Language Selection

சூன்யம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கேள்வி:  தமிழீழத்திற்கானதாக என்ன அரசியல் அமைப்பை நீங்கள் கருதுகிறீர்கள்?

 

பிரபாகரன்: அது தமிழீழத்தின் ஒரு சோசலிச அரசாக இருக்கும்.மேலும் மக்களால் ஆதரிக்கப்படும் ஒரு தனி அரசியல் கட்சிமட்டும் அங்கிருக்கும். நான் பலகட்சி ஜனநாயகத்துக்குஎதிரானவன்.

அந்த ஒரு கட்சி ஆட்சி மூலமாகத்தான் ஈழத்தை துரிதமாக நாங்கள் முன்னேற்ற முடியும். ஒரு சோசலிச அமைப்பில் மக்களுடைய தேவைகள் மிக முக்கியமானவை.

 

கேள்வி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை வைத்திருப்பீர்களா?

 

பிரபாகரன்: இல்லை. மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே கட்சி மட்டும் உள்ள யுகோஸ்லாவியாவில் உள்ளதைப் போன்றதொரு பாணியிலான மக்கள் ஜனநாயகமாக இருக்கும்.

 

கேள்வி: டெலோ மீது ஒரு யுத்தத்தை நீங்கள் தொடுப்பதற்கான காரணங்கள் என்ன? தீவிரவாதிகளிடையேயான ஒற்றுமையின்மை உங்கள் இயக்கத்தை பலவீனப்படுத்தும் என்று நீங்கள் கருதவில்லையா?

 

பிரபாகரன்: எங்கள் போராட்டத்தில் ஒரு ஒருமைப்பட்ட அணுகுமுறையை நாங்கள்

மேற்கொள்ள வேண்டும். எங்களுக்குள் நிலவும் எந்த ஒற்றுமையின்மையும் தமிழ்

இயக்கம் முழுவதையும் பலவீனப்படுத்தும்.

 

எனது கருத்தின்படி போராட்டத்துக்கு தலைமையேற்க ஒரேயொரு தீவிரவாதகுழு மட்டுமே இருக்கவேண்டும். மேலும் சிரீலங்கா இராணுவதாக்குதல்கள் பலவற்றை எங்கள் புலிகள் மட்டுமே முறியடிக்க முடிந்தது. ஒரு ஒருமைப்பட்ட தனி இயக்கத்தோடு போரிடுவது சிரீலங்கா இராணுவத்துக்கு ஆபத்தானதாக இருக்கும். இப்போது ஒரே ஒருமைப்பட்டதாக புலிகள் இயக்கம் இருக்கிறது.

 

- 1986ம் ஆண்டு ஜூன் மாதம், ஆங்கில ‘இந்தியா டுடே’ மாதமிருமுறை இதழுக்கு பிரபாகரன் அளித்த பேட்டியிலிருந்து…

 

பிரபாகரனுக்கு…

 

ஈழ மக்கள் மருத்துவ வசதியில்லாமல் தொற்று நோய்க்கும், இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கும் ஆளாகி தவித்து வரும் நேரத்தில், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

 

உன்னை தோழர் என்று அழைக்கவோ, போராளி என ஒப்புக் கொள்ளவோ மனம் மறுக்கிறது. பசி, பட்டினியுடன் அடுத்த விநாடி உயிர் வாழ்வோமா என்ற நிச்சயமற்ற நிலமையில் ஒரு இனமே அழிந்து கொண்டிருக்கும்போது, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி சகோதரிகள் கதறிக் கொண்டிருக்கும்போது… எப்படி உன்னை புரட்சியாளனாக, மதிக்க முடியும்?

 

ஈழத்தமிழர்களின் இன்றைய நிலமைக்கு யார் காரணம் என எப்போதாவது உனக்குள் கேட்டிருக்கிறாயா? சிங்கள இனவெறிதான் இதற்கு காரணம்… இதுகூடவா தெரியாது என்று சொல்லிவிட்டு போகாதே. சிங்கள இனவெறி மட்டுமல்ல, உனது பாசிச நடவடிக்கைகளும் இன்றைய ஈழ நிலமைக்கு காரணம். இதுதான் உண்மை.

