Language Selection

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை நகருக்கு அருகிலுள்ள கல்லாக்கோட்டையில் அமைந்துவரும் "கால்ஸ்'' சாராய ஆலையை எதிர்த்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் நடத்தி வரும் போராட்டத்திற்கு

 ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் ஆதரவு கொடுத்து வருவதையும்; அதே சமயம், பொதுமக்களின் ஊழியர்கள் எனச் சொல்லிக் கொண்டு திரியும் நீதிமன்றமும் போலீசும் கால்ஸ் ஆலையை எப்பாடுபட்டாவது இயங்கச் செய்துவிட வேண்டும் என்பதற்காகப் பல சதி வேலைகளைச் சட்டப்படியே செய்து வருவதையும் நமது வாசகர்கள் நன்கு அறிந்திருக்கக்கூடும். (பார்க்க: புதிய ஜனநாயகம் டிசம்பர் 2008 மற்றும் ஜனவரி 2009).


அப்பகுதி மக்கள் இச்சீமைச் சாராய ஆலையை எதிர்த்துச் சமரசமின்றியும் விடாப்பிடியாகவும் பல்வேறு வழிகளில் போராடி வரும் நிலையில் கடந்த 27.12.2008 அன்று போலீசு பாதுகாப்புடன் சாராய ஆலைக்குக் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த லாரிகளைப் பொதுமக்கள் மறித்தனர். உடனடியாகவே எவ்வித எச்சரிக்கையும் செய்யாமல், முபாரக் ஜான் என்ற துணை ஆய்வாளர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இத்தாக்குதலில் இருந்து தப்பிக்கச் சிதறிய ஓடிய பொதுமக்களை போலீசு விரட்டிவிரட்டித் தாக்கியது. குறிப்பாக, பெண்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். போலீசு தப்பியோடிய பொதுமக்களின் மீது மரக்கட்டைகளை எடுத்து வீசித் தாக்கியதில் ரவி என்ற இளைஞரின் மண்டை உடைந்து போனது. மேலும், கலவரத்தைத் தூண்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் லாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜல்லிக் கற்களை எடுத்து வீசியும் போலீசு தாக்குதல் தொடுத்தது.


தப்பியோடிக் கொண்டிருந்த பொதுமக்கள் ஒரு கட்டத்தில் அடுப்பெரிக்கக் குவித்து வைக்கப்பட்டிருந்த விறகுக் கட்டைகளை எடுத்துக் கொண்டு எதிர்த் தாக்குதல் தொடுத்துத் தங்களைத் தற்காத்துக் கொள்ள முயன்றனர். பொது மக்களின் அடி எப்படியிருக்கும் என்பதை அப்போலீசு கும்பல் அன்று ருசி பார்த்தது.


இச்சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே, மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் ஒரு பெரும் போலீசு பட்டாளம் கல்லாக்கோட்டையை முற்றுகையிட்டது. போலீசு பட்டாளம் வருவதை முன்பே பார்த்துவிட்ட பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் குழந்தை குட்டிகளோடு ஊருக்கு அருகாமையிலிருந்த காட்டுப் பகுதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். ஊருக்குள் நுழைந்த போலீசு பட்டாளமோ தப்பிப் போக இயலாத முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கியதோடு, 28 பேரை அடித்துப் போட்டு அள்ளிக் கொண்டு போனது. மேலும், 160 பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் பொய்வழக்குகளும் போடப்பட்டன. ஊருக்குள் யாரும் நுழைந்துவிடாதபடி போலீசின் கண்காணிப்புப் போடப்பட்டதோடு, அந்த வழியாகச் சென்றுவரும் பேருந்துகளும் சோதனையிடப்பட்டன. சீமைச் சாராய ஆலைக்கு எதிராகப் போராடிவரும் உள்ளூர் மக்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தாததுதான் பாக்கி. மற்றபடி கல்லாக்கோட்டை சுற்றுவட்டாரமே பயபீதிக்கு உள்ளாக்கப்பட்டது.

 
கைது செய்யப்பட்ட 28 பேரும் திருமயம் போலீசு நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பெருமாள் என்ற துணை ஆய்வாளர் தலைமையில் இத்தாக்குதலும் சித்திரவதையும் நடந்தன.


