Language Selection

சுதேகு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

என்னடா கொடுமை இது? சோத்துப் பருக்கைகளைக் கூட பெற நாதியற்ற யுத்தத்தை நடத்திக் கொண்டும், அதற்குள்ளே வன்னி மக்களை இருத்திக் கொண்டும் இலங்கை மக்கள் எல்லோரையும் ஏமாந்த சோணகிரியாக்கி வருகிறார்கள். "வன்னி மக்ககளை மீட்கின்ற அரசும்"! "வன்னி மக்களைக் காக்கிற புலிகளும்"! மெண்டு.

 

உலக உணவுத் திட்டத்தினர் உணவுகளை வன்னிக்குள் கொண்டு செல்ல முடியாமல் திண்டாடுகிறார்கள். இந்நிலையில, வன்னிக்குள் அவர்களைக் கூட்டிச் சென்று வருவதற்கான முயற்சியை தமிழ் கூட்டமைப்பினர் ஏன் முயலக் கூடாது? பட்டினிச் சாவுக்குள்ளும் அம்மக்கள் சிக்கி தவிக்காத படி உடனடியாகவே புலிகள் அம்மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி விட வேண்டு மென்றும் ஏன் கோரக் கூடாது? ஏன் புலம்பெயர் தமிழர்கள் இந்த விடயத்தில் அருளாமல் இருந்து வாருகிறார்கள். "யுத்தத்தை நிறுத்து, யுத்தத்தை நிறுத்து" என்று மூக்காலே சிந்துவதைத் தவிர, நாவில எதுவும் எழாதோ?

 

அது எப்படி நடக்கும். தனி ஒரு மனிதனில் நம்பிக்கை வைத்து தமிழீழ யுத்தத்தை நடத்துவதும், அது போல தனிமனிதர்களில் -வெளிநாட்டவரில்- நம்பிக்கை வைத்து யுத்தத்தை நிறுத்தக் கோருவதும் தமிழ் அதிசயப்பிறவிகள் காலங்காலமாக நடத்தி வருகிற கூத்துக்கள் தானே. இதுகள் பலிக்காமல் போனால் மட்டும் "முதிகிலை குத்தீட்டான்" என்று குத்தி முறிவார்கள் அல்லது தீக்குச்சி போல எரிந்து போவார்கள். அந்தந்த நாட்டு அரசியல் வாதிகள் தங்கடை நாட்டு உழவாரங்கள் எல்லாத்தையும் விட்டிட்டு இவர்களுக்காக மாரடிப்பார்கள் எண்டு, இதுகளும் மாய்ந்து கொண்டு திரிகிறார்கள்.

 

அங்காலே என்னெண்டால், சோத்தைக் குடுப்பதெண்டாலும் "பாதுகாப்புப் பிரச்சனை" யாம். யுத்தத்தையும் நடத்திக் கொண்டு பவுத்திரமும் வேற பாக்கிறார்கள். யாருக்கையா யுத்தம்? சோத்தைக் கூட குடுக்க முடியாத யுத்தத்தைக் கொண்டே குப்பயிலை கொட்ட வேண்டியது தானே. உயிரைப் பிடித்துக் கொண்டு, `பங்கரு`க்கை அல்லும் பகலும் படுத்துக்கிடக்கும் மக்களுக்கு நீங்கள் சொல்லுவதை எல்லாம் கேட்பதற்கு எங்கே காது கிடக்கிறது. அதுகும் போக புலிகள் பதுங்கிக் கிடக்கிற இடமெல்லாம் படத்தில் தெரிகிற அரசுக்கு, அங்க கிடக்கிற மக்களின் பாழும் வகிறு மட்டும் தெரியாதாக்கும் .அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் வந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கோ, அடுத்தவற்றை நிலையே தொரியாத அவர்களுக்கு "அறிவித்தல்கள்" எங்கே தெரிந்து விடப் போகிறது. எல்லாம் ஒப்புக்குச் சொல்லி விட்டு ஒழித்துக் கட்டுவதுதானே உங்கள் தொழில். இதுக்கிள்ளை தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான யுத்தமென்று புனிதமான காதல் வேறு.

 

குண்டுகளை போடுவதை நிறுத்தி விட்டு, ஒரு நாளைக்காவது பொட்டலத்தைப் போட்டால் என்ன குறைஞ்சா போய்விடும் அரசு. செக்கு மாடுகளாய்ச் சுத்திவரும் அரச குழுக்களுக்கு ஈயத்தைக் காச்சித்தான் ஊத்தவேணுமோ. "எவன் செத்தால் எமக்கொன்ன", இதுதானே இன்றைய மொத்த அரசியல். இதில் யாருக்கும் வெட்கமில்லை. ஊரை அடித்து உலையில் போடுவதுதானே நமது நாட்டு அரசியல். புலிகளை அழித்து விட்டால் பிறகு, பூத்துக் குலிங்கி நிக்குமாம் நாடு. ஜனநாயக மெண்டால் அதுதான் ஜனநாயகமாம். அரசியல் சுதந்திரமும் அதுக்குப் பிறகுதானாம். இதுகளைப் போல சொக்கத் தங்கங்கள் கிடைக்கக் குடுத்து வைத்திருக்க வேணும்.

