எம்மின மக்களை பணயம் வைத்து, அவர்களை கொன்று குவித்து புலிகள் நடத்துவதோ சதி அரசியல். இதன் மூலமான அரசியல் பேரங்கள், இதை அடிப்படையாக கொண்ட போராட்டங்கள் எல்லாம், விழலுக்கு இறைத்த நீராகின்றது.

புலிகள் தம் தற்காப்பை, தம் இருப்பை தம் சொந்தப் போராட்டம் மூலம் அணுக வேண்டும். அவர்கள் தம் சொந்த வழியில் இதற்கு விடை காணவேண்டும். அதைச் செய்ய வக்கின்றி,  மக்களை பணயம் வைத்து, அவர்களை கொன்று குவித்து, இதன் மூலம் அரசியல் பேரம் பேச முனைவது, அடிமுட்டாள் தனமான பயங்கரவாதத் தற்கொலையாகும்.

 

இதன் பின்னணியில் புலிகள் நடத்தும், நடத்தவிருக்கும் போராட்டங்கள் புலிப் போராட்டம் போல் ஒரு அடி கூட முன்னேறுவதில்லை. அடிசறுக்கி வீழ்கின்றது. கடந்தகாலத்தில் அரசியல் பேச்சுவார்த்ததையை எப்படி தோற்கடித்து தாம் தோற்றனரோ, அப்படி இந்த போராட்டங்களும்  நடக்கின்றது.

 

மக்களை கொன்று குவிக்கும் காட்சிப் படங்களை காட்டி, தமிழ் மக்களை அணி திரட்டியது போல், உலகத்தை அணி திரட்ட முடிவதில்லை. இதற்கு உலகின் ஆளும் வர்க்கங்கள், புலியின் பாணியில் அவை தம் தீர்வை வைக்கின்றது. இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை, ஆயுதத்தை கீழே வைக்கக் கோருகின்றது. இதன் மூலம் இந்த மனித அவலத்தை தவிர்க்க வேண்டுகோள் விடுகின்றது. இப்படி புலிகள் நடத்திய அரசியல் பாணியில், பதிலடி தருகின்றது. அதற்கு அமைய புலிகள் ஊடாக ஏகாதிபத்தியங்கள் வைத்த கோசங்கள், புலிகளை முடக்க உதவுகின்றது.   

    

உண்மையில் ஏகாதிபத்தியத்தையும், சர்வதேச சமூகத்தையும் நோக்கி எதை வைத்திருக்க வேண்டும்.

 

1. இலங்கை அரசே! யுத்தத்தை நிறுத்து!

 

2. புலிகளே! மக்களை விடுவி!

 

3. சர்வதேச சமூகமே! மக்களை பொறுப்பெடு!

 

4. புலிகளே! மக்களை விடுவியுங்கள்! நீங்கள் உங்கள் வழியில் போராடி மீளுங்கள்!
 

இப்படி போராட்டங்கள் அதன் உண்மைத் தன்மையுடன் மக்கள் போராட்டமாக மாறியிருந்தால், உலகம் உங்களை திரும்பி பார்த்திருக்கும். உலகம் ஆயுதத்தை கீழே வை என்று கூறியிருக்க முடியாது. உங்கள் கோரிக்கையை நடைமுறைப்படுத்த கோரியிருக்கும். இதற்கு அமைய யுத்த நிறுத்தத்தை அது முன்வைத்திருக்கும்.

 

இதற்கு மாறாக ஏகாதிபத்திய சதிக்கு அமைய,  போராட்டத்தை புலிக்கு சார்பாக இசைவாக மாற்றி, எம்மை நாமே அழித்துக்கொள்ளும் போராட்டமாக சீரழிந்து போனது. எம் கண்ணை நாமே குத்திக்கொண்டோம்.

 

இலக்கற்றும், களைத்தும் போகின்ற கோசங்கள். விளைவு இரந்து வேண்டுவதும், உதவி கோரும் பிச்சைக்கார ஓப்பாரிப் போராட்டமாக மாறிவிடுகின்றது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்த, உணவை அனுப்பி போராட்டத்தை இழிவாடியது போல்தான் இதுவும்.

 

இதன் பின்னணியில் இதை வழிநடத்துபவர்கள் வெறும் புலிகளல்ல. ஏகாதிபத்திய நோக்குக்கு, இசைவான எல்லைக்குள் போராட்டத்ததை மட்டுப்படுத்தி வழிநடத்தப்படுகின்றது. அந்த வகையில் ஏகாதிபத்தியத்துடன் தொடர்புடைய நபர்கள், அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப போராட்டங்களை வழிநடத்தி முடக்குகின்றனர்.

 

இவர்கள் நடத்தும் போராட்டங்களில் மேடையேறும் மேற்கு அரசியல்வாதிகள் அனைவரும், ஏகாதிபத்திய நாட்டை ஆளும் அல்லது எதிர் கட்சியில் உள்ள ஏகாதிபத்திய பிரமுகர்கள்தான். அவர்கள் மனம் புண்படாத வண்ணம், அவர்கள் ஏற்றுக்கொள்ளும் கோரிக்கைக்குள், எந்த நிர்ப்பந்தத்தையும் தராத போராட்டமாக எம் மக்களின் போராட்டம் மழுங்கடிக்கப்படுகின்றது.  

       

இப்படி மக்கள் அவலம் மேல் மக்களை திரட்டும் போராட்டங்கள், ஏகாதிபத்திய நலனுக்கு இசைவானதாக மாறிவிடுகின்றது. பரந்துபட்ட வகையில் சர்வதேச சமூகத்தை,  அணி திரட்ட முடியாத கோரிக்கைக்குள் அரசியல்வாதிகளின் தயவை இரந்து பெறும் எல்லைக்குள்  முடங்கிவிடுகின்றது. ஓப்பாரி போராட்டமாக, இரந்துவேண்டும் போராட்டமாக,  பிச்சைச்காரர் போராட்டமாக கூனிக்குறுகி விடுகின்றது. இதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. இதையே எம் வரலாறு, மீண்டும் எமக்கு உணர்த்தி நிற்கின்றது.

 

பி.இரயாகரன்
06.02.2008