முதலில் எனது வக்கிர புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும்.ஜனவரி 25ம் தேதி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்தும் ‘முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு‘க்கு சென்று வரலாம் என புறப்பட்டதில் எந்தவிதமான பிழையும்

 இல்லை. நிறைந்த அமாவாசை. அதுவும் தை அமாவாசை.எனவே மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோருக்கு எள்ளுத்தண்ணி ஊற்றி தர்ப்பணம் செய்துவிட்டு மாநாட்டை ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது என நக்கலுடன் சென்றேன் பாருங்கள்… அதற்கு சரியான செருப்படியை தோழர்கள் கொடுத்தார்கள்.


இரண்டாவது பத்தியிலேயே குறிப்பிட்டு விடுகிறேன். மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி…இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட்)மாநில அமைப்புக் கமிட்டி… என எந்த அமைப்பை சேர்ந்தவனும் அல்ல நான். ‘இணையத்தில் வினவு தோழர்கள் மாநாட்டை பற்றி அதிகமாக சொல்கிறார்களே… என்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்போம்…’ என வேடிக்கை பார்ப்பதற்காகத்தான் சென்றேன்.
சென்னை அம்பத்தூரில் மாநாடு. எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்தே புஜதொமுயை சேர்ந்த ஷேர் ஆட்டோதோழர்கள், அமைப்பின் கொடி பறக்கும் ஆட்டோக்களுடன் வருபவர்களை வரவேற்றார்கள். இதே நிலமைதான் அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகிலும். இடம் கண்டுபிடிக்க யாரும் சிரமப்படக் கூடாது என்பதில் தோழர்கள் கவனமாக இருந்தார்கள். சாலைகள் முழுக்க அமைப்பின் சிவப்பு நிற கொடிகள் பறந்தன. எஸ்.வி. நகர் அம்பேத்கர் சிலைக்கு அருகிலுள்ள தேனீர் கடை ஊழியர்கள் உட்பட யாரை விசாரித்தாலும் மாநாடு நடைபெறும் இடத்தை துல்லியமாக குறிப்பிட்டு வழிநடத்தினார்கள்.


தோழர் சந்திப்பு வந்திருந்தால் வயிறு எரிந்திருப்பார். இதுவரை தனது பதிவுகளில் மகஇக, எஸ்ஓசி குறித்து, தான், எழுதிய விஷயங்கள் எந்தளவுக்கு புரட்டல் நிரம்பியது என்பதை நினைத்து குற்ற உணர்வால் குறுகியிருப்பார். அந்தளவுக்குஎஸ்.வி.நகர், அம்பேத்கர் கால்பந்து மைதானமே சிவப்பால் குளித்துக் கொண்டிருந்தது.


இந்தளவுக்கு கூட்டம் வரும் என எதிர்பார்க்காததால் பிரமிப்பு ஏற்பட்டது உண்மை. மாநாட்டு திடலே நிரம்பி வழிந்தது என்றால் அது மிகையில்லை. தமிழகத்தின் மூலை,முடுக்கிலிருந்தெல்லாம் தோழர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள்.


பல தோழர்கள் சிவப்பு நிற சட்டையை அணிந்திருந்தார்கள்.பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன், மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். ஒருவரது முகத்தில் கூட சோர்வோ, கடனே என மாநாட்டுக்கு வந்திருக்கும் பாவனைகளோ தெரியவில்லை. அனைவரது கண்களிலும் உறுதி. முக்கியமாக தோழர்களின் மனைவிமார்களை சொல்ல வேண்டும். கணவருக்காக வந்தது போல் தெரியவில்லை.விருப்பத்துடன், மாநாட்டின் தன்மையை உணர்ந்து, நம் குடும்ப விழா என்ற எண்ணத்துடன் கலந்து கொண்டவர்களை போலவே தெரிந்தார்கள். ஒருவரது கால் விரல்களிலும் மெட்டியில்லை. கழுத்தில் நகையில்லை. வீட்டிலிருந்தே தோழர்கள் தங்கள் அமைப்பை கட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும், உணரவும் இந்த மாநாடு உதவியது.


