உறை பனியை நெருங்கிவிட்ட நடுநடுங்க வைக்கும் கடுங்குளிர்; நூறு அடிக்கு முன்னே இருப்பது கூடத் தெரியாத அளவுக்கு எங்கும் பனி மூட்டம்; வாகனங்கள், ரயில்கள், விமானங்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டன; குடிநீர்க்

 குழாய்களில் தண்ணீர் உறைந்து சில்லிட்டன என்று கடுங்குளிரின் தாக்கத்தை கொட்டை எழுத்துக்களில் நாளேடுகள் படம் பிடித்துக் காட்டின. வாட்டியெடுக்கும் கடுங்குளிரில் கிழிந்த சாக்குகளையே போர்வையாக்கிக் கொண்டு, கைய்யது கொண்டு மெய்யது பொத்தி நடுங்கிக் கொண்டிருந்த வீடற்றநடைபாதைவாசிகளான உழைக்கும் மக்கள் குளிரில் விறைத்து அடுத்தடுத்து மாண்டு கொண்டிருந்தனர். பீகாரில் 60 பேர்; உ.பி.யில் 50 பேர்; டெல்லியில் 20 பேர்; பஞ்சாப், அரியானா, ராஜஸ்தானில் 20 பேர் என குளிருக்குப் பலியான மக்களைப் பற்றிய செய்தியை இதே நாளேடுகள் துணுக்குச் செய்தியாக வெளியிட்டு அலட்சியப்படுத்தின.


"கடந்த 2006ஆம் ஆண்டில் நடந்ததைப் போல இவ்வாண்டும் வழக்கதைவிட அதிகமாக கடுங்குளிர் வாட்டியெடுக்கிறது. கிழிந்த சாக்குகளைப் போர்த்திக் கொண்டு குப்பைகளைக் கொளுத்திக் குளிர் காய்ந்தாலும், உறைபனியை நெருங்கிவிட்ட குளிரைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பசியாலும் குளிராலும் தூக்கமின்மையாலும் நாங்கள் அவதிப்படுகிறோம். அரசு எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை'' என்று தனது உறவினரைப் பறிகொடுத்த துயரத்தில் விம்முகிறார், துக்காராம்.


விவசாயம் பொய்த்துப் போனதால் இவர் உ.பி. மாநிலத்திலிருந்து டெல்லிக்குப் பிழைக்க வந்த ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. அவரைப் போலவே பாரவண்டி இழுப்பவர்கள், மூட்டை தூக்குபவர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தோடு நடைபாதையோரங்களில் குளிரில் நடுங்கிக் கொண்டு தத்தளிக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கும் மேலாக இவர்கள் குடியிருந்த புறநகர் சேரிப் பகுதி இடிக்கப்பட்டதால், இவர்கள் குடியிருக்க வீடு ஏதுமின்றித் தவிக்கிறார்கள். நகரின் மையத்திலுள்ள சேரிப்பகுதிகள் மட்டுமின்றி, 2010இல் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்காக புறநகர் சேரிப்பகுதிகளும் இடித்துத் தள்ளப்படுவதால், டெல்லியில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் வீடற்ற நடைபாதைவாசிகளாகப் பரிதவிக்கின்றனர்.


இதுகூட சேரிப்பகுதிகள் இடிக்கப்பட்டதால் வீடிழந்தோரின் கணக்குதான். இதுதவிர, உ.பி., பீகார், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக டெல்லிக்கு ஓடிவந்து நடைபாதைகளில் வசிக்கும் கூலிஏழைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், டெல்லி நடைபாதைவாசிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 4,5 லட்சம் பேர்களாக இருக்கும் என்கிறது, "ஆக்ஷன் எய்ட்'' என்கிற தன்னார்வ நிறுவனம்.


"நடைபாதைகளில் கடுங்குளிரில் தத்தளிக்கும் இம்மக்களுக்கு அரசு எவ்வித நிவாரண உதவியும் செய்வதில்லை. கிழிந்த சாக்குகள், பாலிதீன் விரிப்புகளைக் கொண்டும் குப்பைகளை எரித்துக் குளிர் காய்ந்து கொண்டும் பரிதவிக்கும் இம்மக்கள், கடுங்குளிரைத் தாக்கப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து மாண்டு வருகிறார்கள். பசியாலும் தூக்கமின்மையாலும் அவர்களது மரணம் விரைவுபடுத்தப்படுகிறது'' என்று பல்வேறு தன்னார்வ மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.


ஆனால், டெல்லி மாநில அரசோ இது அப்பட்டமான பொய் என்று எதிர்வாதம் செய்கிறது. தற்போதைய கடுங்குளிரிலிருந்து ஏழைகளைப் பாதுகாக்க நிவாரண முகாம்களை அமைத்துள்ளதாகவும், ஏற்கெனவே நிரந்தரமாக 12 சத்திரங்களைக் கட்டியமைத்துள்ளதாகவும் அது கணக்கு காட்டுகிறது. இவற்றை நடைபாதைகளில் வசிக்கும் மக்கள் பயன்படுத்திக் கொள்ளாதது அவர்களது தவறாகும் என்று ஏழைகளின் மீது குற்றம் சாட்டுகிறது.


