Language Selection

சூன்யம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில் வெளியான தோழர் சுடர் எழுதிய எம்.எஸ்.சுவாமிநாதன்: வேளாண் விஞ்ஞானியா?அமெரிக்கக் கைக்கூலியா என்ற கட்டுரையை கீற்று இணையதளம் வெளியிட்டிருந்தது. (http://keetru.com/literature/essays/sudar.php).

 

அதற்கு ரவி சீனிவாஸ் ஒரு எதிர்வினை எழுதியிருக்கிறார். அது கீற்றில் வெளியாகியிருக்கிறது. அந்தப் எதிர்வினையை தனது வலைத்தளத்திலும் எம். எஸ். சுவாமிநாதன், பசுமைப்புரட்சி-கட்டுரை- எதிர்வினை என்ற தலைப்பில் வெளியிட்டிருகிறார்.http://www.ravisrinivas.blogspot.com/

நண்பர்கள், அந்த இரு கட்டுரைகளையும் வாசித்தப் பின் இந்த மறுப்பை படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பல நூல்கள், ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கட்டுரை அமைவதால், நீளம் கருதி இதை பகுதிப் பகுதியாக வெளியிடுகிறேன்.

இந்த மறுப்பு ரவி சீனிவாஸ் என்ற தனி மனிதனுக்காக மட்டுமல்ல. அவரைப் போன்று இருக்கும் அனனத்து வலதுசாரிகளுக்காகவும்தான். இந்திய வேளாண்மை, விவசாயிகளின் நலன், குறித்த புரிதலுக்காகவும்தான். இன்று இணையத்தில் வளைய வரும் பல நண்பர்களுக்கு இந்திய விவசாயிகளின் நிலை தெரியவில்லை… அதாவது தெரிவிக்கப்படவில்லை. பசுமைப் புரட்சி என்ற பெயரால் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்த மோசடி கொஞ்சம் நஞ்சமல்ல. ரத்தத்தை உறைய வைக்கும் அந்த சரித்திரத்தை அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும்.

விவசாயிகளின் இப்போதைய வறுமை நிலைக்கு யார் காரணம்? கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொள்ளும் நிலமைக்கு அவர்களை தள்ளியது யார்? விவசாய நிலங்கள் நச்சுத்தன்மையுடன் பயனற்று போனதற்கு எது காரணம்… என முடிந்தளவு இந்தக் கட்டுரையில் ஆராய்ந்திருக்கிறேன்.  

பதிவாக, இதை பகிர்ந்துக் கொள்ள காரணமிருகிறது. இந்த நீண்ட நெடிய வரலாற்று பின்னணியை புரிந்து கொண்டால்தான், நக்சல்பாரிகளின் தேவையை, அவசியத்தை உணர முடியும். இந்தியா சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படும் காலத்தில் இருந்த கம்யூனிஸ கட்சிகளின் தலைமை விவசாயிகளுக்கு இழைத்த துரோகமும் இதனுள் அடங்கி இருக்கிறது. எம். எஸ். சுவாமிநாதன், போன்ற புறம்போக்கு கழிசடை, அமெரிக்க கைக்கூலிகளின் உருவாக்கமும் இதே வரலாற்றில்தான் புதைந்திருக்கிறது.

உணர்ச்சி வசப்பட்டு ரவி குறிப்பிட்டுள்ளார் பாருங்கள்…

// பசுமைப்புரட்சிக்கு எதிர்ப்பு வந்த போது அதை வலியுறுத்திஆதரித்தவர் 

அன்றைக்கு அமைச்சராக இருந்தசி.சுப்பிரமணியம். 

அவரும் அமெரிக்க கைக்கூலியா.//

கைக்கூலி அல்ல ரவி… இந்திய விவசாயிகளை அமெரிக்காவுக்கு கொத்தடிமையாக விற்ற ‘தலைவர்’தான் சி. சுப்பிரமணியம்.  இந்திய பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, பசுமைப் புரட்சி இந்தியாவில் வருவதை தடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் ‘திடீரென’ மறைந்துவிடவே, அவசர அவசரமாக எம்.எஸ். சுவாமிநாதன், சீ… மன்னிக்க, சி. சுப்பிரமணியம், துணையுடன் பசுமைப் புரட்சியை இந்தியாவின் வேளாண் முறையாக்கினார்.