திருமயம் "நீதிபதி' சாந்தி, கைது செய்யப்பட்டவர்கள் சட்ட விரோதமான முறையில் தாக்கப்பட்டதையோ, அவர்கள் தரப்பு நியாயங்களையோ காது கொடுத்துக் கேட்காதது மட்டுமல்ல, அவர்கள் முகத்தைக்கூடப் பார்க்காமல் சிறையிலிட உத்தரவிட்டுத் தனது "கடமையை'ச் சரிவர செய்து முடித்தார். இதற்கான பலன் என்ன கிடைத்ததோ? உள்ளூர் பத்திரிகைகளோ போலீசின் அவதூறுகளையே செய்தியாக வாந்தியெடுத்தன.


தி.மு.க.வின் பெரும் புள்ளிகள் இச்சீமைச் சாராய ஆலையில் மூலதனம் போட்டிருப்பதாகக் கூறப்படுவதால், அதிகார வர்க்கமே கால்ஸ் ஆலையின் காலடியில் விழுந்து கிடப்பதைக் காண முடிந்தது. குறிப்பாக, கைது செய்யப்பட்ட 28 பேரையும் பிணையில் எடுக்க முயன்றபொழுது, அதற்குத் தேவையான சான்றிதழ்களைத் தரக்கூட கிராம நிர்வாக அலுவலர்கள் மறுத்துவிட்டனர்.


கால்ஸ் ஆலைக்கு போலீசு அடியாளாகச் செயல்பட்டு கல்லாக்கோட்டை பொதுமக்களை மிருகத்தனமாகத் தாக்கியதையும்; நீதிபதி சாந்தி இதற்கு ஒத்தூதியதையும் அம்பலப்படுத்தி ம.க.இ.க., பு.மா.இ.மு. மற்றும் வி.வி.மு. சார்பாகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களும், அவ்வமைப்பைச் சேர்ந்த பிற தோழர்களும் கல்லாக்கோட்டை கிராமத்திற்கு நேரடியாக வந்து, இத்தாக்குதல் பற்றி பொதுமக்களிடம் விசாரித்து அறிந்தனர். அவர்கள் இத்தாக்குதல் பற்றிய உண்மைகளை ஓர் அறிக்கையாகத் தயாரித்து, அதனை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து, சட்ட விரோதமாக நடந்து கொண்ட போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.


இதனையடுத்து மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் போலீசாரின் அட்டூழியத்தைக் கண்டித்தும், கால்ஸ் ஆலையை அப்புறப்படுத்தக் கோரியும் கந்தர்வக்கோட்டை போலீசு நிலையம் அருகில் 08.01.2009 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களும் அமைப்பாளர்களும் மட்டுமின்றி, ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன், பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம் மற்றும் புதுகை பகுதியில் இயங்கி வரும் தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. தரணி ம. ரமேசு, சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் மு.ரெங்கசாமி, இளைய சிங்க இயக்கத்தின் தலைவர் தோழர் கே.கே.கார்த்திகேயன், புதுகையைச் சேர்ந்த பல் மருத்துவர் என். ஜெயராமன் ஆகியோரும் உரையாற்றினர்.


பெரும் போலீசு பட்டாளத்தைக் குவித்துப் பீதியூட்டி ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்பதைத் தடுத்துவிட போலீசார் முயன்றனர். மேலும், வழக்கத்திற்கு மாறாக ஆர்ப்பாட்டம் நடந்த பகுதி வழியாக போக்குவரத்தை மாற்றியமைத்து ஆர்ப்பாட்டத்தைப் பிசுபிசுக்கச் செய்துவிடவும் போலீசார் முயன்றனர். எனினும், அப்பகுதி மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு போலீசாரின் சதிகளை முறியடித்து ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்தனர். போலீசு மட்டுமல்ல, கால்ஸ் ஆலையின் பினாமி முதலாளிகளும் மக்கள் சக்தியை எதிர்த்து நிற்க முடியாமல் தோற்றோடிப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.


— பு.ஜ.செய்தியாளர்கள்