 

உன்னையும், உனது இயக்கத்தையும் வளர்த்து ஆளாக்கியது யார்? சத்தியமாக ஈழத்தமிழர்களல்ல. இந்திய உளவுப்படை! அதனால் தான் ஆரம்பம் முதலே உனது பயணம் தெற்காசிய பிரதேசத்தின் நாட்டாமையாக வலம் வரத் துடிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் உதவியை எதிர்பார்த்து நிற்பதாக அமைந்துவிட்டது. இது போதாதென்று உலக போலீஸ்காரனான அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் பிச்சை வேறு…

 

ஏன் பிரபாகரா, குள்ளநரிகளும் ஓநாய்களும், எதற்காக, எதன் பொருட்டு உதவி செய்யும், வளர்த்து ஆளாக்கும் என்ற தெளிவில்லாமலா ஒரு இயக்கத்தை கட்டி எழுப்பினாய்? அதுசரி, ‘விடுதலைப் புலிகள்‘ இயக்கத்துக்கு என்ன அரசியல் தெளிவு, சித்தாந்தம் இருக்கிறது? உனக்கு அரசியல் ஆலோசகராக இருந்த பாலசிங்கம் ஒரு போலி கம்யூனிஸ்ட். இந்திய உளவுத்துறையின் ‘முழுநேர ஊழியனாக‘ பணிபுரிந்த ஆள். அப்புறம் பழ. நெடுமாறன் வகையறா. பாசிஸ்ட் இந்திராகாந்தியை ஆதரித்த பழ.நெடுமாறனால் என்ன விதமான அரசியல் தெளிவை உனக்குள் ஏற்படுத்தியிருக்க முடியும்? தமிழக நக்சல்பாரிகளை கொடூரமாக தாக்கிய தேவாரம், மோகன்தாஸ் போன்ற அடியாட்களை பராமரித்த எம்.ஜி. இராமச்சந்திரனை புகழ்ந்த பழ.நெடுமாறானால் எப்படி போராளிகளுக்கு சித்தாந்தத்தை கற்று தந்திருக்க முடியும்?

 

அதனால்தான் உன்னால் உலகம் முழுக்க அரசியல்ரீதியான ஆதரவை திரட்ட முடியவில்லை. அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியவில்லை. எழுதப்பட்ட, எழுதப்படாத வரலாற்று நெடுகிலும், ‘ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது,  சித்தாந்தமல்ல. மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதியஜனநாயகபுரட்சியாக இருக்கும்’ என்று காணப்படுகிறதே… இதை நீ கற்காமல் போனதால்தான், உலகிலுள்ள புரட்சிகர இயக்கங்களுடன் உன்னால் தொடர்பு கொள்ளவோ, ஆதரவு திரட்டவோ முடியவில்லை.

 

புரட்சிகர நடவடிக்கையில் உன்னால் ஏன் இறங்க முடியாமல் போயிற்று? காரணம் உனது பிறப்பு! (புலிகள் இயக்கத்தின் தோற்றத்தை குறிப்பிடுகிறேன்). எல்.டி.டி.இ, எனப்படும் புலிகள் இயக்கம் வடக்கு மாகாணமான யாழ்பாணம் வளைகுடா பிராந்தியத்தைதளமாக கொண்டுதானே செயல்பட ஆரம்பித்தது. மேல்சாதி முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, பணக்கார விவசாயப் பின்னணியில் உருவான, உனது இயக்கத்தால், ஏகாதிபத்திய, பாசிச அரசாங்கத்தின் வால்பிடித்தபடி செல்லத்தான் முடியும்.

