தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மிகவும் பலவீனமானது. காலனித்துவத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மத்திய தர வர்க்கத்தின் தலைமை எவ்வளவு பலவீனமானதோ, அதை விடவும் பல்மடங்கு பலவீனமானது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம். இதை எவ்வளவு ஆயுதங்களைக் கொண்டு வந்து குவித்தும்,கற்பனைக்கு எட்ட முடியாத தீர வீரச் செயல்களைக் கொண்டும் இப் பலவீனங்களை மூடி மறைத்து விடவோ அல்லது சரிக்கட்டி விடவோ யாராலும் முடியாது. இவை எல்லாம் மத்தியதர அறிவுஜீவித்தனத்துக்கு புரியாதது ஒன்றும் உலக அதிசயமான விசயங்கள் அல்ல.
பிரிட்டீசாரின் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் வரவுக்குப் பின்னர், வடக்குக் கிழக்கில் இருந்த அனைத்து உற்பத்திகளும் கைவிடப்பட்டன. காலங்காலமாக அரசபீடம் ஏறிய இனவாத அரசுகளால் வடக்குக் கிழக்கின் அபிவிரித்திகள் திட்டமிடப்பட்டு கைவிடப்பட்டதோடு, அது மிகவும் மோசமான வரண்ட பிரதேசமாகவே மாற்றப்பட்டது.
காலனித்துவம் இனங்களை இணைத்தும் பிரித்தும் ஆண்டதால், காலனித்துவ எதிர்ப்புவாதத்தை மொட்டை தட்டி வைப்பதற்கு இனவாதத்தை தீட்டுக்கட்டையாகப் பயன்படுத்தியது. ஆரம்பத்தில் காலனித்துவ எதிர்ப்பு, மதம் மாறிய ஒத்துப்போகும் முதலாளித்துவத்துக்கு எதிரான முரண்பாடாக வெடித்ததால் காலனித்துவ எதிர்ப்பு மதக் கலகங்களாக உருவாகியது. நாளடைவில் இது ஸ்தாபன வடிவத்தைப் பெற்று இனம் கடந்த சிங்கள - முஸ்லீம் இனக்கலவரமாக வெடித்தது. இந்த பெளத்த இனவாதம் காலனித்துவ எதிர்ப்பின் கூரிய ஆயுதமாகக் காட்டப்பட்டதால், சிங்களத் தேசியவாதம் இவ் ஆயுதத்தை கையில் எடுக்காமல் வளர முடியவில்லை.
இலங்கையில் தேசிய இனங்களின் விழிப்பு 50 களில் தெளிவாகவே தெரிந்தது. 56 களில் பண்டாரநாயக்காவின் வரவானது காலனித்துவத்துக்கு பேரிடியாகவே அமைந்தது. பெருந்தோட்டத்தைத் தவிர ஏனையவற்றை தேசியமயமாக்கிய பண்டாரநாயக்கா, ஸ்தாபன மயமான பெளத்த இனவாதத்தின் தந்தையான - அநாகரிக தர்மபாலாவின் முதுகை ஆசை வாகனம் ஆக்காமல் இவற்றைச் செய்ய முடியவில்லை. இருப்பினும் அரசு தலைவராக இருந்த சிங்கள தேசியவாதியான பண்டாரநாயக்கா, 24மணி சிங்கள மொழிச் சட்டத்தால் பாதிப்படைந்த சிறுபான்மை தேசிய இனங்கள் பிரிவினை நோக்கித் தள்ளப்படுவதை உணர்ந்ததால் உருப்படியான ஓர் தீர்வுத்திட்டத்திற்கு முன்வந்தார். இலங்கை வரலாற்றில் சிறுபான்மை பிரிவினரின் பிரச்சனைகளைத் தீர்க்கும் விடயத்தில் பண்டா - செல்வா ஒப்பந்தமானது ஒரு முக்கிய பங்காக அன்று இருந்ததை மறுப்பதற்கில்லை.
பண்டாரநாயக்காவின் வரவால் அதிர்ந்து போன முற்றுகை பொருளாதாரம், தான் மீண்டும் ஊடுருவுவதற்கான களங்களைத் திறக்க தன்னைத் தயார்படுத்தியது. முற்றுகைப் பொருளாதாரத்தின் மூளை வீரன் ஜே.ஆர் கண்டி யாத்திரையாகப் படையெடுத்தார். தெற்கே இருந்த 17 சதவீதமான சிங்கள மொழி பேசும் தமிழ் முதலாளித்துவத்தின் ஏவுதலால் தளபதி அமீர் சிறீ எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தார். ஒப்பந்தம் கிழிந்துபோனது மட்டுமன்றி முற்றுகைப் பொருளாதாரம் தனது நுழை வாயிலாக இனக் கலவரத்தைத் திறந்து விட்டது. இலங்கை வரலாற்றில் முதன் முதலாக தமிழர்கள் உயிரோடு கொழுத்தப்பட்டனர். முற்றுகைப் பொருளாதாரத்தின் மூளை வீரன் ஜே.ஆர், நடைமுறைத் தேசிய வீரன் பண்டாரநாயக்காவுடன் அரசியல் ரீதியாகப் போட்டி போட முடியாது என்பதை நன்கறிந்த முற்றுகைப் பொருளாதாரத்தின் ஏகாதிபத்தியங்கள் சதியால் பண்டாரநாயக்காவை கொன்று போட்டது.
