Language Selection

புலியொழிப்பு ஊடாக, இலங்கை பாசிசத்தையே வெளிப்படையாக தெரிவுசெய்கின்றது. அந்த பாசிசம் தமிழின அழிப்பாக மகுடம் சூட்டுகின்றது.  கோத்தபாய வார்த்தையில் சொன்னால், தாம் அல்லாத அனைத்தும் புலி. அதாவது இரண்டு விடையம் தான் இருக்கமுடியும்; என்றான்.

 

ஓன்று புலிக்கு ஆதரவு. மற்றது புலி அழிப்புக்கு ஆதரவு. மற்றும்படி கருத்து எழுத்து சுதந்திரம் என்பது, சமூகத்துக்கு கிடையாது. இதைத்தான் இந்த அமெரிக்கா பாசிட் அறிவித்துள்ளான். இப்படி ஒன்று புலி அல்லது புலியை அழிக்கும் தாம் மட்டுமே இருக்க முடியும். இதுவல்லாத அனைத்துக்கும் இந்த நாட்டில் இடமில்லை என்றான்.

 

இந்த பாசிசத்தைத் தான், புலி சொன்னது, செய்தது. இன்று அதையே வெளிப்படையாக மகிந்தாவின் தம்பியும், யுத்தத்தை நடத்தும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவும் கூறுகிறான். இன்று நடைபெறும் காணாமல் போதல்கள், கடத்தல்கள், இனம் தெரியாத படுகொலைகள் அனைத்தும், இந்த அமெரிக்கா பாசிட்டின் தலைமையில், வழிகாட்டலில் நடைபெறுகின்றது. இப்படி இதனூடாகவே தமக்கு எதிரானவர்களை மட்டுமல்ல, புலியும் அழிக்கப்படுகின்து.  

 

இந்த நிலையில் புலியின் அழிவும், அது உருவாக்கும் அரசியல் வெற்றிடத்தை எது எப்படி பிரதியிடும்? புலிகளின் உதவியுடன் பேரினவாத பாசிசம் உருவாக்கியுள்ள கைக்கூலிகள் தான், இதை போட்டி போட்டு நிரப்புவர். அத்துடன் இன்று புலிக்கு பின்னால் துதிபாடும் பஜனை கோஸ்டிகளே, இதிலும் முன்னிலை வகிப்பார்கள். இப்படி தமிழினத்தை மீள அழிக்கும் ஒரு பாசிச நிகழ்ச்சிநிரல், இந்த வெற்றிடத்தை நிரப்பும். புலிக்கு நிகராகவே, அரசியல் கைக்கூலித்தனத்தின் மூலம் இது அரங்கேறும். இந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களே, எம்மினத்தின் கடந்தகால வரலாறாக உள்ளது. இவை மனிதத்;தன்மையற்ற பாசிச எல்லைக்குள், எங்கும் சூழ்கொண்டு காணப்படுகின்றது. 

 

ஏன் இந்த அரசியல் வெற்றிடமும், மீள் பாசிசமும்? 

 

இதற்கு மாறாக, எம்மண்ணில் சுயமான எதையும் புலிகள் விட்டு வைக்கவில்லை. மனிதனின் சுயம் என்பது, புலிகளால் துரோகமாக காட்டி அதை அழித்தொழித்தனர். சமூகத்தை வழி நடத்தக் கூடிய சுயமான சிந்தனை, சுய ஆற்றல், தியாக மனப்பான்மை கொண்ட மனிதத்தன்மை என, எதுவும் எம் மண்ணில் மிஞ்சியிருக்கவில்லை. அதை ஓட்டிய கருத்துகள் முதல் அதைக் கொண்டிருந்த நபர்கள் வரை, புலிப் பாசிசம் வேட்டையாடி அழிக்கப்பட்டது. இப்படி சமூகத்தின் ஆக்கம் அழிக்கப்பட்டு, இவையெல்லாம் புலிப் பாசிசத்தின் முன்னால் சிதைந்து போனது.

 

இப்படி தமிழினம் ஆற்றலற்ற ஒரு மலட்டு சமூகமாக மாற்றப்பட்டது. இதனால் தான் அரசியல் வெற்றிடம் உருவாகின்றது. பேரினவாத பாசிசத்தில் கூவும் கைகூலிகள், இதை நிரப்புவார்கள். புலி போற்றப்பட்டது போல், எதிர்நிலையில் இவை மந்தையாக்கப்பட்ட சமூகத்தால் போற்றப்படும்.  

