09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

முத்துக்குமாரன் தற்கொலையும், தனிநபர் பயங்கரவாதமும்

இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்று திட்டமிட்ட வகையில்  ஒழுங்குபடுத்தப்பட்டது. இரண்டாவது உணர்வுகளின் அடிப்படையில் தற்செயலானது. இவை இரண்டும், அரசியல் ரீதியாகவே தற்கொலைதான். 

 

புலிப்பாசிசம் எப்படி தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு, சமூகத்தை தனக்கு எதிராக நிறுத்தி சீரழிந்து அரசியல் ரீதியாக தற்கொலை செய்கின்றதோ, அப்படித்தான் தனிநபர் தற்கொலையும்;. இந்த வகையில் முத்துக்குமாரனின் தற்கொலையும், புலியிச அரசியல் எல்லைக்கு உட்பட்டதுடன், அதுஎதான் வழிகாட்டியுள்ளது. மக்கள் விடுதலைக்கு வழிகாட்டாத புலிப்போராட்டமோ, தற்கொலையை தேர்ந்தெடுத்தது. அதையே தன் தோல்வியிலும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுகின்றது.


 
சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து, அவர்களைச் சார்ந்து போராட முடியாது போன நிலையில் தான், புலியிசம் மனித அவலத்தை தன் அரசியலாக உற்பத்தி செய்கின்றது. இதேபோன்று, தமிழ்நாட்டு போலி தமிழ் தேசிய உணர்வாளர்களில் நம்பிக்கை இழந்து, தனிமனித தற்கொலை மூலம் தனிமனிதர்கள் தீர்வை நாடுகின்றனர்.  அது அனுதாப அலையாக மாறி வடிகின்றது. இப்படி இவை தனித்தனி அவலமாக வெடிக்கின்றது.

 

சமூகத்தை அணிதிரட்டி அவர்கள் போராடுவதன் மூலம் தான், எதையும் சாதிக்க முடியும் என்ற அடிப்படையான விடையத்தை நிராகரித்து, தனிமனிதன் தன்னைத்தான் மாய்த்துக் கொள்வதன் மூலம், சொல்லும் செய்தி கூட சமூக அதிர்வை ஏற்படுத்துகின்றது. ஆனால் அது தீர்வைத் தருவதில்லை. அனுதாப அலையாக, பிழைப்புவாதிகளிள் பிழைப்புக்கு அனுகூலமாக மாறுகின்றது.

 

தனிநபர் பயங்கரவாத தாக்குதல் சொல்லும் அதே செய்தியைத்தான், தற்கொலைத் தாக்குதல் தருகின்றது. ஆனால் இவ்விரண்டையும் ஒரு அரசியல் வழியாக, தீர்வாக யாரும் முன்வைக்க முடியாது.

 

தனிமனிதன் எல்லையில் அது கலகமாக இருந்தாலும், தனிமனிதன் இந்த சமூகத்துக்கு எதிராக தன் உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், அவை சமூகத்தின் விடுதலையை வழிகாட்டுவது கிடையாது.

 

அனுதாபம், கண்மூடித்தனமான உணர்ச்சி சமூகத்தை அறிவியல் பூர்வமாக வழிநடத்துவதில்லை. முத்துக்குமாரன் வெளிப்படுத்திய செய்தியை, பிழைப்புவாத புலிப்பாசிச எடுபிடிகளின் சொந்த சுயநலத்துக்கு ஏற்ப அது அம்மணமாகிவிட்டது. அந்த எல்லைக்குள் முத்துகுமாரனின் அறிவு சுருங்கி கிடந்தது. வெறும் உணர்ச்சி, நம்பிக்கை மீதான கீறல், அங்குமிங்கும் ஏற்பட்ட சொந்த சிதைவு தற்கொலையாக மாறுகின்றது.     


 
இப்படி சமூகத்தில் நம்பிக்கையற்ற இந்திய விஸ்தரிப்புவாத பொருளாதார நலனுக்கு உட்பட்ட  விசுவாசிகளிள் அரசியல் எல்லைக்குள், அவை மாரடிக்கின்றது. அந்த வகையில் அந்த இளைஞனின் உணர்ச்சிவசப்பட்ட அறியாமை, சமூகத்தின் ஓட்டுமொத்த பிற்போக்கு சமூகக் கூறுகளை இனம் காணத் தவறிவிடுகின்றது. இந்த அரசியல் மூலம், இந்தியாவின் தமிழர் சார்பு  தலையீpட்டின் மூலம்  தீர்வு காண முடிகின்றது.

 

இந்திய அரசின் தலையீட்டை தமிழர் சார்பாக கோரும் அரசியல் எல்லையில், மக்கள் போராட்டத்தை நிராகரிக்கும் எல்லைக்குள், இந்த தற்கொலை அரசியல் சாரம் அமைந்துள்ளது. மக்கள் விரோத புலி அரசியல் மீதான விமர்சனமின்றிய, ஓரு தலைப்பட்சமான வழிபாடு, அந்த அரசியல் கண்ணோட்டம் மொத்த தமிழ் மக்களுக்கு எதிரானதாக மாறுகின்றது. 

