ஜனவரி 7, 2009 அன்று இந்தியாவை ஒரு பெரும் பூகம்பம் உலுக்கியதைப் போன்று சத்யம் நிறுவனத்தில் நடந்த மோசடிகள் அம்பலமாயின. சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜு, தனது நிறுவனத்தின் இயக்குநர்களுக்கும், இந்தியப் பங்குச் சந்தை

 பரிமாற்ற வாரியத்திற்கும் எழுதிய கடிதத்தில், "கடந்த ஏழு ஆண்டுகளாக நிறுவனத்தின் ஆண்டு வரவுசெலவு கணக்குகளில் 7,106 கோடி ரூபாய் அளவிற்குத் தில்லுமுல்லுகள் செய்திருப்பதாக''த் தானே வலிய வந்து ஒத்துக் கொண்ட செய்தி அன்று வெளியாகியது.


"சத்யம் நிறுவனத்திற்குப் பல்வேறு வங்கிகளில் 5,040 கோடி ரூபாய் ரொக்கச் சேமிப்பாக இருப்பதாகவும், அதன் மூலம் 376 கோடி ரூபாய் வட்டி கிடைத்திருப்பதாகவும், 1,230 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், 490 கோடி ரூபாய் நிறுவனத்திற்கு வர வேண்டிய கடனாகவும் காட்டப்பட்டிருப்பது அனைத்தும் பொய்க் கணக்கு'' என்ற உண்மையை அக்கடிதத்தில் போட்டு உடைத்து இருந்தார், ராஜு. அவர் இந்தப் பொய்க்கணக்குகளின் மூலம் தம்மாத்துண்டு சத்யத்தைப் பன்னாட்டு நிறுவனம் ரேஞ்சுக்கு ஊதிப் பெருக்கினாரா அல்லது சத்யத்தின் இலாபத்தை உறிஞ்சித் திவாலாக்கினாரா என்பதுதான் இம்மோசடியின் பின் மறைந்துள்ள மர்மம்.


ராஜு பொய்க் கணக்குக் காட்டியபொழுதெல்லாம் பங்குச் சந்தையில் ரூ.188.70 என விற்றுக் கொண்டிருந்த சத்யம் நிறுவனப் பங்குகள், அவர் உண்மையைச் சொன்னவுடன் ரூ39.95 ஆகச் சரிந்து விழுந்து விட்டது. உண்மைக்கும் பங்குச் சந்தை வியாபாரத்துக்கும்தான் எப்பேர்பட்ட பொருத்தம்!


சத்யம் நிறுவனத்தின் நலனை முன்னிட்டுத்தான் பொய்க்கணக்கு எழுதியதாகத் தனது கடிதத்தில் ராஜு குறிப்பட்டுள்ளார். மேலும், "இதன்மூலம் நானோ அல்லது எனது குடும்பத்தாரோ ஒரு பைசா / ஒரு டாலர் கூடப் பலனாகப் பெறவில்லை'' என உருக்கமாகவும் குறிப்பிட்டுள்ளார்.


ராமலிங்க ராஜுவின் இந்தத் "தன்னலமற்ற' குணத்தை அவரது சக முதலாளிகளே நம்ப மறுக்கிறார்கள். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ராஜு பொய்க்கணக்கு எழுதத் தொடங்கியபொழுது சத்யம் நிறுவனத்தின் மொத்தப் பங்குகளில் 22.89 சதவீதம் ராஜுவிடம் இருந்தது. ராஜு இப்பொய்க் கணக்குகள் பற்றிய உண்மையைச் சொல்ல முடிவெடுத்த தருணத்தில், அவரிடம் வெறும் மூன்று சதவீதப் பங்குகளே இருந்தன. ராஜு பொய்க்கணக்கு எழுத எழுத, அதற்கேற்ப பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் பங்குகளின் விலை ஏற ஏற, அவர் தன் கைவசம் இருந்த பங்குகளை கொஞ்சம்கொஞ்சமாகச் சந்தையில் விற்று பணத்தை அள்ளியிருக்கிறார். இவ்விற்பனை மூலம், டிச.2003 தொடங்கி மார்ச் 2007க்குள் ராஜுவிற்கு 1,252.62 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது.


