Language Selection

சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள பொய்க்கணக்கு மோசடியில் மறைந் துள்ள உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்றால், ராமலிங்க ராஜுவின் மகன்களை முதலாளிகளாகக் கொண்டு இயங்கிவரும் மேடாஸ் நிறுவனங்களைத் தோண்டித்

 துருவ வேண்டும். இந்த இரண்டு நிறுவனங்களின் மீதும் கை வைத்தால், ராமலிங்கராஜுஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிஅதிகார வர்க்கம் ஆகியோருக்கும் இடையேயான நெருக்கம் மட்டுமல்ல, மாபெரும் ஊழல்அதிகார முறைகேடுகள் கூட அம்பலத்துக்கு வரும்.


சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜு, ஹைடெக் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியிலேயே அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையாகிவிட்டார். நாயுடு ஆட்சிக்குப் பின் வந்த ரெட்டி ஆட்சியிலோ, ராஜு அரசாங்கத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டார். காங்கிரசு ஆட்சியில் தான் மேடாஸ் நிறுவனங்களுக்கு "பம்பர்'' பரிசு அடித்தது போல, 12,000 கோடி ரூபாய் பெறுமான ஹைதராபாத் பெருநகர ரயில் திட்டம்; 1,500 கோடி ரூபாய் பெறுமான மச்சிலிப்பட்டிணம் துறைமுகத்திட்டம்; காக்கிநாடாவில் மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் திட்டம் உள்ளிட்டு 40,000 கோடி ரூபாய் பெறுமான பல கட்டுமானத் திட்டங்கள் கிடைத்தன.
அரசாங்க விதிகளின்படி, கட்டுமானத் திட்டங்கள் முடிவடைவதைப் பொருத்துதான் ஒப்பந்தக்காரர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படும். ஆனால், ஆந்திர அரசோ, இந்த விதிமுறைகளைத் தலைகீழாய் புரட்டிப் போட்டு, மேடாஸ் நிறுவனம் பாந்தர் துறைமுகக் கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் முன்பே, மேடாஸூக்கு 335 கோடி ரூபாயைச் சுளையாகத் தூக்கிக் கொடுத்தது.


ஹைதராபாத் பெரு நகர ரயில் திட்டத்தை நிறைவேற்ற ஆதரவு நிதியாக 4,800 கோடி ரூபாயை ஒதுக்க ஆந்திர அரசு முடிவெடுத்த பொழுது, மேடாஸ் நிறுவனமோ பணத்திற்குப் பதிலாக நிலமாகத் தருமாறு கோரியது. இதன்படி, ஆந்திர அரசு மேடாஸூக்கு 275 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுத்தது. இதனையடுத்து, ரயில் பாதையின் நீளத்தை மேலும் 5 கி.மீ தூரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆந்திர அரசு முன் வைத்தது. இதன் பின்னே, மேடாஸூக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பை உயர்த்தும் சதி இருப்பதைப் புரிந்துகொண்ட இத்திட்டத்தின் ஆலோசகரும், தில்லை பெருநகர ரயில் கார்ப்பரேஷனின் தலைவருமான சிறீதரன், இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தி திட்ட கமிசனிடம் புகார் செய்தார். காங்கிரசு அரசும் திட்ட கமிசனும் சிறீதரனின் புகாரை விசாரிக்க மறுத்ததோடு, அவரைத் திட்ட ஆலோசகர் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார்.


விசாகப்பட்டிணத்தில் ஒரு ஏக்கர் 10 லட்ச ரூபாய் என்ற விலையில் 50 ஏக்கர் நிலத்தை மேடாஸூக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளது, காங்கிரசு அரசு. ஆனால், இந்நகரில் ஒரு ஏக்கர் நிலத்தின் சந்தை மதிப்பு 4 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை இருப்பதாகக் கூறப்படுகிறது.


மச்சிலிப்பட்டிணம் துறைமுகப் பணிகள் தொடங்கும் முன்பே, அங்கு 412 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசு மேடாஸூக்குத் தூக்கிக் கொடுத்துள்ளது.


இவையெல்லாம், ராமலிங்க ராஜு காங்கிரசு ஆட்சியில் ராஜசேகர ரெட்டியின் துணையோடு அடித்த கொள்ளையில் ஒரு சில துளிகள். ராமலிங்க ராஜு சத்யம் நிறுவனத்தில் இருந்து கடத்திய 7,000 கோடி ரூபாயையும் மேடாஸ் நிறுவனங்களின் பெயரில் நிலங்களாக வாங்கிக் குவித்திருக்கலாம்; ஹவாலா முறையில் மொரீசீயஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குக் கடத்தியிருக்கலாம் எனப் பல அனுமானங்கள் உலா வருகின்றன.


ராமலிங்க ராஜு, காங்கிரசு; தெலுங்கு தேசம், பா.ஜ.க. என சர்வ கட்சிகளுக்கும் நெருக்கமாக இருந்ததால், ஆட்சி மாறினால் கூட உண்மை வெளிவருமா என்பது சந்தேகமாக இருக்கிறது. மேலும், ராஜூ, தான் கொள்ளையடித்த பணத்தையும், வளைத்துப் போட்ட நிலத்தையும் சட்டப்படியே பாதுகாக்க என்னென்ன ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கிறாரோ? கன்னக் கோல் வைப்பவனுக்குத்தானே அதன் சூட்சுமம் தெரியும்!


இறுதியா ஒன்று, அரசியல்வாதிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டு தொழிலை விரிவாக்கியது புது முதலாளி ராமலிங்க ராஜு மட்டும் தானா? "சுதந்திர'ப் போராட்ட காலத்தில் இருந்தே, காந்திநேருகாங்கிரசோடு தொடர்பு வைத்துக் கொண்டு, தங்களது தொழில் சாம்ராஜ்யங்களைக் கட்டியமைத்தவர்கள்தான் டாடாவும், பிர்லாவும். அம்பானியின் அரசியல் தொடர்பு ஊருக்கே தெரிந்ததுதான். சின்ன அம்பானி சமாஜ்வாதிக் கட்சியின் எம்.பி. ஆகவும் அவதாரமெடுத்துவிட்டார். கோடீசுவரர்களும், தொழில் அதிபர்களும்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாகி வரும்பொழுது, ஜனநாயகமாவது, மண்ணாவது!