சரி, பதிவுக்கு வருவோம்.

தகவல் பிழைகளோ, பொருள் பிழையோ இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.

- சூனியம்

ரவி சீனிவாஸ், பொய் சொல்லுவார், உண்மைகளை திரித்து கூறுவார் என்பதற்கு வலுசேர்ப்பது போலவே, அவரது இந்த எதிர்வினையும் அமைந்திருக்கிறது.

உண்மையில் ‘பசுமைப்புரட்சி’ என்பது என்ன, அது எப்போது தோன்றியது, ஏன் உருவானது, யாரால் - எந்த சூழலில் வடிவமைக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், ஆசிய வேளாண்மை என்றால் என்னவென்று பார்த்துவிடுவோம். அதாவது பசுமைப் புரட்சிக்கு முந்தைய காலகட்டம். இதை தெரிந்து கொண்டால்தான் பசுமைப் புரட்சியின் விபரீதத்தை முழுமையாக உணர முடியும்.

இந்திய - ஆசிய வேளாண்மை  ஒரு வேளாண்மை ஆவணம்என்பது நவீன வேளாண்மையின் தந்தை என்றழைக்கப்படும் சர் ஆல்பிரட் ஹோவர்ட் எழுதிய புகழ்பெற்ற புத்தகம். 1940களில் வெளியான இந்தப் புத்தகத்தில்,

 

ஆசியாவில் மிகவும் நிலைபெற்றுவிட்ட வேளாண்மை அமைப்பை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இன்று இந்திய,சீன சிறு வயல்களில் நிகழ்ந்து கொண்டிருப்பவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இடம் பெற்றுவிட்டன. கீழ்திசை வேளாண்மை நடைமுறைகள் உச்சகட்ட சோதனையிலும் வெற்றிகரமாக தேறிவிட்டது. பண்டைக் காலத்திய காடுகளைப் போல, புல்வெளிகளைப் போல, வேளாண்மையும் உறுதியாக நிலைபெற்றுவிட்டது..’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஆனால், ஆல்பிரட் ஹோவர்ட் இப்படி சொல்வதற்கு முன்பே, அதாவது 120 ஆண்டுகளுக்கு முன்பே, டாக்டர் ஜான் அகஸ்டஸ் வோல்க்கர் திட்டவட்டமாக ஆசிய - இந்திய வேளாண்மை முறையே சிறந்த முறை என புகழ்ந்திருக்கிறார். இவர் 1889ம் ஆண்டு, இந்திய வேளாண்மையில் வேதியியலைப் புகுத்த, ஆங்கில அரசுக்கு ஆலோசனை வழங்க, இந்திய அரசுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டவர்.

இங்கிலாந்திலுள்ள ராயல் வேளாண்மை நிறுவனத்துக்கு அளித்த அறிக்கையில் வோல்க்கர் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்:

இந்திய வேளாண்மை ஒட்டுமொத்தமாக மிகவும் பழமையானது என்றும் பிற்போக்கானது என்றும் கருதுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பெரும் பகுதிகளில், அதை மேலும் செழுமையடையச் செய்வது தேவையற்ற ஒன்று.இந்திய வேளாண்மையில் மேம்பாடு செய்வதை விட, ஆங்கில வேளாண்மையில் மேம்பாடு செய்ய பரிந்துரை செய்யலாம்.