 

ஈழ மக்களை இப்படியான அவலநிலைக்குத்தான் கொண்டுவந்து நிறுத்த முடியும். தமிழக ஓட்டுக் கட்சிகள் என்னை ஆதரிக்கிறார்கள் என சந்தோஷப்படாதே. உனது பிறப்பை போலவே (இங்கும் புலிகள் இயக்கத்தின் தோற்றத்தை குறிப்பிடுகிறேன்) தமிழக ஓட்டுப் பொறுக்கிகளின் பிறப்பும் மேல்சாதி முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, பணக்கார விவசாயப்பின்னணியில் உருவானவைதான்.  அதனால்தான் ஓட்டுக் கட்சிகள் உன் புகழ்பாடுகிறார்கள்.

 

 

பிரபாகரா, ஈழத்தில் சொந்தக் காலிலும், வெளியில் புரட்சியாளர்களையும், பரந்துபட்ட மக்களையும் சார்ந்து நிற்கும் யுத்ததந்திரங்களை நீ கற்றிருந்தால், இன்று ஈழத்தின் நிலமையே வேறாக இருக்கும். ஆனால், இந்த போர்த்தந்திரங்களை உனது அரசியல் ஆலோசகராக தன் வாழ்நாள்வரை இருந்த பாலசிங்கம் சொல்லித்தந்திருக்க மாட்டான். காரணம் முன்பே சொன்னபடி பாலசிங்கமே ஒரு போலி கம்யூனிஸ்ட். அப்படியே தப்பித்தவறி பாலசிங்கம் உனக்கு இதையெல்லாம் சொல்ல வந்திருந்தாலும் நீ அதை செவிகொடுத்து கேட்டிருக்க மாட்டாய். காரணம், நீ முகஸ்துதியால் உருவானவன். பாசிஸ்டுகளிலேயே இரண்டுவகை உண்டு. ஒரு பிரிவினர் முகஸ்துதியால் சூழ்ந்திருப்பர். இன்னொரு பிரிவினர் முகஸ்துதியால் உருவாக்கப்படுவர். நீ இரண்டாவது வகையை சேர்ந்தவன்.

 

வரலாற்றில் தனிநபர்களின் பாத்திரம் குறித்த இயக்கஇயல் கண்ணோட்டம் புரட்சியாளர்களுக்கு உண்டு. சரித்திரம் சிலநாயகர்களை உருவாக்குவது போலவே, சரித்திரத்தின் போக்கைமாற்றும் பங்கும் இவர்களுக்கு உண்டு. இந்த விஷயம் உனக்கு பொருந்தாது.

 

காரணம், வசந்த் அண்ட் கோ விளம்பரத்தில் எல்லாம் கழிசடை வசந்தகுமார் சிரித்தபடி போஸ் கொடுப்பது போலவே, எல்லா புகைப்படத்துக்கும் நீ போஸ் கொடுக்கிறாய். இந்தியாவில் நீ இருந்த காலத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரிகைகளிலும் உனது பேட்டிகளும், செய்திகளும் வந்தன.அந்த விஷயத்தில் பாலசிங்கம் ஒரு திறமையான பி.ஆர்.வோ.வாக செயல்பட்டான். கிட்டத்தட்ட ஜூனியர்விகடன், உனது பிரச்சார பீரங்கியாக இருந்தது. இதெல்லாம் உனக்கு கிடைத்த அங்கீகாரம் என நினைத்தாயா? அடப்பாவமே… பிரபாகரா, இதற்கெல்லாம் ஆதாரமாக இந்திய உளவுத்துறை இருந்ததப்பா. அப்போது நீ, அவர்களது செல்லப் பிள்ளையல்லவா? அதனால் உன்னை சிங்காரித்து அலங்கரித்தார்கள். விதவிதமாக படம்பிடித்தார்கள்.ஊடகங்கள் வழியாக உன்னை குஷிப்படுத்தினார்கள். இப்போது இந்திய உளவுத்துறைக்கு நீ வேண்டாதவனாகி விட்டாய்.எனவே தொடர்புசாதனங்களும் உனக்கு எதிராக இருக்கின்றன. இதை புரிந்து கொள்ளாமல் இப்போதும் நீ, இந்தியா ஏதாவது செய்யுமா என ஏக்கத்துடன் காத்திருக்கிறாய்.

