Language Selection

புதிய ஜனநாயகம் 2009

அமெரிக்காவில் நேற்று வரை மிகவும் புகழ்பெற்ற நிதி நிறுவனமாக இருந்து வந்த பெர்னார்ட் எல். மடோஃப் இன்வெஸ்மென்ட் செக்யூரிட்டீஸ் என்ற "பிளேடு கம்பெனி' இன்று குப்புறக் கவிழ்ந்துவிட்டது. நேற்று வரை அமெரிக்காவின் மிகச் சிறந்த நிதி முதலீட்டு நிபுணராகக் கொண்டாடப்பட்ட அந்நிறுவனத்தின் அதிபர்

 பெர்னார்ட் மடோஃப், இன்று பண மோசடி, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு "420'' குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிறுவனம் ஏறத்தாழ 5,000 கோடி அமெரிக்க டாலர் (இரண்டு முதல் இரண்டரை இலட்சம் கோடி ரூபாய்) அளவிற்கு முதலீட்டாளர்களின் பணத்தை ஏப்பம் விட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


பங்குச் சந்தை சூதாடி மடோஃபின் நிறுவனம் இத்துணை பெரிய மோசடியில் ஈடுபட்டிருப்பதை அமெரிக்க அரசின் எந்தவொரு புலனாய்வு அமைப்பும் ஆராய்ந்து கண்டுபிடித்து விடவில்லை. மாறாக, நமது நாட்டின் சத்யம் நிறுவன அதிபர் போல, பெர்னார்ட் மடோஃபே தனது நிறுவனம் செய்துள்ள பண மோசடிகளை ஒத்துக் கொண்டுவிட்டார். இத்துணைக்கும் மடோஃப் "முதலீடு' என்ற பெயரில் நடத்தி வந்த மோசடிகள், கண்டுபிடிக்க முடியாத அளவிற்குச் சிக்கலானதும் அல்ல.


"எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மற்ற நிறுவனங்களைவிட அதிக வட்டி தருவோம்'' என்பதுதான் பெர்னார்ட் மடோஃபின் வர்த்தக தாரக மந்திரம். இந்த அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுச் சாதாரண முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, பங்குச் சந்தை நிறுவனங்கள் தொடங்கி சேமிப்பு வங்கிகள், முதலீட்டு வங்கிகள், ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் எனப் பல தரப்பினரும் மடோஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்து வந்தனர். இந்த முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, அமெரிக்காவின் பங்குச் சந்தை கண்காணிப்பு வாரியம்கூட, "இந்த அளவிற்குக் கூடுதலான வட்டியை மடோஃப் நிறுவனம் எப்படித் தர முடியும்?'' என்ற கேள்வியை மறந்தும் எழுப்பவில்லை.


இந்த மோசடியின் சுவாரசியமான அம்சம் என்னவென்றால், மடோஃப் தனது முதலீட்டாளர்களுக்கு 2008 டிசம்பருக்கு முன்பு வரை சொல்லியபடி வட்டியை ஒழுங்காகக் கொடுத்து வந்தார். அசலைக்கூடத் திருப்பிச் செலுத்தி வந்தார். இதனால் அமெரிக்க முதலீட்டாளர்கள் மத்தியில் மடோஃப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகம் இருந்து வந்தது. மடோஃப், தனது நிறுவனத்தை இப்படி "ஒழுங்காக' நடத்துவதற்குக் கையாண்ட நடவடிக்கையும் மிகவும் எளிதானது.


இந்நிறுவனத்தின் பழைய முதலீட்டாளர்களுக்குத் தரப்பட வேண்டிய வட்டியோ அசலோ நிறுவனத்தின் "இலாபத்திலிருந்து' தரப்படாமல், புதிதாக முதலீடு செய்பவர்களின் பணத்திலிருந்து தரப்பட்டது. அப்புதிய முதலீட்டாளர்களுக்குத் தர வேண்டிய தவணைப் பணம் அவர்களையடுத்து முதலீடு செய்பவர்களின் பணத்தில் இருந்து தரப்பட்டது. இந்தச் சங்கிலித் தொடர் அறுந்து போகாமல் இருப்பதற்கு மடோஃபுக்குப் புதிதுபுதிதாக முதலீட்டாளர்கள் தேவைப்பட்டனர். சேமிப்பு வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் இந்த ஆள் பிடிக்கும் வேலையைச் செய்து கொடுத்து கமிசன் வாங்கிக் கொண்டன.