 

சாதாரண வேளாண்மை நடைமுறையில், நிலத்தை களைகள் இல்லாமல் வைத்துக் கொள்வதில், தன்னிச்சையான நீர்ப்பாசன முறைகளை பின்பற்றுவதில், மண்வளம் பற்றிய அறிவியல், எப்போது விதைக்க வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்பது குறித்த அனுபவத்தில் இந்திய வேளாண்மையை விட சிறந்த ஒன்றை கண்டுபிடிப்பது கடினமான செயல். மாற்றுப் பயிர்முறை, கலப்பு பயிர்முறை ஆகியவை குறித்த அவர்கள் அறிவு அற்புதமானது. இப்படியொரு செம்மையான வேளாண்மை முறையை இதுவரை கண்டதில்லை என அடித்துச் சொல்வேன்..”

என்கிறார் வோல்க்கர். அதனால்தான், உலகப் போருக்கு முன்புவரை ஐரோப்பாவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்துவந்ததில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.

”1873ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பின்னர்,முதன்முதலாக கோதுமை 

இந்தியாவிலிருந்து வந்தது. இதற்குகாரணம், தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த 

ஒருபகுதியிலிருந்து மலிவான விலையில் தொடர்ந்துகோதுமையை பெற பிரிட்டிஷ் 

வியாபாரிகள்வலியுறுத்தியதுதான். அதனால்தான் தங்கள் பேரரசுக்குதொடர்ந்து 

உறுதியான கோதுமை பெற உகந்த இடமாகஇந்தியாவை, பிரிட்டன் கருதியது.

 இதனையடுத்துநூற்றாண்டுகளாக விவசாயிகள் பயிர் செய்து வந்த சிந்து,கங்கை 

நதிப்பள்ளத்தாக்குகளில் கால்வாய்களையும்,இருப்புப்பாதைகளையும் போடுவதில் 

தொழிற்சாலைபெருமுதலாளிகள் இறங்கினர்…” என்கிறார் பான் போர்கன்.

 

பல நூற்றாண்டுகளாக விவசாயிகள் தங்களுடைய சொந்த நிலத்தில், தாங்கள் பயிரிட்ட தானியத்தில் இருந்து, சிறந்த விதைகளை தேர்ந்தெடுத்து, பிரித்து, பாதுகாத்து, மீண்டும் விதைத்து, இயற்கை தன் போக்கிலேயே இழந்த உயிர்சத்துக்களை மீண்டும் பெற்றிட அனுமதித்து வந்திருக்கிறார்கள். 

ஒரேவார்த்தையில் சொல்ல வேண்டுமானால், பாரம்பரிய வேளாண்மை முறைகள் கலப்பு மற்றும் மாற்றுப் பயிர் முறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உதாரணமாக, பயறு வகைகள் பூமிக்கு அளிக்கும் நைட்ரஜன் சத்து, அடுத்ததாக பயிரிடப்படும் தானிய வகைகளின் விளைச்சலுக்கு பெருமளவு உதவியது.

இதற்கு மாற்றானதுதான் பசுமைப் புரட்சி. இது ஒரே மாதிரியான ஓரினப் பயிர்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது….

அதனால்தான் பயங்கரமான பஞ்சம் நிலவிய காலத்திலும் கூட, இந்தியாவெங்கும் ஒவ்வொரு வீட்டிலும் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டன; விதைகள் இல்லாமல் உணவு உற்பத்தி தடைப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கம்தான் இதற்கு காரணம்.

புரிகிறதா? இப்படி இனாமாக வயல்களில் இருந்து கிடைத்து வந்த விதைகளைத்தான், விலை கொடுத்து வாங்கும் பொருளாக பசுமைப் புரட்சி மாற்றியிருக்கிறது. அதுமட்டுமல்ல, விதைகளை வாங்குவதற்காக ஒவ்வொரு நாடும் சர்வதேசக் கடன்களை பெற வேண்டியிருந்தது; பெற்றே ஆக வேண்டும் என உலகவங்கி நிர்பந்தித்தது.

இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் விதைகளை பயன்படுத்த வங்கிக்கு படை எடுத்தனர். வேறெதற்கு கடன் வாங்கத்தான். ஆனால், ரவி இதை மறுக்கிறார். இதற்கான பதிலை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்…

இப்படி இருந்த இந்திய வேளாண்மை, ஏன் பசுமைப் புரட்சிக்கு சென்றது? இந்தக் கேள்விக்கான விடையை பார்ப்பதற்கு முன், பசுமைப் புரட்சியை எந்த சூழலில் அமெரிக்கா (சந்தேகமே வேண்டாம். அமெரிக்காவின் கண்டுபிடிப்புத்தான் இது)உருவாக்கியது என சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

முதல் உலகப் போருக்கும், ‘சுதந்திரத்துக்கும்’ இடைப்பட்ட காலத்தில், உலகப் பணவாட்டத்தின் காரணமாக ஏற்பட்ட ஏற்றுமதி சரிவு, பொருளாதர வீழ்ச்சி, 2ம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட முழுவதுமாக நொடிந்துப்போன கப்பல் போக்குவரத்து,

மும்பை கப்பல் தொழிலாளர் தோழர்களின் போராட்டம், எழுச்சி நினைவுக்கு வருகிறதா? அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் இங்கே நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்…

போன்ற காரணங்களால், இந்திய வேளாண்மைக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இதை மீட்டெடுப்பதற்கான சூழலியல் மாற்று மற்றும் தற்சார்பு குறித்து, ‘தலைவர்கள்’ ஆராய ஆரம்பித்தார்கள். 1942 - 1946 வரை தடைசெய்யப்பட்டிருந்த ‘மகாத்மா’ காந்தியின் ‘அரிஜன்’ பத்திரிகையில், 1946 - 47ல் வேளாண் பற்றாக்குறையை அரசியல் ரீதியாக எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என பல கட்டுரைகள் வெளியாகின.

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி எப்படி அதிகமான உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மீரா பென், குமரப்பா (ரவி சீனிவாஸ் குறிப்பிட்டுள்ளது இவரைத்தான்), பியாரேலால் ஆகியோர் கட்டுரைகளை எழுதினார்கள்.

//ஆனால் ஜே.சி.குமரப்பா போன்ற காந்தியர்கள் அதற்குமுன்பே இந்தியாவில் 

எத்தகைய வேளாண்மை வேண்டும்என்பதை எழுதியிருந்தனர். குமரப்பா 

என்ன எழுதினார் என்பதுஇந்தப் பொய்யர்களுக்கு தெரியுமா.//

என ஆவேசத்துடன் கீ போர்டை தட்டியபடி ரவி கேட்கிறார். கஷ்டம். ரொம்ப ரொம்ப கஷ்டம். குமரப்பா சொன்னது இந்திய வேளாண்மையை அப்படியே பின்பற்ற வேண்டும் என்றுதான். ஆனால், ரவி இதற்கு மாற்றான பசுமைப் புரட்சிக்கு கொடி பிடிக்கிறார்!! முன்னுக்குப் பின் முரண்.

சும்மா, நான்கு பெயர்களை தெரிந்து வைத்துக் கொண்டு ‘எதிர்வினை’ புரியக் கூடாது ரவி.

இந்த சூழலில்தான் சத்தமில்லாமல் அமெரிக்க நிறுவனங்களிலும், மானிய அமைப்புகளிலும் வேளாண்மை வளர்ச்சி குறித்து வேறுவித பார்வை உருவெடுத்துக் கொண்டிருந்தது. அதாவது ஆசிய உற்பத்தி முறைக்கு எதிரான மாற்றுப் பார்வை. இந்தப் பார்வையைத்தான் மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என்ற முடிவுடன் அமெரிக்கா களம் இறங்கியது.

இப்படி வேறு பாதைக்கு உலக வேளாண்மையை கொண்டு செல்ல வேண்டும் என அமெரிக்கா தீர்மானித்ததற்கு காரணம் என்ன தெரியுமா?  கம்யூனிஸம்!

ஆமாம், பசுமைப் புரட்சிக்கு காரணம் தோழர் மாசேதுங் மீது அமெரிக்காவுக்கு இருந்த பயம்தான்!!!!

தொடரும்