ராஜு எழுதிய பொய்கணக்குப்படி 5,000 கோடி ரூபாய்க்கு மேல் அவரது நிறுவனத்தில் ரொக்கக் கையிருப்பு இருக்க வேண்டும். ஆனால், இருந்ததோ 320 கோடி ரூபாய்தானாம். இந்த இடைவெளியை இட்டு நிரப்புவது எப்படி? ராஜு அதற்கும் ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார். அவர், தனது இரு மகன்களையும் முதலாளிகளாகப் போட்டு மேடாஸ் இன்ஃப்ரா, மேடாஸ் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்த இரு நிறுவனங்களையும் சத்யமே 160 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கிக் கொள்ளப் போவதாக அறிவித்தார், ராஜு. சத்யம் நிறுவனத்தின் இயக்குநர் அவையும் இத்திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தது.


இத்திட்டம் நிறைவேறியிருந்தால், இல்லாத ரொக்கத்தை எடுத்து அந்த நிறுவனங்களை வாங்கியதாகக் கணக்கு எழுதிவிட்டு ராஜு நிம்மதியாக இருந்திருப்பார். ஆனால், சத்யத்தில் முதலீடு செய்திருந்த சிலர் ராஜுவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ராஜு அந்த குறுக்கு வழியைக் கைவிட நேர்ந்தது. பொருளாதார நெருக்கடியால் ஐ.டி. துறையும் சருக்கலில் இருந்ததால், வரவுசெலவு கணக்கில் செய்யப்பட்ட தில்லுமுல்லு, மோசடிகளை ஒப்புக்கொள்ள வேண்டிய இக்கட்டில் ராஜு சிக்கிக் கொண்டார்.


ராஜுவே தான் ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் பொய்க்கணக்கு எழுதி தில்லுமுல்லு செய்திருப்பதை ஒத்துக் கொண்டுள்ளார். எனினும், சட்டத்தின் இரும்புக் கரம் அவர் மீது உடனடியாகப் பாய்ந்து விடவில்லை. இரண்டு நாட்கள் கழித்து ராஜுவே ஆந்திர மாநில போலீசில் சரணடைந்தார். இந்த மோசடி தொடர்பான முக்கியமான ஆவணங்களை அழிப்பதற்கு இந்த இரண்டு நாள் அவகாசமே போதுமானது. இந்தக் கைதுகூட, பங்கு பரிமாற்ற வாரியம் ராஜுவை நெருங்கி விடக் கூடாது என்பதற்காகத்தான் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆந்திர நீதிமன்றம் ராஜுவைப் பங்கு பத்திர பரிமாற்ற வாரியம் விசாரிக்க அனுமதி மறுத்திருப்பது இந்த வதந்தியை உறுதிப்படுத்துகிறது. கிரிமினல்களுக்கு போலீசைவிட வேறு யார் நல்ல பாதுகாப்பைத் தந்துவிட முடியும்?


···


சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள மோசடியைத் தனிப்பட்ட நிறுவனத்தில் நடந்துவிட்ட அசம்பாவிதமாகவும், ராமலிங்க ராஜு என்ற தனிப்பட்ட நபரின் பேராசையால் விளைந்துவிட்ட தவறாகவும் பார்க்க வேண்டும் என நிறுவுவதற்கு முதலாளித்துவவாதிகள் அனைவரும் வரிந்துகட்டிக் கொண்டு நிற்கிறார்கள். சி.ஐ.ஐ. என்ற தரகு முதலாளிகள் சங்கம் சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள மோசடியைக் காட்டி மற்ற தனியார் நிறுவனங்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கக் கூடாது எனப் பொதுமக்களுக்கு வகுப்பு எடுக்கிறது.


