Language Selection

புதிய ஜனநாயகம் 2009

இடது, வலது போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் நீண்ட வரலாற்றில் தற்பெருமையடிக்கும் போக்கு ஒரு சில தலைவர்களிடம் அவ்வப்போது தலைகாட்டியிருப்பினும், அந்தப் போக்கில் புதிய எல்லைவரை சென்றிருக்கும் ஒருவர்தான் சி.பி.ஐ.கட்சியின் பொதுச் செயலாளர் தா.பாண்டியன்.


2008ஆம் ஆண்டின் "டாப் 10'' அரசியல்வாதிகளுள் ஒருவராக தா.பாண்டியனை ஆனந்த விகடன் வார இதழ் தேர்ந்தெடுத்திருந்தது. இதற்காக அவரைப் பாராட்டிப் புகழ்ந்து, அக்கட்சியின் ஒவ்வொரு மாவட்டக் குழுவும் தினமும் அரைப்பக்க விளம்பரங்களை "ஜனசக்தி''யில் வெளியிட்டு வருகின்றன. பாண்டியன் புகழ் பரப்பும்
"ஜனசக்திக்கு'' பாண்டியன்தான் ஆசிரியர்.


"இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்த சிவப்புக் கம்பளம்'', "உழைக்கும் மக்களின் உண்மைத் தோழர்'', "தமிழகத்தின் ஆரோக்கிய அரசியல் சூறாவளி', "சிவப்புச் சூறாவளி'', "தொழிலாளி வர்க்கத்தின் விடிவெள்ளி''. — இவை எல்லாம் தா.பாண்டியனார் புகழ்பாடிய விளம்பரங்களில் அவருக்குச் சூட்டப்பட்ட கிரீடங்கள். இவை போதாதென்று அண்மையில் "தானைத் தலைவர்' என்ற அடைமொழி வேறு சேர்ந்து கொண்டிருக்கிறது. ஈழப் பிரச்சினையை தா.பாண்டியன் கையில் எடுத்ததால் விழித்துக் கொண்ட தமிழ்ச் சமூகம், அப்பிரச்சினையையே "தா.பா.வுக்கு முன், பின்' என்று காலத்தைக் கிழித்துப் போட்டிருப்பதையும், "பாலன் இல்லம் வந்து பார், தா.பா. வடிவாய் சிவப்புச் சூரியன் சுட்டெரிப்பதை' என்ற கவிதை வரியையும் அறிந்து கொள்ள தா.பா. நடத்தும் ஜனசக்தியைத்தான் நாம் பார்க்க வேண்டும்.


முதலாளித்துவ ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் இயல்பான சுயவிளம்பர மோகத்தை வரித்துக் கொண்டுள்ள தா.பாண்டியன், தான் ஆதிக்கசாதி வெறிக்கும் ஆதரவாளர்தான் என்பதை உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் பிரச்சினையில் வெளிப்படுத்தி இருந்தார். அதாவது, சி.பி.ஐ. கட்சி ஏன் இந்தப் பிரச்சினையில் போராடவில்லை எனக்கேட்டபோது அவர், "நான் அசைவன் எனக் காட்டிக் கொள்ள எலும்புகளைத் தொடுத்து மாலை போட்டு ஆட வேண்டிய தேவையில்லை' என்று "பொறுப்பாக'ப் பதிலளித்திருந்தார்.


முக்குலத்தோர் சாதிப் பிரிவுகளில் ஒன்றான அகமுடையர் சாதிச் சங்கம் டிசம்பர் 2008இல் நடத்திய கல்வி அறக்கட்டளை விழா ஒன்றில் பார்ப்பனிய பயங்கரவாத பா.ஜ.க.வின் திருநாவுக்கரசருடன் தா.பாண்டியனும் கலந்து கொண்டார். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சாதி உணர்வோடு இக்கூட்டத்தில் இணைந்ததை "கல்வி சம்பந்தப்பட்ட விழா என்பதால் கலந்து கொண்டேன்' என்று நியாயப் படுத்தவும் முயன்றார்.


ஓட்டுக்காக சாதிவெறியைத் தூண்டவும் அவர் தயங்கவில்லை என்பதை திருமங்கலத்தில் அவர் ஆற்றிய தேர்தல் பணி நிரூபித்திருக்கிறது. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில், ஆதிக்க சாதித் திமிருக்காக மாணவர்கள் திருப்பித் தாக்கப்பட்ட சம்பவத்தை முன்வைத்து "சட்டக் கல்லூரியில் ஒரு மாணவனை வாசலில் போட்டு மற்றொரு மாணவன் அரைமணி நேரமாக அடிக்கிறான். அதைத் தடுக்காமல் 360 போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர். குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதற்காகவே தி.மு.க.வைத் தோற்கடிப்போம்' என்று அப்பட்டமாகத் தேவர் சாதி வெறியைத் தூண்டிப் பிரச்சாரம் செய்தார்.


இந்து மதவெறிக்கும் தான் பங்காளிதான் என்பதை தா.பா. நடத்தும் ஜனசக்தி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பார்ப்பன பயங்கரவாதிகள் ஏற்றிப் போற்றும் சுவாமி விவேகானந்தரை "செங்காவிப் புயல்' என்றும் "செங்காவிச் சிங்கம்' என்றும் ஜனசக்தி புகழ்ந்து தள்ளுகிறது. ராஜாஜி ஒருமுறை "விவேகானந்தர் இந்தியாவையும் இந்து மதத்தையும் காப்பாற்றியவர்' எனப் புகழ்ந்ததையும் எழுதி ஜனசக்தி பூரித்துப் போகிறது. ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதா அம்மையாரின் "ஆன்மீகப் புரட்சியை' விலாவாரியாகப் புகழும் கட்டுரைக்கும் ஜனசக்தியில் இடமுண்டு.


இந்து மதவெறியை மூலதனமாக வைத்து அரசியல் செய்த திலகரை மாபெரும் தியாகியாகவும், சாதிவெறியர்களின் குலதெய்வமான முத்துராமலிங்கத்தேவரை மாபெரும் போராளியாகவும் சித்தரித்து இந்தத் தலைவர்களின் பிறந்தநாளை ஜனசக்தி கொண்டாடுகிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தி, திலகர் இந்து மதவெறியைப் பரப்பியதை எவ்விதக் கேள்வியும் கேட்காமல் அவரை விதந்தோதுகிறது.


ஜனசக்தியின் விற்பனைக்காக வெளியிடப்பட்ட விளம்பரம் "தொட்டுப் பார்த்தால் காகிதம்; தொடர்ந்து படித்தால் ஆயுதம்' என்று உரத்துக் கூவி இருக்கிறது. பாண்டியனின் ஆயுதத்தை நம்பி பார்ப்பன இந்து பயங்கரவாதத்தையோ, ஆதிக்க சாதி வெறியையோ எதிர்கொள்ள முடியுமா என்பதை வலது கம்யூனிஸ்டு கட்சியிலுள்ள புரட்சியை நேசிக்கும் அணிகள்தான் சொல்லவேண்டும்.


· தனபால்