Language Selection

இலங்கையில் யுத்த பிரதேசமல்லாத இடங்களில் வாழும் இருபது லட்சம் தமிழர்களும், மிக அமைதியாகவே தாமும் தம்பாடுமாக வாழ்கின்றனர்.  இதற்குள் யுத்த பூமியில் சிக்கியுள்ள தம் உறவினர்களுக்காக ஏங்கும் ஒரு பிரிவினரும், இனம் காணப்பட்டவர்கள் காணாமல் போதலைச் சுற்றியும் எழும் பதற்றமும் பரபரப்பும் ஆங்காங்கே வெளிப்படுகின்றது. மற்றும்படி தம் இனம் அழிவதையிட்டு, அக்கறையற்ற வாழ்தலையே, எம் மண்ணில் வாழும் தமிழ் சமூகம் தன் வாழ்வாக தேர்தெடுத்துள்ளனர்.

தம் இனம் மீதான யுத்தம், பேரினவாத கொக்கரிப்புகள் என்று எதையும், சமூகம் எதிர்கொள்ளத் தயாராகவில்லை. புலம்பெயர் சமூகம் மட்டும், இடைக்கிடை புலியைச் சுற்றி உருவெடுத்து ஆடவைக்கப்படுகின்றது. மண்ணில் வாழும் மக்கள் அமைதியாகி, நடைப் பிணமாகிவிட்டனர். பேரினவாதத்தை நக்கும் கண்ட கண்ட நாய்கள், மக்களை மேய்க்;கும் நிலையில் மக்கள் வாழ்கின்றனர். இந்த நிலைமை எப்படி உருவானது.   

 

உண்மையில் இதை புலிகள் தான் உருவாக்கினர். தாம் அல்லாத எந்த செயலையும், எம் மண்ணில் உயிர்வாழ அனுமதிக்கவில்லை. மொத்தத்தில் அதை அழித்தன் விளைவு, சமூகம் செயலற்ற தன்மைக்கு சென்றுள்ளது. சமூகத்தில் எதைச் செய்தாலும் புலிகள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற பாசிச சர்வாதிகாரம், அவர்கள் மேலான அழித்தொழிப்பின் போது ஓட்டுமொத்த சமூகத்தை செயலற்றதாக்கியுள்ளது.

 

அனைத்தையும் புலியாக்கி, அனைத்தையும் அழித்தது. எதை செய்தாலும் அதன் மேல் புலி முத்திரை குத்தும் வண்ணம், எம் மண்ணை பண்படுத்தினர். இதனால் சமூகம் செயலற்றுப் போனது. யாரும் அவர்களை எப்படியும் மேய்க்கும் நிலைக்குள், சமூகம் மலடாக்கப்பட்டுள்ளது.

 

புலம்பெயர் சமூகத்திலும் இதுதான் நிலைமை. சமூகத்தின் உயிரோட்டமான அனைத்தையும் வெட்டிவிட்டு, தாம் மட்டும் வாழ்ந்துவிடமுடியும் என்ற புலிகளின் நிலைதான், இன்று புலிகள் தம் வரலாற்றில் இருந்து அழிந்து கொண்டிருக்கின்றார்கள். இதை மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருகின்றார்கள்.

 

புலம்பெயர் சமூகத்தை அவர்களின் உற்றார் உறவினர் ஊடாக இந்த சோகத்தைக் காட்டி களத்தில் இறக்கமுடிகின்றது என்பதற்கு அப்பால், அரசியல் ரீதியாக அல்ல. அந்த அரசியலை வெட்டியெறிந்தவர்கள், இந்தப் புலிகள் தான்.  

   

ஒரு இன அழிப்பு யுத்தம் முடிந்தபின், வடக்கு கிழக்கு தமிழினம் தன் மேலான இன அழிப்பு நடந்த உணர்வின்றியே வாழ்வது தவிர்க்கமுடியாது. அப்படியான ஒரு நிலையை, புலிகள் உருவாக்கிவிட்டுள்ளனர். 

 

பேரினவாதம் முதல் ஏகாதிபத்தியம் வரை, இதை நன்கு உணர்ந்து உள்ளனர். எந்த தீhவையும் தமிழினத்துக்கு வழங்கவேண்டிய அவசியமில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அதை கோரும் நிலையில் மக்கள் இல்லை. எலும்புக்கு அலையும் நாய்கள் மட்டும், அப்படி ஒன்றைப் பெறுவர்.

 

தமிழ்பேசும் மக்கள் தம் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் அடிப்படையிலான, அதன் உள்ளடக்கம் அனைத்தையும் விடுதலைப்புலிகளே அழிந்துவிட்டனர். அதைக் கோருவதை துரோகம் என்றனர். இப்படி மக்களின் உணர்வில், சிந்தனையில், செயலிலும் இருந்து அழிக்கப்பட்ட மக்கள், எந்த தேசிய உணர்வுமின்றி மலடாக்கப்பட்டனர். இதை அச்சத்துடன் காணும் வண்ணம், புலிகள் அதை நலமடித்துள்ளனர். இதன் மேல்தான், பேரினவாதம் ஏறி மிதிக்கின்றது.

 

மலையக மக்கள் மற்றும் மூஸ்லீம் மக்கள் இன்று வாழ்கின்ற நிலைக்கு, தமிழினம் அரசியல் ரீதியாக சிதைந்து போனது. ஒட்டுண்ணிகளும், பொறுக்கிகளும், பிழைப்புவாதிகளும் அரசின் தயவில் நக்கி வாழும் வாழ்வைத்தான், தமிழ் மக்களின் எதிர்காலம் என்று சொல்லும் நிலைக்கு தமிழினத்தை புலிகள் கொண்டு வந்து விட்டுள்ளனர்.

 

இந்த எல்லைக்குள் புலம்பெயர் சமூகத்திலும்;. மனித அவலத்துக்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் மக்கள் முன், கோமாளிகளும் அலுக்கோசுகளும் மேடையேறி நின்று பிதற்றும் அளவுக்கு, தமிழ் சமூகம் புலிகளால் தரம் தாழ்ந்து கிடக்கின்றது. இவர்களால் சமூகத்தை வழிநடத்த முடியாது என்பதும், இவர்களின் பிழைப்புக்கு அப்பால் தமிழ் சமூகத்துக்கு எந்த விடிவும் கிடைக்கப்போவதில்லை. இப்படி ஒரு வெற்றிடத்தில் எம் இனம் அழிகின்றது. 

 

பி.இரயாகரன்
05.02.2009