Language Selection

புதிய ஜனநாயகம் 2009

நடந்து முடிந்த திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றியை "திருப்புமுனை ஏற்படுத்திய திருமங்கலம்'' என்று ஆளும் தி.மு.க.வினர் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அரசியல் பார்வையாளர்களும் ஊடகங்களும் தேர்தல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள திருப்பு முனைத் தேர்தல் என்பதாகக் குறிப்பிடுகின்றனர்.


திருமங்கலம் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை எல்லாமே வித்தியாசமாகவும் திருப்பு முனையாகவும்தான் அமைந்தது. கடந்த தேர்தலைவிட 18% வாக்குகள் அதிகமாகப் பதிவாகி, அதாவது இதுவரை கண்டிராத வகையில் 88.89% வாக்குகள் இத்தேர்தலில் பதிவாகின. தமிழகம், பீகாராக மாறிவிட்டது என்று மைய தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி புலம்பியதையடுத்து, திருமங்கலம் தொகுதியின் இடைத்தேர்தலைப் பாதுகாப்பாக நடத்தி "ஜனநாயகத்தை நிலைநாட்ட' இதுவரை கண்டிராத வகையில் 4700 மாநிலப் போலீசாரும் 487 துணை இராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர்.


திருமங்கலம் இடைத்தேர்தலில் ம.தி.மு.க.வுக்குப் பதிலாக இந்தமுறை அ.தி.மு.க. வேட்பாளர் நிறுத்தப்பட்டார். கடந்த முறை தனித்துப் போட்டியிட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தற்போதைய இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரித்தது. கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியிலிருந்த இடது, வலது போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் இம்முறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி கட்டிக் கொண்டன. வரப்போகும் நாடாளுமன்றத் தேல்தலுக்கான முன்னோட்டம் என்று பிரச்சாரம் செய்த ஜெயலிதாவின் கணக்கு பொய்த்துப் போய், அத்தொகுதியை அ.தி.மு.க.கூட்டணி இழந்திருக்கிறது. கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற ம.தி.மு.க.வின் வீர இளவரசன் 37.5% வாக்குகளைப் பெற்றிருந்த நிலையை ஒப்பிடும்போது, தற்போதைய தேர்தலில் அ.தி.மு.க. 29% வாக்குகளை மட்டுமே பெற்று, 8% வாக்குகளை இழந்திருக்கிறது.


இந்த இடைத்தேர்தலில் நடிகர் விஜயகாந்த், அரசியல் பார்வையாளர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டார். இம்முறை அ.தி.மு.க.வுக்கு இணையான வாக்குகளை தே.மு.தி.க. பெற்றுவிடும் என்ற கணிப்பு பலரிடமும் இருந்தது. ஏனெனில், முந்தைய இடைத்தேர்தல்களைவிட விஜயகாந்த் தம்பதியினர் தொகுதியெங்கும் அதிக நேரம் ஒதுக்கிச் சூறாவளிப் பிரச்சாரம் செய்தனர். இருப்பினும், முந்தைய தேர்தலில் 16% வாக்குகளைப் பெற்ற அக்கட்சி இம்முறை 9.5% வாக்குகளை மட்டுமே பெற்று கட்டுத்தொகையை இழந்துள்ளது. இதேபோல நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பரிதாபகரமாக வெறும் 831 வாக்குகளை மட்டுமே பெற்று தேர்தல் அரசியல் அரங்கில் காணாமல் போய்விட்டது.


மறுபுறம், தி.மு.க.வோ ஏறத்தாழ 28% வாக்கு வித்தியாசத்தில், அதாவது அ.தி.மு.க. வேட்பாளரை விட முப்பத்தொன்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. "தி.மு.க.வினரையே பிரமிப்பில் ஆழ்த்திய இந்த வெற்றிக்கு தளபதி அழகிரியே காரணம். நாற்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அவர் அறிவித்த கணிப்பு அவ்வளவு துல்லியமாக பலித்துள்ளது'' என உடன் பிறப்புகள் மட்டுமின்றி, கிசுகிசு பத்திரிகைகளும் அழகிரியின் தேர்தல் வியூகம், உத்திகள், செயல்முறை பற்றிய அலசல்களை எழுதி சிலாகிக்கின்றன. எல்லா பத்திரிøககளும், இதுவரை கண்டிராத வகையில் திருமங்கலம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கட்சிகள் கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்தன என்பதை வெளிப்படையாகவே எழுதுகின்றன.


