மக்களைக் கேடயமாக்கிய அரசியல்: தமிழீழத்துக்காகப் போராடுகிறது? இன்று, புலிகளுக்கு எதிரான யுத்தம் பாரியளவில் முன்னெடுக்கப்படுகிறது. "புலிகள் தம்மைக் காப்பதற்காக அப்பாவி மக்களைத் தம்மோடு அடக்கி வைத்திருக்கிறார்கள்.இந்த அடக்கு முறை மிகவும் கேவலமான ஆயுதயச்சத்தின் மூலமானதாகும்.புலிகளிடஞ் சிக்கிய மக்களை, யுத்தத்தில் தம்மோடு சாகடிக்குஞ் செயலைப் புலிகள் திட்டமிட்டே செய்கிறார்கள்.

 

"இப்படியொரு செய்தி பரவலாக வெளியாகுகிறது.உலக ஊடகங்கள் முதல் மனிதவுரிமை அமைப்புகள்வரை இதையே மீளவும்,மீளவும் எழுதுகின்றன.


ஆனால், புலிகள் இதற்குமாறாகப் பரப்புரை செய்கிறார்கள்.

புலிகளிடம் சிக்கிய மக்களின் குரல்கள் வெளிவருவதற்கு அவர்களை மேய்ப்பவர்களின் கரங்கள் நெரிக்கின்றனவா?

உண்மைகளைப் பேசுவதற்கு இலங்கை அரசும், புலிகளும் ஒரு தளத்தில் நின்று மதில் அமைக்கின்றார்கள். இந்த மதில்களுக்குப்பின்னால் அப்பாவி மக்களின் அழுகுரல்கள் நமக்கு எட்ட முடியாது. இலங்கை அரசு-புலிகள் காட்டும் மக்களின் முகங்கள் யாவும் பொய் முகங்கள்! மக்களின் உண்மையான அவலங்கள் இங்கே, கேடுகெட்ட அரசியலாக மாற்றப்படுகிறது.

இரு தரப்புஞ் செய்யும் கொடிய யுத்தம் அப்பாவி மக்களின் தலைகளில் குண்டுகளாகக் கொட்டப்படுகிறது.மக்கள் இருதரப்பினதும் செல்லடிக்குப் பலியாகிறார்கள். இவ்விருதரப்பினதும் யுத்த முனைப்பு, அப்பாவி மக்களின் உயிரைக் குடித்து ஏப்பமிடுகிறது. இதுவே,நமது மக்களின் இன்றைய பொது அவலம். குண்டுகள் துளைத்த உடலங்கள் புலிகளுக்குத் தம்மைக் காக்கும் துருப்புச் சீட்டாகிறது. எனினும்,புலிகளால் இதுவரை நமக்குச் சொல்லப்பட்ட ஜனநாயக-நட்பு நாடுகள் எதுவும் நமது மக்களுக்காகக் கரங்கொடுக்கவில்லை. இது, புலிகளைக் காக்க விரும்பாத அவர்களது அரசியலாக நமது மக்களுக்கு இப்போது விடிகிறது. எல்லாம் புலிப்பாணி அரசியல் செய்த பெருவினை!

துயருறும் மக்களைத் துணிந்து அடக்கி வைத்தபடி, புலிகள் தம்மைப் பற்றிய அரசியல் செய்கிறார்கள். மறுபுறும், இலங்கை அரசோ தனது அடாவடித்தனமான போரை நியாயப்படுத்த அந்த மக்களின் அவலத்தைப் பயன்படுத்திக்கொண்டு, மக்களை விடுவிக்க எடுக்கும் போராகத் தனது ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்துகிறது.

இந்நிலையில் அந்த மக்களின் உண்மையான அவலம் வெறும் கோசத்துக்குள் முடங்கிப்போகிறது. மக்கள் தம்மை விடுவிக்க முடியாது சிங்கள அரசினதும், புலிகளினதும் குண்டுகளுக்குப் பலியாகிப் போகிறார்கள். அதையே, தமது தரப்புக்கு நியாயப்படுத்தப் புலிகள் தலைகளைக்கணக்கு வைத்துப் பரப்புரை செய்கிறார்கள்.

