08052021வி
Last updateபு, 28 ஜூலை 2021 10am

தயவு செய்து அவர்களைப் போக விடுங்கள். காலில் விழுந்து மன்றாடுகிறேன்....

"பொதுமக்களை வெளியேற்ற 48 மணி நேர கெடு!

[ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 05:46.46 PM GMT +05:30 ]


இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், அடுத்த நாற்பத்து எட்டு மணி நேரத்துக்கு இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ளப்போவதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும், 'இந்த கால அவகாசத்துக்குள் விடுதலைப்புலிகள், பொதுமக்களை தங்களது இடத்திற்கு திரும்பி அனுப்பிவிட வேண்டும். என்று ராஜபக்சே கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

இந்த போர் நிறுத்தம் இலங்கை அரசின் போர் தந்திரம். பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு திரும்ப கால அவகாசம் தருகிறோம் என்று உலகில் நல்ல மதிப்பைப் பெற்றுவிட்டு 48 மணி நேரத்திற்கு பிறகு கடும் தாக்குதல் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

-தமிழ்வின்"


"புலியிச"த்தை அடிப்படையாகக்கொண்ட ஈழவிடுதலைப்போரின் படுதோல்வியின் இறுதிக்கட்டத்தில் புலியிசத்தின் பெயரால் கொள்ளை கொள்ளையாக தமது உயிர்களை மாய்த்து அழிந்துகொண்டிருக்கும் போராளி இளைஞர்களின் அவலம் ஒருபுறமாய், புலியிசத்தை நம்பியும், வேறு வழியின்றியும் அவலப்பொறிக்குள் அகப்பட்டு மாய்ந்துகொண்டிருக்கும் எம் மக்களின் கதறல் ஒருபுறமாய் நிகழ, உலகத் தேசிய விடுதலைப்போராட்டங்களுக்கான படிப்பினை ஒன்று ஈழ மண்ணில் குருதிப்புனலால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் காலமொன்றின் உணர்வுகள் செத்துப்போன கையாலாகாத சாட்சிகளாய் களத்தை விட்டு பாதுகாப்பாக நீங்கி வாழ்ந்தும் இருந்தும் வருகிறேன்.


சேடமிழுக்கும் புலியிசத்தின் பகட்டான, ஆயுத வழிபாட்டு, வாய்வீச்சுப் போராட்ட முறையின் இறுதி மூச்சினை வன்னியில் அகப்பட்டுப்போன துரதிஷ்டம் பிடித்த எம் சகோதரர்கள் தமது குருதியைப்பொழிந்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சுயதணிக்கையோடும், புலித்தணிக்கையோடும் கதறும் அம்மக்களை இணையத்தில் விற்கும் ஓடியோ வீடியோக்களின் கட்புலனாகா மறுபக்கம்; நாம் வாழும் காலத்தின் பேரவலம்.

 

"எல்லாம் அவன் செயல்" "அவனிருக்கப் பயமேன்" " வியூகங்கள் மிகத்துல்லியமாக வகுக்கப்பட்டுள்ளது" " ஐம்பதாயிரம் இராணுவ வெறியர்களையும் சாக்கில் போட்டு அனுப்புவோம்" போன்ற வெற்று வீராப்புக்களை சொல்லிச்சொல்லி அம்மக்களை ஏமாற்றிப் பொறிக்குள் வீழ்த்தி, அதே வசனங்களை இணைய ஊடகங்கள் வழி எமக்கும் ஊட்டி, போதையேற்றி தன்னைக்காத்துவந்த புலியிசம் தோல்வியின் உச்சத்தில், வெளியேறும் மக்கள் மீது தாக்குதல் என்று, நூற்றுக்கணக்கான வெளியேறும் இளைஞர்களை சித்திரவதைக்குள்ளாக்குகிறார்கள் என்று, அறளை பேரத்தொடங்கியது..

 

சிங்கள வெறியர்கள் உங்களை, உங்கள் "பெண்களை" குதறிவிடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டி அம்மக்களை மேலும் ஏமாற்றி தனக்கு குருதியாகுதி படைக்கச்சொல்கிறது புலியிசம்.

 

கற்காலத்திலிருந்து எழுந்து இன்னும் பல்துலக்காத சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதமோ, தனது வெறியாட்டத்தால் இந்தப்பூச்சாண்டிகளை நியாப்படுத்தி புலியிசத்தை தன்பங்குக்கு தானும் கைகொடுத்துத் தாங்கி வருகிறது.

 

இன்னொன்றும் சொல்ல இருக்கு...

