இன்று வன்னி மக்களின் சோகம் சொல்லி அடங்காது. புலிகள் தமது ஆயுதங்களையும், ஆயுதத் தள பாடங்களையும் பொன்னாக நம்பி பாதுகாத்து வருகிறார்களே தவிர, தமது இரத்த சொந்தங்களான வன்னி மக்களை ஒரு சுண்ணாம்புக் கட்டியிலும் கேவலமான பொருளாகவே கைவிட்டுள்ளனர்.
அரசோ, தனது சிங்கள பெளத்த இன வெறி அடையாள யுத்தத்தை, அபிவிருத்தி என்னும் பேரில் மடைதிறந்து பாயப்போகும் முற்றுகைப் பொருளாதாரத்துக்கான- விளை நிலத்துக்கான- யுத்தத்தை வெறும் சிறிய கோடாக மூடி மறைத்து விட, புலிகளை அப்புறப் படுத்தும் யுத்தத்தை பெரிய கோடாக அதன் மீதே கீறிவிட்டு, மீட்பு யுத்தமென துார்த்து மெழுக நினைக்கிறது. இதற்கு புலிகளின் போசக்கற்ற அரசியல் துணை போவது அசப்பில் தெரிகிறது.
வன்னியின் வீதியில் வாழும் மக்களின் நிழலுக்குள்ளேயே வந்து குந்தியிருக்கும் சாவின் கொடுமையை, அவர்கள் சிந்தி வரும் இரத்தச் சகதியை இவர்கள் தத்தமது இருப்புக்கான மேச்சலாக்கி வரும் கொடுமையை ஜுரணிக்கவே முடியவில்லை.
சதுரங்க ஆட்டமாக ஆடப்படும் இவ் யுத்தத்தில் -பகடைக் காயாக உருட்டப்படும் இம்மக்களின் உயிர் மீதான விளையாட்டு, இந்தத் தீராத விளையாட்டுப் பிள்ளைகளின் வெறும் வெண்டக்காய் பேச்சாகப் போய் முடியப்போகிறது....?
வன்னி மக்கள் தமது உயிர் பாதுகாப்புக்கான வழிமுறைகளை - தமது சுயவிருப்பின் கோரிக்கையாக - வெளிப்படுத்து வதற்கான எந்தக் கதவுகளையும் திறந்து விடும் சந்தர்ப்பங்களை, அதற்கான கால அவகாசத்தை இவர்களுக்கு வழங்குவதற்கு இருதரப்பினரும் கரிசனை காட்டாமல் அதற்கு முன் வராமல், ஒரு பக்கம் முதலைக் கண்ணீரும் - மறுபக்கம் குடும்பிப் பிடியுமாய் காலத்தை இழுத்தடித்து வருகின்றனர்.
இந்த மக்களின் மணரங்களிலும், இவர்கள் சிந்திவரும் இரத்தத்திலும், துன்ப துயரத்திலும் தமக்கு எந்த ஒரு பங்கும் இல்லை என்று, இரு தரப்பினரும் ஒரு பிலாத்துவைப் போல கைகழுவி விட நினைக்கின்றனர்.
இந்த மக்களை, ஆயிரமாயிரம் பாரச்சிலுவைகளில் அறைந்து விட்டு, இந்த நிலைமைகளில் இருந்து மீண்டெழுந்து வந்து- வன்னியைக் கைப்பற்றும் கனவு புலிகளுக்குப் பலித்தாலும் சரி, புலிகளை அகற்றி விட்டு உலக சந்தைகளுக்குக்காக இலங்கையை உற்பத்தி மேடையாக்கி, குண்டுசி மெசினையும் வெறும் கொடுப்புச் சிரிப்பையும் ஜனநாயகம் என்று சொல்லி கண்கட்டித் தனமாகக் கொடுத்தாலும் சரி
இந்த யூதாஸ் கரியோத்துக்களின் -இரத்த நிலமாகவே - வன்னி -என்றும் இந்தமக்களின் ஆழ்மனத்து உணர்வாகப் பதியும்...
சுதேகு
270109