சிங்களத் தேசியவாதம் பேரினவாதமாகத் தலையெடுத்த பின்னரே தமிழ்த் தேசியவாதம் குருத்தெறிய ஆரம்பித்தது.
தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்நிலைப் பிரதேசத்துக்கான உற்பத்திகள் கைவிடப்பட்ட நிலையில், தெற்குப் பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்ட இவர்களின் வாழ்வு: தமிழ்த் தேசியத்தின் அரசியல் கருத்தமைவு பொருளாதாரத்தின் வெளிப்பாடு அல்லாமல் மேல் கட்டமானத்தின் சில வெளிப்பாடுகளாகச் சிதைந்து போனது. தென்பகுதிப் பொருளாதாரத்தின் நிர்வாக சேவகர்களாகவும், ஒருபகுதி முற்றுகைப் பொருளாதாரத்தின் கையாட்களாகவும் வளர்ந்த இவர்கள், காலனித்துவ எதிர்ப்பை மூச்சாகக் கொள்ள முடியாத காலனித்துவ அடிமைத்தனத்தின் சிறந்த வாரிசுகளாகவும் வளர்ந்தனர்.
58 இனக் கலவரத்தைத் தொடர்ந்து 61ல் கொண்டு வரப்பட்ட நீதிமன்ற மொழிச் சட்டத்தால் நேரடியாகப் பாதிப்படைந்த தமிழ் அப்புக்காத்து, புரக்கிராசி யாழ் அரசியல் வம்சம் அது தனக்கே உரித்தான சட்டவாத - சட்டமறுப்பு போராட்டமாக மிகப் பெரிய சத்தியாக்கிரகத்தில் குதித்தது. மொழி ரீதியாக முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டம் இனங்களைக் கடந்து ஒரு பெரும் வெகுஜனப் போராட்டமாக மாறியது. மனப்பூர்வமாக தமிழ்மொழி பேசும் முஸ்லீம், மலையகமக்கள் உணர்வோடு இணைந்து கொண்டனர். இருப்பினும் தலைவர்கள் கைதானதும் தானாகவே அடங்கிவிடும் ஒர் உயிரற்ற போராட்டமாகவே இது சிதைந்தது.
சத்தியாக்கிரகத்தின் தோல்வி தமிழ் தேசிய தீவிரவாதிகளிடையே ஓர் ஆயுதப் போராட்டத்தின் தேவையை சுட்டி நின்றது. இந்தக் களத்தில் இறங்கி ஆடவும், இதை ஒரு சதுரங்க ஆட்டமாக ஆடி முடிக்கவும் முற்றுகைப் பொருளாதாரம் முயன்றது. யூஎன்பிக்குள் இருந்த பிரபுத்துவ பெருந்தோட்ட முதலாளித்துவத்தின் நலன் பேணும் பிரிட்டிசார் கொள்கைக்கும், பல்தேசிய கம்பனிகளின் நலன் பேணும் அமெரிக்க சார்புக் கொள்கைக்கும் இடையிலான தீவிர முரண்பாட்டுக் காலகட்டத்தில் கொழும்பு தமிழ் முதலாளிகளால் கைப்பற்றப்பட்ட தமிழ் தலைமை யூஎன்பி உடன் கூட்டானது. எந்த நிபந்தனையும் இன்றி 65ல் உருவான இவ் வர்க்கக் கூட்டு திருச்செல்வத்தை மந்திரி சபையில் இருத்தியது. இவர் மந்திரியாக இருந்தபோதே திருகோணமலையில் பல திட்டமிட்ட குடியேற்றங்கள் நடத்தப்பட்டன என்றால் இந்த வர்க்கக் கூட்டை புரிந்து கொள்வதற்கு வேறெதுவும் தேவையில்லை. 66ல் தமிழ் மொழி விசேட மசோதாவுக்கு எதிராக சுதந்திரக்கட்சி, இடதுசாரிக் கட்சிகளின் தமிழ் விரோதப் போக்கு தமிழர் தரப்பு ஆயுதப்போராட்டத் தளத்தை செழுமையாகவே பதப்படுத்தின. வடக்கில் 69ல் தழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப்பிரவேசமும், நிச்சாமப் போராட்டமும், அதன் பயமும் தமிழ் முதலாளித்துவம் ஆயுதபாணியாவதை துரிதப்படுத்தியது.
யூஎன்பியின் ஆசியுடன் தழிழரசு கட்சியால் உருவாக்கப்பட்ட "புலிப்படை" பின்னர் இது மருவி "புதிய தமிழ் புலிகள்" பின்னர் "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று ஆயுதத்தளத்தில் தமிழ் தேசியத்தை கையில் எடுத்தனர்.
2
தொடரும்
சுதேகு
24.01.09