்களின் மீது பொருளாதார முற்றுகையை மீண்டும் திணித்தது.

 

காசா முனைக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வருவதற்கு இசுரேலைத் தவிர வேறு வழிகளே இல்லாததால், பாலஸ்தீன மக்கள் உணவின்றி, எரிபொருளின்றி, மின்சாரமின்றி, மருந்துப் பொருட்கள் இன்றித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். காசா முனையில் வசிக்கும் பாலஸ்தீன மக்களுள் 56 சதவீதப் பேர் பச்சிளம் குழந்தைகளும் சிறுவர்களும்தான். இசுரேல் திணித்த பொருளாதாரத் தடையால், இக்குழந்தைகள் பால்கூடக் கிடைக்காமல் பட்டினிச் சாவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டனர். இப்பொருளாதார முற்றுகையின் தொடர்ச்சியாக, காசா முனையைச் சேர்ந்த பத்து பாலஸ்தீனர்கள் இசுரேல் இராணுவத்தால் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாகத்தான் ஹமாஸ், இசுரேலின் மீது ராக்கெட் தாக்குதலைத் தொடுத்தது.

 

இவை ஒருபுறமிருக்க, காசா முனையும் மேற்குக் கரையும் ஆஸ்லோ ஒப்பந்தத்தின்படி பாலஸ்தீன சுயாட்சிப் பகுதிகளாக வரையறுக்கப்பட்டிருந்தாலும், அந்த இரண்டு பகுதிகளும் இசுரேலின் காலனி ஆதிக்கத்தின் கீழும், முற்றுகையின் கீழும்தான் இன்றுவரை இருந்து வருகின்றன. குறிப்பாக, ஹமாஸ் இயக்கத்தைப் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்பதற்காகவே, காசா முனை மீது கடந்த மூன்றாண்டுகளாக இசுரேலின் இராணுவத் தாக்குதல்களும், பொருளாதார முற்றுகையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏகாதிபத்தியக் கும்பலும் அவர்களது அடிவருடிகளும் ஊதிப் பெருக்கும் ராக்கெட் பூச்சாண்டி என்பது இசுரேலின் இக்காலனி ஆதிக்கத்தை மூடிமறைக்கும் மோசடித்தனம் தவிர, வேறெதுவும் கிடையாது.

 

1990களுக்கு முன்பு பாலஸ்தீன மக்களின் விடிவெள்ளியாகக் கருதப்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் இன்று அமெரிக்க அடிவருடியாகச் சீரழிந்து போய்விட்டது. ஆஸ்லோ ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட பாலஸ்தீன ஆணையத்திற்கு 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாலஸ்தீன விடுதலை இயக்கம், தனது சொந்த மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டுத் தோல்வியைச் சந்தித்தது. சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் ஹமாஸ் இயக்கம் அடைந்த வெற்றியை, அமெரிக்காவும், இசுரேலும் ஏற்றுக் கொள்ள மறுத்தன. இத்தேர்தலையடுத்து, பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே நடந்த சகோதரச் சண்டையில், மேற்குக் கரையை பாலஸ்தீன விடுதலை இயக்கமும், காசா முனையை ஹமாஸ் இயக்கமும் தமக்குள் பாகப்பிரிவினை செய்து கொண்டன.

 

காசா முனையின் நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொண்ட ஹமாஸ் இயக்கத்தை அழிக்க, "காசா முனையில் வாழும் பாலஸ்தீன மக்களைக் கசக்கிப் பிழிவது'' என்ற திட்டத்தை அமெரிக்க இசுரேல் கூட்டணி செயல்படுத்தியது. இதன்படி, காசா முனையில் உற்பத்தியாகும் பொருட்கள் இசுரேல் வழியாக ஏற்றுமதி செய்யப்படுவது தடுக்கப்பட்டு, காசா முனையில் நடந்து வந்த விவசாயமும், சிறு தொழிலும் முற்றிலுமாக அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இசுரேலின் கையில் இருந்த பாலஸ்தீன மக்களின் வரிப் பணமும், ஏற்றுமதி வருமானமும் அவர்களுக்குத் திருப்பித் தரப்படாமல் முடக்கப்பட்டன; காசா முனைக்குச் சேர வேண்டிய ஐ.நா.வின் உதவிகளும் தடுக்கப்பட்டன.

