10032023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

சர்வதேசியத்தை கைவிட்டா ஈழப்போராட்டத்தை அணுக வேண்டும்!?

ஈழத் தமிழ் மக்களின் அவலம் இலங்கை இந்திய தமிழர்கள் மத்தியில், கொந்தளிப்பையும் உணர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. தொடரும் இன அழிப்பும், அதற்குள் மக்கள் பலியிடப்படல் என்ற எல்லைக்குள் அரசியல் செய்யப்படுகின்றது.

நீ தமிழன் என்றால், பாசிச புலியை ஆதரி என்று மிரட்டப்படுகின்றோம். இல்லையென்றால், பேரினவாத கைக்கூலிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றோம். சர்வதேசியத்தை கைவிட்டு, வர்க்கம் கடந்த தமிழனாக மாறி புலிப் பாசிசத்தை ஆதரிக்க மறுக்கும் நாம், தமிழ்நாட்டு சர்வதேசியவாதிகளிடம் இருந்து எமக்கான ஊக்கத்தை எதிர்பார்த்தோம். ஆனால் அங்கிருந்து அவை வெளிப்படுவதற்கு பதில்;, தமிழன் என்ற அடையாள உணர்வூடாக புலியை விமர்சிக்காத கருத்துக்களாக வெளிவருகின்றது. எமக்கோ கிடைப்பது நெத்தியடிதான்.

 

இன்றைய நிலைக்கு வலதுசாரிய பாசிசப் புலிகள் காரணம் என்பதும், அவர்கள் தம் தோல்வியை தடுக்க மக்களை பணயமாக வைத்து பலியிடுகின்றனர் என்பதும் வெளிப்படையான உண்மை.

 

இது இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரமோ, இந்திய ஆளும் வர்க்கங்கள் முதல் பார்ப்பனியம் வரை இட்டுக்கட்டியவையல்ல. அதை அவர்கள் தமக்கு சாதகமாக எடுத்துச் சொல்வதால், ஒரு உண்மை பொய்யாகிவிடாது.

 

மாபெரும் உண்மைகளைக் கூட, கொச்சைப்படுத்திவிட முடியும். இலங்கையில் சர்வதேசியத்தை முன்நிறுத்தும் எம் நிலையைக் கொச்சைப்படுத்தி, அதை வெறும் புலம்பலாக மாற்றிவிடுகின்ற அளவுக்கு அவை மாறியிருப்பதை நாம் உணருகின்றோம்.

 

இந்தியா வை.கோ முதல் பெரியாரிஸ்ட்டுகள் வரை, புலிகளை முன்னிறுத்தியும், புலிகளின்  பாசிச பிரச்சாரத்தை பொதுஅரசியல் அரங்கில் முன்னிறுத்துகின்ற சூழலில், சர்வதேசவாதிகள் இதற்கு மாறாக தம் அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்.

 

பொதுவான மையக் கோசத்தில், இந்திய ஆளும் வர்க்கம், இலங்கை ஆளும் வர்க்கம், இலங்கை தமிழ் மக்களுக்கு பிரிந்துசெல்லும் சுயநிர்ணய உரிமை என்பதை தெளிவாகவே, வேறுபடுத்தி நிற்கின்றனர். பலரும் தத்தம் கோசங்களுடன் களத்தில் இறங்குகின்றனர்.

 

ஆனால் புலிகள் விடையத்தில் இதை தெளிவுபடுத்தவில்லை. வேறுபடுத்தவில்லை. நடப்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமா என்ற விடையத்தில், எந்த அரசியல் கோசத்தையும் உயர்த்தாதது ஏன்;? வை.கோ முதல் சர்வதேசியம் வரை, ஒரே பாதையில் நடப்பது போல் பாசாங்கு செய்வது அதிரவைக்கின்றது. முத்துக்குமாரன் அங்குமிங்குமாக தன் கருத்துக்களை அள்ளித்தெளிப்பதும், இதனால் தான்.

 

ஈழத்து தமிழ்மக்கள் வெறுமனே பேரினவாதிகளிடம் இருந்து மட்டும் ஒடுக்குமுறையைச் சந்திக்கவில்லை. மாறாக தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறும் புலிகளிடமிருந்தும் தான். இதை தமிழக மக்கள் அறியக் கூடாதா!? அறிய வைப்பது சர்வதேசியத்தின் கடமையல்லவா!?