ஒரு பெரிய நிறுவனம் என்றால், அதனின் வரவுசெலவு கணக்குகளைக் கண்காணிப்பதற்கு அந்நிறுவனத்திலேயே வேலை பார்க்கும் தணிக்கை அதிகாரிகள், வெளியிலிருந்து வந்து தணிக்கை செய்யும் நிறுவனங்கள், அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ள பொதுமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே நியமிக்கப்படும் தனி இயக்குநர்கள், இதற்கு அப்பால் கம்பெனி விவகாரங்களைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், பங்கு பத்திர பரிமாற்ற வாரியம், வருமான வரித் துறை, ரிசர்வ் வங்கி எனப் பல அடுக்குக் கண்காணிப்பு வளையங்களைச் சட்டமே உருவாக்கி வைத்திருக்கிறது. இவர்கள் கண்களில் எல்லாம் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு ராஜு என்ற தனிப்பட்ட நபர் 7,000 கோடி ரூபாயைச் சுருட்டிவிட்டார் என்பது நம்பும்படியாக இல்லை; அப்படி அது உண்மையென்றால், மற்றவர்களெல்லாம் ராஜு பொய்கணக்கு காட்டும்பொழுது எதைப் புடுங்கிக் கொண்டிருந்தார்கள் என்ற கேள்விக்கு விடையும் கிடைக்கவில்லை.


சத்யம் நிறுவனத்தின் இயக்குநர்கள் அவையில் (Board of Directors)  முன்னாள் அமைச்சரவைச் செயலர் டி.ஆர்.பிரசாத், அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழக்த்தில் பேராசிரியராகப் பணியாற்றிய கிருஷ்ண பலேப்பு, ஐ.டி.துறையின் ஜாம்பவான் வினோத் ராம், இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் பிசினஸ் என்ற புகழ்பெற்ற மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பணியாற்றிய மோகன் ராவ் உள்ளிட்ட பல திறமைசாலிகள் தனி இயக்குநர்களாக (Independent Directors) இம்மோசடி நடந்த காலத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.


ராஜு காட்டிய கணக்கு வழக்குகள் பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பாமல் தலையாட்டிவிட்டு வருவதற்கு இந்த ஜாம்பவான்கள் எதற்கு? சத்யம் நிறுவனத்தில் இயக்குநர்கள் என்ற பெயரில் இருந்த தலையாட்டி பொம்மைகள் ஒவ்வொருவரும் இயக்குநர் அவைக் கூட்டத்தில் அமரும் கட்டணம், ஆலோசனைக் கட்டணம் என்ற பெயரில் 200607ஆம் அண்டில் மட்டும் ரூ.12.4 இலட்சம் முதல் ரூ.99.48 இலட்சம் வரை தங்களின் "தகுதி'க்கு ஏற்பச் சம்பாதித்துள்ளனர்.


அ.தி.மு.க. தலைவி ஜெயா நடத்தும் கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்களின் வாயை பிரியாணியைக் கொண்டு அடைப்பதைப் போல, ராஜு இயக்குநர்களின் வாயைப் பணக் கட்டுகளைக் கொண்டு அடைத்துள்ளார். அதனால்தான், சத்யம் நிறுவனத்தின் பணத்தை எடுத்து மேடாஸ் நிறுவனங்களை வாங்க ராஜு போட்ட சதித் திட்டத்திற்கு இந்த இயக்குநர்கள் அனைவருமே மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும், சத்யம் நிறுவனத்தில் இருந்த 17 இயக்குநர்களுமே தங்களிடம் இருந்த சத்யம் பங்குகளை, கப்பல் கவிழும் முன்னே நல்ல விலைக்கு விற்றுக் காசும் பார்த்து விட்டனர்.