திருமங்கலம் தொகுதியில் ஏறத்தாழ 1,55,000 வாக்காளர்கள் உள்ளனர். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ரூ.1000 முதல் ரூ.5000 வரை அன்பளிப்பா க வாரியிறைத்தன. இவை தவிர மிக்சி, கிரைண்டர், செல்போன், திருநெல்வேலி அல்வா, சீமைச் சாராயம் என தனிக் கவனிப்புகளும் இருந்தன. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் திருமங்கலம் தொகுதி வாக்காளர்களின் கையில் அன்பளிப்பாகக் கொடுத்த தொகை சுமார் 78 கோடி ரூபாய் என்கிறது இந்தியா டுடே. இதன்படி, திருமங்கலம் தொகுதியில் வெற்றிபெற்ற தி.மு.க. வேட்பாளரான லதா அதியமான்தான், சட்டமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே "காஸ்ட்லி''யான உறுப்பினராக இருப்பார் என்கிறது அப்பத்திரிகை.


வாக்களர்களைத் தம்பக்கம் இழுக்க ஓட்டுக்கட்சிகள் தேர்தலின் போது ஒருசில இடங்களில் இலஞ்சம் கொடுப்பது வாடிக்கைதான் என்றாலும், இதுவரை கண்டிராத வகையில் கோடிக்கணக்கில் வாரியிறைக்கப்பட்டு, திருமங்கலம் இடைத்தேர்தல் ஓட்டுப் பொறுக்கி அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. ஓட்டுச்சீட்டு போலி ஜனநாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கையூட்டி வரும் அறிவார்ந்த கணவான்களுக்கு, திருமங்கலத்தில் நடந்த பணநாயகத் தேர்தல் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.


தி.மு.க.வின் பணபலம், அழகிரியின் "உத்திகள்' தான் திருமங்கலம் தேர்தல் ஏற்படுத்தியுள்ள திருப்பு முனையா? இத்தகைய பணபலமும் "உத்திகளும்' எதிர்க்கட்சித் தலைவியான பார்ப்பனபாசிச ஜெயாவிடமும் உள்ளது. எனவே, இவை மட்டும் திருப்பு முனையாகிவிட முடியாது.


ஒரு தொகுதியின் அனைத்து வாக்காளர்களையும் ஓட்டுக்கட்சிகள் விலைகொடுத்து வாங்கி விடமுடியும்; எச்சில் காசுக்காக ஒரு சிலரை ஊழல்படுத்துவது போய், ஊரையே ஒரு தொகுதியையே ஊழல்படுத்தி ஓட்டுப் பொறுக்கிகள் வெற்றியைச் சாதித்துவிட முடியும். இதுதான் திருமங்கலம் இடைத்தேர்தல் உணர்த்தும் மிக முக்கியமான திருப்புமுனைச் செய்தி.


திருமங்கலத்தின் பல இடங்களில் மக்கள் தங்கள் தெரு, ஊர் சார்பாக மொத்தமாக ஓட்டுக்கட்சிகளிடம் பணத்தைக் கேட்டு வாங்கி, தங்களுக்குள் "ஜனநாயக முறைப்படி' பிரித்துக் கொண்டுள்ளனர். பணம் கொடுக்கும் கட்சியினரைக் கையும் களவுமாக பிடித்துக் கொடுத்த எதிர்த் தரப்பினர், மக்களின் கண்டனத்திற்கு ஆளாகி, அதன்பிறகு ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி கூட்டணிகள் அதனைச் சரிகட்ட, சேரவேண்டிய பணத்தைக் கணக்கிட்டு அம்மக்களுக்கு தனியாகப் பட்டுவாடா செய்துள்ளன.