 

ஹமாஸ் இயக்கத் தலைவர்களைக் குறிபார்த்துத் தாக்கிக் கொல்வது என்ற பெயரில், கடந்த மூன்றாண்டுகளாக காசா முனை மீது வான்வழித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும், இசுரேல் வழியாக காசா முனைக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் வரத்து படிப்படியாகத் தடை செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் காசா முனை மீது ஒரு முழுமையான பொருளாதாரத் தடை இசுரேலால் திணிக்கப்பட்டது. பாலஸ்தீன மக்கள், எகிப்து நாட்டின் எல்லையை அத்துமீறிக் கடந்து, அந்நாட்டிற்குள் நுழைந்ததன் மூலம் இப்பொருளாதார முற்றுகையை முறியடித்தனர்.

 

இசுரேல் காசா முனைக்கு வர வேண்டிய அத்தியாவசியப் பொருட்களைத் தடுக்கும் அடாவடித்தனத்தைத் தொடர்ந்து செய்து வந்ததால், எகிப்து நாட்டில் இருந்து காசா முனைக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களையும் ஹமாஸுக்குத் தேவையான ஆயுதங்களையும் எடுத்துவரும் இரகசிய சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டன. இந்த இரகசிய சுரங்கப் பாதைகளை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் இசுரேல் தற்பொழுது இராணுவத் தாக்குதல்களைத் தீவி ரப்படுத்தியதோடு, தனது தரைப்படையையும் காசா முனைக்குள் புகச் செய்தது. மேலும், தற்பொழுது இசுரேலில் ஆட்சி நடத்தி வரும் தொழிலாளர் கட்சி கூட்டணி, விரைவில் வரவுள்ள இசுரேல் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு, காசா முனை மீது ஒரு திடீர்த் தாக்குதலை நடத்துவதையே தனது தேர்தல் உத்தியாகவும் வகுத்துக் கொண்டுள்ளது.

 

போர் தொடங்கி 22 நாட்கள் கழித்து காசா முனை மீதான தாக்குதல்களை நிறுத்திக் கொள்வதாக இசுரேல் அறிவித்திருந்தாலும், காசா முனைக்குள் புகுந்திருக்கும் இசுரேலிய தரைப்படை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படுமா என்ற கேள்வியை முதலாளித்துவ பத்திரிகைகளே எழுப்புகின்றன. பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் காலனியாதிக்கமும் முற்றுகையும் முடிவுக்கு வராத வரை, இசுரேல் அறிவிக்கும் போர் நிறுத்தம் என்பதெல்லாம் ஊரை ஏமாற்றும் மோசடித்தனம்தான். இக்காலனியாதிக்கம் முடிவுக்கு வராத வரை ஹமாஸின் ராக்கெட் தாக்குதலும் முடிவுக்கு வராது.

 

எகிப்துகாசா முனை எல்லையில் உள்ள சுரங்கப் பாதைகள் முற்றிலுமாக அழிக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் எகிப்தில் இருந்து அத்தியாவசியப் பொருட்களும், ஆயுதங்களும் கடத்தப்படுவதைத் தடுக்க ஒரு சர்வதேசக் கண்காணிப்புப் படையை எகிப்துகாசா முனை எல்லையில் நிறுத்த வேண்டும் என இசுரேல் நிபந்னை விதிக்கிறது. இதனை வேறு மாதிரியாகச் சொன்னால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காசா முனையில் இருந்து வெளியேறிய இசுரேல் இராணுவம் மீண்டும் சர்வதேசக் கண்காணிப்பு என்ற பெயரில் அங்கு பாசறைகளை அமைத்து, காசா முனையை நேரடியாக ஆள விரும்புகிறது என்பதுதான்.