தனியார் நிறுவனங்கள் நடத்தும் பண மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகியவற்றுக்கு உடந்தையாக இருந்து வரும் பிரைஸ்வாட்டர் கூப்பர் நிறுவனத்தின் வரலாறு பற்றித் தனிப் புத்தகமே போடலாம். இந்தியாவைச் சேர்ந்த குளோபல் ட்ரஸ்ட் வங்கி திவாலானபோதும், அமெரிக்காவைச் சேர்ந்த பெர்னார்ட் எல். மடோஃப் இன்வெஸ்மென்ட் செக்யூரிட்டீஸ் என்ற நிதி நிறுவனம் திவாலானபோதும், தற்பொழுது சத்யத்திற்கும் தணிக்கை நிறுவனமாக இருந்து ஊரான் பணத்தை இம்முதலாளிகள் அமுக்கிக் கொள்வதற்குத் தன்னாலான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறது, பிரைஸ்வாட்டர் கூப்பர். இன்ஃபோசிஸ், விப்ரோ, டி.சி.எஸ்., போன்ற ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் தணிக்கை நிறுவனங்களுக்குக் கொடுத்துவரும் ஆண்டுக் கட்டணத்தைவிட அதிகக் கட்டணத்தை பிரைஸ்வாட்டர் நிறுவனத்திற்கு சத்யம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கொள்ளையில் பங்கு கொடுக்காமல் கூட்டாளியின் வாயை எப்படி மூட முடியும்?


சத்யம் நிறுவனப் பங்குகளின் விலை உயர உயர, அதனால் ராஜு மட்டும்தானா பலன் அடைந்திருக்கிறார்? பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ள தரகர்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கிகள், அந்நிய நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் சத்யம் நிறுவனப் பங்குகளை வாங்கி விற்றதன் மூலம் பல கோடி ரூபாய் இலாபம் பார்த்திருப்பார்கள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்ட இந்தச் சூதாடிகளை எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும்?


···


இது போன்ற மோசடி இந்தியாவிலேயே இப்பொழுதுதான் முதன்முறையாக நடப்பதுபோல முதலாளித்துவவாதிகள் புளுகிக் கொண்டு திரிகிறார்கள். அர்சத் மேத்தாவும், கேதான் பரீக்கும் வங்கிப் பணத்தை எடுத்துப் பங்குச் சந்தையில் கொட்டி, அதன் மூலம் சிலபல நிறுவனங்களின் பங்குகளின் விலையைச் செயற்கையாக உயர்த்தி மோசடி செய்தார்கள் என்றால், ராமலிங்க ராஜு பொய்க்கணக்கு எழுதி, அதன் மூலம் தனது நிறுவனத்தின் பங்கு விலையைச் செயற்கையாக உயர்த்திக் கொள்ளையடித்திருக்கிறார். பல முதலாளிகள் அர்சத் மேத்தா போன்ற தரகர்கள் மூலம் நடத்தும் மோசடியை செயற்கையாக பங்கின் விலையை உயர்த்துவதை ராஜு தானே செய்திருக்கிறார் என்பதைத் தவிர இந்த இரண்டு மோசடிகளுக்கும் அடிப்படையிலேயே ஏதாவது வேறுபாடு இருக்கிறதா?


தரகு முதலாளிகளிலேயே ராமலிங்க ராஜு மட்டும்தானா பொய்க் கணக்கு பேர்வழி? நாட்டில் நடக்கும் வரி ஏய்ப்பும், உள்நாட்டில் புழங்கும் கருப்புப் பணமும், சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணமும் சிறிதோ பெரிதோ முதலாளித்துவ நிறுவனங்கள் அனைத்திலும் பொய்க் கணக்கு எழுதுவது புரையோடிப் போயிருப்பதைத்தானே காட்டுகின்றன.


அமெரிக்காவில் 1990களில் அந்நாட்டுப் பங்குச் சந்தை ஊதிப் பெருத்ததற்குக் காரணமே பொய்க் கணக்குதான் என சி.பி.சந்திரசேகர் என்ற பொருளாதார நிபுணர் குறிப்பிடுகிறார். அக்காலக்கட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த என்ரான், அடெல்பியா கம்யூனிகேஷன்ஸ், டைகோ, வேர்ல்டுகாம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பொய்க்கணக்கு எழுதி, அதன் மூலம் தங்கள் நிறுவனப் பங்குகளை ஊதிப் பெருக்க வைத்துப் பின் அந்நிறுவனங்கள் திவாலானதாக சி.பி.சந்திரசேகர் குறிப்படுகிறார். தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் அமெரிக்க பாணி முதலாளித்துவத்தைச் வரித்துக் கொண்ட பிறகு, அதன் அசிங்கங்களை மட்டும் "சென்சார்'' செய்துவிட முடியுமா?