டெல்லி மாநகராட்சி நடைபாதைகளில் வசிக்கும் ஏழைகளுக்காக ஏற்கெனவே 12 சத்திரங்களைக் கட்டியிருக்கிறது என்பது உண்மைதான். இவற்றில் ஒரு சத்திரம், பிரத்யேகமாக பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் உண்மைதான். ஆனால், இத்தகைய சத்திரங்களில் ஏறத்தாழ 2500 பேர் வரை மட்டுமே தங்க முடியும். டெல்லி நடைபாதைகளில் ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேலானோர் வசிக்கும் நிலையில், இத்தகைய சத்திரங்களால் ஏழைகள் முழுமையாகப் பயனடையவே முடியாது.


மேலும், இத்தகைய சத்திரங்களில் கட்டணம் செலுத்தினால் மட்டுமே தங்க முடியும். கட்டணக் கழிப்பறை போலத்தான் இத்தகைய சத்திரங்களும் உள்ளன. 12 மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு ரூ. 10 முதல் ரூ. 15 வரை கட்டணம் என்றிருந்த நிலைமை போய், இப்போது அவை குத்தகைதா ரர்களிடம் ஏலத்துக்கு விடப்பட்ட பிறகு, ரூ. 25 முதல் ரூ. 50 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, போலீசார் இத்தகைய சத்திரங்களில் தங்கும் ஏழைகளைப் பிடித்துச் சென்று பொய் வழக்குச் சோடிப்பதும் தொடர்கிறது. இந்நிலையில், நடைபாதைவாசிகளான ஏழைகளால் இத்தகைய சத்திரங்களில் தங்க முடியுமா?


"பெண்களுக்காகப் பிரத்யேகமாகக் கட்டப்பட்ட சத்திரத்தில் ஏறத்தாழ 200 பேர் வரை மட்டுமே தங்க முடியும். அந்த சத்திரமும் 2007ஆம் ஆண்டில் மூடப்பட்டு அரசாங்க கிட்டங்கியாக மாற்றப்பட்டு விட்டது'' என்கிறார். நடைபாதையில் குடும்பத்தோடு பரிதவிக்கும் ஒரு தாய். இத்தகைய சத்திரங்கள் தரமற்ற வகையில் பெயருக்குக் கட்டப்பட்டுள்ளனவே தவிர, அவை மழை, குளிர் காலங்களில் மக்களுக்குப் பாதுகாப்பானவையோ, தாக்குப் பிடிக்கக் கூடியவையோ அல்ல என்பதை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியுள்ளன.


அதேசமயம், டெல்லி மாநில அரசும், மாநகராட்சியும் டெல்லி பெருநகர ரயில் திட்டத்துக்காக ரூ.10,751 கோடி; போக்குவரத்து மேம்பாலங்களுக்காக ரூ.1,000 கோடி; காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்காக ரூ. 5,200 கோடி என பல்லாயிரம் கோடிகளை வாரியிறைக்கின்றன. இவற்றில் ஒரு சில கோடிகளைக் கூட நடைபாதைகளில் பரிதவிக்கும் மக்களின் குடியிருப்புக்காக ஒதுக்கப்படவில்லை. நாட்டின் மிகப்பெரிய, பணக்கார டெல்லி மாநகராட்சியிலேயே இந்த நிலைமை என்றால், இதர நகர, பெருநகரங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.


உ.பி. மாநில அரசோ, குளிரால் விறைத்துச் சாகும் நடைபாதை ஏழை மக்களைப் பாதுகாக்க சாலையோரங்களில் பெருந்தீ மூட்டுமாறு உத்தரவிட்டுள்ளது. இதர வடமாநில அரசுகள் இந்தக் "கருணை'யைக் காட்டக்கூட முன்வரவில்லை. கடந்த 2006ம் ஆண்டில் தாக்கிய கடுங்குளிரால் வடஇந்தியாவில் 300க்கும் மேற்பட்ட நடைபாதை ஏழைகள் மாண்டு போயினர். இவ்வாண்டில், இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதோடு, தொடர்ந்து தாக்கும் கடுங்குளிரால் 2006ஆம் ஆண்டை விஞ்சும் அளவுக்கு சாவுகள் பெருகும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கின்றன. ஆனால் மைய அரசோ, வடஇந்திய மாநில அரசுகளோ இக்குளிர்காலக் கொலைகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்த ஏழைகளின் சாவை வைத்து "குளிர்காய'க் கூட எந்த ஓட்டுக் கட்சியும் முன்வரவில்லை.


வடமாநிலங்களில் குளிர்தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை அறவே புறக்கணித்து வரும் அரசின் அலட்சியத்தால் குளிர்காலக் கொலைகளும் தீவிரமாகின்றன. குளிரால் விறைத்துச் சாகும் ஏழைகளின் துயரச் செய்திகளைவிட, இந்த அநீதியை நாட்டு மக்கள் இன்னமும் சொரணையின்றிச் சகித்துக் கொண்டிருப்பதுதான் மிகவும் துயரமானது.


· குமார்