 

ஒன்றை புரிந்து கொள் பிரபாகரா… உண்மையான புரட்சியாளனும், போராளியும் ஒருபோதும் ‘தன்னை‘முன்னிலைப்படுத்த மாட்டான். இயக்கத்தையே முன்னிருத்துவான். புரட்சியாளர்களின் அகராதியில் எப்போதுமே, ‘நான்‘ கிடையாது. ‘நாங்கள்‘தான்.

 

உனது புகழ்பெற்ற வாசகங்கள் என்ன? ”யுத்த முனையில் எதுவும் ‘எனது‘ உத்தரவுபடியே நடக்கும். அவசர முடிவுகள் எடுக்க அங்கேயுள்ள ‘எனது‘ தளபதிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

அவர்கள் எல்லோரும் ‘நான்‘ எப்படி சிந்திப்பேனோ, அப்படி சிந்திக்க பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்…” அடேங்கப்பா, ஒரு இயக்கத்தையே அடியாள் படையைப் போல் நடத்தும் வல்லமை பாசிஸ்டுகளுக்கு மட்டுமே கைவந்த கலை. அதனால்தான் அது, உனது கலையாகவும் இருக்கிறதா?

 

இலங்கையின் அதிபனாக இருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் உனக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ராஜபக்சே ஒரு சிங்கள பிரபாகரன் என்றால், நீயொரு தமிழ் ராஜபக்சே. ஒரே தளத்தில், ஒரே சிந்தனையில் உள்ள நீங்கள் இருவரும் (இரண்டு பாசிஸ்டுகளும்)மோதுவதால் ஒரு இனமே சீர்குலைந்து போயிருக்கிறது.

 

அடிக்கடி நீ சோசலிசம், மக்கள் ஜனநாயகம் என உச்சரித்து வார்த்தை விளையாட்டை நடத்தலாம். ஆனால், இட்லர் கூட தேசிய சோசலிசம், கட்டுப்பாடு, ஒழுங்கு, தேசிய அவமானத்துக்கு பழிவாங்குவது, தேசிய கெளரவத்தை நிலைநாட்டுவது என்ற பெயரில்தான் ஆட்சிக்கு வந்தான்… இதை வரலாறு அறியும்.

 

மீண்டும் அழுத்தம்திருத்தமாக சொல்கிறேன். எந்தவொரு இராணுவ வெற்றியும் நிரந்தரமானதல்ல. இது உனக்கு மட்டுமல்ல, இலங்கை இராணுவத்துக்கும் பொருந்தும். என்றைக்குமே நீ, தமிழ் மக்கள் மத்தியில் உன் அரசியல்கொள்கையை முன்வைத்து ஆதரவு திரட்டியது கிடையாது. உனக்கு போட்டியான அமைப்புகள் புரிந்த மக்கள்விரோதச் செயற்பாடுகளை முன்நிறுத்தியே உனக்கான ஆதரவைத் திரட்டினாய். அதே போன்று இலங்கை இராணுவம் ஏற்படுத்துகின்ற அழிவுகளையும் இன ஒடுக்குமுறையையும் பிரச்சாரப்படுத்தியே உனது இருப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறாய். இந்தப் போக்கினால்தான் இன்று தமிழ் இனத்துக்கு அழிவை தேடித் தந்திருக்கிறாய்.

 

இனியாவது புரட்சியாளனாக மலர முயற்சி செய். அதுதான் இதுவரை நீ செய்த படுகொலைக்கு பரிகாரமாக இருக்கும். பெரும்பாலான தமிழக மக்கள், ஈழத்தமிழர்களுக்கு உணர்வுப்பூர்வமாகவும், உள்ளப்பூர்வமாகவும் ஆதரவு தருகிறார்கள். புரட்சிகர சக்தியாக மலர்ந்து இதை ஒன்று திரட்டு. மார்க்சிய - லெனினிய - மாசேதுங் பாதையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத்தரும்.

- சூன்யம்