 

இலங்கை - இந்திய எதிரிகள் எதை தம் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்? பாசிசப் புலிகளின் நடத்தைகளையும், தேசிய விடுதலைப் போராட்டமல்லாத அதன் பிற்போக்கு கூறுகளையும் முன்னிலைப்படுத்தியே அதைப் பிரச்சாரம் செய்கின்றான். அதை முறியடிப்பது என்பது, அதை கண்ணை மூடிக்கொண்டு மறுப்பதல்ல. மாறாக அந்த பிரச்சாரத்தின் பின் உள்ள உண்மைகளைத் தெளிவுபடுத்தி, ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்துவது அவசியம். இந்த வகையில் மக்கள் விரோத புலிகளின் செயலை விமர்சிப்பது அவசியம். இதன் மூலம் தான் தமிழ்நாட்டு சமூகத்தை, இரண்டு தளத்தில் விழிப்புற வைக்கமுடியும்.

 

1. எதிரி தன் பின் அணிதிரட்டும் மக்களை, சரியான பக்கத்துக்கு கொண்டுவர முடியும். அதாவது எதிரியின் எதிரி விடும் தவறுகளையும், அதன் மக்கள் விரோதக் கூறுகளையும்  சரியாக சுட்டிக்காட்டும் போது மக்கள் இதில் இருந்து விழிப்புறுகின்றனர்.


 
2. தவறுகளையே தேசியப் போராட்டமாக காட்டி, ஒரு பாசிசத்தை தேசியமாக சித்தரிப்பதை அனுமதிப்பது சர்வதேசியமல்ல. நடக்கும் மனித அவலம் மீதான போராட்ட ஆதரவுத்தளத்தில்,  பின் உள்ள உண்மையான மனித விரோதக் கூறுகளை அம்பலப்படுத்தி தனிமைப் படுத்துவதன் மூலம், போராடும் மக்கள் உண்மையான நிலைமையை சார்ந்து நிற்கமுடியும். 

 

இதைச் செய்யவில்லை. இந்த நிலையில் சர்வதேசவாதிகள், இலங்கை தமிழ் பாட்டாளி வர்க்கத்துககு; என்னத்தை கூற முனைகின்றீர்கள். எந்த வகையில் உதவுகின்றீர்கள். சிங்கள பாட்டாளி வர்க்கத்துக்கு எந்த அறைகூவலை விடுகின்றீர்கள்.

 

பொதுவான தளத்தில் ஏற்பட்ட தெளிவற்ற விலகல், சர்வதேசியவாதியத்தை ஆதரிக்கின்ற அல்லது அதனுடன் உள்ள உறுப்புகள் வெறும் இனவுணர்வாக மாறி நிற்பதை காண்கின்றோம். ஈழத்தைச் சேர்ந்த நாம் என்றுமே பயன்படுத்தாத 'சிங்களவன்" என்ற புலிகளின் மலிவான வர்க்க விரோத பொது அடையாளப்படுதல்களின் ஊடாக சிங்கள மக்களையே எதிராக நிறுத்திப் பார்க்கின்ற குறுந்தேசிய உணர்வுகள் சர்வதேசியத்தின் கருத்தாக வருகின்றது. சிங்கள ஆளும் வர்க்கம் வேறு, சிங்கள மக்கள் வேறு. இதுபோல் தமிழ் ஆளும் வர்க்கம் வேறு, தமிழ் மக்கள் வேறு. எந்த இடைவெளியுமற்ற அரசியல், மக்களுக்கு எதிரானது. தமிழன் என்று வர்க்கம் கடந்த பார்வைகள், தற்கொலை செய்த முத்துக்குமரன் மீதான 'வீரத்தமிழன்" என்ற மதிப்பீடுகள் எல்லாம் சர்வதேசிய வர்க்க எல்லைக்குள் நின்று பார்க்கத் தவறிவிடுகின்றது. அதுவோ புலியிசமாக மாறிவிடுகின்றது.