 

ஹமாஸ் இயக்கம் இசுரேலின் இந்த ஆதிக்கத் திமிர் பிடித்த நிபந்தனைகளுக்கு மாறாக, "இசுரேல் இராணுவம் காசா முனையில் இருந்து வெளியேற வேண்டும்; காசா முனையை வெளியுலகோடு இணைக்கும் அனைத்துப் பாதைகளையும் திறந்துவிட வேண்டும்'' என்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.

 

இசுரேல், கிறிஸ்துமஸ் முடிந்தவுடனேயே காசா முனை மீது தாக்குதல் தொடுக்கும் என்பது அமெரிக்க அரசிற்கு முன்பே தெரியும். முதலாளித்துவ பத்திரிகைகளே அதற்கான ஆதாரங்களை இப்பொழுது அம்பலப்படுத்தி வருகின்றன. இசுரேலை எதிர்க்கும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கங்களை ஒடுக்குவதை, மேற்காசியாவில் ஈரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் முன்னோட்டமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் பார்ப்பதால், நடத்திய ஜார்ஜ் புஷ் இத்தாக்குதலை இசுரேலை வெளிப்படையாக ஆதரித்து நின்றதோடு, போர் நிறுத்தம்கூட இசுரேலின் நலன்களுக்கு ஏற்றபடிதான் அமைய வேண்டும் என விரும்பினார்.

 

பாரக் ஒபாமா இப்பொழுது அதிபராகிவிட்டதால், அமெரிக்கா இசுரேல் உறவில் மாற்றம் ஏற்படும் என்ற மூட நம்பிக்கையை சில முதலாளித்துவ அறிஞர்கள் பரப்பி வருகின்றனர். ஒபாமாவிற்கு மேற்காசியா குறித்து ஆலோசனைகள் வழங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டென்னிஸ் ரோஸ், டான் கர்ட்ஸர் என்ற இரு அதிகாரிகளும் இசுரேலின் பாதாந்தாங்கிகள் என்பது ஊரறிந்த உண்மை. மேலும், ஒபாமாவின் அமைச்சரவையின் மூத்த அதிகாரியாக நியமிக்கப்படவுள்ள ரஹ்ம் இமானுவேல், இசுரேலின் இராணுவத்தில் பணியாற்றியவர்; இசுரேல், பாலஸ்தீனத்திற்கு எந்தச் சலுகையும் காட்டத் தேவையில்லை என்ற கொள்கையை உடையவர்.

 

இது மட்டுமின்றி, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக இசுரேலுக்குச் சென்ற ஒபாமா, ஹமாஸின் ராக்கெட் தாக்குதலால் சேதமடைந்து போன இசுரேல் போலீசு நிலையத்தைப் பார்வையிட்டுவிட்டு, "என் இரண்டு பெண் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது யாராவது ஏவுகணையை வீசினால், அதைத் தடுக்க எதையும் செய்வேன்'' எனக் கூறி, இசுரேலின் அடாவடித்தனங்களுக்கு ஒத்து ஊதினார். அதனால்தான் அமெரிக்க மொழியியல் வல்லுநரான நோம் சோம்ஸ்கி, "மேற்காசியா தொடர்பான ஒபாமாவின் நிலைப்பாடு, புஷ்ஷின் ஆட்சிக் காலத்தைவிட மோசமாக இருக்கும்'' என எச்சரித்துள்ளார்.