ஒரு நிறுவனத்தில் கிடைக்கும் இலாபத்தைத் தனது சகோதர நிறுவனங்களுக்குக் கடத்திக்கொண்டு போவதை கார்ப்பரேட் நிறுவனங்களில் சர்வசாதாரணமாகக் காண முடியும். வரி கட்டாமல் ஏய்க்கவோ அல்லது இலாபத்தில் இயங்கும் நிறுவனத்தை மூடிவிட்டு, அதைவிட அதிக இலாபம் தரும் வேறொரு தொழிலுக்கு மாறிச் செல்லவோ இந்த இலாபக் கடத்தல் சதியைத் தரகு முதலாளிகள் கையாளுகின்றனர். சென்னை அம்பத்தூரில் இயங்கி வந்த டன்லப் நிறுவனம் திடீரென மூடப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீதியில் வீசியெறியப்பட்டதற்கு இந்த இலாபக் கடத்தல்தான் காரணம். பொதுத்துறை நிறுவனமான வீ.எஸ்.என்.எல்.ஐ வாங்கிய டாடா, அந்நிறுவனத்தில் இருந்த ஆயிரம் கோடி ரூபாய் கையிருப்பை நட்டத்தில் இயங்கிய தனது சகோதர நிறுவனத்திற்குக் கடத்தி வந்தார்.


ஒவ்வொரு தரகு முதலாளியும் பொய்க்கணக்கு எழுதி வரி கட்டாமல் ஏய்ப்பதற்காகவே, இலாபத்தைக் கடத்துவதற்காகவே பல துணை நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இப்படிபட்ட மோசடிகளுக்காகத் தண்டிக்க வேண்டும் என்றால், முதலில் அம்பானி சகோதரர்களைத்தான் தண்டிக்க வேண்டும். வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகக் காட்டியதன் மூலம் மட்டுமே அம்பானி சகோதரர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்குச் செலுத்தாமல் மோசடி செய்திருக்கிறார்கள். பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏப்பம் விட்டதற்காக எந்தத் தரகு முதலாளி தண்டிக்கப்பட்டிருக்கிறார்?


ஏதோ ராஜு என்ற ஒருவராவது மாட்டிக் கொண்டாரே என நாம் ஆறுதல் அடைந்துவிட முடியாது. ஏனென்றால், மாட்டிக் கொண்ட ராஜு தண்டிக்கவும்படுவார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.


···


ராமலிங்க ராஜு, தனது சத்யம் நிறுவனம் வெறும் மூன்று சதவீத இலாபத்திற்குத்தான் வெளிநாட்டு வேலைகளை எடுத்துச் செய்ததாகவும், அதனை ஈடுகட்டத்தான் இலாபத்தை பெருக்கிக் காட்டி பொய்க் கணக்கு எழுதியதாகவும் கூறிவருகிறார்.


டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் போன்ற மற்ற ஐ.டி.நிறுவனங்கள் 20 சதவீத இலாபத்திற்கு மேல் கிடைக்கும்படியான வேலைகளை எடுத்துச் செய்துவரும்பொழுது, சத்யம் நிறுவனத்திற்கு 3 சதவீதம் மட்டுமே இலாபம் கிடைத்து வந்ததாகக் கூறப்படுவதை நம்ப முடியாது என ஐ.டி. துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், உலகிலேயே மிகப்பெரிய நிறுவனங்களாகப் பட்டியல் இடப்பட்டுள்ள 500 நிறுவனங்களுள், 180 நிறுவனங்களை சத்யம் வாடிக்கையாளராகக் கொண்டிருப்பதால், சத்யத்தின் இலாபம் அதிகமாகத்தான் இருக்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.