புலிகள், தம்மைக் காப்பதற்காக இப்போதெல்லாம் தமது ஆயுதத்தைவிடத் தமது கைக்குள் சிக்கிய இலட்சக்கணக்கான மக்களையே நம்பிக் கிடக்கிறார்கள்!அவர்களது கையறு நிலையான இன்றைய போர்ச் சூழலில் மக்களைக் கேடயமாக வைத்துப் போராடும் மிக கெடுதியானவொரு போர்ச்சூழலைப் புலிகள் வலிந்தே வரவழைத்துள்ளார்கள்.


இத்தகைய நடாத்தையை ஒரு விடுதலையமைப்பு எங்ஙனம் எதிர் நோக்கியிருக்கும்?

மக்கள் போராட்டம் என்பது என்ன?

உலக வரலாறுகளை உறுஞ்சிக்குடித்த புலிகளின் விற்பனர்களுக்கு இந்த மக்களின் அவலம் மக்கள் போராட்டமாக இருக்கலாம். ஆனால், நாம் சொல்கிறோம்: "இது மிக மோசமான மாபியாத்தனமாகும்!". மக்களின் அடிப்படை உரிமையானது, அவர்கள் தம்மைத்தாமே உயிர்காத்து வாழ்வதாகும். அவர்கள், தமது உயிரைக்காப்பதற்கு எதுவித நிபந்தனையுமின்றிச் செயற்படவிடாத புலிகள், மக்களை முல்லைத் தீவில் அம்போவென விட்டுவிட்டுக் காட்டுக்குள் ஓடியொளிந்துவிட்டார்கள்.

முல்லைத்தீவில் சிக்கிய மக்கள் வீதியின் கரைகளில் தமது அவலக்குரலோடு, முன்னேறும் இராணுவத்தின் முன் தமது இறுதிக்கட்ட வீழ்ச்சியைத் தரையில் வீழ்ந்துபடுத்து நமக்கு உணர்த்துகிறார்கள். மக்களைக் கேடயமாக வைத்திருந்ததன் உண்மைகளை அவர்களது இந்தச் செயல் மிக இலகுவாக வெளிப்படுத்துகிறது, இந்த உலகத்துக்கு! அல்ஜெசிறாத் தொலைக்காட்சி இதை ஒளிபரப்புகிறது-இலங்கையின் உத்தியோபூர்வ ருபவாகினியின் படப்பிடிப்பு அது.

இன்று, எவருமே மக்களுக்காகக் குரல்கொடுக்கவில்லை!

புலிகள்விடும் கண்ணீர் தமது இருப்புக்கானது. மக்களின் பிணங்களைக் கணக்குவைத்துக்காட்டி, உலகத்தின்முன் தம்மைக் காப்பதற்கெடுக்கும் மிகக் கேவலமான அரசியலைப் புலிகள் செய்யும்போது, இலங்கை அரசோ இத்தகைய நடாத்தையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு போரை இன்னும் தீவிரப்படுத்துகிறது. இங்கே, இந்த அவலத்தை நியாயமாக எவரும் உரையாடவில்லை!

புலிகளுக்காகக் குரல்கொடுப்பவர்கள்போடும் மனிதாபிமானக்கூச்சலுக்கு ஒரு எல்லை இருக்கிறது. அது, முடிந்தவரைப் புலிகளைக் காத்தலென்பதோடு சரியாகிவிடுகிறது. இலங்கை அரசினது கூச்சலிலும் இதுவே நியாயமாகிறது. சிங்கள அரசினது போரை உலகுக்கு நியாயமாகக்காட்டும்வரை மக்களை அது அரவணைக்கும். ஆனால், "இத்தகைய வன்முறை ஜந்திரங்களிடமிருந்து மக்களை விடுவிப்பதற்கான நெறிமுறை எப்படியிருக்கும்?" என்ற கேள்வி நமக்குள் எழுவது தவிர்க்கமுடியாது முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.