 

பாகிஸ்தானில் இயங்கி வரும் முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் முகாம்களை மூடச் சொல்லி பாக். அரசுக்கு நெருக்கடி கொடுத்தது, ஐ.நா. மன்றம். அதேசமயம், காசா முனையில் ஐ.நா. மன்றம் நடத்திவந்த பள்ளிக்கூடத்தின் மீது விமானத் தாக்குதல் நடத்தி 40க்கும் மேற்பட்ட பாலஸ்தீனச் சிறுவர்களை இசுரேல் கொன்றொழித்தபோதும்; ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் காசா முனைக்கு வந்து போரால் ஏற்பட்ட அழிவுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், ஐ.நா. மன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்த உணவுக் கிடங்கை இசுரேல் குண்டு போட்டு அழித்த போதும், ஐ.நா. மன்றம் இந்த யூத மதவெறி பயங்கரவாதத்தைக் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கக்கூட முன்வரவில்லை. இப்படி ஐ.நா. மன்றம் யூத மதவெறி பயங்கரவாதத்துக்கு இணங்கிப் போவதை அதன் கையாலாகாத்தனம் என்பதா? இரட்டை வேடம் என்பதா?

 

மும்பயில் "நாரிமன் ஹவுஸ்'' என்றழைக்கப்படும் யூத மதத்தினரின் பிரார்த்தனைக் கூடம் முசுலீம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டபொழுது, அதனைப் பத்திரிகைகள் கண்ணீர் வடிக்காத குறையாகக் கண்டித்து எழுதின. இசுரேலியக் குண்டு வீச்சால் பாலஸ்தீனம் சுடுகாடாக்கப்பட்டு வரும்பொழுது, யூதர்கள் மட்டும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்ந்துவிட முடியுமா? இந்தியா, யூத மதவெறி பிடித்த இசுரேலுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை வளர்த்து வரும்பொழுது, முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் குறியில் இருந்து நமது நாடுதான் தப்பித்துக் கொள்ள முடியுமா?

 

காசா முனையில் வாழும் பாலஸ்தீன மக்களைக் கசக்கிப் பிழிந்தால், அவர்கள் ஹமாஸ் "ஆட்சி'யைத் தூக்கியெறிந்து விடுவார்கள் என்ற அமெரிக்கஇசுரேல் கூட்டணியின் திட்டம் இன்று மண்ணைக் கவ்வி விட்டது. ஊழலும், அதிகார முறைகேடுகளும் நிறைந்த ஹமாஸ் ஆட்சியை வெறுக்கும் பாலஸ்தீன மக்கள்கூட, அதைவிடப் பல மடங்கு அதிகமாக அமெரிக்கஇசுரேல் பாசிசக் கூட்டணியைத்தான் வெறுக்கிறார்கள்.

 

எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் ஆளுங்கும்பல்கள், காசா முனை மீது இசுரேல் நடத்தும் தாக்குதலை மறைமுகமாக ஆதரிக்கும் நிலையில்; மேற்குக் கரையில் வாழும் பாலஸ்தீன மக்கள் இசுரேலைக் கண்டித்து நடத்தும் ஆர்ப்பாட்டங்களைக்கூட ஒடுக்கும் அளவிற்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் சீரழிந்து போய்விட்ட நிலையில், அரபு நாடுகளின் தெருக்களில் அமெரிக்க அடிவருடித்தனத்திற்கு எதிரான போராட்டங்கள் தன்னிச்சையாக வெடித்துப் பரவி வருகின்றன.

 

புரட்சிகர கம்யூனிஸ்டு இயக்கங்களோ, மதச் சார்பற்ற தேசிய விடுதலை இயக்கங்களோ வலுவாக இல்லாத நிலையில்; அரபு மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை முசுலீம் மதவாத இயக்கங்கள் அறுவடை செய்து கொள்கின்றன. மேற்காசியாவில் புதிய உலக ஒழுங்கமைப்பு என்ற பெயரில் அமெரிக்கா நடத்தி வரும் மறுகாலனி ஆதிக்க அடாவடித்தனங்கள் மட்டுமின்றி, விடுதலை இயக்கங்களின் தலைமையை முசுலீம் மதவாத இயக்கங்கள் கைப்பற்றி வருவதும்கூட கவலைக்குரிய விசயமாகும்!

 

செல்வம்