 

புலியிசம் என்பது புலியிசம் மட்டுமே அல்ல, அது தமிழரசுக்கட்சியிசம், கூட்டணியிசம், செல்வாயிசம்.... பின் ஐம்பெரும் ஆயுதத்தலைவர்களிசம், எம் ஜி ஆர் காலில் விழுதலிசம்...

 

உங்கள் தோல்விக்கான ஆயுதத்தை செல்வாவே தயாரித்தார்.. கூட்டணி தீட்டியது.. காலத்தோடு ஆயுதம் வளர்ந்தும் சிறந்தும் வந்து இப்போது கழுத்துக்கு மேலே தொங்குகிறது.

 

உலகம் பரந்த புலியிச மாஃபியா வலைப்பின்னல் இன்னமும் வெட்கங்கெட்டு தனது அழுகும் முகத்தைக்காட்டி "இறுதிப்போருக்கு" நிதி சேர்க்கிறது.

 

பொருளாதாரப்போரைத் தொடங்கட்டாம்... பொருளாதாரப்போர் என்றால் அவர்கள் அகராதியில் புலிக்கு இன்னும் நிறையக் காசுகொடுத்தல் என்று அர்த்தம்..


இன்னொரு புலி ஊடகம் இப்போது காட்டிய எழுச்சியை மாவிலாறு போனபோதே காட்டியிருந்தால் இந்த அவலம் நேர்ந்திருக்குமா என்று அழுகிறது.

 

"அவர் எல்லாம் அறிந்தவர்" தந்திரோபாயமாக போர் வியூகத்தின் படி பின்வாங்குகிறோம், ஒரே அடியில் ஈழம்பிடிக்கப்போகிறோம் என்று கைவாரடித்துக்கொண்டு நீங்கள் இருந்த போது, இந்த கைவார்களுக்கு உங்கள் மக்களை பழக்கப்படுத்தி போதையூட்டி நீங்கள் வைத்திருக்கும்போது எங்கிருந்தைய்யா எழும் மக்கள் எழுச்சி?

 

உங்கள் கையாலாகாத்தனதை காட்டிய "எல்லாளன் நடவடிக்கை" நீங்கள் மக்கள் எழுச்சிகளை நசுக்கும் உத்தியின் மிக அண்மைய எடுத்துக்காட்டல்லவா?

 

ஓ "எல்லாளன்" என்று அந்த அசிங்கத்தை படம் வேறு எடுக்கிறீங்க என்ன? எடுத்து வெளியிடுங்க...


உங்கள் பகட்டுக்கள், பூச்சு மெழுக்குகள், கைவார்கள், படங்கள் எல்லாவற்றையும் அடித்து உடைத்துக்கொண்டு நாலடி வெள்ளம் போட்டு சவமாக்கி உருட்டி கடலில் போட்டுவிட்டது கல்மடுக்குளத்துக்கு நீங்கள் வைத்த குண்டு.

 

எல்லாளன் நடவடிக்கைகூட எடுத்துக்காட்டத்தவறிய நீங்கள் "உளுத்துப்போய்விட்ட" உண்மையை கல்மடு காட்டிவிட்டது.

 

இப்போ எதுவும் முடியாத நிலையில், சிங்கள வெறியர் பூச்சாண்டி காட்டி மக்களை பிடித்து வைக்கப்பார்க்கிறீர்கள்.

 

ஐயன்மீர், அம்மணிகளே...! புலிப்பெருந்தகைகளே, உங்கள் காலைப்பிடித்து வேண்டுகிறேன். தயவு செய்து அம்மக்களை இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு போகவிடுங்கள்.

 

பேச்சுவார்த்தைப்பொழுதுகளில் நீங்கள் வந்து படம் காட்டி, ஊர்வலம் நடத்தி, ஆரவாரமிட்டுவிட்டு போர் தொடங்கியதும் திடீரெனக் காணாமற்போவீர்களே, அப்போது உங்களால் 'அம்போ' என விடப்பட்ட கிழக்கிலங்கை மக்களின் நிலையை விட வெளியேறப்போகும் இந்த மக்களுக்கு அவலம் எதுவும் நேர்ந்திடாது.

 

95 இல் யாழ்ப்பாணத்திலிருந்து நீங்கள் பலவந்தமாக "வெளியேற்றிய", நீங்கள் " கைவிட்டுப்போன" மக்களின் நிலையை விட வெளியேறும் இம்மக்களுக்கு வதைகள் எதுவும் நேர்ந்திடாது.