 

முத்துக்குமரன் தற்கொலை செய்யத் தூண்டிய கருத்தின் பின் அவனின் அறியாமையும் உள்ளது. அவன் தமிழினத்தை காப்;பாற்ற நம்பும் தலைமை எது? அவன் கூறுகின்றான்  'களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதலைப் புலிகளே… அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள்." தமிழகம் உதவ தமிழீழம். இங்கு அவன் கோருவது இந்திய தலையீடு. அது தமிழனுக்கு சார்பாக. இப்படி அவன் நம்புகின்ற அரசியல் எல்லைக்குள்ளா?, சர்வதேசியவாதிகள் உள்ளனர்.

 

அவன் நம்பும் தலைமை ஈழத்தமிழினத்தை அழித்துவிட்டது. அது அவனுக்கு தெரியாமல் போயிருக்கின்றது. இப்படி தமிழ்நாட்டுக்கே தெரியாமல் போயிருக்கின்றது. இன்றைய தலைமுறைக்கு சர்வதேசியவாதிகள் இதை தெளிவுபடுத்தவில்லை என்பதுதான் இங்கு உண்மை.

 

அவன் நம்பும் தலைமை பத்தாயிரத்துககு; மேற்பட்ட தமிழர்களையே கொன்று குவித்துள்ளது. வடக்கில் இருந்து ஒரு லட்சம் முஸ்லீங்களை 24 மணி நேரத்தில் போட்டு இருந்த உடுப்பைத் தவிர, அனைத்தையும் உருவிய பின் வடக்கில் இருந்து துரத்தியவர்கள் தான். இன்றும் அவர்கள் அகதி முகாமில்தான் வாழ்கின்றனர். பள்ளிவாசல் முதல் பல கிராமங்களில் வாழ்ந்த அப்பாவி மக்களை நூற்றுக்கணக்கில் வெட்டியும் சுட்டும் கொன்றவர்கள். தமிழ் மக்களின் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரம் கொடுத்;தால் புலிகள் 'அரசியல் அனைதையாகிவிடுவார்கள்" என்று கூறி, அதை தமிழ் மக்களுக்கு மறுத்தவர்கள். போராட்டத்தின் ஜக்கியத்தை மறுத்து, அவர்களை கொன்றவர்கள். இப்படி பல. இன்று மக்களை தம் கேடயமாக்கி பலியிடுகின்றனர். இவன் எப்படி தமிழினத்தைக் காப்பாற்றும் தலைவனாவான்.

 

இப்படி நம்பும் அப்பாவித்தனம், அதை தெளிவுபடுத்த தவறிய அரசியல், பொது அரசியல்  தளமாகி சர்வதேசிய அரசியல் அடிப்படையை ஆட்டுகின்றது. இப்படி தலைவனாக நம்பும் எல்லைக்குள் சமூகம். இதை விழிப்புற வைக்காமை அடிப்படையான அரசியல் தவறல்லவா!? 

 

அங்கு புலிகள் ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தை நடத்துவதாக நம்புவதும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பற்றிய மதிப்பீடுகளும், தற்கொலைக்கான குறுகிய அரசியலாக உள்ளது. மரணத்தில் உள்ள நோக்கம் எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும்;, அவனின் அரசியல் அடிப்படை தெளிவற்றது. இந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் உள்ளனர் என்பதும், இதை தெளிவுபடுத்தும் அரசியல் அவர்களின் உணர்வுக்குள் இல்லை என்பதும் வெளிப்படையான உண்மை. அதை சர்வதேசியம் தன் கடமையாக முன்னிலைப்படுத்தி செய்யவில்லை. 

 

அவர்களின் சமூக இயலாமை தற்கொலையாகின்றது. மறுபக்கத்தில் இந்திய அரசுக்கு எதிரான மையக் கோசம் சிந்திக்கத் தூண்டுகின்றது. இதுவும் உண்மை. ஆனால் அவர்களை அணிதிரட்டி அரசியல் அடிப்படைகள், புலியிசம் பற்றிய மதிப்பீடுகள், தமிழ் தேசியம் பற்றிய பொதுக் கண்ணோட்டம், ஈழத்தில் தமிழ் தேசியப் போராட்டம் நடப்பதாக நம்பும் அறியாமை, எல்லாம் தெளிவற்ற விம்பமாகி, அவை எதிர்ப்புரட்சிகரமானதாக உள்ளது. புரட்சிகரமான நிலைப்பாட்டை ஈடுபடுத்த சர்வதேசியம் தவறும் போது, ஈழத்து பாட்டாளி வர்க்கத்தை  மேலும் ஒடுக்கவே அவை உதவுகின்றது.

