சிதம்பரம் கோயிலில் தமிழில் பாட முற்பட்ட சிவனடியார் ஆறுமுகச்சாமியை பார்ப்பன ரவுடிகளான தீட்சிதர்கள் அடித்ததும், அதனைத் தொடர்ந்து மகஇகவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு கழகம் பல தொடர் போராட்டங்களை

 பிற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நடத்தி தமிழில் பாடும் உரிமையை வென்றதும் அனைவரும் அறிந்ததே. இதனையொட்டி நடந்த வெற்றி விழா கூட்டத்தின் போது நந்தனை எரித்ததன் அடையாளமான அந்த ஆயிரம் வருட அவமானச் சுவரை இடித்து நொறுக்குவதே லட்சியம் என்று சூளுரைக்கப்பட்டது.
அப்படிப்பட்டதொரு லட்சியத்தை நோக்கிய நடவடிக்கையின் முதல் கட்டமாக சிதம்பரம் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல என்பதை நிறுவி அதனை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதற்காக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதில் அரசாங்கத்துடன் மனித உரிமை பாதுகாப்பு கழகமும் ஒரு அங்கத்தினராக இணைந்து தீட்சிதர்களுக்கு எதிராக வழக்காடினர். அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது.
தீர்ப்பின் படி கோயில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமாக வேண்டும். மேலும், ஒரு வாரத்தில் கோயில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிகிறது. இது சாதரணமான தீர்ப்பு அல்ல. தீட்சிதர்களை எதிர்த்து வரலாறு நெடுகிலும் நடத்தப்பட்ட போராட்டங்களை அவர்கள் ஒழித்துக் கட்டியுள்ளனர். கடந்த 60 வருடங்களில் பல சட்டப் பூர்வ முயற்சிகளையும் அவர்கள் முறியடித்துள்ளனர். சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களின் அடாவடித்தனம் என்பது யாராலும் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வ வல்லமை படைத்த ஒன்றாகவே நம்பப்பட்டது. தீட்சிதர்களை எதிர்த்து கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகள் கவனிக்கும் ஒருவருக்கு மலைப்பே ஏற்படும். அப்படிப்பட்டதொரு வெல்ல முடியாத சக்தியாக கருதப்பட்ட தீட்சிதர்களை அவர்களது கோயிலேயே முறியடித்ததுதான் தமிழில் பாடும் உரிமைக்கான அந்த முதல் போராட்டம்.
இதோ இப்போது அதன் அடுத்த கட்டமான இரண்டாவது போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இது முழு வெற்றியல்ல. இதனை அடுத்த கட்டமாக சட்டரீதியாக எதிர் கொள்ள தீட்சிதர்கள் தயராகலாம். அதுவும் முறியடிக்கப்பட வேண்டும் என்பதும் நந்தனை எரித்து கொன்றதன் அவமானச் சின்னமான அந்த சுவர் உடைத்தெறியப்பட வேண்டும் என்பதுமே நமது அவா. இது குறித்து பின்னூட்டத்தில் தகவல் தெரிவித்த முகம் தெரியாத அன்பருக்கு நன்றிகள்.
அசுரன்

 

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!