மாநாட்டில் உரையாற்றிய தோழர்களின் உரைகளை வினவுதோழர்கள் தங்கள் தளத்தில் வெளியிடுவார்கள் எனநம்புவதால் அதற்குள் இந்தப் பதிவு நுழையவில்லை. பதிலாகமனதில் பட்ட சில விஷயங்களை குறிப்பிடலாம் எனநினைக்கிறேன்.
சொன்னபடி குறித்த நேரத்தில் மாநாட்டு பந்தலுக்கு வெளியேகொடியேற்றத்துடன் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்புமாநாட்டை தொடங்கினார்கள். புஜதொமுயின் தலைவரானதோழர் முகிலன் கொடியேற்றினார். அதன் பின் செங்கொடிக்குவணக்கம் செலுத்தியவர்கள் அமைப்பு சார்ந்த தோழர்கள்மட்டுமல்ல. அவர்கள் குடும்பமும்தான். அதுவும் 4, 5,வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்கூட கை விரல்களை மடக்கிவணக்கம் செலுத்தியதை குறிப்பிட்டேயாக வேண்டும்.
குறித்த நேரத்தில் மாநாட்டை தொடங்கியவர்கள், குறித்த நேரத்தில் மாநாட்டை முடிக்க முயன்றார்கள். மாநாடு முடிந்ததும், ‘மாநாட்டு பந்தலில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை ஒன்றின் மீது ஒன்றாக போட்டுவிட்டு செல்லுங்கள்… அது எங்களுக்கு உதவியாக இருக்கும்‘ என புஜதொமு தலைவர் தோழர் முகிலன் அறிவித்தார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ். என்னருகில் அமர்ந்திருந்த 60 வயதை கடந்த ஒரு அம்மா, தன்னால் முடிந்தளவுக்கு நாற்காலிகளை ஒன்றிணைத்தார்.

 

மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 80% பேர் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள். இதே வயதுள்ள பெண் தோழர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால், யாருமே யாரிடத்திலுமே கேலி, கிண்டல், ஈவ் டீசிங் மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கவில்லை.


ஆண்களுக்காக தனியாக கழிவறை அமைக்கப்பட்டிருந்தது.அந்த இடத்திலேயே ஆண் தோழர்கள் சிறுநீர் கழித்தார்கள்.


தட்டுப்பாடின்றி நல்ல குடிநீர் கிடைத்தது.
மதியம் 5 ரூபாய் விலையில் உணவை வழங்கினார்கள்.முன்னணி தோழர்களில் ஆரம்பித்து என்னைப் போல பார்வையாளராக சென்றவர்கள் வரை அனைவரும் வரிசையில் நின்றே உணவை பெற்றுக் கொண்டார்கள்.


கூட்டத்தை அமைப்பு தோழர்கள் ஒழுங்குப் படுத்தினார்கள்.
குடித்துவிட்டு யாரும் மாநாட்டு பந்தலுக்கு வரவில்லை. (முக்கியமாக பியர்). சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.


மாநாட்டு திடலில் யாரும் குப்பை போடவில்லை. அதற்கென அமைக்கப்பட்ட தொட்டியிலேயே பயன்படுத்திய பொருட்களை போட்டார்கள்.


பாப்கார்ன், சமோசா, முறுக்கு, ஸ்நாக்ஸ் மாதிரியான அயிட்டங்கள் மாநாட்டு பந்தலில் விற்கப்படவும் இல்லை.வெளியிலிருந்து அவற்றை வாங்கி வந்து தோழர்கள் மாநாடு நடைபெறும்போது கொறிக்கவும் இல்லை. கைக் குழந்தையுடன் கலந்து கொண்ட தோழர்களின் குடும்பத்தினருக்கு, அறிமுகமில்லாத தோழர்கள் கூட பிஸ்கட் வாங்கி வந்து குழந்தைகளிடம் கொடுத்ததை கண்ணுக்கு நேராக பார்க்க முடிந்தது.


