முல்லைத் தீவில் உயிரிழந்த, படுகாயமுற்ற ஈழத்தமிழ் மக்களின் புள்ளிவிவரங்கள் தினசரிகளின் ஏதோ ஒரு பக்கத்தின்    மூலையில் ஒதுங்கி நீர்த்துப்போன செய்தியான போது கொழும்பில் வெற்றிக்கு மேல் வெற்றி குவித்த

 இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைகள் படோபடமாக வெளியிடப்பட்டன. முல்லைத்தீவில் ஓரே நாளில் 300 பேர் படுகொலை! இந்திய கிரிக்கெட் அணி 300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து வெற்றி ! மனித உயிரிழந்த புள்ளி விவரத்தின் அருகில் ரன்களுக்கான புள்ளி விவரம். இரண்டிலும் புள்ளி விவரம்தான், எனினும் ஆபாசமாக இல்லையா?

 

india-wins

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)

 

இந்தியாவின் தேசிய ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டிகளுக்காக செய்த கவரேஜில் நூற்றில் ஒரு பங்குகூட ஈழத்தின் அவலத்திற்காக ஒதுக்கவில்லை. கேப்டனாக தோனியின் சாதனை, இந்திய அணி தொடர்ந்து பெறும் ஒன்பதாவது வெற்றி, யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தெரிவு செய்யப்பட்டது எல்லாம் ஆர்வமாகவும், பெருமையாகவும் அலசப்படுகின்றன. ஆனால் முத்துக்குமாரின் தியாகத்தை எந்த ஊடகமும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. சில நூறு கிலோமீட்டர்களுக்கு அருகில் ஒரு இனமே பூண்டோடு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது கொழும்பில் கிரிக்கெட் போட்டி நடப்பதும், அதை இரசிகர்கள் அளவளவாவுதும், ஊடகங்கள் அதற்கு முதுகு சொறிவது எல்லாம் பார்க்கையில் எரிந்து கொண்டிருக்கும் ரோமாபுரியில் பிடில் வாசித்த நீரோ பரவாயில்லை!