ஈழத்ற்காகத் தீக்குளித்து தியாகியானான் ஒரு தமிழன் !

ஈழத்திற்காக தமிழக ஓட்டுக்கட்சிகள் குறிப்பாக தி.மு.கவின் நாடக உணர்ச்சியைத் திருப்தி படுத்துவதற்காக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று ஈழத்தமிழர்களைக்

 கொல்லும் ராஜபக்க்ஷேவுக்கு ஆதரவை அளித்து விட்டு உடன் திரும்பி விட்டார். காங்கிரசுக் கூட்டணி அரசின் தமிழகப் பங்காளிகள் ஏதோ பெரிய கோரிக்கையைச் சாதித்து விட்டதாக பீற்றி வருகின்றனர். இந்த பசப்பலுக்கு மத்தியில்தான் முல்லைத் தீவில் நூற்றுக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

 

தமிழக ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளின் இந்த வேடதாரி அரசியலுக்கு மத்தியில் தமிழக மக்களின் தன்னெழுச்சியான

போராட்டங்கள் தமிழகமெங்கும் காட்டுத்தீயைப் போல பரவி வருகின்றன. மக்களின் இந்தப் போராட்டம் உணர்ச்சிப்பூர்வமானது. கொல்லப்படும் ஈழத்தமிழனைக் காப்பாற்றுவதற்காக எதாவது செய்யவேண்டும் என்ற ஆதங்கத்திலிருந்து இது கம்பீரமாக எழுந்து வந்திருக்கிறது. முக்கியமாக எல்லாப் போராட்டங்களும் தற்போது இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்து முதுகில் குத்தும் இந்திய அரசின் துரோகத்தை தோலுரிக்கும் வண்ணம் நடந்து வருகிறது. இதற்கு முன் நடந்த போராட்டங்கள் வெறும் மனிதாபிமான கோரிக்கைக்காக நடந்திருக்கும் வேளையில் தற்போது இந்திய அரசின் துரோகத்தனத்தை எதிர்த்து முறியடிப்போம் என்று ஒரு சரியான அரசியல் முழக்கத்துடன் நடந்து வருவது முக்கியமானது.

இன்று காலை அகில இந்திய பெண்கள் முன்னணி எனும் பெண்கள் அமைப்பு இந்தியாவின் துரோகத்தை எதிர்த்து சென்னையில் இருக்கும் தலைமைச் செயலகத்தை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர்.பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றதற்காக கையொலி எழுப்பிய தமிழக சட்டசபை வீடணர்களில் காதுகளுக்கு கேட்குமாறு இந்தப் போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான

பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் துவங்கியிருக்கின்றனர்.

செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களின் சாகும் வரை உண்ணாவிரதம் ஏழு நாட்களுக்குப் பிறகு முடிந்தாலும் தமிழகம் முழுவதும் அநேகமாக எல்லாக் கல்லூரி மாணவர்களும் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எமது மாணவர் அமைப்பான பு.மா.இ.மு எல்லாக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான அறைக்கூட்டங்களை நடத்தி இந்தப் போராட்டங்களை தொடருவதற்கு முயற்சி செய்கிறது. குறிப்பாக சென்னை, கடலூர், விருத்தாசலம், தஞ்சாவூர் முதலிய இடங்களில் பு.மா.இ.மு சார்பில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தஞ்சையில் மட்டும் எல்லாக்க கல்லூரிகளையும் சேர்த்து 3000 மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.மேலும் பல அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புக்களும் தமது தலைமை வழிகாட்டுதல் இல்லாமல் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பின்புலம் இல்லாத மாணவர்களும் அதிக அளவில் போராடி வருகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோபிசெட்டிபாளையத்தில் வணிகர்கள் ஈழத்திற்காக இன்று கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.

இந்தப் போராட்டங்களின் உச்சமாக ஒரு தமிழன் தீக்குளித்து உயிரிழந்த போராட்டம் இன்று நடந்திருக்கிறது. தூத்துக்குடியைச்

சேர்ந்த 26 வயது முத்துக்குமார் ஒரு மாதப்பத்திரிக்கையின் தட்டச்சு வேலை செய்பவர்.  இன்று காலை மத்திய அரசு நிறுவனங்கள் பலவற்றின் தென்மண்டலத் தலைமையகங்கள் இருக்கும் சாஸ்திரி பவனுக்கு வந்த முத்துக்குமார் கையில் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. இதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.ஆயினும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புக்கான போரில் சுடுவதற்கென்றே இந்திய பீரங்கிகள் தமிழகம் வழியே அனுப்பப்பட்ட மண்ணில் எந்த ஆயுதமின்றி தனது உயிரை அழித்து ஒரு மாபெரும் ஆயுதத்தை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கிறான் ஒரு வீரன்.தமிழக அட்டைக்கத்தி அரசியல் தலைவர்கள் வெறுமனே அறிக்கைகள் விட்டு ஈழத்திற்காக நாடகமாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனது உயிரை அழித்து தமிழக மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பியிருக்கிறான் ஒரு போராளி. இறுதி வேண்டுகோள், இறுதி எச்சரிக்கை, பதவியைத் துறப்போம் என தமிழக ஆளும்கட்சி நடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் தனது உடலை தீக்கிரைக்காக்கி இந்தியாவின் துரோகத்தை எதிர்த்திருக்கிறான் ஒரு தமிழன். ஈழத்தில் புலிகளுக்கெதிரான போரில் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமென அகமகிழும் பார்ப்பனப் பத்திரிகையுலகின் கொழப்பைத் தனது இன்னுயிரைத் தந்து அம்பலமாக்கியிருக்கிறான் ஒரு பத்திரிகையின் தொழிலாளி.

முத்துக்குமார் எனும் போராளியின் உடலைக் கருக்கிய தீயின் நாக்குகள் சுரணையற்றிருக்கும் மனங்களை சுட்டுப்பொசுக்கி திருத்தட்டும். முத்துக்குமார் எனும் வீரனின் உயிரைத் துறக்கத் துணிந்த தியாகம் கொழும்பில் இந்திய- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்கும் அற்பங்களின் இழிவை எள்ளி நகையாடட்டும். முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் செத்து விழும் ஈழத்தமிழனின் பிணங்களைக் கண்டு உவகை கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, இந்து ராம், தமிழக காங்கிரசு நரிகள் முதலான ஒநாய்களின் வெறியை தமிழக மக்கள் அறுப்பதற்கு உதவட்டும். முத்துக்குமார் எனும் அந்தத் தொழிலாளியின் மரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வில்லு படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் மரத்துப் போன சுரணையை மீட்டுக் கொண்டு வரட்டும். முத்துக்குமாரின் தீக்குளிப்பு பதிவுலகில் அக்கப்போரையும், அரட்டையையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சில பதிவர்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கட்டும். முத்துக்குமார் எனும்  அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்.

ஆம் மரத்துப்போயிருக்கும் தமிழுலகில் ஒரு இளைஞன் ஈழத்திற்காக தன்னுயிரைப் பலிதானம் செய்திருக்கிறான். அவனுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?