சான்டாந்தர், பேங்க் மெடிசி, ஹெச்.எஸ்.பி.சி. உள்ளிட்ட பல வங்கிகள், ஃபேர் ஃபீல்டு கிரீன்விச், ட்ரேமோண்ட் நிதி மேலாண்மை உள்ளிட்ட பல முதலீட்டு வங்கிகள் மடோஃபின் தரகர்களாகச் செயல்பட்டுள்ளன. இவ்வங்கிகள் ஆள் பிடிக்கும் வேலையைச் செய்து கொடுத்ததோடு, மடோஃபின் நிறுவனம் கவிழ்ந்து விடாமல் காப்பாற்றுவதற்காகத் தேவைப்படும் நேரத்திலெல்லாம் வங்கிச் சேமிப்புகளையும், தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியையும் மடோஃபின் நிறுவனத்தில் கொட்டி, இச்சூதாட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தன.


"சப் பிரைம்'' கடன் பிரச்சினையால் அமெரிக்கப் பொருளாதாரம் திவாலானதையடுத்து, இவ்வங்கிகள் முட்டுக் கொடுத்து வந்த சங்கிலித் தொடர் அறுந்து போனது. புதிய ஏமாளிகள் கிடைக்காமல் போனதால், பழைய ஏமாளிகளுக்கு 700 கோடி அமெரிக்க டாலரை (ஏறத்தாழ 28,000 கோடி ரூபாய்க்கு மேல்) திருப்பிக் கொடுக்க முடியாமல் மடோஃப் மாட்டிக் கொண்டார். இதனையடுத்து வங்கிகளின் துணையோடு அவர் நடத்தி வந்த மோசடிகளை அவரே ஒப்புக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. 5,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு நடந்துள்ள இம்மோசடியில், 2,200 கோடி அமெரிக்க டாலருக்கான கணக்கு வழக்குகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.


மடோஃப் இம்மோசடியைப் பல ஆண்டுகளாக எந்தவிதமான சந்தேகங்களுக்கும் இடம்தராமல் நடத்தி வந்ததற்கு வங்கிகளைப் போலவே, அமெரிக்கத் தணிக்கை நிறுவனங்களும் உடந்தையாக இருந்துள்ளன. பல இலட்சம் கோடி ரூபாய் வரவுசெலவு நடத்தி வந்த மடோஃப் நிறுவனத்தைத் தணிக்கை செய்த ஃப்ரீஹ்லிங்க் அண்ட் ஹோரோவிட்ஸ் என்ற தணிக்கை நிறுவனத்தில் வெறும் மூன்றே பேர்தான் ஊழியர்களாக இருந்துள்ளனர். மேலும், இந்தத் தணிக்கை நிறுவனம் வேறு எந்தவொரு நிறுவனத்தையும் தணிக்கை செய்ததாகத் தெரியாததால், கடந்த பதினைந்து ஆண்டுகளில் இத்தணிக்கை நிறுவனத்தின் செயல்பாடுகள் மர்மமாகவே இருந்துள்ளன. இம்மோசடி அம்பலமான பிறகுதான், மடோஃப் நிதி முதலீட்டு நிறுவனத்தை மேற்கண்ட தணிக்கை நிறுவனம்தான் "தணிக்கை' செய்துவந்த தகவலே வெளியுலகுக்குத் தெரிய வந்தது.


சத்யம் மோசடி வழக்கில் மாட்டிக் கொண்டுள்ள தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ், எர்ன்ஸ்ட் அண்ட் யங் மற்றும் கே.பி.எம்.ஜி. ஆகிய அமெரிக்கத் தணிக்கை நிறுவனங்களுக்கு, அமெரிக்க வங்கிகள் தங்களின் சேமிப்பிலிருந்து மடோஃப் நிறுவனத்திற்கு நிதியுதவி அளிப்பது தெரிந்திருந்தும்கூட, அத்தணிக்கை நிறுவனங்கள் இக்கூட்டு களவாணித்தனம் பற்றி வாய்மூடிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.


பல ஓய்வூதிய நிறுவனங்கள் மடோஃப் நடத்தி வந்த இச்சூதாட்டத்தில் பணத்தைப் போட்டு "ஏமாந்து'விட்டதால், பல்லாயிரக்கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் இழந்து போண்டியாகிவிட்டார்கள். இக்குற்றத்திற்காக மடோஃபிற்குத் தூக்கு தண்டனைகூட விதிக்கலாம். ஆனால், மடோஃபோ சிறைக்குப் போன சில நாட்களிலேயே பிணை வாங்கிக் கொண்டு வெளியில் வந்துவிட்டான். இம்மோசடிக்குத் துணைநின்ற வங்கி அதிகாரிகள், தணிக்கை அதிகாரிகளுள் ஒருவர்கூடக் கைது செய்யப்படவில்லை. 2005 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் இம்மோசடிகள் பற்றி அமெரிக்கப் பங்குச் சந்தை வாரியம் விசாரணை நடத்திய போதும் உருப்படியாக எதனையும் கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டது. இந்த மேம்போக்குத்தனத்திற்காக எந்தவொரு அதிகாரியும் விசாரிக்கப்படவில்லை. அந்தளவிற்கு அமெரிக்க நீதி, பங்குச் சந்தை சூதாடிகளுக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது.