தன்மானத்தை இழந்தாகினும், சிறை வாழ்க்கை வாழ்ந்தாகினும் அம்மக்களின் "விதி"ப்படி அவர்கள் வாழ்ந்துவிட்டுப்போகட்டும் வெளி உலகம் அறியாத அப்பாவி குழந்தைகளும் அந்த மக்களும் முல்லைத்தீவு மண்ணில் பல்குழல் கணகளுக்கு உடல் சிதறி இறக்க வேண்டாம்.

 

அம்மக்களை இந்த உலகம் காக்கப்போவதில்லை, எந்தப்போராட்டமும் மனுக்கொடுப்பும் தீக்குளிப்பும் அம்மக்களை அவலத்தினின்று மீட்கப்போவதில்லை.

ஒரு ஈரமுள்ள தமிழக இளைஞன் தீயில் வெந்து 48 மணி நேரம் அவகாசம் வாங்கிக்கொடுத்திருக்கிறான். அவன் பெயரால் கேட்கிறேன், தயவு செய்து அம்மக்களை போகவிடுங்கள் பெருந்தகைகளே.. போக விட்டு விடுங்கள்.


நீங்களும் முடிந்தால் நீர்மூழ்கிகளிலும் வானூர்திகளிலும் ஏறி எங்கேயாவது போய்த்தப்புங்கள். உங்கள் உயிர்களும் பெறுமதி மிக்கவை.

 

இந்தப்போரை மகிந்தவும் இந்தியாவும் உலக மூலதனமும் முடிவுக்குக்கொண்டுவரும்போது புலியிசம் முற்றாக அழிந்துவிட்டிருக்காது. அது வாழும்.

 

அதனை மக்களே தோற்கடித்தாக வேண்டும்.

நீங்கள் "கடைசி அடி" அடித்து ஈழம் மீட்பீர்கள் என்று இன்னமும் மனதின் ஓரத்தில் நம்பிக்கொண்டிருக்கிறேன். "தோத்திருவாங்கள் எண்டு சும்மா சொல்லிக்கொண்டிருக்காத, அவங்கள் வெல்லுவாங்கள்.. நம்பு, அப்பிடி நம்பிறதுதான் நல்லது" எண்டு என் அமம்மா இந்த வயதிலும் உங்கள் மீது பாசம் காட்டுகிறார். அதற்காகவாவது நம்புகிறேன்.

 

அம்மம்மா பாவம், அவர் உணர்வின் வடிவம்.

 

உண்மை என்ன தெரியுமா?

நீங்கள் கடைசி அடி அடிப்பீர்கள் ஈழம் கிடைக்காது. மாறாக அதை முறியடிக்கும் உத்திகளை வெளிநாட்டு நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பெரும் பேற்றினை சிறீலங்கா அடைந்து மகிழும்.

 

நீங்கள் இப்போது மக்களை விடுவிப்பதும், முடிந்தால் அயுதத்தை கீழே வைப்பதும் (அதை செய்தால் கோடி புண்ணியம்) சிங்கள பவுத்த பேரினவாதத்தின் வெற்றிகள் ஆகிவிடும் என்று யோசிக்க வேண்டாம்.

 

நீங்கள் ஆயுதத்தை கீழே வைக்கும் அந்தக்கணத்தில், புலியிசம் தோற்கும் கணத்தில் அம்மம்மாவும் அழப்போகும் நேரத்தில், புலியிசத்தின் தோல்வி நீங்காத பாடமாக, மாற்றுவழிகளைப்பற்றி தேடி ஓடவைக்கும் உந்துதலாக மக்கள் மனங்களில் பதியும் பொழுதிலிருந்து தான் ஒரு ஐந்தாறு ஆண்டு இடைவெளிக்குப்பின் சிங்கள பவுத்த பேரினவாதம் தன் முதுகெலும்பு முறிந்து முடிந்துபோகும் பெருவெற்றியின் வீரிய விதை மண்ணில் விழும்.

 

இப்போது தயவு செய்து அவர்களைப் போகவிடுங்கள்.

 

-------------------------

 

இக்கட்டுரையை பொருத்தமானால் தமிழரங்கத்தில் பிர்சுரிக்கவும். எனக்கு இந்தச்செய்தியை அவசரமாக புலிகளுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது.

தயவு செய்து என் பெயரைப்போட வேண்டாம், பெயரில்லாமலே பிரசுரித்தாலும் சரிதான்.
பெயர் போடவேண்டுமானால் "தமிழினன்" என்று போட்டுவிடுங்கள்.

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்