பிரணாப் முகர்ஜியைக் கொழும்புக்கு அனுப்பியிராவிட்டால் அது தமிழகத்து மக்களுடைய உணர்வுகட்குச் சிறிது மரியாதை காட்டுகிற ஒரு செயலாக இருந்திருக்கும். இதற்கும் மேலாக அவரது வருகை பற்றிச் சொல்லுவது, அதன் தகுதிக்கு மீறிய முக்கியத்துவத்தை
அதற்கு வழங்குவதாக அமையும். 30.01.2009 அன்று தமிழக சட்டசபையில் 48 மணிநேரப் போர்நிறுத்தம் ஒன்று பற்றிப் பொயுரைக்கப்பட்டது. அது பற்றிப் பேச என்ன இருக்கிறது?
தேசிய இனப்பிரச்சினையைக் கடந்த இரண்டு தசாப்தங்கட்கும் மேலாக பயங்கரவாதப் பிரச்சினையாகவே காட்டிப் பழகி விட்ட ஒரு ஆளும் வர்க்கம் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் அற்ப அக்கறையுங் காட்டவில்லை. இப்போது அதன் பற்றி அக்கறையும் போரால் ஒளிருகிறது. எந்த அணுகுமுறையின் விளைவாக ஒரு தேசிய இனத்திற்கு எதிரான பாரபட்சம் இன ஒடுக்கலாகவும் அடக்குமுறையாகவும் முடிவிற் போராகவும் மாறியதோ அந்த அணுகுமுறை மேலும் மோசமாக இன்னமும் தொடர்கிறது. இப்போது அரசாங்கம் நாமெவரும் இன்னமும் பலகாலத்துக்குச் சரிவர அறிய இயலாத பெரும் விலைகளைக் கொடுத்துப் பெற்றுள்ள இராணுவ வெற்றியை முழுமைப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. அதனாற் கிடைக்கக் கூடிய அரசியல் அதிகார வலிமையும் பிற குறுகியகால நலன்களும் அதற்கு முக்கியமானவை.
இந்த வெற்றிகள் இந்த நாட்டில் 1977 க்குப் பிறகு படிப்படியாக இறுக்கமடைந்து வந்த சனநாயக மறுப்பினைத் துரிதப்படுத்த மிகவும் உதவியானவை. இந்த நாட்டின் நிர்வாகச் சீர்குலைவு, பெருகிவரும் ஊழல்கள், ஏலவே சீர்குலைந்துள்ள ஒரு பொருளாதாரம், விரைவில் அது ஏற்படுத்தப் போகின்ற துயரங்கள் போன்றவற்றைப் பற்றிய எச்சரிக்கைகளைத் திசை திருப்ப மிகவும் பயனுள்ளவை. எனவே, விடுதலைப் புலிகள் முற்றாகவே முறியடிக்கப்பட்டாலும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி அரசாங்கம் அக்கறை காட்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. மாறாகப் பேரினவாத வெறியர்களது ஆதிக்கம் ஓங்கிவருகிற சூழலே எனக்குத் தெரிகிறது.
இப்போதைய நிலவரம் எங்கே எப்படிப்போ முடியும், அது எப்படித் தொடரும் என்ற விதமான ஊகங்களையெல்லாம் ஒரு மூலையில் மூட்டை கட்டி வைப்போம். போர் மூலம் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்க இயலாத போதும், போர் மூலமே அதைத் தீர்ப்பதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது என்கிற யதார்த்தத்தை நாம் ஏற்றாக வேண்டும்.
விடுதலைப் புலிகள், பயங்கரவாதம் என்பன மையப்படுத்தப்பட்ட அரசியற் சூழலில் அவர்களுக்கு ஆதரவாகத் தோன்றக் கூடிய ஒவ்வொரு கருத்துக்கும் தேசத் துரோக முத்திரை குத்தப்படும். அது மட்டுமல்லாது, அதிகாரப் பரவலாக்கமும் சமஷ்டியும் சுயநிர்ணயமும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு விரோதமானவையாகவே காணப்படும் வாய்ப்பு அதிகம். கடந்த அறுபதாண்டுகாலத் தேசிய இனப்பிரச்சினை எப்படி விருத்தியானது என்பது சிங்கள மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது. கடந்த முப்பதாண்டுகாலக் கொடுமைக்குப் பயங்கரவாதத்தின் அடிப்படையிலேயே விளங்கங்கள் தரப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ் மக்கள் பட்டுவந்துள்ள இன்னல்களோ அவர்களில் ஏறத்தாழ மூன்றிலொரு பங்கினர் புலம்பெயர நேர்ந்த காரணங்களோ பற்றி அதிகம் பேசப்படப் போவதில்லை. பேரினவாதத்தால் ஒரு நூற்றாண்டு காலமாக ஒவ்வொரு தேசிய இனத்தைப் பற்றியுங் கட்டியெழுப்பப்பட்டுள்ள படிமங்களும் புனையப்பட்டுள்ள வரலாறும் தேசிய இனப்பிரச்சினையின் சுமுகமான தீர்வுக்கு எதிரான திசையிலேயே நாட்டைச் செலுத்தி வந்துள்ளன. இதிற் கடந்த முப்பதாண்டுக் கால விஷமங்கள் முக்கியமானவை.