 

அதிகளவு படித்த உயர் பதவிகாரர்களைக் கொண்ட எம் சமூகம், தன் உயர் பதவியின்  தகுதி காரணமாகவே கைக்கூலிச் சமூகமாகவே தன்னை வெளிப்படுத்திவந்தது. இவ்வளவு காலம் புலிக்கு பின்னால் துதிபாடிய கூட்டம்தான், இனி கூலிக் குழுவுக்காகவும் துதிபாடும். 

 

இந்த கூட்டம், சமூகக் கண்ணோட்டமற்ற படித்த மேதைகள், புலி போன்ற பாசிச கட்டமைப்பின் பின்னால் நக்கி பிழைக்கின்ற கடந்தகால வரலாற்றைத்தான், அவர்கள் தம் புத்திஜீPவித்தனமாக காட்டிவந்தனர். இப்படி தாம் பிழைப்பதே புத்திஜீவித்தனமானது. இப்படி சமூகத்தில் புரையோடியுள்ள ஒரு புற்றுநோயாக, இந்த படித்த மேதைகள் நக்கி பிழைக்கின்றனர். இதனால் சமூகத்தின் மேல் உண்மையான அக்கறையுள்ளவர்கள், இல்லாமல் போய்வி;ட்டனர்.

 

இந்த நிலையில் மூன்று பாத்தாண்டுகளாக எம்மை அடிக்கியாண்ட புலிகளின், பாசிச சர்வாதிகார மாபியத்தனத்தில் இருந்து சமூகம் விடுபடும் போது, அரஜாகமான வெற்றிடத்தில் மீளவும் கை;கூலிகள் மூலம் புதிய வடிவில் அழிக்கப்படும்.

 

புதிய பாசிச சூழல் எப்படிப்பட்டது?

 

இதுவோ புலியை மிஞ்சி மற்றொரு பாசிசம்;. கோத்தபாய கூறுவது போல் 'தாம் அல்லாத அனைவரும் புலிகள்" என்று கூறி ஓடுக்கும் நவீன பாசிசத்தில், எம் தேசம் இன்று காலடி எடுத்து வைத்துள்ளது.

 

புலிகளை மிஞ்சிய அதே கூற்று, அதே தாக்கம்;. ஆனால் இதுவோ அரச பயங்கரவாதத்தின் வடிவில் வருகின்றது. இலங்கையில் அரச எதிர்ப்பு பத்திரிகை முதல் அனைத்தம் இந்த பாசிச பிடியில் சிக்கிவிட்டது. புலிகள் செய்தது போல், இனம் தெரியாத கொலைகள், இதன் மேல் முதல் கட்டமாக ஏவிவிடப்படுகின்றது. வரலாறு மீண்டும் அதேபாணில் பாசிசமயமாகின்றது. 

 

புலிகளிடம் ஜனநாயகத்ததை மீட்ப்பதாக பறைசாற்றிய புலியெதிர்ப்பு புல்லுலுருவிகள் எல்லாம், இந்த பாசிசத்தில் புலியை மிஞ்சிய வக்கிரத்துடன் களம் இறங்கி குலைக்கத் தொடங்கியுள்ளனர்.

 

புலிகள் விட்டுச் செல்லும் வெற்றிடத்தில், அரச பாசிசத்தை இவர்கள் நிறுவார்கள். 'தாம் அல்லாத அனைவரும் புலிகள்" என்ற அடிப்படையில், மொத்த இலங்கையும் பாசிச கட்டமைப்பில் இறுக்கப்படும். மற்றுக் கருத்துகள், மக்கள் போராட்டங்கள் அனைத்தும் புலியாக முத்திரை குத்தப்;பட்டு அழிக்கப்படும். தமிழரின் உரிமை, புலியிசமாக காட்டி பாசிசத்தின் கோராப்பிடியில் ஓடுக்கப்படும். நாட்டில் நடக்கும் எந்தப் போராட்டமும், இந்த எல்லைக்குள் நசுக்கப்படும். இதுதான் உருவாகும் புதிய நிலைமையாகும்.

 

பி.இரயாகரன்
08.02.2009