ராஜு உண்மை சொல்வதாக எடுத்துக் கொண்டால், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் போன்ற மற்ற நிறுவனங்கள் இலாபத்தைக் கூட்டிக்காட்டிப் பொய்க் கணக்கு எழுதி வருகிறார்கள் என்ற முடிவுக்கு வர வேண்டும். ராஜு பொய் சொல்கிறார் என்றால், அவர் சத்யம் நிறுவனத்தின் 7000 கோடி ரூபாய் இலாபத்தையும் மொத்தமாகச் சுருட்டிக் கொண்டு எங்கோ பதுங்கி விட்டார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் எது உண்மை என்பதைக் கண்டுபிடித்துவிட பங்கு பத்திர பரிமாற்ற வாரிய ("செபி'') அதிகாரிகள் துடிக்கிறார்களாம்.


· சத்யம் நிறுவனம் மூன்று ஆண்டுகளாகத் தனது பங்குதாரர்களுக்கு இலாப ஈவு கொடுக்கவில்லை என்பதைக் கேள்வி கேட்காத செபி;


· 2000ஆம் ஆண்டில் ராமலிங்க ராஜுவின் மைத்துனர் நடத்தி வந்த சத்யம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை, சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் இணைத்த பொழுது நடந்த மோசடியைக் கண்டும் காணாது நடந்து கொண்ட செபி;
· 1999ஆம் ஆண்டு சத்யம் நிறுவனத்தின் துணை நிறுவனமான சத்யம் இன்ஃபோ வே, இந்தியா வேர்ல்டு கம்யூனிகேசன் என்ற நிறுவனத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதில் நடந்த மோசடியைச் சகித்துக் கொண்ட செபி;


· ராமலிங்க ராஜு கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது கையில் உள்ள பங்குகளை விற்றுக் கொண்டே போவது ஏன் என ஆராயாத செபி;


· ராமலிங்க ராஜு இந்த மோசடியை ஒப்புக் கொள்ளுவதற்கு முன்பாக, இந்த "இரகசியத்தை'த் தெரிந்து கொண்ட வங்கிகள், ராஜு தங்களிடம் அடமானமாக வைத்திருந்த 2.45 இலட்சம் பங்குகளைக் கமுக்கமாக விற்று 300 கோடி ரூபாய் திரட்டிக் கொண்டதைத் தடுக்கத் திராணியற்ற செபி, இப்பொழுது தும்பை விட்டு வாலை பிடிக்கிறது.


இம்மோசடிகளைச் சட்டப்படியோ அல்லது சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டோ ராமலிங்க ராஜு நடத்தியிருக்கிறார் என்றால், இப்பொழுது மட்டும் அவர் செபியிடம் மாட்டிவிடுவாரா?


···


ராமலிங்க ராஜு வியாபாரத்தில் கால்பதித்த காலந்தொட்டே, அவர் மீது பல மோசடி குற்றச்சாட்டுகள் இருந்து வந்துள்ளன. இந்தியக் குடியரசுக் கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமதாஸ் அத்வாலே 2003ஆம் ஆண்டிலேயே, "ராஜு குடும்பம் பல்வேறு பினாமி வங்கிக் கணக்குகள் மூலம் வரியை ஏமாற்றுவது பற்றி செபி விசாரிக்க வேண்டும்'' எனக் கோரினார். அவரது குற்றச்சாட்டு எவ்வித விசாரணையுமின்றி அமுக்கப்பட்டது.


இன்னொருபுறம் முதலாளித்துவ ஊடகங்கள், அவரை உழைப்பால் உயர்ந்த உத்தமராகக் காட்டி அவருக்கு ஒளிவட்டம் கட்டின. அவரது வெற்றி தனியார்மயத்தின் வெற்றியாகவும்; முன்னேறத் துடிக்கும் நடுத்தர வர்க்கத்தின் குறியீடாகவும் ராஜு ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டார். ராஜு சத்யத்தில் பொய்க்கணக்கு எழுதிவந்த அதே சமயத்தில், 2002லும், 2008லும் அவர் மிகச் சிறந்த நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்க மயில் விருது பெற்றார்.


