Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தத் தெரிவில் முக்கிய பங்கு புலிக்கு உண்டு. சமாதானம் மேல் நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள், யூ.என்.பி யை ஆதரித்து அவர்களை வெல்லவைத்து தம்மை தோற்கடித்த விடுவார்கள் என்று புலிகள் பயந்தனர். சமாதானம் மூலம் தம் எதிர்காலம் சிக்கலுக்குள்ளாவதை தடுக்கவும், யுத்தம் மூலம் தம் நிலையை இலகுவாக்க முடியும் என்று புலிகள் நம்பினர்.

இந்த அடிப்படையில் யுத்தத்தை வெல்ல விரும்பிய புலிகள், அப்பாவி வேஷம் போட்ட மகிந்தாவை தம் தேர்தல் பகிஸ்கரிப்பு மூலம் தெரிவு செய்தனர். தமிழ் மக்களை தேர்தலில் வாக்களிக்கவிடாது தடுத்து, தேர்தல் பகிஸ்கரிப்பாக மாற்றி யூ.என்.பி யைத் தோற்கடித்தனர். வன்னியில் ஓரேயொருவர் வாக்கு போட்டபோது, அவனின் கட்டை விரலையே புலிகள் வெட்டினர். இப்படி யூ.என்.பிக்கு வீழ்ந்த ஓரு வாக்கு மூலம், மகிந்த வெற்றி பெற்றார். மகிந்தாவை வெல்ல வைத்த இந்த இரகசிய சதிப் பேரத்தின் பின்னணியில், சில சலுகைகளை மகிந்தாவிடம் புலிகள் கோரினர். பணம் முதல் கருணாவை தம்மிடம் ஒப்படைத்தல் வரை அது நீண்டது.

 

புலியைப் போல் மகிந்தாவும் பாசிட்டாக இருந்ததால், சிலதைக் கொடுத்து புலிகளை இலகுவாக ஏமாற்ற முடிந்தது. புலிகள் தாம் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, அதை எதிர்கொள்ள வடக்கில் 'மக்கள் படை" என்ற பெயரில் தொடர்ச்சியான தாக்குதலை இராணுவம் மீது நடத்தினர். இப்படி மகிந்த பதவியேற்ற ஒரு மாதத்துக்கு உள்ளாகவே, உத்தியோகபூர்வமற்ற தாக்குதலை புலிகள் தம் சொந்த சதித்திட்டத்தினூடாகவே ஆரம்பித்து வைத்தனர். இன்று யுத்தத்தை நிறுத்து என்று கோசம் போடும் பினாமிகள், அன்று தலைவா! பொறுத்தது போதும் யுத்தத்தை நடத்து என்று அறிக்கைகள் பல விட்டனர். இவையெல்லாம் அவர்களின் பத்திரிகைகளில் காணமுடியும்.

 

இப்படி 'மக்கள்படை" தாக்குதல் நடத்த, இவை தாமல்ல என்று பல்லுத்தெரிய தமிழ்ச்செல்வன் பல அறிக்கைகள் வெளியிட்டவர். அதை கண்டுபிடிப்பது அரசின் பொறுப்பு என்றனர். இப்படி பாசிசம், தன் பாசிசத்தை அழிக்க பாசிசத்தை தெரிவு செய்யக் கோரியது.

 

ஆம் 'மக்கள் படை" காணாமல் போவபவராக, கடத்தப்படுபவராக, படுகொலை செய்யப்படுபவராக மாறி, புலியின் 'மக்கள் படை"யின் கதையே முடிந்தது. யாழ் குடாவில் புலியின் கதை முடிந்தது. இப்படி பாசிச வழியில் புலியை ஓடுக்கும் பணி, நாட்டின் முழுபகுதிக்குமானதாக மாறியது. இராணுவத் தளபதி, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய மீதான தற்கொலைத் தாக்குதல் தோல்வியும், இறுதியில் புலிகளின் வால் வரை சட்டத்தின் எல்லையைக் கடந்த பாசிச வழிகளில் அழிக்கப்பட்டது. புலிகள் அல்லாத பிரதேசத்தில், புலிகள் முற்றாக செயலிழந்தனர்.