 

இந்திய ஆளும் வர்க்கங்கள், அதன் எடுபிடி பார்ப்பனிய கும்பல் வரை பேரினவாதத்தை ஆதரிக்கின்றது என்ற எடுகோள், மறுபக்கத்தில் உள்ள பாசிசத்தின் மக்கள் விரோத கூறை  அரசியல் ரீதியாக முன்வைத்து அரசியல் ரீதியாக அணிதிரட்ட தவறுவது, நிலைமைக்கும் உணர்ச்சிக்கும் பின்னால் வால்பிடித்து செல்லும் அரசியலாகும். தமிழ் மக்கள் பேரினவாதம் மற்றும் புலிக்கு எதிராக வாழ்கின்ற எதார்த்தத்தை இனம் காணத்தவறுவது, அதை அம்பலப்படுத்த  தவறுவது, படுமோசமான அரசியல் தவறுகளுக்கு தமிழக இளைஞர்களை எடுத்துச்செல்லுகின்றது.

 

வலதுசாரி பாசிசம் இலங்கை முழுக்க இலங்கை அரச வடிவிலும் புலிகள் வடிவிலும் மக்களுக்கு எதிராக இருப்பதை கவனத்தில் எடுக்காது, ஒரு தலைப்பட்சமாக பேரினவாத அரசுக்கு எதிராக காண்பது, ஓட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எதிரானதாக பயன்படுத்துவதாகும். இதில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் மற்றொரு பக்கத்தை மூடிமறைத்து அதை பாதுகாப்பது மன்னிக்க முடியாது. இதில் இடதுசாரிகள் பலர், தமிழ் குறுந்தேசிய இன உணர்வுடன் 'சிங்களவன்" என்று ஒருமையில் அடையாளப்படுத்தி கூறுவது, சிங்கள பாட்டாளி வர்க்கத்தை தம் எதிரியாக முத்திரை குத்தும் அரசியல் அபத்தம் வெறும் உணர்ச்சிவசப்பட்ட இனவாத உணர்வாகும்.

 

தமிழன் என்ற குறுந்தேசிய இன உணர்வை விமர்சமின்றி அங்கீகரித்து அதை தூக்கி முன்னிறுத்துவதும்,  மறுபக்கத்தில் சிங்களவன் என்று தூற்றுவதும் பாட்டாளி வர்க்க அரசியல் உணர்வல்ல. எம்முடன் நெருங்கிய இந்திய தோழர்கள் மத்தியில், இதை கண்டு அதிர்ந்து போகின்றோம். வால்பிடித்தல், உணர்ச்சிவசப்படல், பெரும் அலைக்கு பின்னால் ஒடுதல் எல்லாம் பாட்டாளி வர்க்க உணர்வை மறுதலிப்பதாக உள்ளது. இலங்கையில் தமிழ் பாட்டாளி வர்க்கம் என்ன செய்யவேண்டும் என்ற கருதுகோள்களை, எமது போராட்டத்தின் அடிப்படையை தகர்த்து தனிமைப்படுத்தி கூனி கூறுக வைத்துள்ளது. சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் துணையற்ற தனித்த எதிர்நீச்சலாக இருப்பதும்,  அதை துணிச்சலுடன் எதிர் கொள்வதும் நாம் சந்திக்கும் சவால்தான்.    

 

இதன் பின்னணியில் தான், இந்த தற்கொலையின் பின்னுள்ள அரசியல் வெற்றிடமாகும். இந்த வகையில் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் வெளியில், அறிவியல் பூர்வமாக வழிகாட்டி எடுத்துச்செல்லும் அரசியல் தலைமையின் இன்மைதான், வெம்பி தற்கொலையாகின்றது. ஈழத்தமிழ் மக்கள் எதார்த்த உண்மையில் புரிந்து கொண்ட செயல்பாடு, அதை அடிப்படையாக்கிய அரசியல் முன்முயற்சி, இந்த தற்கொலையை தடுத்து நிறுத்தும். வெறும் அற்ப உணர்ச்சிக்கும், பொது அலைக்கு பின்னால் வால் பிடித்து ஒடுவதும், அப்பாவி இளைஞர்களின் தற்கொலைக்கு உதவுகின்றது.


 
போலியான தேசியவாத அரசியல் பித்தலாட்டங்களில் கருணாநிதி முதல் நெடுமாறன் வரை, நம்பிய இளைஞர்கள் வெம்பி மடிவது அரசியல் தற்கொலையாக நிகழ்கின்றது.


 
புலித்தேசியம் அரசியல், இராணுவ வழியின்றி பேரினவாதம் மூலம் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடும் மனித அவலத்தை, ஒரு தலைப்பட்சமாக ஊதிப்பெருக்கி விடும் உண்மைக்கு வெளியில் தற்கொலை அரங்கேறுகின்றது. புலிகள் தம் அரசியல் வழியில் தேர்ந்தெடுத்த அதே தற்கொலையை, மற்றவன் மீது திணிக்கின்றது.

 

மனித அவலத்தை விதைத்து, அதில் அறுவடை செய்யும் பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும், தற்கொலையையும் தம் பிழைப்புக்காகத் தான் ஊக்குவிக்கின்றனர். இந்திய விஸ்தரிப்புவாத பொருளாதார நலனை கேள்விக்குள்ளாக்காத பிழைப்புவாத நாய்களுக்கு, முத்துக்குமரன் போன்ற அப்பாவிகள் மரணம் அரசியல் ரீதியாக அவசியமாகிவிட்டது. புலிகளுக்கு தமிழ் மக்களின் மரணங்கள் எப்படி அரசியல் ரீதியாக அவசியமாகி அதுவே அவர்கள் அரசியலாகிவிட்டதோ, அப்படியே முத்துக்குமரன் மரணம் இந்திய போலி தமிழினவுணர்வு பிழைப்புவாத கழிசடைகளுக்கு அவசியமாகிவிட்டது.

 

பி.இரயாகரன்
31.01.2009