அமெரிக்க வங்கிகளும் காப்பீட்டு நிறுவனங்களும் அடுத்தடுத்து திவாலானபொழுது, அதற்கு வீட்டுக் கடன் வாங்கி கட்டாமல் விட்ட அமெரிக்க உழைக்கும் மக்களின் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க முனைந்தது, அமெரிக்க ஆளுங்கும்பல். ஆனால், மடோஃப் என்ற ஒரேயொரு சூதாடி நடத்திய இம்மோசடியைப் பூசிமெழுகி, அமெரிக்க ஆளுங்கும்பலால் யாரையும் பலிகிடா ஆக்க முடியவில்லை. அதனால் நிலைமையைச் சமாளிக்கும் வண்ணம் பல பொருளாதார நிபுணர்களும் நிதித் துறையைக் கண்காணிக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்திருந்தால், இம்மோசடி நடந்திருக்காது என முதலைக் கண்ணீர் வடித்து வருகின்றனர்.


பிளேடு கம்பெனிகளால் ஏமாற்றப்பட்ட தமிழக நடுத்தர வர்க்க முதலீட்டாளர்கள் இந்த ஆலோசனையைக் கேள்விப்பட்டால் வாயால் சிரிக்க மாட்டார்கள். ஏனென்றால், இந்திய நிதிச் சந்தையைக் கண்காணிக்க "கடுமையான' சட்டங்கள் இருந்தபொழுதுதான், பல்வேறு பைனான்ஸ் கம்பெனிகள் பல ஆயிரம் கோடி ரூபாயை ஏப்பம்விட்டன என்பதுதான் வரலாறு. நிதி மோசடியும் முதலாளித்துவமும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் எனும்பொழுது, அவர்களைச் சட்டம் போட்டுப் பிரித்துவிட முடியாது.


இப்பொருளாதார மோசடி அம்பலமான அதே சமயம், மற்றொரு ஊழல் வெடித்து வெளியே வந்து அமெரிக்க அரசியலை நாறடித்தது. இலினாய்ஸ் மாநில செனட்டராக இருந்த பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அந்த செனட்டர் பதவி காலியானது. நம் நாட்டைப் போன்று அமெரிக்காவில் இடைத் தேர்தல் போன்ற சமாச்சாரங்கள் கிடையாது. இலினாய்ஸ் ஆளுநரே, தனக்குப் பிடித்த நபரை அந்தப் பதவியில் அமர்த்திக் கொள்ளலாம். இலினாய்ஸ் மாநில ஆளுநராக இருந்த ராட் ப்ளாகோஜேவிச் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அந்தப் பதவியை இரகசியமாக ஏலம்விட்டுத் தனக்குத் தேர்தல் நன்கொடை திரட்டிக் கொள்ள முடிவு செய்தார்.


பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு விடுவார் என உறுதியாகத் தெரிந்துவிட்டதால், செனட்டர் பதவியை ஏலம் விடுவதற்கான இரகசிய பேரங்கள் அதிபர் தேர்தலுக்கு முன்பே தொடங்கி விட்டன. இதற்காக இரகசிய விருந்துகளும் நடத்தப்பட்டன. இதன் அடிப்படையில் ஜெஸ்ஸி ஜாக்ஸன் ஜுனியர் என்பவரிடம் 15 இலட்சம் அமெரிக்க டாலர்கள் "நன்கொடையாக' வாங்கிக் கொண்டு, அவரை செனட்டராக்கிவிட முடிவு செய்யப்பட்டது. ராட் ப்ளாகோஜேவிச்சுக்குச் சாதகமாக இப்பேரத்தை நடத்தி முடிப்பதில் அமெரிக்க வாழ் இந்திய முதலாளிகள் மும்முரமாக ஈடுபட்டனர். எனினும், பணம் கைமாறும் முன்பே இந்த இரகசிய பேரங்கள் அம்பலமாகிவிட்டதால், ராட் ப்ளாகோஜேவிச்சும் அவரது இந்திய நண்பர்களும் இப்பொழுது கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர். பாரக் ஒபாமாவின் ஆதரவாளர்களுக்கும் இந்த ஊழலில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு, அது எவ்வித விசாரணையுமின்றி அமுங்கிப் போனது.


இந்தியாவும் அமெரிக்கா போல மாற வேண்டும் என துக்ளக் "சோ'' உள்ளிட்டோர் வாதாடி வருகின்றனர். அவர்களின் நல்லெண்ணம் நடைமுறைக்கு வந்தால், தற்பொழுது இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் நடைபெறும் ஊழலும் மோசடிகளும் அதிகார முறைகேடுகளும் இலட்சம் கோடி ரூபாயைத் தொடக்கூடும். ஒருவேளை அவர்கள் சொல்லும் "வளர்ச்சி' என்பது இதுதானோ!


· ரஹீம்