 

புலிகளின் மாபியாத்தனம் மற்றும் விலைக்கு வாங்குவன் மூலம் ஆட்டிப்படைக்கும் இராணுவ வடிவங்கள், முற்றாக முடக்கப்பட்டு அவையும் அழிக்கப்பட்டது. தன்னார்வக் குழுக்களை பணம் மூலம், பெண் மூலம், தம் சார்பு செயலாக மாற்றிய அதன் எஞ்சி எச்சங்களைத் தான், இன்று அரசு தன் பாசிச வடிவத்தில் அடிபணிய வைக்கின்றது. இந்தப் பாசிசமின்றி புலியை வெல்ல முடியாது என்பதால், தானே பாசிசத்தை பதிலடியாக வைத்தது.

 

இந்த பாசிச வடிவம் அம்பலமாவதைத் தடுக்க, தம் எதிரணிகளை இதே பாசிசத்தைக்கொண்டு ஒடுக்கத்தொடங்கியது. மொத்தத்தில் தொடரும் மனித உரிமை மீறலை மூடிமறைக்க, பாசிசத்தைவிட்டால் அரசிடம்  வேறுவடிவம் கிடையாது.  

    

புலிகள் தொடங்கிய இரகசிய யுத்தம், அதை அழித்தொழிக்க அரசு தேர்ந்த வழிகள், பாசிசத்தின் வருகையை வெளிப்படையாக்கியது. இதன் பின் தான் புலிகளின் மாவிலாறுத் தாக்குதல், மூதூர் மூஸ்லீம் மக்களை அழித்தொழிப்பு தாக்குதல், என்று எல்லாம் என தொடர்ந்தன.

 

புலிகள் பாணியில் புலிகளை அழிப்பதை, பேரினவாத பாசிசம் தன் தேர்வாக்கியது. இதைத்தான் 'நாம் அல்லாத அனைவரும் புலிகள்" என்ற கோத்தபாய கூறுகின்றார். இப்படி இலங்கை ஒரு இருண்ட பாசிசத்தின் வழியில் ஆளப்படுகின்ற சூழல்தான், இன்று அரங்கேறுகின்றது. உள்நாட்டு யுத்தம், அதன் பின்னான பாசிசம், மொத்ததில் இதன்பின் அரசியல் துரோகமே அச்சாக உள்ளது.

 

மறுபக்கத்தில் சர்வதேச பொருளாதார நெருக்கடி, 40 லட்சம் வெளிநாட்டு சென்ற  தொழிலளார்கள் வேலை இழக்கும் அபாயம், இலங்கையில் வேலையையிழக்கும் நிலை,  உள்நாட்டு யுத்தம், நாட்டில் அமைதியின்மை உருவாக்கின்றது. நாட்டில் நிச்சயமற்ற எதர்காலத்தை உருவாக்கின்றது. நாட்டின் பொருளாதார நெருக்கடி, இதனால் பாசிசம் ஆளும் வர்க்கத்தின் பொதுத் தேர்வாகவுள்ளது. புலிகளுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வரவும், நாட்டை ஆளவும், பாசிசம் தான் ஓரே தேர்வாக உள்ளது.

 

இந்த தேர்வு அமெரிக்கா பிரஜாவுரிமை பெற்று அங்கு வாழ்ந்த மகிந்தாவின் தம்பி கோத்தபாய மூலம் அரங்கேறுகின்றது. மிக மோசமான பாசிசக் கண்ணோட்டம் கொண்ட, அமெரிக்க ஜனாதிபதி புஸ், பயங்கரவாதத்துக்கு எதிரான தம்முடன் இல்லாத அனைவரும்; பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்களே என்று கூறியதை, சரி என்று கூறிய கோத்தபாயவின் கூற்று தற்செயலானதல்ல.  

 

தாமல்லாத அனைத்தும் புலிகள் என்று முத்திரை குத்தி, பாசிசத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்த பாசிசம் இரகசியமாக நடத்திய கொலைவெறியாட்டங்கள், இன்று  வெளிப்படையாக அரங்கேறத் தொடங்கியுள்ளது. அதுவே இன்று இலங்கை கொள்கை கோட்பாடாக வெளிபடுகின்றது.

 

இதன் கீழ் இலங்கையில் ஜனநாயகத்துக்கு இடமில்லை. கூலிக் குழுக்களைக் கொண்ட பாசிச ஆட்சி நிறுவப்படுகின்றது.   
        
பி.இரயாகரன்
08.02.2009