அரசாங்கம் மட்டுமன்றிப், பிரதான எதிர்க்கட்சியும் ஜே.வி.பி.யும் பிற பேரினவாத அரசியல் அமைப்புகளும் தேசிய இனப்பிரச்சினையை விடப் பயங்கரவாதத்தையே முதன்மைப்படுத்தி வந்துள்ளன. இதில் யூ.என்.பி. தலைமை கடந்த ஒரு வருடத்தில் விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்துவதில் தனது பங்கிற்கு உரிமை கொண்டாடி வருவது கவனிக்க உகந்தது. தென்னிலங்கையின் பிரதான ஊடகங்கள் பற்றி நான் அதிகங் கூற வேண்டியதில்லை.
போர் அதன் இப்போதைய வடிவில் முடிவுக்கு வந்தாலும், இராணுவ நடவடிக்கைகள் இன்னமும் சில காலத்துக்கேணுந் தொடரும். பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரின் பல்வாறான இராணுவ செயற்பாடுகளைத் தொடருவதற்கான சாத்தியப்பாடுகள் பிறநாடுகளிற் போல இங்கும் உள்ளன. எனவே வேண்டியோ வேண்டாமலோ தமிழ் மக்கள் தமது இருப்புக்கும் நிலைப்புக்கும் போராட வேண்டிய நிலைமைகளே தொடரும்.
அதேவேளை, தமிழ் அரசியற் கட்சிகள் எனப்படுவன விடுதலைப் புலிகளைப் பற்றி என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், தத்தமது அரசியல் வலிமை பற்றி எந்த விதமான மதிப்பீட்டை வைத்திருந்தாலும், தம்மைப் பற்றிய எவ்விதமான படிமத்தை உருவாக்க விரும்பினாலும், நடைமுறையில் விடுதலைப் புலிகளையே பிரச்சினையின் மையமாகக் கொண்டே செயற்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளை முறியடித்தால் அல்லது ஒழித்துக் கட்டினாலே தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இயலும் என்று சொல்கிறவர்களாயினும் விடுதலைப் புலிகளே ஏகப் பிரதி நிதிகள் என்று சொல்லளவிலேனும் ஏற்றவர்களாயினும் விடுதலைப் புலிகளையே மையப்படுத்துகின்றனர். பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவ்வளவு தூரம் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு உதவக் கூடிய செயற்பாடுகள் எவ்வளவு தூரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்வது நல்லது. எல்லாருடைய அரசியல் இருப்பும் ஏதோ விடுதலைப் புலிகள் மீதும் அவர்கள் ஆயுத வலிமை மீதுமே தங்கியிருந்துள்ளன.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் அந்நிய நாடுகளின் அக்கறையும் சில நாடுகளது பங்களிப்பும் மிகையாகவே மதிப்பிடப்பட்டு வந்துள்ளன. இலங்கையில் தமது பொருளாதார, அரசியல், இராணுவ ஆதிக்கத்தை நிலை நிறுத்துகிற அக்கறைகளைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல் அந்நிய நாடுகள் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் அக்கறை காட்டுகின்றன என்று அதையே தமது பிரதான அக்கறையாக அந்தந்த நாடுகள் கருதுவதாகச் சொல்வது, முக்கியமாகத் தமிழ்த் தேசியவாதிகட்கு, வசதியாக இருந்தது. அதேவேளை, எந்தவிதமான அயற்குறுக்கீடும் பற்றிய அச்சமே பேரினவாதிகள் தரப்பில் வலுவாக இருந்து வந்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடை, இலங்கைப் படையினருக்குப் பயிற்சி, அரசாங்கத்துக்கு இராணுவ உதவி, தளபாட வழங்கல், பயங்கரவாத எதிர்ப்புப்போருக்கு ஆதரவு என்பன மகிழ்வுடன் வரவேற்கப்பட்ட அதேவேளை, இலங்கையில் (அரச அனுசரணையுடன் இல்லாவிட்டால் அக்கறையின்மையின் துணையுடன்) நடந்தேறும் மனித உரிமை மீறல்கள் முதலாகத் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வரையிலான கருத்துக்கள் வரை பகைமையுடனேயே நோக்கப்பட்டன.