பணமும், புகழும் உயர, உயர, அவர் சந்திரபாபு நாயுடுவோடும், அதன்பின் ராஜசேகர ரெட்டியோடும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் புகுந்து விளையாடினார். சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டமும், அடிக்கட்டுமானத் துறையில் தனியாரோடு கூட்டுச் சேர்வது என்ற அரசின் முடிவும் ராஜுவின் கனவுகளுக்குப் பக்கபலமாக அமைந்தன. பங்குச் சந்தையில் புகுத்தப்பட்ட தாராளமயமும்; தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் தங்களைத் தாங்களே கண்காணித்துக் கொள்ளும்படி, கம்பெனி விவகாரச் சட்டம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டதும்; ஐ.டி. துறைக்கு அளிக்கப்பட்ட வரி விலக்குகளும், ராமலிங்க ராஜு துணிந்து தனது மோசடிகளை நடத்தியதற்கு இடம் கொடுத்தன.


ஒரேயொரு ராஜு மாட்டிக் கொண்டிருக்கலாம்; ஆனால், தனியார்மயம் தாராளமயம் ஓராயிரம் ராஜுக்களை உருவாக்கும் அடிப்படையைக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. ராஜு கொள்ளை நோயைப் பரப்பும் கொசு என்றால், அந்தக் கொசுவை உற்பத்தி செய்யும் சாக்கடைதான் முதலாளித்துவப் பொருளாதாரம்.


சத்யம் நிறுவனத்தில் 8,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தலைவர், டி.எஸ்.விஜயன், ராமலிங்க ராஜுவின் மோசடிகளை மும்பய்ப் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் ஒப்பிட்டுள்ளார். தனியார்மயம் தாராளமயத்திற்குப் பின் அர்சத் மேத்தா ஊழல், கேத்தன் பரீக் ஊழல், யு.டி.ஐ.மோசடி, தேக்கு மரப் பண்ணை மோசடி என அடுக்கடுக்காக, இந்த முதலாளித்துவ பயங்கரம் ஒரு கால அலைவரிசையில் நமது நாட்டு மக்களைத் தாக்கி வருகிறது.


1992க்கு பின் வேர்விட்ட முசுலீம் பயங்கரவாதத்தை ஒழிக்க தடா, பொடா எனப் பல பாசிசச் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கும் அரசு, இம்முதலாளித்துவ பயங்கரத்தை "ஒழிக்க'' பழைய உளுத்துப் போன சட்டங்களைத்தான் வைத்துக் கொண்டிருக்கிறது.


அரசியல்வாதிகள் செய்யும் ஊழலைக்காட்டி, அரசியல் அமைப்பு முறை கெட்டுவிட்டதாகப் பட்டிமன்றம் நடத்தும் மேல்தட்டு நடுத்தர வர்க்கம், முதலாளிகள் நடத்தும் இந்த ஊழல், மோசடிகளைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. சத்யம் நிறுவன ஊழியர்கள் ஹைதராபாத் சிறைக்கு முன்னதாக ராமலிங்க ராஜுவுக்கு "ஜே'' போட்டு நிற்பதும்; ஐ.டி.துறையில் வேலை பார்க்கும் நடுத்தரவர்க்கம் அங்கு நடக்கும் அட்டூழியங்கள் மோசடிகளை, சத்யம் மோசடி அம்பலமான பிறகும் சகித்துக் கொண்டு நிற்பதுமே இதற்கு சாட்சி. முதலாளிகளின் ஊழல் மோசடி மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தின் இந்தச் சகிப்புத்தன்மையும் பாராமுகமும் கூட அருவெறுக்கத்தக்கதுதான்!

 

· குப்பன்