05222022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

ராஜீவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டபோது...

1983 ஜூலைப் படுகொலைக்குப் பிறகிலிருந்து, குறிப்பாக பாசிச ராஜீவின் மரணத்தின் போது வீச்சான பிரச்சாரத்தில் இருந்தது எமது அமைப்புகள்.

ராஜீவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டபோது, “ராஜீவ் ஒரு முறையல்ல பல முறை கொல்லப்படவேண்டியவன்” என்று துணிவாகப் பிரச்சாரம் செய்தது எமது அமைப்புகள்தான். புலிகளுக்கு ஆதரவாக ‘நட்சத்திர’ அரசியல் நடத்தும் பிழைப்புவாதிகள், தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் எல்லாம் எலிகளைப் போல் பொந்துகளில் புகுந்து கொண்டிருந்ததுவும் நிகழ்ந்தது. வேண்டுமானால் உங்கள் அண்ணன் மார்களைக் கேட்டுப் பார்க்கவும். “ராஜீவின் கொலைக்குக் காரணம் தமிழகத்திலிருக்கும் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் அமைப்புகளே….” என்று புலிகள் அமைப்பின் கிட்டு வாய்க்கூசாமல் பேசியதையும், அதனைத் தொடர்ந்து எமது தோழர்கள் கடுமையான வழக்குப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டதையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

 

இன்றைக்கு புலிகளை சாகசவாதிகளாகச் சித்தரித்துப் பேசுவதுதான் சீசனாக இருக்கிறது. அந்த சீசன் அரசியலில்தான் அனைத்து புலியாதரவு அமைப்புகளும் பேசிவருகின்றனர். மகஇக இதுபோன்ற சீசனுக்கு எதிராக இயங்குவதுதான் வழக்கம். புலியரசியலுக்கு துதிபாடாமல் சிங்கள பேரிணவாதத்தைக் கண்டித்தால் புலிகளே அதனை ஏற்றுக் கொள்வதில்லை, நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?

 

ஈழத் தமிழரின் ஈரக்குலையை அறுத்து வரும் இந்திய-தமிழக ஓட்டுப் பொறுக்கிக் கும்பலையும் அவர்கள் நடத்துகின்ற அரசுகள் தொடர்ந்து இழைத்துவரும் கொடுமைகளையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வேலை செய்வதற்குத் திராணியில்லாமல் சிங்கள பேரினவாத அரசைக் கண்டிப்பதோடு தமது கண்டணங்களைக் கவனமாக முடித்துக் கொள்ளும் நாடகங்கள்தான் இங்கு நடைபெற்று வருகின்றன.

 

திமுகவையோ கருணாநிதியையோ தனிமைப்படுத்தி வேலை செய்யாமல், ஈழ மக்களின் படுகொலைகளை “போர்க்களத்தில் இது சகஜம்..” என்று ஏளனம் செய்யும் பார்ப்பனிய பயங்கரவாதி ஜெயாவை அம்பலப்படுத்தி இயங்காமல், சிங்கள வெறியன் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதாக இங்கு நடத்தப்படும் அடையாள நிகழ்வுகளில் எங்களுக்கு உடன்பாடில்லை.

 

தமிழினத்துக்குக் ஆதரவாகப் பேசினாலே பாய்ந்து பிடுங்கு மத்திய ஆட்சியாளர்களான காங்கிரசு கயவாளிகளைத் தமிழகத்திலிருந்து துடைத்தெறிய வேண்டிய முயற்சிகளைக் கையாளாமல், அவர்களுடனே வாய்ப்பு கிடைத்தால் கூட்டனி வைத்துப் பிழைத்துக் கொள்ளத் திட்டமிடும் சந்தர்ப்பவாதிகள், புலிகளை ஆதரித்துப் பேசுவதாலேயே புனிதமாகக் கருதப்படுவார்கள் போலும்!

 

இலங்கைக்கு ராணுவ உதவி அளிப்பதைக் கண்டித்து சென்னை அண்ணாசாலையிலுள்ள ராணுவ தலைமையகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் மறியலும் செய்து திரளான தோழர்கள் கலந்து கொண்டார்கள். எமது போராட்டங்களையும் கள அரசியலையும் பற்றி அனைவரும் நன்கறிவார்கள். சீசனுக்குச் சீசன் இயங்க வேண்டிய அவல நிலையில் நாங்கள் இல்லை.

 

ஜே.வி.பி.யைப் பற்றி எங்களுக்கு எழுதாதீர்கள். அதற்கு நீங்கள் அனுகவேண்டிய முகவரி சிபிஎம் கட்சியின் முகவரி. ஜே.வி.பி.யின் பிரதிநிதிகளை அழைத்து தமது மாநாட்டில் கவுரவப்படுத்தியது அவர்களே!

மகஇகவின் மூலம் எங்கேயோ, எதற்காகவோ விமர்சிக்கப்பட்ட வலியும் குழப்பமுமே உங்களது வரிகளில் தெரிகிறது. உங்களுக்காக எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

தோழமையுடன்,
ஏகலைவன்.

http://mathimaran.wordpress.com/2009/01/26/article159-2/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்