 

பத்திரிகை செய்திகளை ஆதாரமாக கொள்ளுதல்

 

நம்ப முடியாத அபத்தங்கள்;, ஆபாசங்கள். தமிழக பத்திரிகைகள் செய்திகள் என்பது,  புனைவுகள்,  உணாச்சியூட்டல், திரித்தல் எல்லாம் கொண்ட ஒரு சாக்கடை. இந்தியா  முஸ்லீம் மக்கள் பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், நக்சலைட்டுகளைப் பற்றியும், பயங்கரவாதம் பற்றியும் அவர்கள் எழுதுகின்ற பொய்யும் பித்தலாட்டமும் உலகறிந்தது. இந்திய தோழர்களுக்கு இதை நாம் சொல்ல வேண்டிய தேவையில்லை.

 

ஈழத்து விவாகாரத்தில் இந்த சாக்கடை செய்தியாகவில்லையா? புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்ற இரண்டு தளத்திலும் இது உள்ளது. இதற்கு மேலாக சிங்கள பேரினவாதம், தமிழ்  புலியிசம் கட்டிவிடுகின்ற பொய்களும் புரட்டுகளும். இதை அடிப்படையாக கொண்ட கருத்துகள், போராட்டங்கள் அற்பத்தமானவையாக அமைகின்றன.

 

உண்மையை தெளிவுபடுத்துவதற்கு பதில், இதன் பின் ஒடுவது பொதுவான கண்ணோட்டமாகிவிட்டது. எதார்த்த உண்மைக்கு பதில் பொய்யை விதைத்து, தமிழ் மக்களின் உண்மை நிலைமையை மழுங்கடிக்க முடியாது.

 

ஈழத்து மக்களின் உண்மை நிலை பற்றி அக்கறையின்றி, மக்களின் நிலையில் நின்று எல்லாவற்றையும் பார்த்தல் என்ற விடையத்தை மறுப்பதை நாம் எண்ணிப் பார்க்கமுடியாது.               சர்வதேசியத்தின் எல்லையைக் கடந்து நாம் செல்லமுடியாது. 

 

முத்துகுமரனின் மரணத்தை நாம் வறட்சியாக பார்க்கின்றோம்!
 
அப்படி நாம் பார்க்கவில்லை. அதன் பின்னுள்ள அரசியல் போக்கை, ஒரு அலையின் பின்னால் புலிப் பாசிசம் நியாயப்படுத்தப்பட்டு, அது பலப்படுத்தப்பட்டு, அதனூடாக எம் மக்களுக்கு நிகழும் பொது அழிவைப் பார்க்கின்றோம். சிங்கள பேரினவாதத்தின் கோரமான குண்டு வீச்சுக்குள், தமிழ் மக்களை பலியிடும் புலியிசத்தை நியாயப்படுத்தும், அரசியல்  பொதுப்போக்கை பார்க்கின்றோம். இதுவா எம் வறட்சி.

 

நாம் வறட்சியாக பார்க்கின்றோம் என்பது, உணர்ச்சியின் பின்னால் ஒடுவதல்ல. எழுச்சிக்கு பின்னால் வால்பிடிப்பதல்ல. தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் ஒடுவதல்ல.

 

ஈழத் தமிழ் பாட்டாளி வர்க்கம் என்ன செய்வது? இந்த தற்கொலையை மற்றவர்கள் பார்ப்பதில் இருந்து, எப்படி நீங்கள் வேறுபாடாக பார்க்கின்றீர்கள்?

 

முத்துக்குமாரன் வைத்த அறிக்கையில் எதில் முரண்படுகின்றீர்கள்? அதை எங்கே எப்படி விளங்கப்பபடுத்தியுள்ளீர்கள்?

 

இதைச் செய்யாமல் போற்றுவது, கூட்டத்துடன் கூட்டமாக நிற்பது சர்வதேசியமல்ல. இது ஈழத்து அரசியலை தீர்மானிக்கின்றது. வர்க்கம் கடந்த தேசியத்தை எமக்கு திணிக்கின்றது. புலிப் பாசிசத்தை எற்க நிர்பந்திக்கின்றது. அதையா நாம் செய்வது!? சொல்லுங்கள் தோழர்களே!

 

பி.இரயாகரன்
01.02.2009
 


பி.இரயாகரன் - சமர்