புலிகளிடம் நியாயம் உண்டா அல்லது சிங்கள அரசிடம் நியாயம் உண்டா? என்பது நமக்குள் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். என்றபோதும், நாம் ஒன்றை நன்றாகக் கவனிக்கவேண்டும். இந்த இரு யுத்த ஜந்திரங்களும் மக்களின் நலனிலிருந்து அந்நியப்பட்ட காரணங்களுக்காக யுத்தஞ் செய்கின்றன. எனவே, இந்த யுத்தத்தின்மூலம் மக்களைக் கொல்வதற்கு இரு தரப்புக்குமே அவசியமான நியாயங்களாக அவரவர் தரப்புப்பரப்புரைகள் விரிகின்றன. மக்களை இரண்டு தரப்புமே கொல்வதற்குக் காரணமாகின்றன. எனவே, நாம் இவ் அராஜகத்தனமான யுத்த முனைப்பைக் குறிவைத்துத் தகர்ப்பதாகவிருந்தால்- அது, மக்களைப் புலிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அநுமதிக்கவேண்டும் என்ற கோசத்தை முதன்மைபடுத்தியாகவேண்டும்.

இதைப் புலிகள் செய்துவிடும்போது, புலிகளைத் தாங்கும் மக்கள் மட்டும் அவர்களோடிணைந்து "தமிழீழத்துக்காக"ப் போராடுவார்கள். அப்போது, மக்கள் போராட்டத்தின் மகிமையை அவர்கள் உலகுக்கு உணர்த்திவிடலாம். அதேபோல் புலிகளைத் துவேசிப்பவர்களின் வாயையும் மூடிவிடலாம். உயிரைக் காக்கவெண்ணும் மக்கள் தாமாகவே பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள். இந்தச் சின்னவொரு அனுமதியைப் புலிகள் செய்துவிடுவார்களேயானால் அவர்கள் உண்மையில் மக்களினது உயிரில் கரிசனையுடையவர்களாக இருப்பார்கள்.

இதை அவர்கள் செய்வார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

இதுவரை, பல நூறு மக்கள் இறப்பதாகச் சொல்லப்படுஞ் செய்திகள் சரியானதாகவே இருக்கும். ஏனெனில், முல்லைத் தீவில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்திவிட்டுப் புலிகள் காட்டுக்குள் தப்பியபோது, போருக்குள் சிக்குப்பட்டவர்கள் அப்பாவி மக்களே. எனவே, சிங்கள அரசின் வன்கொடுமைக்குண்டுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய இந்த மக்கள் நூற்றுக்கணக்காக உயிர் துறந்திருப்பது உண்மையே. இத்தகைய இழப்பைத் தவிர்த்திருக்க முடியாதா?

இக் கேள்விக்குப்பதில் கூறவேண்டியது புலிகள் மட்டுமே!

இலங்கை அரசு, தனது அகராதியில் இதைச் செய்யாது.ஏனெனில், அது ஒடுக்குமுறை அரசு. அதன் ஒடுக்குமுறையின் உச்சத்தில் இன்றைய அவலம் தொடரும்போது, மக்கள்மீது கரிசனையுடையவொரு விடுதலை அமைப்பு என்ன செய்திருக்கவேண்டும்?

தமது போராட்டத்துக்காக மக்களைப் பலி கொடுக்காதிருப்பதற்கு அவர்களை இவ் வலயங்களைவிட்டுப் பாதுகாப்புத்தேட அனுமதித்திருக்கவேண்டும். இதைச் செய்யாத புலிகள் சொல்லும் பிணங்களின் எண்ணிக்கையானது, தமக்காக, எவராவது இரங்க மாட்டார்களாவெனும் எதிர்பார்ப்பின் உச்சபச்ச மிக மலினமான அரசியலே.

ப.வி.ஸ்ரீரங்கன்
26.01.2009