பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க முக்கியத்துவத்தையும், சமூதாயத்தில் அதன் நிலையையும், அதன் வளர்ச்சிக் கட்டங்களையும் விஞ்ஞான பூர்வமாக உணர்ந்து அதன் போராட்டங்களில் மிகவும் முன்னேறிய பகுதியினராக இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்.

 

தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைத் தவீர வேறு வர்க்க நலன்கள் எவையும் கம்யூனிஸ்டுக்களிடம் இல்லை. இருப்பினும் தொழிலாளி வர்க்கத்தின் மற்ற கட்சிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் முக்கியமாக இரண்டு வேறுபாடுகள் உண்டு. 

ஒன்று கம்யூனிஸ்டுகள் பலநாடுகளில் தொழிலாளர்கள் நடத்துகின்ற தேசீயப் போராட்டங்களை ஒரு வர்க்க ரீதியில் பொதுவாக உள்ள நலன்களை சுட்டிக்காட்டியே தேசீயப் போராட்டங்களை முன்னணிக்கு கொண்டு வருகின்றனர்.

இரண்டாவதாக முதலாளித்துவத்தை எதிர்த்து நடத்துகின்ற போராட்டங்களின் ஒவ்வொரு கட்டங்களிலும் வர்க்க இயக்கம் முழுமைக்கும் பொருந்துகின்ற நலன்களைப் பிரதிபலிக்கின்றனர்.

முதலாளித்தவம் என்னும் தனிவுடமை சமூதாயம் முழுவதையும் சுரண்டி மக்களை ஒடுக்குக்குமுறைக்குள்ளும், உழைப்புச்சுரண்டல்களையும் திணித்தே வளர்ச்சி அடைந்துவந்திருக்கின்றது. அதை பறிமுதல் செய்து மக்கள் அனைவருக்கும் பொதுவுடமையாக்கி வாழ வழி செய்வது 


கம்யூனிஸ்ட் தத்துவமும் கடமையுமாகிறது. 

தனி உடமை ஒழிப்பு என்பது கம்யூனிஸ்டுக்களின் கற்பனை தத்துவங்கள் இல்லை. சரித்திரத்தின் வளர்ச்சியை சார்ந்தது. பாட்டாளி வர்க்கத்தில் சிதறிக் கிடக்கும் தொழிலாளர்களை ஒன்றிணைத்து வர்க்க ரீதியில் பேரணியாய் திரளச் செய்து முதலாளித்துவ வர்க்கத்தை தூக்கி எறிய தயார்படுத்துவதும், அரசியல் அதிகாரத்தை ஒடுக்கி பொதுவுடமைக்குள் சமூகத்தை கொண்டு செல்வதும் கம்யூனிஸ்ட் தத்துவங்களாகிறது. 

இருப்பினும் கம்யூனிஸ்ட் மீது ஏகப்பட்ட எதிர்வாதங்கள் வைக்கப்படுகின்றன. தேசங்களையும், தேசீய இனங்களையும், குடும்ப அமைப்பு முறைகளும் ஒழிக்கப்படுமோ என்பதும், கம்யூனிஸ்டுக்கள் பெண்களையும் பொதுவுடமையாக்கி விடுவார்களோ என்றும் கேள்விகளை எழுப்புகிறது. 

முதலாளித்துவம் ஏற்கனவே பெண்களை ஆண்களின் சொத்தாகவும், ஆடு மாடுகளைப் போல தங்களுடைய உடமைகளில் ஒன்றாக வைத்திருக்கிறது. பெண்களை மூலதனமாக வைத்து விபச்சாரத்தை திணித்து சமூகத்தை பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றது. பெண் என்பவள் என்றுமே போகப் பொருளாகவும், அலங்கார பொம்மைகளாகவும், அந்தஸ்துக் குறியீடுகளாகவுமே சமூகத்தில் முதலாளித்துவமும் வைத்திருக்கிறது. இதில் கம்யூனிஸ்ட்டுக்களினால் இதற்கு மேலும் பெண்களை என்ன செய்துவிட முடியும்?

மதத்தை அடிப்படையாக வைத்து கம்யூனிஸத்தை எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மதம் ஒவ்வொரு காலகட்டத்திலும் திருத்தி அமைக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதிலும் கடந்த காலங்களில் சமூதாயம் வெவ்வேறு வளர்ச்சியை அடைந்து வந்திருந்தாலும் சுரண்டுபவனும் உள்ள சமூதாயமாகவே இருந்திருக்கின்றது. மதம் சமூகத்தில் சுரண்டல் வேலைகளை பக்தியின் அடிப்படையில் கையாள்கிறது. மத உணர்வும், ஒழுக்கநெறி போதனைகளும் சுரண்டல் அமைப்புக்கு ஆதரவாகவே இருந்து வந்திருக்கின்றது என்பதையும் மறுக்க இயலாது. 

முதலாளித்துவ சமூதாயத்தின் மூலதனம் எல்லா சுதந்திரங்களையும் உடையதாக இருக்கையில் லட்சக்கணக்கான தனிமனிதர்கள் எந்தவிதமான உரிமையும் இல்லாத அடிமைகளாய் இருக்கிறார்கள். முதலாளித்துவத்தின் தனி உடமையை தனி சுதந்திரத்தை ஒழிப்பதை தான் "தனி நபர் சுதந்திரத்தை ஒழித்து விடுகிறது கம்யூனிஸீயம்" என்று முதலாளித்துவம் அலறுகிறது. 

சமூகத்தில் வர்க்க முரண்பாடுகளை மறைந்து போகச் செய்யும் புரட்சியானது எண்ணங்களிலும் புரட்சிகரமான மாறுதல்களை உண்டாக்கியே தீரும். எதிர்ப்புகள் ஏற்படும் போதெல்லாம் புரட்சிக் கருத்துக்கள் புதைக்குழிக்கு போவதில்லை. மாறாக தீவிரமடைந்து சமூகத்தில் பெரும் தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்திவிடுகின்றன.


தமிழச்சி
05/02/2009