வாக்களிப்பதற்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்கிறது, சட்டம். ஆனால், ஓட்டுப் பொறுக்கிகளின் பணநாயகத் தேர்தலில் இவையிரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையாகவும் தார்மீக உரிமையாகவும் மாறிவிட்டன. திருமங்கலத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் வாக்காளர்களைக் "கவனித்த' விதத்தைப் பார்த்து, இங்கேயும் ஒரு இடைத்தேர்தல் வராதா என்று பிற தொகுதி மக்கள் ஏங்குமளவுக்கு, அங்கே பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது. ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்பெருச்சாளிகள் என்று பத்திரிகைகள் சித்தரித்து வரும் நிலையில், இப்போது ஒரு தொகுதியின் மக்களே ஊழல் சாக்கடையில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.


வறுமையிலுள்ள மக்கள் சில ஆயிரங்களுக்கு விலைபோவது நியாயம்தான் என்றால், பிறகு எல்லாவகை அயோக்கியத்தனங்களும் நியாயமாகிவிடும். பணத்திற்கு விலைபோகும் மக்கள் சாதிமதவெறிக்கு ஆட்பட மாட்டார்களா? அல்லது தனியார்மயம் தாராளமயத்துக்கு எதிராகப் போராடத்தான் முன் வருவார்களா? பணம் அவர்களது கைகளைக் கட்டி கண்களைக் குருடாக்கிவிடும். எல்லாவகை அநீதிகளையும் அடக்குமுறைகளையும் சொரணையின்றி நியாயப்படுத்தும் பிழைப்புவாதப் புதைசேற்றில் தள்ளிவிடும்.


இப்படி விலைபோவது மக்களை மேலும் புழுவைவிடக் கேவலமான அடிமைகளாக்குவதற்குத்தான் துணைசெய்யும். உலகின் பல சர்வாதிகாரிகள் இப்படி சில எலும்புத் துண்டுகளை வீசியெறிந்து, தமக்கென சமூக அடிப்படையை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பது வரலாறு. திருமங்கலமும் அப்படியொரு புதிய அத்தியாயத்தை தமிழக அரசியல் வரலாற்றில் தொடங்கியிருக்கிறது.


தேர்தலில் வாக்களிக்க திருமங்கலம் தொகுதி மக்களுக்கு கோடிகளை வாரியிறைத்து விலைபேசியது போதாதென்று, கடந்த ஜனவரி 18ஆம் தேதியன்று திருமங்கலம் தொகுதியிலுள்ள மக்கள் அனைவருக்கும் அசைவ விருந்து வைத்துள்ளது அழகிரி கும்பல். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவே இந்த விருந்து என்று கூறிக்கொண்டு, கோடிகளை வாரியிறைத்து மக்களை எச்சில் சோற்றுக்கு அடிமைகளாக்கியுள்ளது.


சிங்கள இனவெறி இராணுவத்தால் ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு, காடுகளில் குழந்தைகளோடு பட்டினியில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மரணவாயில் நிற்கும் நிலையில், கிஞ்சித்தும் சொரணையின்றி திருமங்கலம் தொகுதி மக்கள் தடபுடலான கறி விருந்துண்டு களித்திருக்கின்றனர். அழகிரியின் கட்அவுட்டுக்கு பாலாபிசேகம், "அண்ணலே'', "மிரட்சித் தலைவரே'', "தெய்வமே'' என்று அழகிரியின் அடிமைகள் சுவரொட்டிகள் பேனர்களை வைத்து தமிழகத்தையே நாறடித்துக் கொட்டமடிக்கின்றனர். இது தமிழினத்துக்கு நேர்ந்துள்ள மாபெரும் அவமானம்!


மக்களிடம் வேர்விடத் தொடங்கியுள்ள இந்தப் பிழைப்புவாதத்தை புரட்சிகரஜனநாயக சக்திகள் எதிர்த்து போராடி முறியடிக்கவேண்டும். இல்லையேல், எந்தவொரு அநீதிக்கும் அடக்குமுறைக்கும் தமிழகம் விலைபோகும்; சொரணையற்ற அடிமைகளின் நாடாக தமிழகம் சீரழிக்கப்பட்டுவிடும்.


· மணி