இவற்றையெல்லாம் வைத்து நோக்கும் போது, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சிங்கள, தமிழ்த் தேசியவாதிகளது தரப்பிலோ பிறதேசிய இனங்களது தலைமைகளின் தரப்பிலோ எவ்வளவு முக்கியம் பெற்றுள்ளது என்று விளங்கும். விடுதலைப் புலிகளின் வெற்றி மூலம் அது இயலுமாகும் என்று நினைத்தவர்கள், அது இயலுமாயிருந்தாட் கூட, உருப்படியான எந்தப் பங்களிப்பையும் வழங்கினார்கள் என்று நான் ஏற்கமாட்டேன். மற்றவர்களைப் பொறுத்தவரை, தேசிய இனப்பிரச்சினையின் தீர்வின் அவசியத்தைத் தட்டிக்கழிக்கும் ஒருவசதியாகவே அவர்கள் விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வளவு காலமும், பாராளுமன்றத் தலைமைகள் முதலாகப் போராளி இயங்கங்கள் வளர கையாண்டு வந்த போராட்ட முறைகள் சிலவற்றை முற்றாக நிராகரிக்க வேண்டி வரும். சிலவற்றைக் கவனமான மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டி வரும். புதிய அணுகுமுறைகள் தேவைப்படும்.
இப்போதைய நிலவரம் எங்கே எப்படிப்போ முடியும், அது எப்படித் தொடரும் என்ற விதமான ஊகங்களையெல்லாம் ஒரு மூலையில் மூட்டை கட்டி வைப்போம். போர் மூலம் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க இயலாத போதும், போர் மூலமே அதைத் தீர்ப்பதில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது என்கிற யதார்த்தத்தை நாம் ஏற்றாக வேண்டும். போர் அதன் இப்போதைய வடிவில் முடிவுக்கு வந்தாலும், இராணுவ நடவடிக்கைகள் இன்னமும் சில காலத்துக்கேணுந் தொடரும். பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரின் பல்வாறான இராணுவ செயற்பாடுகளைத் தொடருவதற்கான சாத்தியப்பாடுகள் பிறநாடுகளிற் போல இங்கும் உள்ளன. எனவே வேண்டியோ வேண்டாமலோ தமிழ் மக்கள் தமது இருப்புக்கும் நிலைப்புக்கும் போராட வேண்டிய நிலைமைகளே தொடரும். எவ்வாறாயினும் இவ்வளவு காலமும், பாராளுமன்றத் தலைமைகள் முதலாகப் போராளி இயங்கங்கள் வளர கையாண்டு வந்த போராட்ட முறைகள் சிலவற்றை முற்றாக நிராகரிக்க வேண்டி வரும். சிலவற்றைக் கவனமான மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டி வரும். புதிய அணுகுமுறைகள் தேவைப்படும்.
போராட்டத்திற்கான இலக்குகள் விரிவுபடுத்தப்பட வேண்டியமை பற்றிப் பலகாலமாக எழுதியிருக்கிறேன். பரந்துபட்ட ஐக்கியம் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருடனான ஐக்கிய முன்னணி, வர்க்க அடிப்படையிலான தமிழ் மக்களின் ஐக்கியம், பிறதேசிய இனங்களுடனான ஐக்கியம், சர்வதேச அடிப்படையிலான ஐக்கியம் என்பன பற்றி மேலும் தட்டிக் கழிக்க இயலாது. தமிழ்த் தேசியவாதம், இது வரை தான் தட்டிக்கழித்த மேற்கூறிய விடயங்களை இனியும் தட்டிக் கழிக்க முற்படுமாயின் அது தன்னையும் அழித்துத் தமிழ்ச் சமூகத்துக்கும் பெருந் தீங்கு விளைவிப்பதாகவே அமையும்.
இது பசப்புக்கும் பம்மாத்துக்கும் உரிய நேரமல்ல. நேரத்துக்கு ஒரு கதை சொல்லி வந்த சிலர் இன்று செவது போல "நேற்றே எனக்குத் தெரியும் இப்ப நடக்குமென்று" என்று வாச்சவடால் விடுவதற்கான நேரமல்ல இது. தமிழ் மக்கள் அந்தரித்துப் போய் நிற்கிறார்கள். அவர்களது அவலம் தனியே அவர்களுடையதல்ல. அதிலே ஆதாயம் தேடப் பொய்மேல் பொய்யுரைக்கிற தமிழகச் சட்டமன்ற அரசியல்வாதிகளையும் தமது சுயலாபத்துக்காகவும் மூர்க்கத்தனமான பிடிவாதத்துக்காகவும் தவறான தகவல்களை வழங்கித் திசைதிருப்பி வந்த அறிஞர் பெருமக்களையும் ஆய்வாளர் "பரமார்த்தகுரு" தரவழிகளையும் ஒதுக்கி வைத்து மக்கள் தமது பட்டறிவின் அடிப்படையில் உண்மைகளை உய்த்தறிய வேண்டிய தருணம் இது. "எப்பொருள் யார் யார் வாக்கேட்பினும் அப்பொருள் மெப்பொருள் காண்பது அறிவு" என்பதைத் தமிழ் மக்கள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துவதற்கான தேவை அவர்களுக்கு உள்ளது.
இது குழப்பமான சூழல். எனவே தான் தெளிவான சிந்தனை மிகவும் அவசியமாகிறது.
ஞாயிறு தினக்குரலில் கோகர்ணன் எழுதிய "மறுபக்கம்" பத்தியிலிருந்து.....