மாநாட்டு திடலிலேயே, பந்தலை ஒட்டி ‘கீழைக்காற்று‘, ‘புதிய ஜனநாயகம்‘, ‘புதிய கலாச்சாரம்‘, ‘புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி‘ சார்ப்பில் புத்தகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இது இயல்பானதுதான்.எதிர்பார்த்ததுதான். தங்கள் அமைப்பு சார்பில் நடக்கும் மாநாட்டில், அமைப்பின் புத்தகங்களை தானே விற்பார்கள்?என்று நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இவர்கள் அமைப்பை சாராத, இவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும் மாற்று இயக்க தோழர்களும் தங்கள் வெளியீடுகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். எந்த தோழர்களும் அவர்களை தடுக்கவும் இல்லை. வெளியேற்றவும் இல்லை. சொல்லப் போனால் உணவு, தேனீர், குடிநீர் போன்றவற்றை அவர்களுடன் இணைந்தே சாப்பிட்டார்கள்.‘


புதிய ஜனநாயகம்‘ இதழில் இதுவரை ஈழம் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள் அனைத்தையும் ஜெராக்ஸ் எடுத்து,ஸ்பைரல் பைண்டிங் செய்து விற்றார்கள். அதேபோல்தான்‘தேசியம்‘ தொடர்பாக வந்த கட்டுரைகளும். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இதே திடலில்தான் ‘தனித்தமிழ்‘ ஆதரவு தோழர்களும் தங்கள் நூல்களை விற்றார்கள் என்பதுதான்.ஜனநாயகம்!


மாநாட்டில் புஜதொமு தலைவர் தோழர் முகிலன், புஜதொமு செயலாளார் தோழர் சுப. தங்கராசு, புஜதொமு பொருளாளர் தோழர் விஜயகுமார், மகஇக தோழர் துரை சண்முகம்,கர்நாடக உயர்நீதி மன்ற வழக்குரைஞர் தோழர் பாலன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இதில் தோழர் பாலன் தொழிலாளர்களுக்குள்ள சட்டங்களை குறித்து விளக்கினார்.அவைகளை முதலாளிகள் எந்தளவுக்கு மீறுகிறார்கள்,இருக்கும் சட்டங்களும் எப்படி நிரந்தர தொழிலாளர்களுக்கே சாதகமாக இல்லை என்பதை விளக்கினார். ஒவ்வொருவரும் பேசி முடித்ததும் மைய கலைக்குழுவினர் பாட்டு பாடினார்கள்.மாலையில் அம்பத்தூர் ஓடி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மார்கெட் பகுதியில் பொது கூட்டம் நடைபெற்றது. மகஇக பொது செயலாளர் தோழர் மருதையன் சிற்றப்புரை ஆற்றினார்.வழக்கம் போல் அவரது உரை அழுத்தமாக இருந்தது.குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு யார் பேசினாலும் துண்டு சீட்டைக் கொடுத்து பேச்சை முடிக்க சொன்னார்கள். இந்த விதியிலிருந்து தோழர் மருதையனும் தப்பவில்லை.


ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கும் பலர், வேன்களில் வந்தார்கள்.
மாநாட்டுக்கான மொத்த செலவும் அமைப்பை சேர்ந்தவர்களுடையது. பல மாதங்களாக பேருந்து, தொழிற்சாலை, தொழிற்பேட்டைகளில் பிரச்சாரம் செய்து, உண்டியல் குலுக்கி முதலாளிகளுக்கு எதிராக தங்கள் வலிமையை காட்டியிருக்கிறார்கள்.


சங்கம் அமைக்க தாங்கள் பட்ட சிரமங்களை, அனுபவங்களை பல தோழர்கள் மாநாட்டில் பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக ஒரிஸாவிலிருந்து பிழைப்பைத் தேடி தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்கள் தாங்கள் அனுபவித்த, அனுபவிக்கும் துயரங்களையும், புஜதொமு அமைத்த பின் தாங்கள் எப்படி தன்மானத்துடன் வாழ்கிறோம் என்பதையும் விளக்கினார்கள்.