 

சும்மா சொல்லக் கூடாது. இப்ப சின்னச் சின்ன ஆசையில இவர்கள் கிறுங்கிப் போய் கிடக்கிறார்கள். பிள்ளையானும் இப்ப தானாம் முதலமச்சருக்குத் தோதில்லையாம். கருனாவும் முந்தியடிச்சுக் கொண்டு மகிந்தாவின் கட்சியில தாவியாச்சு. தமிழ் மக்களுக்கு புதிய கூட்டணிகளும் முடிஞ்சாச்சு. எனி என்ன அரசியல் பெருச்சாளிகளுக்கு குறைவே இல்லை. இனித் தமிழ் மக்களுக்கு சுகங்களெண்டால் கூரையைப் பிச்சுக் கொண்டு கொட்டோ கொட்டென கொட்டப் போகுது. அதிசயமெண்டால் உலக அதிசயம். இது `அச்சாப் பிள்ளை`களின் காலம்.

 

இவர்கள் அரசியலில் அடிச்சுப் பிடிச்சு விளையாடுவார்கள். ஆரும் கண்டுகொள்ளக் கூடாது. அதுதான் "அரசியல் சுதந்திரம்" வந்தாச்சே. போதாததுக்கு அபிவிருத்தி என்ற பேரில வெளிநாட்டு காசுகள் தண்ணியாய் பாயப்போகுது. அதுதான் அரசோடை படுகிடையாய் கிடந்து தான் அரசியல் பண்ணவேணும். இல்லை எண்டால் மடியை நிறைக்கிறேக்கு ஏது வழி. இனி கால் தடக்கி விழும் அளவுக்கு பல்தேசிய கம்பனிகள் நிறைந்து விடும். வெளிநாடுகளில சூழல் பாதுகாப்பு சட்டத்துக்கு அமைய, பல கம்பனிகள் பெருந் தொகையான பணத்தை சூழல் பாதுகாப்புக்காக செலவிடுகிறது. இவற்றை சேமித்துக் கொள்வதற்காக இந்த மாசுபடும் உற்பத்திகளை எமது நாடுகளுக்கு நகர்த்தி விடுவார்கள். எங்கட தலைகள் தான் இருக்கிறதே இந்தக் கழிவுகளையும் காவ. இதனால் தொற்றுகின்ற கொடிய நோய்களும், இயற்கை அழிவும் எங்களுக்குத் தானே. அதுதான் நாங்கள் மானிசரே இல்லைத்தானே. எங்களை அறுத்து, இந்த நோய்களுக்கு மருந்துகளைக் கண்டுபிடிக்க நாங்கள் தானே பரிசோதனைச் சாலையும். பிறகு மருந்துகளையும் எங்களுக்குத் தானே விற்றுவிட போறார்கள்.

 

வடக்கு, கிழக்கு, வன்னி எண்டு விவசாயம் பச்சைப் பசேலெண்டு மாறப் போகுது. பசுமைப் புரட்சி எண்டால் இதெல்லோ பசுமைப் புரட்சி. ஆனா விதை தனியாங்களெண்டு எதுவும் இருக்காது, மறு உற்பத்தி செய்ய. எல்லாம் மரபணு உற்பத்திதான். விதைகளைக் கூட அவர்களிட்டைத்தான் வாங்கனும். இலங்கையின் உற்பத்தி கூட, ஏகாதிகத்தியங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். என்ன எங்கட நாட்டு உழைப்பை கப்பிப் பாலாய் பிழிந்தெடுத்துக் கொண்டு போவார்கள். இதுக்குத்தான் "அரசியல் சுதந்திரம்" எண்ட சோக்கான மந்திரம்.

 

ஐபோப்பிய நாடுகளில இருக்கிற ஜனநாயகம் மற்றும் அரசியல் சுதந்திரம் போல எங்கட நாட்டிலையும் வருமெண்டு இவர்கள் குழையடிக்கிறார்கள். இவர்களுக்கு புத்தி பேதலிச்சுப்போய் கிடக்கிறது. கிட்டத்தட்ட நூறாண்டு காலமாய் காலனி நாடுகளுக்கு "அரசியல் சுதந்திரம்" வழங்க வேணுமெண்டு, அமெரிக்கா விடாது பரிந்துரைத்த மாற்றான் சுதந்திரம் தான் இது. ஐரோப்பிய நாடுகளின் கீழிருந்த காலனிகளை தனது முற்றுகைப் பொருளாதாரத்தின் ஊடுருவலுக்காக, மறுபங்கீடு செய்து கொள்ள கோரப்பட்ட அரசியல் சுதந்திரம் தான் இது. இதுக்காகத் தான் உள்நாட்டு யுத்தங்களும், இனக் கலவரங்களும், பாசிசங்களும் படைக்கப்பட்டன. இனி உள்நாட்டு உற்பத்திகளை முற்று முழுதாகக் கட்டுப்படுத்த புதிய உற்பத்தி முறைகள் கண்டுபிடிச்சாச்சு. வாச்சுப் போச்சு, மூன்றாவது உலக யுத்தத்துக்குப் போகத் தேவையில்லை, உலகை மறு ஒழுங்காக்க. இனி உள்நாட்டு யுத்தத்தை, இவங்களின் பாசிச புதல்வர்களையே கொல்லுகிற கொடிய யுத்தத்தால், மக்களைப் பீதிக்குள்ளாக்கி மீட்பர்கள் ஆகிறார்கள், அவ்வளவும் தான்.

 

ஆனாலும் இருக்கிறது நியூட்டனின் இரண்டாவது இயக்கவிதி! `ஒவ்வொரு தாக்கத்துக்கும் சமனும் எதிருமான மறு தாக்கம்`. ஆம், இவ் அபிவிருத்தியால் பெருக்கெடுக்கும் தொழிலாளி வர்க்கம்!! இந்தப் பரந்து பட்ட உழைக்கும் மக்கள் தங்கள் கைகளில் அதிகாரங்களைத் திரட்ட, இலங்கையில் ஒரு சரியான அரசியல் தலைமை குருத்தெறியுமா?

 

சுதேகு
080209