கள்ளச் சாராய வியாபாரியாக இருந்து, இப்போது கல்வி வள்ளலாக இருக்கும் ஜேப்பியாரின் கல்லூரிகளில் சங்கம் அமைக்க தாங்கள் முயன்றதை குறித்து தோழர்கள் சொன்னார்கள். சங்கம் அமைப்பதற்கு முன் ஜேப்பியார் தங்களுக்கு கொடுத்த மரியாதையையும், சங்கம் அமைத்த பின், அதே ஜேப்பியாரே தங்களுக்கு தரும் மரியாதை குறித்தும் தோழர்கள் பகிர்ந்து கொண்டபோது, மனதில் பூரிப்பு எழுந்தது உண்மை.


டிசம்பர் 31ம் தேதியுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் பல தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இருக்கும் தொழிற்சங்கங்கள் எதுவும் அவர்களை காப்பாற்றவில்லை. இந்தத் தகவலை பலரும் உணர்ச்சியுடன் குறிப்பிட்டார்கள்.


மாநாட்டு பந்தலுக்கு வெளியே காவல்துறையினர், ‘எதையோ‘எதிர்பார்த்து பாதுகாப்புக்காக நின்றார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை.


ஒரு பதிவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறீர்களா என்று கேட்டேன். ‘ஐயோ, வந்தா போலீஸ் பிடிச்சுக்குமே‘ என்றார். எப்படியெல்லாம் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது!


பதிவுலகை சேர்ந்த ஜ்யோராம் சுந்தர், பைத்தியக்காரனுடன்(தோழர் ஏகலைவனை சந்தித்து பேசினீர்களா பைத்தியக்காரன்?) மாநாட்டுக்கும், பொது கூட்டத்துக்கும் வந்திருந்தார். தோழர் வே. மதிமாறன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.மற்ற பதிவுலக நண்பர்களை எனக்கு தெரியாததால், யார் வந்தார்கள் என்று உறுதியாக சொல்லமுடியவில்லை.


பொதுவாக மகஇக அமைப்பினர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. கேள்வி கேட்பவர்களை இவர்களுக்கு பிடிக்காது. க்ளீன் ஸ்லேட்டாக இருப்பவர்கள்தான், இவர்களுக்கு தேவை… என மாற்று அமைப்பினர் அவ்வப்போது இவர்கள் மீது விமர்சனம் வைப்பார்கள். அது எந்தளவுக்கு புரட்டு என்பது இந்த மாநாட்டில் தெரிந்தது. அப்படி மாற்று அமைப்பினர் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் அதில் தவறும் இல்லை. க்ளீன் ஸ்லேட்டில்தானே அழுத்தமாக எழுத முடியும்?


ஒரு அமைப்பை கட்டுவது என்பது எவ்வளவு கடினமான வேலை என்பது அமைப்பு சார்ந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி பார்க்கும்போது, இந்த முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு உண்மையிலேயே புஜதொமுக்கு மாபெரும் வெற்றிதான்.


தொடர்ந்து மகஇக, பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாகவும் மாநாடுகளை நடத்த வேண்டும்.அமைப்பு பணி, நெருக்கடிகள் காரணமாக தோழர்களால் கலை இலக்கிய அமைப்பில் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை. இனி சிறிது சிறிதாக கலை இலக்கிய அமைப்பையும் அவர்கள் வளர்க்க வேண்டும். செய்வார்கள் என்று நம்புகிறேன்.


பின்குறிப்பு: பதிவை எழுதி முடித்ததும் வழக்கம்போல் படித்துப் பார்த்தேன். மகஇக வுக்கு ஜால்ரா தட்டுவது போல் தெரிந்தது. பதிவை வாசிக்கும் உங்களுக்கும் அப்படியே தோன்றினால்,


நல்லது. அதுகுறித்து எனக்கு வெட்கமேதும் இல்லை.